ஆளும் கட்சிகளின் அரவணைப்பு களுக்காக பெரியார் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு, பெரியார் இயக்கத் தின் ஒரே ‘அதிகாரபூர்வ வாரிசாக’ தன்னை அறிவித்துக் கொள்ளும் ‘தமிழர் தலைவர்’

கி. வீரமணி, கடந்த ஆண்டில் மட்டும் இழைத்த துரோகங்களிலிருந்து சில :

•    ஓய்வு வயது உயர்த்தப்படுவதையே எதிர்ப்பதுதான், பெரியார் கொள்கை. புதிய நியமனங்களை தடைப் படுத்தும் இந்த சமூக அநீதிக்கு எதிராக கடந்த காலங்களில் பெரியார் இயக்கம் குரல் கொடுத்து வந்திருப்பது வரலாறு. ஆனால் கடந்த ஆண்டு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை அரசின் அனைத்துத் துறைகளிலும், மீண்டும் பதவிக்கால நீட்டிப்பு தந்து, பணியமர்த்தும் அரசு ஆணையை கலைஞர் கருணாநிதி ஆட்சி, பிறப்பித்தபோது, வீரமணி, வாயை மூடிக் கொண்டு விட்டார் எதிர்க்கவில்லை.

•   தஞ்சையில் வீரமணி அறக்கட்டளை பெயரால் நடத்தும் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழகம் என்ற நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் அங்கீ காரத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் ரத்து செய்தது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் கல்வி யாளர்களை நியமிப் பதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களை நியமித்தது ஒரு காரணம். கி.வீரமணி பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் தனது மகள் அன்பு ராஜையும், தனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்களையும் நியமித்தார். கல்வித் துறையோடு தொடர்பில்லாத அவர், தன்னை பல்கலைக் கழக வேந்தராக்கிக் கொண்டார். எனவே மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அங்கீகாரத்தை ரத்து செய்தது.

•    இது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சரான பொன்முடி ஒரு அதிர்ச்சியான குற்றச் சாட்டை முன் வைத்தார்.  தமிழ்நாட்டிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒற்றைச் சாளர முறையில் ‘கவுன்சிலிங்’ வழியாக இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை சேர்த்திட 65 சதவீத இடங்களைக் கேட்டபோது ஒரு பல்கலைக்கழகம் கூட தனது இடங்களை அரசுக்கு ஒதுக்க முன்வரவில்லை என்பதே அமைச்சர் பொன்முடியின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கு “வேந்தர்” வீரமணி தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை. வீரமணி நடத்தும் பல்கலைக் கழகம், இதுகாறும் வெளியிட்ட எந்த மாணவர் சேர்க்கை அறிவிப்பிலும், தமிழக அரசின் இடஒதுக்கீட்டின்படிதான் சேர்க்கை நடைபெறும் என்று எங்கேயும் அறிவித்ததில்லை. சமூகநீதிக் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு, லட்சம் லட்சமாக நன்கொடை வாங்கிக் கொண்டு, ஏ.சி. சண்முகம், ஜெகத்ரட்சகன், விநாயகா மிஷன் சண்முகசுந்தரம் சவீதா வீரையன் போலவே கல்வி வியாபாரம் நடத்தி, பெரியார் கொள்கைகளை குழி தோண்டி புதைக்கிறார்கள். பல்கலை அங்கீகாரம் ரத்து செய்ததை எதிர்த்து ஏனைய கல்வி வியாபாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நீதிமன்றம் போனார், கி.வீரமணி.

•  கல்வி வர்த்தகத்துக்காக மட்டும், அவர் நீதிமன்றம் போகவில்லை. பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் புரட்சிகர சிந்தனைகள் மக்கள் மன்றத்தில் பரவிடக் கூடாது என்பதற்கும் நீதிமன்றம் போனார். பெரியார் திராவிடர் கழகம், ‘குடிஅரசின்’ 27 தொகுப்புகளை வெளியிட்டதை எதிர்த்து, பெரியார் தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை தந்ததாக உயர்நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறிய வீரமணி தீர்ப்பில் மூக்குடை பட்டது அல்லாமல், மேல்முறை யீட்டிலும் மூக்குடை பட்டார். பெரியார் நூல்களை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்ததோடு கழகம் வெளியிட்ட குடிஅரசு தொகுப்புகளை இணையதளத்தில் இலவச மாகவே வெளியிட்டது, பெரியார் திராவிடர் கழகம். உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் அவமானப்பட்டதோடு நிற்காமல், பெரியார் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் போனார். வழக்கை விசாரணைக்கு ஏற்கவே, உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. வீரமணியின் பிறந்த நாளில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவரது பிறந்த நாள் பரிசாக வந்தது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மற்றொரு வழக்காக தமது முந்தைய வழக்கு மனுவின் கோரிக்கையை  (Prayer) மாற்றி வீரமணி தொடர்ந்தார். அதையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இது வீரமணிக்கு கிடைத்த பெரியார் நினைவு நாள் பரிசு. இனி சர்வதேச நீதிமன்றத்துக்கோ, அய்.நா.வுக்கோ கூட, கி.வீரமணி போகலாம். “விடமாட்டேன்; கிணறு வெட்டியதற்கான ரசீது என்னிடம் இருக்கிறது” என்று நடிகர் வடிவேலு வின் திரைப்பட ‘காமெடி’ தான் நினைவுக்கு வருகிறது.

