செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் ஈழத் தமிழர்கள் மீது காவல்துறையினர் 150 பேர் கடந்த 2 ஆம் தேதி நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மூர்க்கத்தனமாகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டித்து தமிழினப் பாதுகாப்பு போராட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பிப்.4ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடை பெற்றது.

சென்னை மெமோரியல் அரங்கு அருகே, ஒரே நாள் இடைவெளியில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் தோழர்கள் திரண்டு, காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு எதிராக கண்டன முழக்கங்ளை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊடகவியலாளர் அய்யநாதன் தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

கடுமையான தாக்குதலினால் ஒவ்வொருவர் உடலிலும் அழுத்தமான காயங்கள் பதிந்திருந்ததை நேரில் சென்று பார்வையிட்டு வந்த வழக்கறிஞர் புகழேந்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போது குறிப்பிட்டார். 33 தமிழர்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ள அந்த முகாமில் மிக மோசமாக மனித உரிமைகள் ஏதுமின்றி நடத்தப் படுகிறார்கள். உறவினர்கள்கூட அவர்களை எளிதில் சந்தித்துப் பேச முடியாது. தங்கள் மீதான வழக்குகளை 5 ஆண்டுகாலமாக விசாரிக்காமல் தடைப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நியாயத் துக்காக தொடர்ந்து போராடும் தமிழர்களை அச்சுறுத்தி, இனி அவர்கள் போராடவே கூடாது என்று பாடம் கற்பிக்கும் நோக்கத்துடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் குற்றம் சாட்டினர்.

2 ஆம் தேதி காலை தங்கள் முகாமை உள்ளுக் குள் தாளிட்டுக் கொண்டு, போராளிகள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். பகல் முழுதும் காவல்துறை, அமைதியாக இருந்துவிட்டு, நள்ளிர வில் 150பேர் சுவர் ஏறி குதித்து, தமிழர்களைத் தாக்கியுள்ளனர். சுவர் ஏறி குதித்து தாக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை வழக்கறிஞர் புகழேந்தி எழுப்பினார். அதிகாரிகள் தங்கள் கடமையை நிறைவேற்றாமல் தடுத்ததாக குற்றம் சாட்டி, 13 பேர் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களின் பெயர்,காயமடைந்த உடல் பகுதிகளை வழக்கறிஞர் புகழேந்தி, விவரமாக நேரில் சந்தித்து தயாரித் திருந்தார்.

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், “சிறப்பு முகாம் என்பதேகூட சட்ட விரோதமான முகாம்; அது முகாம் என்ற வரையறைக்குள்ளும் வரவில்லை; சிறை என்ற வரையறைக்குள்ளும் வரவில்லை; சிறை என்றால் கூட, அதற்காக பின்பற்றப்பட வேண்டிய விதி முறைகள் உண்டு. சிறப்பு முகாமில் எந்த விதிகளும் பின் பற்றப்படவேண்டிய அவசியமில்லை. முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர்,தமிழ்நாட்டில், வெவ்வேறு அகதி முகாம்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ்வதைக்கூட அரசு அனுமதிக்க மறுக்கிறது. உலக செம்மொழி மா நாட்டை கோலாகலமாக நடத்துவதற்கு தயாராகும் தி.மு.க. அரசு, ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி, அவர்களின் ரத்தத் துளிகள் மீது விழா எடுப்பது என்ன நியாயம்?” என்று கேட்டார்.

மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசுகையில், முகாமில் இருப்பவர்கள் அதிகாரிகளைக் கடமையை செய்யவிடாமல் தடுத்தார்கள் என்றால், அதற்காக, வழக்கு தொடர வேண்டுமே தவிர, மூர்க்கத்தனமாக தாக்குவதா என்று கேட்டார். ஆர்ப்பாட்டத்தில், ஆவடி மனோகரன், தீராளன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), வழக்கறிஞர் கயல், வழக்கறிஞர் அமர்நாத், கவிஞர் தமிழேந்தி, நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட அமைப்பாளர் அதியமான் உள்ளிட்டோர் பேசினர்.

பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும், தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோரும் பெருமளவில் பங்கேற்றனர். முதலில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து, தோழர்களை கைது செய்ய தயாராக வந்திருந்த காவல்துறை, கடைசி நிமிடத்தில் அனுமதி வழங்கியது.

மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரன் நன்றி கூறினார்.

Pin It