புதுமலர் இதழ், இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2023 சனவரியில் வடலூர் வள்ளலார் அவர்களின் 200-ஆவது ஆண்டு நிகழ்வைக் கொண்டாடும் வகையில் புதுமலர், முதல் இதழாக வள்ளலார் சிறப்பிதழை வெளிக்கொணர்ந்தது. வள்ளலார் குறித்த திராவிட இயக்கங்களின் பார்வையை இந்த ஆவணம் குறிப்பாகப் பதிவிட்டிருந்தது. தவிரவும் அடிகளின் பேசப்படாத பல்வேறு சிறப்புக் கூறுகளை இதிலுள்ள கட்டுரைகள் தெளிவாக்கின. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள எண்ணற்ற தமிழ் அன்பர்கள் வள்ளலார் சிறப்பிதழைக் கேட்டுக் கேட்டு வாங்கினர். இன்னும் கூட இதழுக்கான அழைப்புகள் வந்து கொண்டிருப்பது சிறப்பிதழின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
இரண்டாவது இதழில், இந்தியாவிலுள்ள தாய் மொழிகளைக் காப்பதற்கான இயக்கத்தை முன்னெடுத்து வரும் பஞ்சாப் பேராசிரியர் ஜோகா சிங் அவர்களின் விரிவான பேட்டி இடம் பெற்றது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சி குறித்த ஆழி செந்தில்நாதன் அவர்களின் கட்டுரை, மொழிகளின் எதிர்காலத்தோடு அதைப் பொருத்தி விவாதித்தது. திருக்குறளுக்கு ஜி. யூ. போப் அவர்கள் எழுதிய முன்னுரை 137 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக கண. குறிஞ்சி அவர்கள் மொழியாக்கம் மூலம் இதழில் வெளி வந்தது. தொல்லியல் நோக்கில் தமிழ்ச் சங்கம் குறித்த புலவர் இராசு அவர்களின் கட்டுரை, இவ்விதழுக்குச் சிறப்புச் சேர்த்தது. மேலும் தமிழறிஞர்
பொதியவெற்பன் அவர்களது பவழ விழா குறித்த செய்தியும், படங்களும் இதழில் மிக விரிவாகப் பதிவிடப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.
மூன்றாவது இதழில், மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் அவர்களின் விரிவான பேட்டி இடம் பெற்றது. உள்ளூர்ச் சிக்கல்கள் தவிரவும், சர்வதேச அளவில் மனித உரிமைத் தளத்தில் நிகழ்ந்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளை விரிவாக அவர் பதிவிட்டிருந்தார். தமிழ்நாட்டில் அடிமை முறை இல்லை என்னும் பொதுவான கருத்தாக்கத்தை மறுத்து ஆவணங்களில் அடித்தள மக்கள் என்னும் அரிய கட்டுரையைப் புலவர் செ. இராசு அவர்கள் எழுதியிருந்தார். அவர் காலமாவதற்கு முன் பத்திரிகையில் அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாக அது அமைந்தது. அதையொட்டி தமிழகத்தில் அடிமை முறை பற்றிய அவரது நூலும் வெளிவந்தது,
நான்காவது இதழ், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, பலராலும் கவனிக்கப் படாமல் மறைந்த கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டுச் சிறப்பிதழாகப் புது மலர் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் மூலம் வெளிவந்த "கவிஞர் தமிழ் ஒளி படைப்புலகம்" நூலிற்குப் பிறகு, புதுமலர் இதழ்தான் அக்கவிஞரைச் சிறப்பித்து அவரது படைப்புக்களை ஆவணப்படுத்தியது என்பது கருதத் தக்கது. முற்போக்குப் படைப்பாளி தமிழ் ஒளி அவர்களின் பன்முக ஆளுமையை விளக்கி, பல்வேறு ஆளுமைகள் தங்களது கட்டுரைகளை இதழில் பதிவிட்டிருந்தனர். நாடறிந்த நற்றமிழ் ஆய்வறிஞர் வீ. அரசு அவர்களின் விரிவான பேட்டி புதுமலர் நான்காம் இதழுக்குக் கூடுதல் அடர்த்தியைத் தந்தது. அப்பேட்டி அறிவுத் தளத்தில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றது. வள்ளலார் சிறப்பிதழைப் போல, கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டுச் சிறப்பிதழையும் கேட்டுத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு இதழையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளத்தக்க வகையிலான செறிவு மிக்க கட்டுரைகள், கடந்த ஆண்டு புதுமலர் இதழில் வெளிவந்தன. அவை விரிக்கின் பெருகும் என்பதால் கடந்து செல்கிறோம்.
இரண்டாம் ஆண்டிலிருந்து இதழுக்குச் செறிவூட்டும் வகையில் நெறியாளர்கள் புதுமலரில் இணைகின்றனர். பேராசிரியர் வீ. அரசு, ஆய்வறிஞர் பொதியவெற்பன், எழுத்தாளரும் விமர்சகருமான ஜமாலன் மற்றும் கவிஞர் ரவிகுமாரசாமி ஆகியோரைப் புதுமலர் வணங்கி வரவேற்கிறது. யானைக்கு யானை கை கொடுப்பது போல, இவர்களது வழிகாட்டல் புதுமலரைப் புதிய சிகரங்களுக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த 2024- ஆம் புத்தாண்டில் வாசகர்கள் தங்களது மேலான பேராதரவை நல்க வேண்டும் என விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
- கண.குறிஞ்சி