இந்திய விடுதலை வரலாற்றின் போராட்டக் குறியீடு வ.உ.சிதம்பரனார். வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக தனித்துவத்துடன் நிலைத்து நிற்பவர் வ. உ. சிதம்பரனார். மலை அளவு பங்காற்றிய அவரது தியாகத்துக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் திணை அளவே. சமகால போராட்ட வீரர்களுக்கு அறிவியல்பூர்வமாக ஆவணங்கள் தொகுக்கப்பட்ட போதிலும் வ.உ. சிதம்பரனாருக்கு இன்னும் ஆய்வுமுறைப்படி ஆவணங்கள் தொகுக்கப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

குறிப்பாக வ. உ. சிதம்பரனாரின் அரசியல் இயங்கு தளத்திற்கு முக்கிய இடமாக விளங்கிய தூத்துக்குடி பகுதிகளில் பல்வேறு வாய்மொழி மரபுக் கதைகளில் மக்கள் மனதில் வ. உ. சி. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாய்மொழித் தரவுகள் உண்மையா அல்லது புனைவா என்ற தர்க்கத்திற்கு ஆட்பட்டாலும் முக்கிய ஆளுமையை மையம் கொண்டு, எழுத்து வடிவ ஆவணமாக இல்லாமல் வாய்மொழி மரபில் வாழ்ந்து வரும் வ. உ. சிதம்பரனார் குறித்த சில அரிய கதைகளை எழுத்தில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை வரையப்படுகிறது.

 கதை-1: குடியானவருக்குப் பரிவு காட்டிய வ.உ.சி.

ஒரு குடியானவர் (ஏழை விவசாயி) மீது பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டீஷ் போலீசார் தொடுத்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்தி பல தடவை அலைக்கழிக்க வைத்தனர். நீதிமன்றம் வர ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள கிராமத்திலிருந்து தூத்துக்குடி நீதிமன்றத்துக்குக் கால்நடையாகவோ வண்டி மாடு கட்டிக்கொண்டோதான் அந்த நாளில் செல்ல வேண்டும். பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன் தாங்க முடியாத மன உளைச்சலில் அந்தக் குடியானவர் வரும் வழியில் ஒரு நாள் உலகம்மன் கோயில் அருகே மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தார்.

அந்த சமயம் தற்செயலாக வ. உ. சி. வந்தவேளையில் மிக்க வேதனையோடு அமர்ந்திருந்த ஏழைக் குடியானவரை நோக்கி வந்து விசாரிக்கிறார். அந்தக் காலத்தில் மேட்டுக்குடி வகுப்பினரைச் சார்ந்தவர்கள் பொதுவாக எளியவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். வந்தவரோ பரம்பரை வக்கீல் குடும்பத்தைச் சார்ந்தவர். அந்த ஏழை குடியானவருக்கு உண்மையில் உதவ முன்வந்தவர். நொந்துபோன குடியானவரின் நிலை அறிந்து அவரை ஆசுவாசப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு விவரங்களைக் கேட்டுக்கொண்டு குறிப்பு எடுத்துக் கொள்கிறார். மேலும் “இனிமேல் தாங்கள் நீதிமன்றப் படி ஏறவேண்டி இருக்காது. நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப்படாமல் வீடு போய் சேருங்கள்” என்று குடியானவரை ஆற்றுப்படுத்திவிட்டுக் கிளம்பிச் சென்று விட்டார் வ. உ. சிதம்பரனார்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழைக் குடியானவருடைய வழக்கு வ.உ.சி. அவர்களால் வாதாடப்பட்டு சுமுகமாக குடியானவருக்கு எதிராக இருந்த வழக்கு அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட வெற்றிச் செய்தி வீடு தேடி வந்தடைந்தது. அந்த ஏழை குடியானவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.

