உ.பி. மாநிலத்தில் இது நடந்துள்ளது; லக்னோவில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாகத் தலைமைக்கு - ஒரு ‘ஆசாமி’ தலைவராகியுள்ளார். உலகிலே - எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் இதுபோல் ஒரு ‘தலைவர்’ கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். இந்தத் தலைவர் வாய்ப் பேச மாட்டார். மனித உடலும் குரங்குத் தலையுமாக காட்சியளிப்பார். நீண்ட வாலுடன் பறப்பார். அண்டை தேசத்துக்குள் புகுந்து நெருப்பு வைப்பார். வேறு யார்? சாட்சாத் அனுமான் தான்!

கல்லூரியில் இந்த நிர்வாகக் குழு “தலைவருக்கு” தனி இருக்கையாம். அவருக்கு எதிரே ஒரு கம்ப்யூட்டராம். நிர்வாகக் குழு துணைத் தலைவரும், கம்ப்யூட்டரும், ‘தலைவர்’ காட்டும் வழியில் செயல்படுவார்களாம்! “இதுவும்கூட, ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான். நிர்வாகக் குழுவில் தலைவர்களை இப்படி உண்மையான சிலைகளாக்கிவிட்டால், பிரச்சினைகள் ஏதும் வராதே! “சீட்டுக்கு எவ்வளவு பணம் வாங்கினாய்? கணக்கு இருக்கிறதா?” என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடிய ‘மனிதர்’களை தலைவராக்குவதை விட எது நடந்தாலும் ‘கல்லாக’ நிற்கும் ‘தலைவர்களை’ வைத்துக் கொள்வது நல்லது தானே என்கிறார் ஒரு கிண்டல் பேர்வழி. மரணத்தின் வாசலில்கூட, தன்னை நாத்திகன் என்று பிரகடனப்படுத்திய மாவீரன் பகத்சிங் பெயரில் உள்ள கல்லூரி இது. பகத்சிங் கல்லூரிக்கு நிர்வாகக் குழு தலைவர் அனுமானாம்!

அதில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு நடத்தும் கூட்டங்களுக்கு எல்லாம் அனுமான் பறந்து போவாரா? அங்கு போய் பாடத் திட்டங்களை எப்படி மாற்றியமைக்கலாம் என்று விவாதிப்பாரா? விமானத்தில் பறப்பாரா? அல்லது வாலை நீட்டிக் கொண்டு, அவரே பறப்பாரா? இந்தக் கேள்விகளை எழுப்பினால், சுப்ரமணிய சாமிகள், மனம் புண்படுகிறது என்று வழக்கு தொடர்ந்து விடுவார்கள்!

இனி - தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமார்களை தலைவராக்குவதுபோல் நாட்டின் பல்வேறு துறைகளுக்கு இந்துக் கடவுள்களையே தலைவராக்கி விடலாம்.

காவல் துறைக்கு கிருஷ்ணனை தலைவராக்கலாம். திருட்டுகள், குறும்புகள் எதுவுமில்லாமல் பார்த்துக் கொள்வார். அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமைகளை தர மாட்டார்! கொலைகள் கூட குற்றமில்லை என்று பகவத்கீதையில் அறிவித்தவர் அல்லவா? எனவே - கொலைக் குற்றவாளிகள் சுதந்திரமாக செயல்படலாம்.

நாரதரை - நாடாளுமன்றத் தலைவராக்கலாம். உறுப்பினர்கள் கலவரம் செய்ய அவரே திட்டங்களைத் தீட்டித் தந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஒற்றுமையைக் கட்டிக் காப்பார்.

மகாவிஷ்ணுவை பாதுகாப்புப் பிரிவுத் தலைவராக்கிவிட்டால், அவர் அவதாரம் எடுத்தே நாட்டின் எதிரிகளை ‘துவம்சம்’ செய்து விடுவார். இப்படி சகல துறைக்கும் தலைமை தாங்கக் கூடிய தகுதி படைத்தவர்கள் புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஏராளம் உண்டு.

இதேபோல் - ‘ராமனை’யும் பிரதமராக்கிவிடலாமா என்று அத்வானியிடம் கேட்டால், அதை மட்டும் அத்வானி ஏற்பாரா என்பது சந்தேகம்தான். இது தனக்கு எதிராக ‘வாஜ்பாய் நடத்தும் சதி’ என்று கூற மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கூற முடியாது. ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது இந்தக் கருத்துகளையெல்லாம் பரிசீலிக்கலாம் என்பற்காக, இந்த ஆலோசனைகளை இலவசமாக காதில் போட்டு வைத்தோம் என்றறிக. ஜெய் அனுமான்!

Pin It