1938முதல் பாவேந்தர் மறையும் வரை ஏதோ ஒரு வகையில் தமிழ் திரை உலகோடு, இடையறாத உறவுடன் இருந்து வந்துள்ளார். மறைந்த பிறகும் கூட அவரது பாடல்களைத் தங்கள், தங்கள் படங்களில் பலரும் பயன்படுத்தி வந்தனர். தமிழ் திரைப்பட உலகம் , யதார்த்தத்திற்கு வராமல் -புராணம், ராஜாராணி கதைகளிலே இன்பம் கண்டு வாழ்ந்ததை கண்டு வெம்பி , நீண்ட கவிதையை விமர்சனமாக வைத்தார்.

என் தமிழர் படம் எடுக்க ஆரம்பஞ் செய்தார் 

எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக !

ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவனைகள்

உள்ளதுவாய் அமைக்கவில்லை,உயிர் உள்ளதில்லை

ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை 

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவாயில்லை 

ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை

வடநாட்டார் போன்ற உடை,வடநாட்டார் மெட்டு!

மாத்தமிழர் நடுவினிலே தெலுங்கு கீர்த்தனங்கள்!

வடமொழி ஸ்லோகங்கள்! ஆங்கிலப் ப்ரசங்கம்

வாய்க்கு வரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!

அடையும் இவை அத்தனையும் கழித்துப்பார்க்குங்கால்

அத்தின்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள்,அட்டைமுடி,காகிதப்பூஞ்சோலை!

கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக்காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்து வந்து போவார்!

பதிவிரதை க் கின்னல் வரும் பழையபடி தீரும்!

சிரம்மோடு தாள மெண்ணிப் போட்டியிலே பாட்டுச்

சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து

வரும்காதல் !அவ்விதமே துன்பம் வரும்,போகும்!

மகரிஷிகள் கோயில் குளம் -இவைகள் கதாசாரம்

இரக்கமற்ற படமுதலாளிக்கெல்லாம் இதனால்

ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

படக்கதைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்

பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,

படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!

பயன் விளைக்கும் விதத்தினிலே பல செல்வர் கூடி

இடக்ககற்றி சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி

இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்

படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்

படமெடுத்தாடும் தமிழர் பங்கமெலாம் போமே!

சுயமரியாதை இயக்கத்தின் போர் வாளாக, அவரது கவிதைகள் இருந்தன.மாற்றுக்கருத்துள்ளவர்களும் நயந்து பாராட்டும்படி அவரது கவிதைகளுக்கு உரம் இருந்தது.தனது கொள்கைக்காக பல படங்களில் பணியாற்றாமல் இருந்து விட்டார். தமிழ்ப் பட உலகோடு கடைசிவரை தாமரை இலை தண்ணீராகவே இருந்து வந்ததை அவரது வாழ்க்கை தெரிவிக்கிறது. அரசியல் இலக்கியத்தில் இருந்த பாவேந்தரை திரைப்பட உலகில் அழைத்து வரப் பலர் இருந்தனர்; அவரிடம் உள்ள மரியாதை காரணமாகவும் பயத்தினாலும் அணுகவில்லை. தைரியமாக அவரைத் தொடர்புகொண்டு திரை உலகுக்கு அழைத்து வந்தவர், அக்ரகாரத்து அதிசயப் பிறவி' என அண்ணாவால் அழைக்கப்பட்ட , மணிகொடி -எழுத்தாளர் வ.ரா.அவர்கள்.மணிக்கொடி இதழோடு தொடர்பில் இருந்த சங்கு சுப்பிரமணியம், என்.ராமரத்னம் , கவிஞர் ந.பிச்சமூர்த்தி முதலியோர் இணைந்து 'ஸ்ரீ ராமானுஜர் '[1938]என்ற படத்தை எடுக்க இருப்பதாகவும், அதற்கு பாரதிதாசன்தான் பாடல் எழுத வேண்டும் ; சன்மானமும் உண்டு என்ற வ.ராவின் கடிதத்தின் பேரில் ,ராமானுஜர் படத்துக்குப் பாடல்கள் எழுதினார். அந்தப்படம் அழிந்து போய்விட்டது; இன்று நாம் பார்க்க முடியாது, ஆனால் இசைத்தட்டுக்கள் இருப்பதைக் கேட்கும்போது இனிக்கிறது. படம் வெளிந்த போது, மணிக்கொடி குழுவினர் மேல் இருந்த காழ்ப்பைக் கல்கி விமர்சனம் என்ற பேரில் கொட்டித் தீர்த்தார்.

