கீற்றில் தேட...

பெரியார் அறக்கட்டளை வெளியிடும் எந்த நூலை வாங்கினாலும் அதன் தொகை அறக்கட்டளைக்குத்தான் வந்து சேருமாம். வீரமணிக்குப் போய்ச் சேராதாம். ஆனால் பெரியார் திராவிடர் கழகத்துக்கு குடிஅரசுமுன் பதிவுக்கு அனுப்பும் பணம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி என்ற தனி நபருக்குத்தான் போய்ச் சேருமாம். இப்படி எழுதி, ‘குடிஅரசுக்கு காசோலை அனுப்ப கழகத் தலைவர் வங்கிக் கணக்கு முகவரியை பெரியார் முழக்கம்வெளியிட்டதை எடுத்து வெளியிட்டிருக்கிறது விடுதலையின் மின்சாரம் கட்டுரை. 

பெரியார் திராவிடர் கழகத்துக்கு அறக்கட்டளைகள் ஏதுமில்லை. எனவேதான் ஏதேனும் ஒரு முகவரியை காசோலை / வரைவோலை அனுப்புவோருக்கு தரவேண்டியிருப்பதால் கழகத் தலைவரின் முகவரியை தந்திருந்தோம். 

அப்படி அனுப்பப்படும் தொகை கொளத்தூர் மணிக்காக அல்ல. குடிஅரசுதொகுப்புகளுக்காக. ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொன்றும் 400 பக்கங்கள் கொண்ட தனித்தனியான 27 நூல்கள் அத்தனைக்கும் முன்பதிவுக் கட்டணம் ரூ.3500. பெரியார் காட்டிய வழியில் மிகமிகக் குறைந்த விலையில் தரப்பட வேண்டும் என்ற கருத்தை உள்ளத்தில் ஏந்தி, பெரியார் திராவிடர் கழகம் செயல்படுகிறது. வர்த்தக நோக்கில் அல்ல. 

கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றுகூட விட்டு வைக்கவில்லை. சிறைப் பறவையாகவே வாழ்நாளைக் கழித்து வருபவர். கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தடாவையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் ஏற்று ஆண்டுக்கணக்கில் சிறை சென்றவர். 

பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் வீரர்கள் பலரும் பெரியார் கொள்கைக்காக அடக்குமுறைகளையும், சிறைச்சாலை களையும் சந்தித்து வருபவர்கள். கொள்கையை உறுதியாகப் பின்பற்றும் அமைப்பின் மீதுள்ள நம்பிக்கையால் தியாகங்களை வாழ்க்கையாக்கிக் கொண்டு வாழ்கிறவர்கள். தமிழ்நாட்டில் பொது வாழ்க்கையில் களமிறங்கியுள்ள எல்லோருக்கும் இது நன்றாகவே புரியும். 

அரசு அதிகாரக் குடைகளில் பதுங்கிக் கொண்டு ஆட்சிக்கு வரும் கட்சித் தலைமைக்கு புகழ் பாடும் கூட்டம் அல்ல பெரியார் திராவிடர் கழகம்.  

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை பேசிக் கொண்டு, மறுபக்கம் வணிகத்துக்கான சுயநிதி கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருப்பது யார் என்பது மக்களுக்கு தெரியும்!  

ஒரு காலத்தில் லேவாதேவி ஒழிப்பு மாநாட்டை நடத்தினார் பெரியார். இப்போது பெரியார் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, பெரியார் திடலுக்குள்ளே திராவிடன் நலநிதிஎன்று லேவாதேவி (வட்டிக்கடை) நடத்துகிறார்கள். இந்த திராவிடன் நல நிதி - பெரியார் நிறுவிய அறக்கட்டளைகளுக்கு சொந்தமானதா? இல்லை! இதில் வரும் லாபம் யாருக்குப் போகிறது?

பெரியார் படம் எடுத்த லிபர்ட்டி கிரியேஷன்அறக்கட்டளை யின் கீழ் வருகிறதா? இல்லை. பெரியார் படம் எடுத்ததற்கான செலவில் பெரும் பங்கு ரூ.95 லட்சத்தை தி.மு.க. அரசே வழங்கி விட்டது. படத்தின் லாபம் எங்கே போனது? ‘லிபர்ட்டி கிரியேஷன்என்ற கி.வீரமணி குழுவினர் அடங்கிய நிறுவனத்துக்குத் தானே! 

பெரியார் பெயரைச் சொல்லி இப்படியெல்லாம் வியாபாரம் செய்யும் கூட்டம், பெரியார் கொள்கைக்காக உழைக்கும் உண்மையான இயக்கத்தை கொச்சைப்படுத்துகிறது! பெரியார் பணிகளை செய்ய விடாது முட்டுக்கட்டைப் போட துடிக்கிறது. இதுவே திராவிடர் கழகத்தின் தொழிலாகிவிட்டதை தமிழின உணர்வாளர்கள் நன்றாக உணர்வார்கள்.  

பெரியார் திராவிடர் கழகத்தின் நேர்மையும், நம்பகத் தன்மையும், உண்மையும் உண்மைத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்; புரியும். 

பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் கூட அவர்கள் வழக்கம் போல் வருமானத்தையே பார்க்கிறார்கள்.  

நாம் - சமுதாயத்தின் லாபத்தைப் பார்க்கிறோம்! 

பெரியார் திடலின் சான்றிதழ்கள் நமக்குத் தேவை இல்லை!