தமிழகத் தலைநகராக சென்னை தொடர பெரியாரின் பங்களிப்பு

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார்.

பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி  போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (சென்ற  இதழ் தொடர்ச்சி)

கடற்கரைக் கூட்டத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி முன் நின்று நடத்தியிருக்கிறது. ம.பொ.சி எனது போராட்டத்தில் கூறியிருப்பதுபோல இராஜாஜி சொல்லி ம.பொ.சி ஏற்பாடு செய்ததல்ல. மேலும் பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் மேயரின் அலுவலகத்தில் நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது தெரிய வருகிறது.

பெரியாரின் கிளர்ச்சியைக் காட்டித்தான் முதலமைச்சர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் “சென்னை யில் தற்காலிகமாகக்கூட ஆந்திராவுக்குத் தலைநகராகக் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வந்தார். பெரியார் கிளர்ச்சி தொடங்கி விட்டார். இனி யார் யாரோ கிளர்ச்சித் தொடங்குவார்கள். என்னால் இதைச் சமாளிக்க முடியாது. முதல்வருக்கு வேறு ஆளைப்பார்த்துக் கொள்ளுங்கள்” என்று டெல்லியில் நேருவிடம் சொல்லிவிட்டு வந்தார். (விடுதலை 13.03.1953)

இதே காலக்கட்டத்தில் தான் ம.பொ.சிக்குக் காங்கிரஸ்  கட்சியில் சிக்கல் உருவானது. ம.பொ.சி. சென்னைச் சட்ட மேலவைத் தேர்தலில் ஏற்கெனவே வெற்றிப்பெற்றிருந்தார். வேறு ஒரு வேட்பாளர் அந்தத் தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை எனக்கூறி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றுவிட்டார். அந்தத் தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது மீண்டும் மறுதேர்தல் நடைபெற இருந்தது.

20.03.1953 அன்று ம.பொ.சியும் மற்றும் பலரும் மேலவைத் தேர்தலுக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இவருடைய வேட்பு மனுவை டெல்லிக்கு அனுப்பும்போது கூடவே ஒரு குறிப்பையும் அனுப்பி வைத்தனர். இவர் தமிழரசுக் கழகம் என்று தனிக்கட்சி நடத்துகிறார். காங்கிரஸ்  சட்டவிதி களுக்குப் புறம்பாகக் கட்சி நடத்துவதால் இவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எழுதி அனுப்பினர். காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்டரி போர்டு ம.பொ.சி.யின் வேட்பு மனுவை நிராகரித்தது.

உடனே ம.பொ.சி. தமிழரசுக் கழகத்தின் செயற் குழுவைக் கூட்டி அதன் விதிகளைத் திருத்தி இது அரசியல் கட்சியல்ல. வெறும் கலாச்சார கழகமே என்று காங்கிரஸ் மேலிடத்திற்குக் கழகத்தின், தீர்மான நகலையும் அனுப்பி வைத்தார். ‘விடுதலை’யில் குத்தூசி குருசாமி  “கிராமணியாரின் சரணாகதி;  பதவிப் பேராசை யால் கட்சிக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டார்” என்று எழுதினார். (விடுதலை 25.03.1953)

ம.பொ.சி.யின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு மேலவைத் தேர்தலிலும் போட்டியிட்டார். அதைப் பெரியார் ஆதரித் தார். “சட்டப் பேரவைத் தொகுதியிலே சட்ட மேலவைக்குப் போட்டியிட நான் முனைந்தது தெரிந்ததுமே பெரியார் ஈ.வெ.ராவின் ‘விடுதலை’ பத்திரிக்கைகூட நான் வெற்றி பெற வேண்டுமென்று விரும்பியது. காங்கிரசில் இருந்த கோஷ்டி பூசல் காரணமாக ஒருகால் நான் தோற்கடிக்கப் படுவேனோ என்ற அச்சத்தையும் ‘விடுதலை’ வெளி யிட்டது.” (எனது போராட்டம் பக். 582)

காங்கிரஸ் கட்சியில் பலர் போட்டியிட்டதால் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதினான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். ம.பொ.சிக்கும் வாக்களிக்க காங்கிரஸ் கட்சி 14 சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்டளையிட்டது. ஆனால் அதில் 9 பேர் மட்டுமே ம.பொ.சி.க்கு வாக்களித்தனர். முதல் சுற்றில் ம.பொ.சி. தோல்வியுற்றார். அப்போது இராமசாமி படையாச்சின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 சட்டமன்ற உறுப்பினர் களைப் பெற்றிருந்தது.