'காளமேகம்'[1940]படத்தை சினிமா உலகம் -பண்டித செட்டியார் எடுத்தார்.இதில் நாகசுரசக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்தார்.இந்தப் படத்தில் கலைவாணர், மதுரம் முதலியோர் நடித்தனர். இந்தப் படத்தில் வசனமும் பாட்டும் பாரதிதாசன் எழுதினார். விளம்பரத்தில் வசனத்தையும் சேர்த்துச் செட்டியார் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்து வெகுண்ட பாவேந்தர்,''ஏ செட்டி, நான் புதுச்சேரிகாரன்; துப்பாக்கி வைத்திருக்கிறேன் ''என்று சொன்ன பிற்பாடுதான், பாவேந்தர் பெயர் வந்தது.கோவில் மடப்பள்ளி பரிசாரகன், கோவில் தாசியைக் காதலிக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. பாவேந்தர் ,ராஜரத்தினம் பிள்ளையிடம் சொன்னாராம், ''ஒரே மாதிரியாகப் பாடல்கள் எழுதி, எழுதி, அலுத்து விட்டது; இந்தப்படத்தில் புதுவிதமாக எழுதுகிறேன் .நீங்களும் அப்படியே பாடுங்கள் என்றாராம். “முல்லைமலர் நானுனக்கு” -என்ற பாடலும் ''தாழ் சடையும் நீண் முடியும் ''என்ற கரகரப்ரியா விருத்தமும் இன்றைக்குக் கேட்டாலும் அதன் சுவை குன்றாமல் இருக்கிறது.நாகசுரத்துக்கே உரிய பிர்க்காக்களும் ,விரலடியும் இந்தப்பாடல்களில் கேட்கலாம்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி .ஆர் .சுந்தரம் 'சுபத்ரா'என்ற படத்தை எடுக்கும் போது ,பாவேந்தரின் புகழைக் கேள்விப்பட்டு ,அவரைப் புதுச்சேரிக்கே போய் பார்த்து தனது படத்தில் பாடலும் வசனமும் எழுதவேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அதில் இணைந்தார்.கதாநாயகன் யார் என்று கேட்டிருக்கிறார்.பி.யு .சின்னப்பா என்று சொன்னாராம்.ஒப்புக்கொண்டு சின்னப்பாவுக்கு ஏற்றபடி அடுக்குச் சொற்களும் சந்தமும் போட்டு எழுதி கொடுத்திருக்கிறார்.சுந்தரத்துக்கும் சின்னப்பாவுக்கும் மனஸ்தாபம் வரவே,கதாநாயகனாக நானே நடிக்கிறேன் என்று சுந்தரம் ,பாவேந்தரின் வசனங்களை பேசமுடியாமல் போனதை அவரது குழுவினரே பதிவு செய்திருக்கின்றனர்.

திரைக்கதை வசன கர்த்தாக்களான இளங்கோவன், அண்ணா, கலைஞர், போன்றவர்களுக்கு முன்னோடியாகப் பாவேந்தர், தமிழ்த் திரையுலகில் நல்ல தமிழைக்  கொண்டுவந்தார். அந்தக்காலப்படங்களில் சகி , பிராணநாதா ,ஜலம் போன்ற சமஸ்கிரத பிராமண மொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களான தோழி, அன்பே போன்ற சொற்களைப் பாவேந்தரே கொண்டுவந்தார்.

மாடர்ன் தியேட்டஸ், ''ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ''[1949] திரைப்படத்தை எடுத்தது. இது மாயாஜாலக் கதை உள்ளடக்கத்தைக்கொண்டது.இந்தப் படத்துக்கான வசனத்தையும் பாடல்களையும் பாவேந்தரே எழுதினார்.ஆனால் படத்திலும் பாட்டுப்புத்தகத்திலும் இவர் பெயர் இருக்காது.தனது கொள்கைக்கு எதிரான கருத்து இருந்ததனால் என்று தெரிகிறது.பெயர் போட்டுக்கொள்ளாவிட்டாலும் அவரது வசனங்கள் யாருடையது என்று தெரிவித்துவிடுகின்றன. படத்தில் வரும் மந்திரவாதி , அந்த நாட்டு இளவரசியைக் கையில் போட்டுக்கொண்டு ஆட்டிப் படைக்கிறான், அப்போது யாகத்தில் இருந்து வரும் பூதம் சொல்கிறது:''சன்யாசி நன்றாய் யோசி ''

மாடர்ன் தியேட்டர்ஸின் அடுத்தபடமான 'பொன்முடி'[1949]பாவேந்தரின் 'எதிர்பாராத முத்தம் ''படைப்பை தழுவியது.இந்தப்படத்துக்கு வசனமும் பாட்டும் பாவேந்தர்.பொன்முடியை -அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கினார்.காதலன்-காதலியின் நெருக்கக்காட்சிகளில் நரசிம்மபாரதியும், மாதுரி தேவியும் நடித்தனர்.கவிஞரின் வசனங்களை நரசிம்மபாரதியும்,எம்.ஜி .சக்கரபாணியும் அற்புதமாகப்பேசி நடித்தனர். படத்தில் பல பாடல்கள்கள் இருந்தாலும் இன்றும் கேட்கக்கூடிய அளவில் இருப்பது ''வான் மழை இன்றி வாடிடும் பயிர்போல் நானுனை பிரிந்தே வாடுறேன் ''என்ற பாடல் நினைவில் நிற்கிறது.