அச்சமயம் அந்தக் குடியானவர் தனது வாரிசுகளிடம் பின்வருமாறு கூறுகிறார்: “அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி எனக்கு உதவுவதற்காகவே வ. உ. சிதம்பரனாரை அனுப்பியுள்ளாள். அவர் மூலம் எனது வழக்கு வெற்றி அடைந்துள்ளது. ஆகையால் இனி வரப்போகும் நமது வம்சாவளியில் ஆண்குழந்தை பிறந்தால் உலகநாதன் என்றும், பெண்குழந்தை பிறந்தால் உலகம்மன் என்றும் பெயர் வையுங்கள்” என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.

இந்தக் கதைக்கு உரிய குடியானவருக்கு ஒருவகையில் உறவுக்காரர் நாவலாசிரியர் சோ. தர்மன். இவரது வம்சாவளியினரின் சடங்குக்குச் செல்கையில் நமது உறவுமுறைகளுக்கு சாஸ்தா கடவுள்தானே குல தெய்வம். உங்களுக்கு மட்டும் எப்படி உலகம்மன் குலதெய்வம் என்று கேட்டபோது அந்தக் குடும்பத்தினர் சோ. தர்மன் அவர்களிடம் இந்தக் கதைப் பின்புலத்தைக் கூறியுள்ளார்கள்.

இந்தச் செவி வழிச் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும்போது வ.உ.சி. தனது சுயசரிதையில் ஓர் இடத்தில் கீழ் வருமாறு குறிப்பிடும் நான்கு வரிகள் இடம்பெறுகிறது. இந்த நிகழ்வை ஒரு அனுமானமாக எடுத்துக் கொள்ளலாம்.

முடிமனில் என்னுடை முன்னோர் நாள்முதல் அடிமை புரியும் அறிவினைக் கொண்ட வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை ஏதமில்லாமலே எண்ணிலா வழக்கில் அமிழ்த்தினர் போலீஸார் அனைத்தினும் திருப்பினேன்

முடிமன் என்பது ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஒரு கிராமம். வேதநாயகம் எனும் குடியானவர் மீது போலீசாரால் போடப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவித்துத் தந்ததைக் குறிப்பிடுகிறார். இந்த வரிகள் நம் காலத்தில் வாழ்ந்து வரும் சோ. தர்மன் கேட்ட வாய்மொழித் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நிகழ்வு நடந்ததற்கான ஆதார ஆவணமாகக் கொள்ளலாம்.

(கதை கூறியவர்: நாவலாசிரியர் திரு. சோ. தர்மன்; கதையைக் கேட்டுப் பகிர்ந்தவர்: திரு. லெனா குமார்)

 கதை-2: வ.உ.சி. சிலம்பம் ஆடிய கதை

வ. உ. சிதம்பரனார் தூத்துக்குடியில் வாழ்ந்தபொழுது சுமார் 60 வயது நடந்து கொண்டிருக்கும் வேளையில் தனது தந்தை வ.உ.சி. கம்பு சுற்றி விளையாடியதை கண்ட காட்சியை அவரது மகன் பின்வருமாறு விளக்குகிறார்.

அம்மன் கோயில் கொடை விழா. அம்மன் சப்பர ஊர்வலம் முன் இரவில் வீதிவலம் வருகிறது. சப்பரத்திற்கு முன்பாக பலர் கேளிக்கை ஆட்டங்கள் ஆடி வருகின்றனர். குறிப்பாகச் சப்பரத்துக்கு முன்பாக சிலம்ப வீரர்கள் சிலம்பம் ஆடி வருகின்றனர். வழக்கமாக வ.உ.சி. வீட்டு முன்பு சிறிது நேரம் சிலம்பம் ஆடி வ.உ.சி.யிடம் வெகுமானம் வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அதாவது வ.உ.சி.யின் கையால் வேட்டியும் நேரியலும் வாங்கிச் செல்வதைச் சிலம்ப விளையாட்டு வீரர்கள் பரம வீர் சக்கர விருது பெறுவது போன்று பெருமை அடைவார்களாம்.

