அமெரிக்காவின் தூதரகங்களில் இந்தியா பற்றி பதிவு செய்யப்பட்ட ரகசிய தகவல்களை ‘விக்கிலீக்ஸ்’ இணைய தளத்திலிருந்து பெற்று இந்து நாளேடு ஒவ்வொரு நாளும்  வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு அனைத்து திட்டங்களையும் வகுத்துக் கொடுத்த கேரள வல்லாதிக்க குழு ஒன்று செயல் பட்டதை ஏற்கனவே ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருந்தன. 2005 ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் என்ற மலையாள அதிகாரி நியமிக்கப்பட்டார். அப் போதே அமெரிக்க தூதரகம் இந்தி யாவில் பிரதமரைச் சுற்றி மலையாளி களின் வல்லாதிக்கக் குழு ஒன்று இயங்கி வருவதாக ரகசியக் குறிப்பில் பதிவு செய்துள்ளது. அமைச்சரவையின் முதன்மைச் செயலாளராக டி.கே.ஏ. நாயர் இருக்கிறார். இப்போது எம்.கே. நாராயணன், பாதுகாப்பு செயலாளராகி யுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் கேரள மாஃபியா குழு ஒன்று உருவாகி யுள்ளது. பொதுவாக இந்தியாவில் வடநாட்டு இந்தி அதிகாரிகள் தான் அதிகார வர்க்கத்தில் பெருமளவில் இருப்பார்கள். மாறாக, இப்போது பிரதமர் அலுவலகத்தை கேரள அதிகார வர்க்கம் சுற்றி வளைத்துக் கொண்டிருக் கிறது. இவர்கள் எதையும் செய்யக் கூடிய அதிகாரம் படைத்தவர்கள். எதிர்காலத் தில் எந்தத் தவறையும் செய்யக் கூடிய குழு ஒன்று பிரதமர் அலுவலகத்தில் உருவாகிவிடும்” என்று அமெரிக்க தூதரகம் பதிவு செய்துள்ளது.

ஈழத்தில் இறுதிக்கட்டப் போரில் இந்தியாவின் துரோகம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின் போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறும், சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசையே காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கியப் பங்காற்றியதாக அமெரிக்க அரசின் பரிமாற்றத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் தகவல்களை ‘இந்து’ நாளிதழ் பிரசுரித்துள்ளது.

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொது மக்கள்  பலியாவது குறித்துக் கவலை தெரிவித்த இந்திய அரசு, அதே நேரத்தில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதை எதிர்க்க வில்லை என்று அமெரிக்கத் தகவல் பரிமாற்றத்தில் கூறப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அதிபரை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி, மனித உரிமைகள் மற்றும் சிவிலியன்கள் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்துடனும் தான் வரவில்லை என்று கூறியதாக அமெரிக்கத் தூதரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.அதாவது, போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர்வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருப்பதாகக் கூறப்பட் டுள்ளது. முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு, ராணுவம் பெறுகின்ற வெற்றி, இலங்கையின் வடக்கிலும் மற்ற பகுதிகளிலும் சகஜ நிலையை நிலைநாட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்றே கூறியிருந்தார். மத்தியில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் நெருக்குதலால் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும், போரை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற் காக முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பிறகு மற்ற எல்லா நேரங்களிலுமே போர் தொடர்வதை இந்தியா தடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சிவசங்கர் மேனன் யோசனை

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவருடன் அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சந்தித்த போது, மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மன்றம் தனது பிரதிநிதியை அனுப்புவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், போர் நிறுத்தத்துக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை என்றும் மேனன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.
சர்வதேச நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்த பட்சம், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாக சிவசங்கர் மேனன் அமெரிக்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில், புலிகளின் முக்கியத் தலைவர்கள் யார், மற்ற தலைவர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்ததாக மேனன் கூறியிருக்கிறார்.
பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதே நேரத்தில், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும் முரண்பட்ட தகவல்கள் வருவதாகவும், பிரபாகரனுக்காகப் பேச வல்லவர் யார் என்பது தெரியவில்லை என்றும் நிலைமையை பிரபாகரன் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடைபெற இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக தகவல் வெளியாகி யுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே 6, 7 தேதிகளில், இலங்கைக்கான பிரிட்டனின் சிறப்புத் தூதர் டேஸ் பிரவ்ன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்த போது, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், இந்த நிலையில் போரை நிறுத்து வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று இந்தியா சார்பில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும், போருக்குப் பிறகு, தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை சம்மதிக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரிட்டிஷ் தூதரக அதிகாரி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வமில்லை

ஐ.நா. பாதுகாப்பு மன்றக் கவுன்சில் கூட்ட நிகழ்ச்சி நிரலில், இலங்கைப் பிரச்சினையை சேர்த்து, அறிக்கை வெளியிட்டால், இலங்கைக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால், அது எதிர்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என பிரிட்டன் சிறப்புத்தூதரிடம் சிவசங்கர் மேனனும், நாராயணனும் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

Pin It