பாவேந்தரின் பாடல்கள் தங்கள் படத்திலிருந்தால் பெரும் கௌரவம் எனக்கருதினர்.அந்தக்காலத்தில் வெளிவந்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் கவிஞரிடம் அனுமதி பெற்று தங்கள் படங்களில் இணைத்துக்கொண்டனர். அந்த வகையில் :என் தங்கை, பணம், பூங்கோதை, என் மகன், கோமதியின் காதலன், ரத்தக்கண்ணீர், கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி ,குலதெய்வம், நானே ராஜா, முதலிய படங்களில் இடம் பெற்ற பாடல்கள் இலக்கியச் சுவை உடையன.

துன்பம் நேர்கையில் யாழெடுத்து

இன்பம் சேர்க்க மாட்டாயா

இந்தப் பாடலை , தேஷ் ராகத்தில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் மெட்டுப் போட்டு வைத்திருந்ததை 'ஓர் இரவு 'படத்தில் சேர்த்துக் கொண்டனர்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'வளையாபதி'[1952]வெளிவந்தது. இதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்தது.இந்தப்படத்தில் நடித்த முத்துகிருஷ்ணன் என்ற நாடக நடிகர், பிற்காலத்தில் 'வளையாபதி முத்துகிருஷ்ணன் 'என்ற புகழோடு வாழ்ந்தார்.இந்த படத்துக்குப் பாட்டும் வசனமும் பாவேந்தர். முதலில் பாடல்களை எழுதி கொடுத்திருக்கிறார்; இசையமைப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி பாடலைப் படித்துப் பார்த்துவிட்டு , 'இசைக்கு இந்த வரிகள் சரிவராது , வேற எழுதுங்கள்' என்றாராம். பாவேந்தருக்கு இசை நன்றாகத் தெரியும். ''உனக்குத் தமிழே தெரியாது ; நீ எனக்கு சொல்றியா'' என்று ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்து விட்டாராம். பின்னாலயே வந்த வேலுச்சாமி கவியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, வசனப் பிரதியை தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டார்; இதற்குப்பின் மாடர்ன் தியேட்டர்ஸ் பக்கமே போகவில்லை.

திரை உலகம் பக்கம் போகாமல், கூட்டங்கள், குயில் இதழ் வேலைகளோடு இருந்த கவிஞரைப் பராசக்தி -தயாரிப்பாளர் பெருமாள் முதலியார், தனது படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று அழைத்தார். தமிழ்ப் பேராசிரியர் மு.வ, அந்தக்காலத்தில் நிறைய நாவல்கள் எழுதிவந்தார்; அவை திராவிட இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. அதில் ஒன்றான ''பெற்ற மனம்'' திரைப்படமானது; அதில் பெரியாரும் ஒரு பாத்திரம்; அந்த பாத்திரத்தை சிவாஜி கணேசன் அற்புதமாக கொண்டு வந்தார்; இந்தப் படத்தில் கவிஞரின் ஆறு பாடல்கள் இடம் பெற்றன. பாவேந்தரின் 'பாண்டியன் பரிசு' இலக்கியத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது கவிஞரின் விருப்பம். நடிகர் திலகம் ஒப்புக்கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தார்; அதற்காக அண்ணா வழங்கிய தொகையில் வாங்கிய வீட்டை விற்றார். படவேலைகள் முடங்கின; கவிஞர் புதுச்சேரிக்கே போய்விட்டார்.

பாவேந்தரின் கடைசி ஆசை, 'பாரதியாரின் வாழ்க்கை'யை படமாக்க வேண்டும் என்பது அதுவும் நிராசையாக முடிந்தது.

தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற முக்கியமான பாடல்கள் :

1). தலைவாரி பூச்சூட்டி உன்னை&பானுமதி&ரங்கோன்ராதா

2). தமிழுக்கு அமுதென்று பேர் - சுசீலா-பஞ்சவர்ணக்கிளி

3). புதியதோர் உலகம் செய்வோம்&சீர்காழி - கலங்கரைவிளக்கம்

(4). வாழ்க வாழ்கவே எமது வளமார்&திராவிடநாடு-பராசக்தி

5). நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து-கோமதியின் காதலன்

6). ஆடற்கழகு தேடப் பிறந்தவள் - நானேராஜா

7). ஆலையின் சங்கே ஊதாயோ&ரத்தக்கண்ணீர்

8). வெண்ணிலாவும் வானும் போலே - கல்யாணம் பண்ணியும்                        பிரம்மச்சாரி

9). ஒரு பைசா தருவது பெரிசா-சூலமங்கலம் - பெற்றமனம்

(10). பாடி, பாடி,வானம்பாடி- சந்திரபாபு - பெற்றமனம்

- நிழல் திருநாவுக்கரசு