•   தமிழர்கள் டெல்லி பார்ப்பன ஆட்சிக்கு அடிமையாக இருப்பதை எதிர்க்க இறுதி மூச்சு அடங்கும் வரை போர் முரசு கொட்டிய தலைவர் பெரியார். உரிமைகள் இல்லாத சட்டமன்றங்களுக்கு பதவிகளுக்காக ஓடுவது பெரியார் தொண்டர்களின் வேலை அல்ல. தேர்தலில் போட்டியிடுவ திலிருந்து பெரியார், தனது இயக்கத்தை விலக்கியே வைத்தார். ஆனால், கலைஞர் கருணாநிதி ஆட்சி பல கோடி செலவில் ‘அலங்கார சட்டமன்றம்’ ஒன்றை கட்டி எழுப்பி யதற்கு விடுதலை சிறப்பு மலர் வெளியிட்டு, கொள்கை துரோகத்தை வெளிச்சப் படுத்தியது. இதே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினர் அர்ச்சகர் சட்டம் உச்சநீதி மன்றத்தில் மீண்டும் முடக்கப்பட்டுக் கிடப்பதை அகற்ற, கலைஞர் கருணாநிதி ஆட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியைக்கூட வீரமணி வாய் திறந்து கேட்கவே இல்லை. ஆனால், அனைத்துச் சாதி யினரையும் அர்ச்சகர் ஆக்கி, மாபெரும் சமூகப் புரட்சியை கலைஞர் கருணாநிதி செய்து முடிந்து விட்டதாக பெரியார் நினைவிடத்திலேயே வீரமணி கல்வெட்டை நிறுவிவிட்டார்.

•   அண்ணா முதல்வரானவுடன் வாஞ்சிநாதன் குடும்பத் துக்கு நிதி உதவி வழங்கப் போவதாக அறிவித்தார். வாஞ்சி நாதன், வர்ணாஸ்ரமத்தைக் காப்பாற்றவே, ஆஷ்துரையை சுட்டுக் கொன்றவன் என்பதால், அண்ணாவின் இந்த அறிவிப்பை அப்போதே, பெரியார் எதிர்த்தார். விடுதலை கண்டன தலையங்கம் தீட்டியது. அதே வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக தி.மு.க. அறிவித்தபோது வீரமணி, வாயை மூடிக் கொண்டு விட்டார்.

•    பெரியாரின் வாழ்க்கை வரலாறான தமிழர் தலைவர் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஒரு தனியார் நிறு வனம் பதிப்புரிமை அச்சிட்டோர் போன்ற தகவல்களை வெளியிடும் பக்கத்தில், நூலின் பெயரைக் குறிப்பிட்டபோது அடைப்புக் குறிக்குள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அச்சிட்டிருந்தது. தங்களைத் தவிர, வேறு நிறுவனம் பெரியார் நூல்களை வெளியிட்டால், இப்படித் தான், பெரியாருக்கே சாதிப் பட்டம் போட்டு விடுவார்கள் என்று விடுதலை மீண்டும் மீண்டும் ஆவேசமாக எழுதியது. ஆனால், கி.வீரமணி நடத்தும் திரைப்பட நிறுவனம் தயாரித்த பெரியார் படம் தெலுங்கு மொழியில் வெளியிடும் உரிமையை விற்பனை செய்தபோது படத்தை வாங்கியவர் அதற்கு தந்த தலைப்பு ‘ஈ.வெ.ராமசாமி நாய்க்கர்’ என்பதாகும். இதை வீரமணி கண்டு கொள்ள வில்லை. பெரியார் திராவிடர் கழகம் அம்பலப்படுத்திய பிறகு, ‘நாய்க்கர்’ என்ற பெயரில் அடித்தல் குறி போடப் படும் என்றார். சாதிப் பட்டத்தை நீக்க முன் வரவில்லை.

•     கொலைக்குற்றம் சட்டப்பட்ட காஞ்சி ஜெயேந் திரனுக்கு எதிரான அரசு சாட்சிகளே - பிறழ் சாட்சிகளாகி விட்டன. தி.மு.க. ஆட்சியின் காவல்துறை வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. கலைஞர் கருணாநிதி அவரது ‘முரசொலி’ நாளேட்டில் (12.2.2010) ‘அவனும் சிரித்தான்; நானும் சிரித்தேன்’ என்று ஒரு உருவகக் கதையை எழுதினார். சங்கர்ராமன் கொலை வழக்கை முன் வைத்து எழுதிய அந்த கதையில் “மடாலயத்தில் நடைபெற்ற ஒரு கொலையில், சாமியார் சிக்க வைக்கப்பட்டார்; அம்மையார் பழி தீர்த்துக் கொண்டார்” என்று எழுதி சங்கராச்சாரி மீது தொடரப்பட்ட கொலை வழக்கு, ஜெயலலிதா பழி வாங்க போட்ட பொய் வழக்கு என்று எழுதினார். இதற்குப் பிறகு காவல்துறை எப்படி நடந்து கொள்ளும்? கி.வீரமணி, இதை எல்லாம், எதிர்த்து எதுவும் பேசவில்லை; எழுதவும் இல்லை.

