உலக மகளிர் நாள் பொதுக்கூட்டம் வடசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி அயனாவரத்தில் கழகத்தோழர் நா.பாஸ்கர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. பெரியார் வலியுறுத்திய பெண்ணுரிமைக் கருத்துகளை குடும்பத்தில் பின்பற்றி, வாழ்வியலாக்குவோம் என்று தோழர்கள் உறுதி ஏற்றனர். கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் அஜிதா சிறப்புரையாற்றினர்.
பெரியாரியத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்களின் குடும்பங்களில் குழந்தைகளை பெண், ஆண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும்; பெயர் சூட்டும்போதும் அடையாளத்திலும் ‘பெண்மை’ எனும் பெயரால் அடையாளங்களைத் திணிக்கக் கூடாது. குறிப்பாக சமையல் அறைப் பணிகள், பெண், ஆண் இருவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்.
குழந்தை வளர்ப்பிலேயே பெண், ஆண்களின் பாகுபாடுகளைத் திணிக்கப்படும் நிலையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற கருத்துகள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன. பெண்களுக்கான உரிமையை அங்கீகரித்து, அதை குடும்பத்தில் வாழ்க்கை நெறியாக்கும் கடமை, ஆதிக்கவாதிகளாக விளங்கும் ஆண் வர்க்கத்திடமே இருப்பதால், மகளிர் உரிமைக்கான கருத்துகள், பெண்களைவிட ஆண்களிடமே, பரப்பிட வேண்டிய அவசியம் இருப்பதை கூட்டத்தில், பேசியவர்கள் சுட்டிக்காட்டினர்.
மகளிர் நாள் கூட்டம் நடக்கும் நாளில் மட்டும், மகளிர் திரட்டப்பட்டு அரங்குகளில் அமர்த்தப்படுவார்கள். சடங்காக நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த வழக்கமான நிலைக்கு மாறாக ஆண்களைத் திரட்டி, அவர்களிடம் ஆண்கள் ஆதிக்கத்தைக் கைவிடவேண்டும் என்ற கருத்தை சென்னையில் நடந்த கழகக் கூட்டம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். உள்ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன் வைத்து, 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை முடக்கிவிடக் கூடாது என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கழகத் தோழர்கள் அன்பு தனசேகர், தமிழ்ச்செல்வன், ச. குமரன், சொ. அன்பு, சி. மணி வண்ணன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் நாத்திகன், கீர்த்தி, பாடல்களைப் பாடினர். சென்னையில் உலக மகளிர் நாளை பொதுக் கூட்டமாக நடத்திய ஒரே அமைப்பான பெரியார் திராவிடர் கழகத்தின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டினர்.