முதுகுளத்தூர் கலவரத்தை ஒடுக்குவதில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியது. காங்கிரசின் செயலுக்காகப் பெரியார், காமராஜரைப் பாராட்டினார். அது மட்டுமின்றி, “இக்கலவரத்தில் சமூக விரோதிகளைக் கடுமையாய்த் தண்டித்துச் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தாவிட்டால், அம் மக்களின் சார்பில் போராட்டத்தில் குதிப்பேன்” (விடுதலை) என்று அறிக்கையும் விட்டார்.

ஆனால், பெரியாரின் இயக்கத்திலிருந்து கிளைத்தவர்களான அண்ணாவும் அவரது இயக்கத்தினரும் மற்றும் பல எதிர்க்கட்சிக்காரர்களும் ஓட்டுக்கள் பெறுவதை எண்ணி ஆளுங்கட்சிக்கு எதிராகவே செயல்பட்டனர். முதுகுளத்தூர் கலவரம் நடந்து கொண்டிருக்கையில் எதிர்க்கட்சியினர் தஞ்சாவூர் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். எதிர்க்கட்சிகள், நெருக்கடியைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முயற்சித்தனவேயன்றி, கலவரத்தை நிறுத்துவதற்கான எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

‘தூவல்’ துப்பாக்கிச் சூட்டை முதன்மைப்படுத்திப் பேசியே மறவர்களைத் தத்தம் பக்கம் ஈர்ப்பதில் அவை முழுக் கவனத்தையும் செலுத்தின. ‘தூவல்’ துப்பாக்கிச் சூட்டை எண்ணி முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள், ‘வீரம்பல்’ கோயிலுக்குள் தஞ்சம் புகுந்த மக்கள் மீது சாதி வெறியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தாக்கியும், பெண்களை அவமானப்படுத்தியும், மிருகத்தனமாக நடந்து கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்? (விடுதலை) என்று பெரியார் மட்டும் மறுதலையாகச் சிந்தித்து எழுதினார்.

- செ.சண்முகபாரதி எழுதிய இம்மானுவேல் தேவேந்திரர் - கதைப் பாடல் ஆய்வு நூல் பக்கம் - 70

Pin It