சிலம்பம் ஆடும் வீரர்கள் கம்பு வீசிச் சுழற்றுவதில் தனது அத்தனை திறமைகளையும் காண்பித்துக் கெண்டிருந்தனராம். பார்த்து இரசித்துக் கொண்டிருந்த வ.உ.சி.யால் இருப்புக் கொள்ள முடியாமல், தான் எழுந்து கம்பை வாங்கிக் கொண்டு சுழற்ற ஆரம்பித்தாராம். சுமார் அரைமணி நேரம் கூட்டம் வியக்கும் வண்ணம் பலத்த ஆரவாரத்துடன் கம்பைச் சுற்றி அசத்தியிருக்கிறார். இதனை நேரில் கண்ட மகன் கூறுவது அப்பாவைக் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்த நிகழ்வு மறக்கவே முடியாது என்று பதிவு செய்கிறார்.

அந்த சமயம் சிலம்பகுழுத் தலைவர் வ.உ.சி. அவர்களிடம் கேட்ட பரிசு, வ.உ.சி. கையால் சுழற்றிய கம்புதான் வேண்டும் என்றாராம். வ.உ.சி.யும் தான் சிலம்பத்திற்குப் பயன்படுத்திய கம்பையும் கொடுத்து, தனது கையால் சிலம்ப வீரருக்கு வேட்டியால் முண்டாசும் கட்டி விட்டாராம்.

இந்தச் செய்திக்கு முகாந்திரமாக 1922ஆம் ஆண்டு கும்பகோணம் சுவாமிமலைக்கு வ.உ.சி. பயணம் செய்தபோது துரையனார் அழைப்பின்பேரில் விருந்துக்குச் செல்கிறார். அச்சமயம் துறையனாரிடம் வ.உ.சி. ஒரு வேண்டுகோள் வைக்கிறார். இந்த ஊரில் உள்ள அனைத்துச் சமுதாய நாட்டாண்மையாளர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறார். அதன்படி அனைத்துச் சமுதாய முக்கியப் பிரமுகர்கள் வ.உ.சி.யைச் சந்திக்க வந்தனர் என்பதுதான். அனைவரிடமும் அவர் கேட்ட முக்கியமான கேள்வி சிலம்பம், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற தற்காப்பு வீரவிளையாட்டுக்களைப் பயில்கிறீர்களா என்பதுதான். ஏனெனில் நம் நாடு வரும் காலத்தில் எப்படியும் சுதந்திரம் அடைந்துவிடும். அச்சமயம் நம் நாட்டை நாம் தற்காத்துக் கொள்வதற்கு இந்த வீரவிளையாட்டுக்கள் அவசியம். நம்முடைய வம்சாவளியினருக்கு இவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் வ.உ.சி. தற்சரித்திரத்தில் தான் விளையாடிய 35க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களைப் பதிவு செய்திருப்பார்.

(வ.உ.சி.யின் மகன் திரு. வ.உ.சி. சுப்பிரமணியன் எழுதியது.)

 கதை-3: செல்வநிலையாமைக் குறளுக்குத் தம் வாழ்க்கையை உவமானமாகக் கூறுதல்

தூத்துக்குடி வீட்டில் வசித்திருந்த சூழலில் சில மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்பு எடுத்து வந்தார். ஒரு நாள் செல்வம் நிலையாமை அதிகாரம் சொல்லிக் கொடுக்கும் வேளையில் மாணவர்களுக்குப் பல்வேறு உரைகள் மூலமாக அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவன் எழுந்து செல்வம் நிலையாமை குறித்து உங்கள் சொந்தக் கருத்து என்ன என்ற கேள்வியைக் கேட்டான்.

வசதிமிக்க வக்கீல் பரம்பரைக் குடும்பம். கப்பல் விட்டு ஆங்கிலேயர்களுடைய அடிவயிற்றை கலக்கியவர். கோரல்மில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு அன்னமிட்டு போரினை வெற்றியடையச் செய்தவர் வ, உ, சி.

