சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் சுவரொட்டி இயக்கம் - பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. அண்மையில் விஜய், ராகுல் காந்தியை எதிர்த்து கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஈழத் தமிழர்களுக்காக ரசிகர்களை அழைத்து, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்திய விஜய், இனப் படுகொலைக்கு துணை போன காங்கிரசில் சேருவது - ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா என்ற கருத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. காங்கிரசில் சேரப் போவதில்லை என்று நடிகர் விஜய் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி அறிவித்து விட்டார். செய்தியாளர் சந்திப்பில் கழகத்தின் சுவரொட்டி பற்றி நடிகர் விஜய்யிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இது பற்றி ‘தினத்தந்தி’ (செப்.14 - சென்னை பதிப்பு) நாளேடு வெளியிட்டிருக்கும் செய்தி.

“கேள்வி : நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், அது ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று நிறைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததே?

பதில் : தமிழ் மக்களுக்கு ஒன்று என்றால், நான் களத்தில் இறங்கி போராடுவேன். இலங்கை தமிழர்களுக்காக, நானும் என் ரசிகர்களும் உண்ணாவிரதம் இருந்தோம். எனக்கு எல்லா தமிழர்களும் ஒன்றுதான். உலக தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.”

இதே போல் ராகுல் காந்தி, ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டிக்காததை சுட்டிக்காட்டி, தமிழர்கள் இந்த துரோகத்தை மறக்கமாட்டார்கள் என்ற சுவரொட்டியையும் பெரியார் திராவிடர் கழகம் ஒட்டியிருந்தது.

ராகுல் தமிழகம் வருகையின்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஈழத் தமிழர் பிரச்சினைகளையே மய்யம் கொண்டிருந்தது. மத்திய அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவே நடவடிக்கைகளை எடுத்தது என்று சமாதானம் கூறிய ராகுலிடம், ‘அப்படியானால் இலங்கை அரசைக் கண்டித்து, அய்.நா.வில் மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா ஏன் எதிர்த்தது’ என்ற கேள்விக்கு ராகுல் பதிலளிக்க முடியாமல் திணறினார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு மட்டும் இந்த செய்தியை மறைக்காது பதிவு செய்துள்ளது. விஜய் - ராகுல் இருவருக்கும் எதிராக கழகம் வெளியிட்ட சுவரொட்டிகளை மய்யமாக வைத்து அதில் எழுப்பியுள்ள கேள்விகளின் நியாயங்களை விளக்கி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் (செப்.6) அதன் முதன்மை செய்தியாளர் திரு.பாபு ஜெயக்குமார் விரிவான கட்டுரை ஒன்றையே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்சாமிநாதன் எனும் பார்ப்பனர், ஈழத்தில் தமிழர் பகுதியில் சிங்கள அரசின் ‘வடக்கில் வசந்தம்’ என்ற தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டிருந்ததைஅம்பலப்படுத்தி கழகம் சுவரொட்டி ஒட்டியது. அதனைத் தொடர்ந்து திட்டத்தை கைவிடுவதாக எம்.எஸ். சாமிநாதன் அறிவித்தார். 

Pin It