மகன்: “திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை அந்தப் பணியை எங்கள் தோழர்களோ, தொண்டர்களோ யாரும் செய்யவில்லை. நாங்கள் அப்படிச் செய்வதென்றால், திட்டமிட்டு, தீர்மானம் போட்டு, காவல் துறைக்குத் தகவல் கொடுத்து முறைப்படித்தான் செய்வோம். அதுதான் எங்கள் வரலாறு” என்று சிறீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டவுடன் நடந்த எதிர் வினைகள் பற்றி - தி.க. தலைவர் கி.வீரமணி, ‘குமுதம்’ இதழுக்கு பேட்டி அளித்துள்ளாரே, பார்த்தீர்களா?

அப்பா: படித்தேன், மகனே!

மகன்: அப்படியானால், ஜெயலலிதா ஆட்சியின் போது, கி.வீரமணியை இழிவுபடுத்தி கார்ட்டூன் படம் போட்ட ‘தினமலர்’ அலுவலகத்துக்குள் புகுந்து - தி.க.வினர் தாக்குதல் நடத்தினார்களே! அப்போது, முன்கூட்டியே காவல் நிலையத்துக்கு தெரிவித்து விட்டுத்தான் தாக்குதலுக்குப் போனார்களா, அப்பா?

அப்பா: இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது மகனே!

மகன்: நான் பதில் சொல்கிறேன் அப்பா! பெரியார் சிலை தாக்கப்பட்டால், ஆத்திரத்தை அடக்கிக் கொள்வார்கள்; வரலாறு பேசுவார்கள். ஆனால், இன்றைய “உண்மையான தமிழர் தலைவர்” கி.வீரமணியை கேலி செய்து கார்ட்டூன் போட்டால் மட்டும் - அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குவார்கள்; அப்படித்தானே அப்பா?

அப்பா: எனக்குத் தெரியாது, மகனே!

மகன்: ஸ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு இடம் ஒதுக்கி 33 ஆண்டுகளுக்குப் பிறகு - அதுவும் சிமெண்ட் சிலையைத் தானே திராவிடர் கழகம் வைத்துள்ளது! சிலை உடைத்த பிறகு தானே வெண்கலச் சிலையை வைத்துள்ளார்கள்.

அப்பா: ஆமாம், மகனே!

மகன்: இந்த 33 ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாயில், எத்தனையோ கல்லூரி கட்டிடங்களையும், விடுதிகளையும் டெல்லியில் மாளிகைகளையும் கட்டிக் கொண்டிருந்தவர்கள், பெரியாருக்கு சிலை வைப்பதில் மட்டும் அக்கறை காட்ட வில்லையே ஏன் அப்பா?

அப்பா: எனக்குத் தெரியாது, மகனே!

மகன்: லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நடிகை ஷில்பா ஷெட்டியை ‘இந்தியன்’ என்பதால் அவமதித்து விட்டார்களே! இந்தியாவின் பத்திரிகைகள் உட்பட உலகம் முழுதும் கண்டனங்கள் எழுந்துள்ளனவே.

அப்பா: ஆமாம், மகனே!

மகன்: இந்தியனை இன அடிப்படையில் அவமதிக் கும் நிறவெறியைக் கண்டிப் பது போல் - அந்த ‘இந்தியர்களுக்குள்ளே ‘ ‘சூத்திரர்களை’ - இழிபிறவிகள் - வேதம் படிக்கக்கூடாதவர்கள் - கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்தால் தீட்டாகி விடும் என்று அறிவித்து, பார்ப்பனர்கள் அவமதித்துக் கொண்டிருக்கிறார்களே! இதைத் தட்டிக் கேட்டால் ‘தேச விரோதிகள்’ என்கிறார்களே, இது நியாயமா, அப்பா?

அப்பா: எனக்குத் தெரியாது, மகனே!

மகன்: அப்பா, மற்றொரு சந்தேகம்.

அப்பா: நன்றாகக் கேள், மகனே!

மகன்: சென்னையில் புட்டபர்த்தி சாய்பாபா முன்னிலையில் “உலக நன்மைக்காக”, “அதிருத்ர மகாயாகத்தை” -11 நாட்கள் - 132 வேத பார்ப்பனர்கள் நடத்துகிறார்களாமே!

அப்பா: ஆம், மகனே!

மகன்: இந்த நிகழ்ச்சியின் கதாநாயகனே சாய் பாபாதான். அவரே யாகத்துக்கு முன்னிலை தான் வகிக்க முடிகிறதே தவிர, யாகத்தை நடத்த முடியவில்லையே! ‘ஆண்டவன் அவதாரமாக’ சொல்லிக் கொண்டாலும் பாபா, ‘பிராமணர்’ இல்லை என்பதால் தானே அப்பா?

அப்பா: எனக்குத் தெரியாது மகனே!

Pin It