அவர் கொண்ட சுதேசிய கொள்கைப் பிடிப்பால் வருமானமிழந்து வறுமையான சூழலில் கேட்கப்படும் கேள்வி இது. அந்த நேரம் வ.உ.சி. சன்னல் வழியே பார்க்கிறார். தனது மனைவி மீனாட்சி அம்மாள் வீட்டின் சுற்றுச் சுவரில் காயவைத்த எரு வரட்டிகளை பிய்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறார். கேள்வி கேட்ட மாணவனைப் பார்த்து, “அம்மா என்ன செய்கிறார் என்று தெரிகிறதா” என வ.உ.சி. அந்த மாணவரிடம் கேட்கிறார். அம்மையார் எரு வரட்டியைப் பிய்த்து எடுத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை என்றார் அம் மாணவர்.. அச்சமயம் வ.உ.சி. அந்த மாணவனிடம் கூறியதாவது, “இன்றைய வீட்டுச் சாப்பாட்டிற்கான பணத் தேவைக்கு விற்பனை செய்வதற்காக அம்மா எரு வரட்டியை எடுத்துக் கொண்டிருக்கிறார்” என்றாராம். கலங்கிப்போய் வ.உ.சி.யின் முகத்தைப் பார்க்கிறான் அந்த மாணவன். பின்பு தொடர்கிறார், “இதுதானப்பா நீ கேட்ட செல்வம் நிலையாமை குறித்த கேள்விக்கு எனது சொந்தக் கருத்து” என்றாராம்.

செல்வம் நிலையாமையைக் குறித்து தனது வாழ்க்கையையே உவமான விளக்கமளிக்கத் திருக்குறள்படி வாழ்ந்த ஆளுமை வ.உ.சி. அவர்கள்.

(கதை கூறியவர்: தூத்துக்குடி திரு. சரவணபெருமாள்; கூறக்கேட்டவர்: திரு.குருசாமி மயில்வாகனன்)

வ.உ.சி.யும் புத்தகப் பைண்டரும்

புத்தகப் பைண்டர் இசக்கி என்பவர் வ.உ.சி.யை நேரில் பார்த்தவர். வ.உ.சி.க்குப் புத்தகங்களைப் பைண்டிங் செய்து தருபவரும்கூட. வ.உ.சி.யின் வக்கீல் ஆவணங்களைக் காசு பணம் பாராது தேவைப்படும் வேளைகளில் பைண்டிங் செய்து தருவாராம்.

பெரும்பாலும் வ.உ.சி. தான் எழுதிய பதிப்பித்த புத்தகங்கள் எல்லாம் முழுமையாகப் பைண்டிங் செய்யாமல் பாரம் பாரமாகக் கட்டி வைத்திருப்பாராம். புத்தக வாசகர்கள் புத்தகம் ஆர்டர் செய்யும் வேளைகளில் மட்டும் அதுவரை வந்த மொத்த ஆர்டர்களுக்குப் புத்தகத்தைப் பைண்டிங் செய்ய திரு. இசக்கியை அழைப்பாராம். இசக்கி அவர்களும் வ.உ.சி.யின் நிலைமையறிந்து பைண்டிங் செய்து கொடுத்துவிடுவாராம். அதன் பிறகு புத்தக ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பி வைப்பாராம்.

ஒருநாள் இசக்கி புத்தக பைண்டிங் செய்து தந்துவிட்டு பணத் தேவைக்காகத் தன் நிலைமையைச் சொல்ல முடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தாராம். வ.உ.சி.க்கு இசக்கியின் நிலைமை புரிந்துவிட்டது. உனக்கு நான் பணம் தரவேண்டும். என்னிடம் தற்போதைக்கு கையில் பணம் இல்லை. கொஞ்ச நேரம் காத்திரு. ஏதாவது மணியார்டர் வருகிறதா என்று பார்ப்போம். அப்படி மணியார்டர் வந்தால் நீ கொஞ்சம் எடுத்துக்கோ. எனக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னாராம். மணி ஆர்டர்கள் வந்தால் ஒவ்வொரு தடவையும் கடன்காரர்களுக்கு இந்த மாதிரி பிரித்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டவர் வ.உ.சி. என்பது பைண்டர் இசக்கி என்பவருடைய வாய்மொழி மூலம் தெரிய வருகிறது.