•   அண்ணா முதலமைச்சரானவுடனேயே உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது பெரியார், “உலகத் தமிழ் மாநாடாம்; வெங்காய மாநாடாம், இது எதற்கு? கும்பகோணம் மாமங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது?” என்று எழுதினார். (‘விடுதலை’ 15.12.67) தி.மு.க. ஆட்சி அதேபோன்ற ஆடம்பரத் திருவிழாவை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் நடத்தியபோது அது பற்றி எந்தக் கருத்தும் கூறாதது மட்டுமல்ல. மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார், வீரமணி.

•     தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள் பார்ப்பானுக்கு அடிமைகளாகவே இருந்தவர்கள் என்பதால், அவர்களின் பெருமை பேசுவதைக் கடுமையாக கண்டித்தவர் பெரியார். “நம் சேர, சோழ பாண்டியன் களைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை. மோட்சத்திற்காக தம் மனைவியைப் பார்ப்பானுக்கு கூட்டிக் கொடுக்கும் அளவுக்கு முட்டாள்களாக, மடையர்களாக இருந்திருக் கிறார்கள்” என்று பெரியார் எழுதினார். (‘விடுதலை’ 30.3.1959) ஆனால் தஞ்சை பெரிய கோயில் கட்டி, ஆயிரம் ஆண்டு முடிந்து விட்ட தற்காக, ராஜராஜசோழனுக்கு அரசு செலவில் தி.மு.க. ஆட்சி ‘திருவிழா’ எடுத்தபோது அதை சுட்டிக்காட்டி கண்டிக்காமல், வாயை மூடிக் கொண்டார், கி.வீரமணி.

•   தமிழ்நாட்டின் அரசு வழக்கறிஞராக இருந்த விடுதலை என்ற திராவிடர் இயக்கக் குடும்பத்தைச் சார்ந்த வழக்கறிஞரை நீக்கிவிட்டு, வி.பி.ராமன் பரம் பரையில் வந்த ஒரு பார்ப்பனரை அரசு வழக்கறிஞராக நியமித்தபோதும் சரி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு மூப்பு வரிசையில் இருந்த பல அதிகாரிகளை புறக்கணித்து விட்டு, மாலதி என்ற பார்ப்பனரையே தேடிப் பிடித்து கலைஞர் கருணாநிதி நியமித்தபோதும் சரி, வீரமணி கண்டித்து எழுதவோ, பேசவோ இல்லை. பார்ப்பனராகத் தேடிப் பிடித்து, அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமைச் செயலாளர்களை நியமித்ததைக் கண்டித்த தி.மு.க. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு எல்.கே. திரிபாதி, கே.எஸ். சிறீபதி, மாலதி என்ற பார்ப்பனர் களையே தேடிப் பிடித்து நியமிப்பது ஏன் என்று கி.வீரமணி கேள்வி எழுப்பவும் இல்லை, nந்hமையான தலித் அதிகாரி உமாசங்கரைத் தண்டித்த கலைஞர் கருணாநிதி ஆட்சி, ஓய்வு பெற்ற தலைமைச் செய லாளர் பார்ப்பனர் கே.எஸ். சிறீபதிக்கு உடனடி ‘பரிசாக’ மாநிலத்தின் தலைமைத் தகவல் உரிமைக்கான அதிகாரி பதவி வழங்கினாரே; இதை எல்லாம் தட்டிக் கேட்க ‘தமிழர் தலைவர்’ வீரமணி தயாராக இல்லை.

•    பரதநாட்டியக் கலை தமிழர் கலை அல்ல. அது காஷ்மீரத்துப் பார்ப்பனர் பரத முனிவரிடமிருந்து வந்த கலை என்று ‘ஆராய்ச்சி’ செய்து நூல் எழுதிய பார்ப்பனர் பத்மா சுப்ரமணியனுக்கு, ஜெயலலிதா ஆட்சி நிலம் ஒதுக்கியது. ஆட்சிக்கு வந்த தி.மு.க. அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது. உடனே கி.வீரமணி, கலைஞர் ஆட்சியை அதற்காகப் புகழ்ந்து எழுதினார். அதே கலைஞர் கருணாநிதி மீண்டும் அதே பார்ப்பனப் பெண்மணிக்கு மாமல்லபுரம் அருகே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி, அதற்கான விழாவிலும் கலந்து கொண்டு மகிழ்ந்த போது, வீரமணி அதைக் கண்டித்தாரா? வாயை மூடிக்கொண்டார். அழைப்புக் கிடைத்திருந்தால் நிகழ்ச்சியிலும் போய் கலந்திருப்பார். இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.

2010 ஆண்டில் மட்டும் “தமிழர் தலைவர்” வீரமணி, பெரியார் கொள்கைக்கு இழைத்த துரோகங்கள் இவை; இதுவும் கூட ஒரு சிறு துளி தான்!

 

Pin It