தமிழகத்துக்கு புதிய ‘சட்ட மன்றம்’ வடிவெடுத்துள்ளது. சுமார் 500 கோடி செலவில் எழில் குலுங்க, சென்னை நகரில் முதன்மையானப் பகுதியில் பளிச்சிடும் விளக்குகளோடு மக்களைக் கவர்ந்து நிற்கிறது இந்த அடுக்கு மாளிகை - “கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அவரது ஆலோசனை கண்காணிப்பில் உருவானது” என்று வரலாறுகளில் தமது பெயரைப் பதிவு செய்ய, தமிழக முதல்வர் விரும்பினார்; அவர் விருப்பத்திற்கேற்ப கட்டிடமும் உருவாகி விட்டது.  

சட்டமன்றம், அரசு நிறுவனங்களில் ஒரு உறுப்பு. இந்த சட்ட மன்றத்துக்குள் நுழையலாமா? வேண்டாமா? என்று தி.மு.க.விலே விவாதங்கள் நடந்த காலம் உண்டு. 1952 தேர்தலில் போட்டியிடாத தி.மு.க., பிறகு கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தி, 1957 இல் தான் தேர்தல் களத்துக்கே போட்டியிட வந்தது. 1952 பொதுத் தேர்தலின்போது போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள், ‘திராவிடத் தனியரசு’ பிரச்சினையை ஆதரிப்பதாக, கையெழுத்திட்டு உறுதி தந்தால்தான், தி.மு.க. அவர்களை ஆதரிக்கும் என்று மதுரையில் கூடிய தி.மு.க. பொதுக் குழு முடிவு செய்தது. திராவிடத் தனியரசு லட்சியத்தோடு, சட்டமன்றம் நுழைந்த தி.மு.க., பிறகு சட்ட மன்றத்தில் போட்டியிடத் தடை வரப் போகிறது என்பதற்காகவே, ‘திராவிட நாடு கோரிக்கையை’ கைவிட்டது. பெரியார் - தி.மு.க.வின் சட்டமன்ற நுழைவைக் கடுமையாக விமர்சித்தார். திராவிடநாடு லட்சியத்தை கைவிட்ட தி.மு.க., பிறகு, மாநில சுயாட்சி கோரிக்கையை முன் வைத்தது. மாநில சுயாட்சிக்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், அந்த மாநில சுயாட்சி கோரிக்கைகள் எல்லாம் இப்போது காற்றில் பறந்துவிட்டன. முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதி மன்றத் தீர்ப்பையே கேரள அரசு மீறினாலும், தமிழகத்தின் நியாயம் உணரப்படும் காலம் வரை காத்திருப்போம் என்று முதல்வர் சொல்கிறாரே தவிர, மாநில உரிமைக்கு போராடத் தயாராக இல்லை. கல்விப் பட்டியல், மாநில உரிமையிலிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. சட்டசபை யில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் இன்னும் அமுல்படுத்தப்படாது முடங்கிப் போய் நிற்கிறது. இதே சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மத்திய அரசின் காதுகளுக்கு எட்டாமலே போனது. இனப்படுகொலை இந்திய ஆதரவுடன் நடந்து முடிந்துவிட்டது. அதன் ‘சூத்ர’தாரியான சோனியா தான் சட்டமன்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர். இந்த சட்ட மன்றங்களில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் சட்டமாக முடியும்.

இப்படி, மாநிலங்கள் முழுமையாகத் தன்னாட்சி பெற முடியாத நிலையில், மாநில சட்டமன்றம் மட்டும், அலங்காரத்தோடு கம்பீரமாக, மின் விளக்குகளை உமிழ்ந்து கொண்டு ‘பளிச்’ காட்டி வருகிறது. லட்சியப் போராட்டங்களின் வெற்றிகளும், அதற்கான உண்மையான அர்ப்பணிப்புகளும்தான் வரலாறுகளில் பதிந்து நிற்குமே தவிர, கட்டிடங்களும், கல்வெட்டுகளும், பெயரைப் பரப்பலாமே தவிர லட்சியவாதிகளாக அடையாளப்படுத்தாது. வலிமையான அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள சட்டமன்றம், வலிமையான முழுமையான தன்னாட்சி அதிகாரம் பெறும்போதுதான் அதன் அழகு முழுமை பெறும். சுதந்திரத் தமிழ்நாடு கோரிய பெரியார் பெயரில் இயக்கம் நடத்துவோர்கூட, சட்டமன்றக் கட்டிடப் புகழ் பாடத் தொடங்கி, சிறப்பு மலர் வெளியிடுகிற நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதுதான் வேடிக்கை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It