(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-9)
ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகள் சதிப் பின்னணி உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. குறிப்பாக இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’துக்கு இதில் பங்கு உண்டு என்று ஒரு வலிமையான கருத்து முன் வைக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு தொடக்கம் - இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’ இலங்கை அரசோடும், இந்திய உளவு நிறுவனத்தோடும் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், விடுதலைப் புலிகள் ‘மொசாத்’ உளவு நிறுவனத்தோடு நெருக்கம் கொண்டு, அந்த உளவு நிறுவனத்தின் கூலிப்படையாக மாறி, ராஜீவ் கொலையை செய்து முடித்தனர் என்று ராஜீவ் சர்மா தனது நூலில் குற்றம்சாட்டுவது அபாண்டம்; அபத்தம். அதற்கான வலிமையான ஆதாரம், சான்றுகளை ராஜீவ் சர்மா முன் வைக்கவில்லை.
ராஜீவ் கொலையில் அன்னிய சதி பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஜெயின், தமது அறிக்கையிலும் விடுதலைப் புலிகள் மொசாத் சி.அய்.ஏ. (அமெரிக்க உளவு நிறுவனம்) இடையிலான தொடர்புகளை புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு முடிவுக்கு நீதிபதி ஜெயின் வருவதற்கு காரணம் என்ன?
இஸ்ரேல் உளவு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி, அதிலிருந்து வெளியேறிய விக்டர் ஓஸ்ட்ரோஸ்கி (Victor Ostrovsky) மொசாத் ரகசிய செயல்பாடுகளைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். நூலின் பெயர் ‘By way of deception’ என்பதாகும். அதில் “மொசாத் நிறுவனம், ஒரே நேரத்தில் சிங்கள ராணுவத்துக்கும் தமிழ் கொரில்லா குழுவுக்கும் பயிற்சிகளை அளித்தது” என்று எழுதியுள்ளார். அப்படி பயிற்சிபெற்றது விடுதலைப் புலிகள்தான் என்று வழக்கம் போலவே எல்லா பழிகளையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது போட்டதுபோல், இந்தப் பழியையும் தூக்கிப் போட்டு விட்டார்கள்.
உண்மையில் அந்த நூலில் இது தொடர்பாக இடம் பெற்றுள்ளது ஒரே ஒரு வாக்கியம் மட்டும் தான்:
“Around 1983. a group of Tamil gurilla factions, collectively known as the Tamil Tigers, began an armed struggle to create a Tamil home land in the north called Elam - an on going battle that has claimed thousand of lives on both sides.” (1983 ஆம் ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்பட்ட தமிழ் கொரில்லாக்கள் குழு, இலங்கையின் வடக்குப் பகுதியில் ‘ஈழம்’ என்ற தமிழர்களுக்கான தேசத்தை உருவாக்குவதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்கினர். தொடர்ச்சியாக நடந்த அந்தப் போராட்டத்தினால் இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் நேர்ந்தன.)