அக்கட்சி இராஜாஜி ஆட்சியை ஆதரித்தது. அக்கட்சியின் சார்பில் மேலவைக்குப் போட்டியிட்ட ஆ. கஜபதி நாயகருக்கு 14 வாக்குகள் போக மீதம் 5 வாக்குகள் இருந்தன. ம.பொ.சி. 1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்காகச் சூறாவளியாக பிரச்சாரம் செய்தார். ‘படுத்துக்கிடந்த காங்கிரசை நான் தான் நிமிர்த்தினேன்’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார். இந்த மேலவைப் பதவி கூடத் தீவிரமாகத் தேர்தல் வேலை செய்ததற்காகத் தான் காங்கிரஸ் எனக்குக் கொடுத்தது என்று எழுதியுள்ளார்.

அந்த தேர்தலில் ம.பொ.சி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். “நண்டு நாற்காலி ஏறுமா” அதாவது வன்னியர் நண்டு தின்னும் ஜாதியினர் என்பதாகக் கேலி செய்தார். “பள்ளிகள் பாராள முடியுமா?” என்றெல்லாம் தேர்தல் கூட்டங்களில் பேசினார்.

காங்கிரஸ் கட்சியில் இவர் ஒருவர்தான் பீரங்கிப் பேச்சாளர் என்று பெருமைப் பீற்றிக்கொண்டார். மேலவைத் தலைவர் பதவி ஆசை காரணமாக இராஜாஜியின் மூலமாக இராமசாமி படையாச்சியைப் பிடித்து மீதம் இருந்த 5 வாக்குகளைத் தனக்குப் போட வைத்து இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். இதை அவரே எழுதியுள்ளார். ம.பொ.சி. (எனது போராட்டம் பக். 685)

ம.பொ.சி.க்கும் காங்கிரசில் எந்தச் செல்வாக்கும் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது. அவருடைய குருநாதர் இராஜாஜிக்கும் தமிழ்நாட்டில் எந்தச் செல்வாக்கும் இல்லை. அவர் டெல்லியிலிருந்து திணிக்கப்பட்ட முதலமைச்சர். காந்தி உயிரோடு இருந்தவரைத்தான் இராஜாஜிக்கு அகில இந்திய காங்கிரசில் செல்வாக்கு இருந்தது. அதன் பிறகு இல்லை.

கவர்னர் ஜெனரலாக இருந்த  இராஜாஜி இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருக்க விரும்பினார். நேருவிடமும் கேட்டார். ஆனால் வல்லபாய் பட்டேல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொள்ளாத இராஜாஜிக்குக் குடியரசுத் தலைவர் பதவி தரமுடியாது என்று மறுத்துவிட்டார். (ராஜ்மோகன் காந்தி இராஜாஜி வாழ்க்கை வரலாறு பக். 731-733)

நேரு இராஜாஜியைத் தன் அமைச்சரவையில் 15.7.1950இல் சேர்த்துக் கொண்டார். ஆனால் எந்த இலக்காவையும் கொடுக்காமல் அவமதித்தார். தனக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் இடையில் இடைத்தரகர் போல  இருக்கும்படி செய்து விட்டார்.

சம்பளம், கார், பங்களா எல்லாம் உண்டு. ஆனால் கையெழுத்துப் போட ஒரு கோப்பு கூடக்கிடையாது. இலாக்கா இருந்தால்தானே கோப்புகள் வரும். இராஜாஜியும்  மானம் ஈனம் எதுவும் இல்லாமல் இலக்கா இல்லாத அமைச்சராக 15.12.1950 வரை இருந்தார். 1950 டிசம்பர் 13இல் வல்லபாய் பட்டேல் இறந்த பிறகுதான் அவருடைய உள்துறை இலாக்கா இராஜாஜிக்குக் கொடுக்கப்பட்டது. (ராஜ்மோகன் காந்தி இராஜாஜி வாழ்க்கை வரலாறு பக். 741)

நேருவுக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு விரைவிலேயே மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டார்.

ம.பொ.சியின் குருநாதரும் சென்னை மாகாண முதல்வருமான ராஜாஜிக்கும் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு இல்லை என்பதே உண்மை.

(தொடரும்)

 

Pin It