- இந்த ஒரு வாக்கியத்தில் ‘தமிழ்ப் புலிகள்’ என்ற சொல் மேலோட்டமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் குறிப்பிடும் அந்த 1984 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட எல்.டி.டி.ஈ. மட்டுமல்ல, ‘டெலோ’, ‘ஈ.பி.ஆர்.எல்.எல்.’, ‘ஈரோஸ்’, ‘புளோட்’ என்ற எல்லா அமைப்புகளுமே புலிகள் என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்பட்டன. இது எல்லோருக்குமே தெரியும். அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டிலும் பத்திரிகைகளானாலும், மக்களானாலும் எல்லா அமைப்புகளுமே ‘புலிகள்’ என்றே அழைக்கப்பட்டன. பல நேரங்களில் விடுதலைப் புலிகள் அல்லாத பிற குழுக்களின் முறைகேடான நடவடிக்கைகளும் புலிகளின் செயல்பாடுகளாகவே கூறப்பட்டதால், விடுதலைப் புலிகள் இயக்கமே, அவற்றையெல்லாம் மறுக்க வேண்டியிருந்தது. “தமிழ் மக்கள் இப்போட்டிக் குழுக்களை எவ்வகையிலும் வேறுபடுத்தி நோக்கவில்லை. அவர்கள் எல்லோரும் எமது ‘பொடியன்கள்’ என்றும், ‘புலிகள்’ என்றும் கூட அழைக்கப்பட்டனர்” - என்று யாழ் பல்கலை பேராசிரியர்கள் எழுதிய ‘முறிந்த பனை’ நூலும் (பக்.78) குறிப்பிடுகிறது. எனவே தமிழ்ப் புலிகள், இஸ்ரேல் உளவு நிறுவனத்திடம் பயிற்சிப் பெற்றதாக அந்த நூலில் மேலோட்டமாக எழுதப்பட்டதை - விடுதலைப் புலிகள் தான் என்று உறுதியாகக் கூற முடியாது. மாறாக விடுதலைப் புலிகள் இனவெறி இஸ்ரேலின் மொசாத்துக்கு எதிரான பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி எடுத்தார்கள் என்று சர்வதேச புகழ் பெற்ற ‘எக்னாமிஸ்ட்’ ஏடு (22.3.1985) எழுதியது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் நடந்த போராட்டத்தை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதிய சிங்களரான ரோகன் குணரத்தினா சிங்கள ராணுவக் குழு இஸ்ரேல் சென்று பயிற்சி பெற்றது என்றும், இப்படிப் பயிற்சி பெற்ற குழுவுக்கு இஸ்ரேல் சூட்டியிருந்த ரகசிய பெயர் ‘குரங்குகள்’ என்றும் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, ரோகன் குணரத்னா, தனது நூலில் ‘விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி’ என்ற முன்னாள் மொசாத் அதிகாரி, தனது நூலில் விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேலுடன் உறவு இருப்பதாக எழுதி, பரபரப்பை உருவாக்கி இருந்தாலும், உண்மை என்னவெனில், இஸ்ரேலுடன் விடுதலைப் புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதே. Even though Victor Ostrovsky, a former Mossad agent sensationalized LTTE relatios with Israel, there was virtually no relationship - இது சிங்கள ஆய்வாளரே தரும் தகவல். இஸ்ரேலிய உளவுப் பிரிவைச் சார்ந்த 50 பேர் இலங்கை ராணுவத் தினருக்குத்தான் ரகசியமாக பயிற்சி அளித்தனர்.
இது பற்றி கொழும்பு ஏடுகளில் செய்திகள் வந்தன. அப்போது அதிபர் ஜூலியஸ் ஜெயவர்த்தனே, அதை மறுக்கவில்லை. மாறாக, ‘பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பேய்களின் உதவியைப் பெறவும் தயாராக இருக்கிறேன்' என்று கூறினார். இஸ்ரேல், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “இலங்கை அரசு விரும்பினால், எங்கள் நாடு ராணுவப் பயிற்சி அளிக்கத் தயார்” என்று ‘ஆசியன் மானிட்டர்’ என்ற ஏட்டுக்கு பேட்டியும் அளித்தார். இந்த நிலையில், தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம், தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார், பொன்னம்பலம் ஆகியோர் விடுத்த அறிக்கையில், இஸ்ரேல் ராணுவம் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி தரும் செய்திகளுக்கு தங்களது அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
ராணுவப் பயிற்சி ஏற்கனவே தொடங்கி நடந்து கொண்டிருப்பதாகவும், வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் அவர்கள் ஊடுருவி நிற்பதாகவும், இது ஆபத்தான போக்கு என்றும், அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். இவையெல்லாம் 1984 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள்.
2000 ஆம் ஆண்டில் ஏப்ரல் - மே மாதங்களில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இலங்கை இராணுவம் கடும் பின்னடைவுகளை சந்தித்தது. அப்போது இராணுவத்தின் தோல்விகளை பத்திரிகைகள் வெளியிடாமல், மக்களிடமிருந்து மறைக்க இலங்கை அரசு, கடும் தணிக்கைகளை செய்து வந்தது. அப்போது ‘அய்லேண்ட்’ பத்திரிகை கடும் தணிக்கைக்கிடையிலும் - பிரேமதாச ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணை ஆணையம் வெளியிட்ட ஒரு உண்மையை வெளிப்படுத்தியது. அதாவது, மொசாத் உளவுப் படையின் முன்னாள் அதிகாரி ஒரே நேரத்தில் புலிகளுக்கும் இஸ்ரேல் பயிற்சி வழங்குவதாக எழுதியதைத் தொடர்ந்து, அந்த செய்தி உண்மைதானா என்பதை விசாரிக்க அதிபர் பிரேமதாசா, ராணுவ அதிகாரிகளைக் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். புலன் விசாரணை நடத்திய ராணுவ அதிகாரிகள், புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சி எதுவும் தரவில்லை என்றும், மாறாக, பாலஸ்தீன விடுதலை இயக்கம் தான், விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி தந்திருக்கிறது என்றும், தங்கள் விசாரணையில் கண்டறிந்து கூறினர். இந்தத் தகவலை 2000ம் ஆண்டில் அய்லேண்ட் பத்திரிக்கை வெளியிட்டது.
(During the Premadasa regime an ex-officer of the Mossad intelligence agency accused the Israelis of helping LTTE too and Premadasa appointed a Commission to investigate that allegation. The then service commanders testified to say that it was the PLO which helped the LTTE and not the Israelis.) (Island, May 7, 2000)
ஆக -
• முன்னாள் ‘மொசாத்’ அதிகாரி எழுதிய நூலில், விடுதலைப் புலிகள் தான் பயிற்சிப் பெற்றனர் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்படவில்லை.
• சிங்கள ஆய்வாளர்களே புலிகள், இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றதாக கூறுவது தவறு என்று எழுதி விட்டனர்.
• பிரேமதாசா நியமித்த ராணுவ அதிகாரிகள் விசாரணைக் குழுவும் இதை மறுத்து, புலிகள் பயிற்சிப் பெற்றது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் என்று கூறிவிட்டது.
ராஜீவ் சர்மாவுக்குப் பின்னால் மறைந்து நிற்கும் சக்திகள் யார் என்பது, இப்போது புரிகிறதா?
இவ்வளவு உண்மைகளையும் மறைத்துவிட்டு, விடுதலைப்புலிகள் இஸ்ரேல் உளவு நிறுவனத்திடம் பயிற்சிப் பெற்றவர்கள் என்று ராஜீவ் சர்மா, தமது நூலில் கூறுகிறார் என்றால், உளவு நிறுவனம் கட்டமைக்கும் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில், தன்னையும் இணைத்துக் கொள்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன முடிவுக்கு வர முடியும்?
ராஜீவ் சர்மாவின் இந்த நூல் சிறையிலிருக்கும் தமிழர்கள் விடுதலைக்கு வலிமை சேர்ப்பதாக நூலை வெளியிட்ட சவுக்கு பதிப்பகம் முன்னுரையில் கூறுகிறது. ஆனால் இந்த நூல் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்களையேகூட குற்றவாளிகளாக சித்தரிக்கிறது. உதாரணமாக சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டலாம்.
• உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பத்மா-பாக்கியநாதன் மற்றும் இறந்து போன அரிபாபு ஆகியோர் ராஜீவ் கொலைக்கு முதல் நாள் நடந்த சதி ஆலோசனையில் பங்கேற்றவர்கள் என்கிறது, இந்த நூல். இப்படி ஒரு சம்பவம் நடப்பது முன் கூட்டியே தெரிந்திருந்தால் அரிபாபு, சம்பவ இடத்திலேயே தன்னை பலி கொடுக்க காமிரா சாட்சியுடன் நின்றிருப்பாரா?
• உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆதிரையை கரும்புலி என்று எழுதுகிறது, இந்த நூல்.
• தாணு இடுப்பில் கட்டி வெடிக்கச் செய்த ‘பெல்ட்’டை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவினராலேயே இறுதி வரை விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார். புலனாய்வுக் குழுவில் முக்கிய இடம் பெற்றிருந்த ரகோத்தமன் என்ற அதிகாரி. தற்போது சிறையில் அடைக்கப்பட்டு, நீதி கேட்டு போராடி வரும் பேரறிவாளன், ரகோத்தமன் வெளியிட்ட கருத்தின் அடிப்படையிலேயே தனக்கு நியாயம் கேட்கிறார். ‘பெல்ட் பாம்’ செய்தது யார் என்பதைக் கண்டுப்பிடிக்காத புலனாய்வுத் துறை அதற்கு பேட்டரி வாங்கச் செய்த குற்றத்தை தம் மீது சுமத்தி, தண்டனை பெற்றுத் தந்துள்ளதே. இது என்ன நியாயம்? இது என்ன நீதி? என்பதுதான் பேரறிவாளன் எழுப்பும் கேள்வி. ஆனால், புலனாய்வுத் துறையாலே கண்டுபிடிக்க முடியாத உண்மையை ராஜீவ் சர்மா கண்டுபிடித்து இந்த நூலில் எழுதியுள்ளது தான் வேடிக்கை. ஜெர்மன் நாட்டில் பிராங்க்பர்ட் நகரத்தில் வாழ்ந்த தம்பி ஜெயபாலன் என்பவர் தான், சென்னைக்கு வந்து வெடிகுண்டு பெல்ட்டை தயாரித்தார் என்கிறார் ராஜீவ் சர்மா - இதற்கு என்ன ஆதாரம்? இதுதான் சிறையில் வாழும் 7 தமிழர்களைக் காப்பாற்றக் கூடிய கருத்தா?
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் இருந்த கோடியக்கரை சண்முகம், மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். கடுமையான பாதுகாப்புகளுடன் விசாரணையில் இருந்த ஒருவர், எப்படி தூக்கில் தொங்க முடியும்? சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் அது தற்கொலை தான் என்று கூறி, சண்முகத்தின் வழக்கை முடித்து விட்டனர். சண்முகத்தின் மனைவி பவானியம்மாள், தன்னுடைய கணவரை சி.பி.அய். தான் விசாரணையில் சாகடித்து விட்டது என்று குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தந்தி அனுப்பினார். ஆனால் எந்த ஆதாரமோ, சூழ்நிலைச் சான்றுகளோ இல்லாமல் விடுதலைப் புலிகள் மீது கொலைப் பழிகளை சுமத்தும் ராஜீவ் சர்மா, சண்முகத்தின் மரணத்தில் சி.பி.அய்.யை காப்பாற்றவே விரும்புகிறார். சண்முகத்தின் மாமாவான சீதாராமன், ‘புலிகளை காட்டிக் கொடுத்து துரோகியாகி விட்டாய்’ என்று ஆத்திரத்தில் அவரது உறவினர்களோடு சேர்ந்து சண்முகத்தைக் கொன்று விட்டதாக எழுதுகிறார்.
“சண்முகத்தின் கூட்டாளிகள் அவரைக் காப்பாற்ற பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவோம் என்று சண்முகத்திடம் பொய்யான உறுதியைக் கூறியதாக வேதாரண்யம் மக்கள் நம்பினர். சண்முகம் செய்த துரோகத்தால், அவரைக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் போல் காட்டுவதற்காக மரத்தில் தொங்கவிட்டனர்.”(நூல். பக்.125)
ராஜீவ் சர்மா, ஏன் வலிந்து சென்று, சி.பி.அய். அதிகாரிகளைக் காப்பாற்ற துடிக்கிறார்? உத்தமபுத்திரர்களாக சித்தரிக்க விரும்புகிறார்; ஆதாரம் ஏதுமற்ற தகவல்களை சி.பி.அய். விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஏன் எழுத வேண்டும்?
- தொடரும்