(இந்தத் தகவல் பகிர்ந்தவர்: மூத்த வரலாற்றாய்வாளர் திரு. ஆ. சிவசுப்பிரமணியன்.)

வ.உ.சி.யும் அவரது தம்பி மீனாட்சி சுந்தரமும்

வ.உசி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய பின்ஹேயின் தீர்ப்பால் சித்தம் கலங்கியவர் வ.உ.சி. அவர்களின் உடன் பிறந்த இளைய சகோதரர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. தன்னை மறந்தார். தன் நாமம் கெட்டார். அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒன்றே நினைவானார். அன்புத் தம்பியின் சித்தம் பிறழ்ந்த நிலையை எண்ணி வ.உ.சி. அதிர்ந்து போனார். தனது மனம் நோகச் சோகக் கவிதையும் வடித்தார்.

அண்ணன் பகைவர் அரனுள் அழிவனெனும்

எண்ணம் உனதறிவை ஏய்த்ததோ கண்ணன்

பகைவர் அரண்புகுந்து பற்பல முன்செய்த

வகையை மறந்தனையோ மற்று

என்ற பாடல் வரிகளைப் பாடற்திரட்டில் காணலாம். வ.உ.சி. தனது சித்தம் கலங்கிய தம்பிக்காக இவர் எந்தக் கடைக்குச் சென்று உணவு கேட்டாலும் கடைக்காரர்களைக் கொடுக்கும்படி வேண்டியும், அதற்குரிய தொகையைச் சிறையில் இருந்து வந்ததும் தாமே தந்துவிடுவதாக வாக்குறுதியும் அளிக்கச் செய்து தண்டோரா மூலம் ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

மீனாட்சி சுந்தரம் அவர்கள் முறைவைத்து வாழை இலையை எடுத்து வந்து ஏதாவது ஒரு வீட்டு முன்பு வைத்துவிட்டு உங்கள் வீட்டில்தான் இன்று சாப்பாடு என்று வைத்துவிட்டுப் போய்விடுவாராம். அன்றைய நாளில் அவருக்கான நல் உணவைச் சமைத்து வைத்து குடும்பத்தினர் அனைவரும் அவருடன் அமர்ந்து சாப்பிட வைத்து வ.உ.சி. தம்பி மீனாட்சி சுந்தரம் அவர்களை மகிழ்விப்பார்களாம்.

( இந்தத் தகவல் வரலாற்றாய்வாளர் திரு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு அவருடைய தாத்தா கூறியது.)

தனது வீட்டில் பட்டியல் சாதியைச் சார்ந்த விருதுநகர் இராமையா பரதேசி அவர்களைப் பராமரித்தல்

விருதுநகர் இராமையா பரதேசி அவர்கள் தமிழறிந்த ஞானி. இரு கண்கள் தெரியாத மாற்றுத் திறனாளி. அக்காலத்தில் சாதிச் செறுக்கு மிக்க சைவ வேளாளர் தெருவில் அமைந்த தன்னுடைய வீட்டில் தனது துணைவியார் வள்ளியம்மையின் அனுமதியுடன் வீட்டுக்கு அழைத்து வந்து அன்னமிட்டுப் பாதுகாக்கிறார்.

முரட்டுச் சிதம்பரனாராக இருந்த போதிலும் அக்கால சமூகச் சூழலில் ஒரு பட்டியல் இனத்தவரை வீட்டில் வைத்துச் சாப்பாடு அளிப்பது சாதாரணச் செய்தியல்ல. இருந்தாலும் யாருக்கும் தெரியக் கூடாது என்ற எச்சரிக்கைத் தொனியில் சில ஏற்பாடுகளைச் செய்கிறார் வ.உ.சி.

தனது ஊரில் உள்ள அம்மன் கோவிலில் சின்ன மாலையைப்ப பிள்ளை அவர்கள் துணையுடன் ஊரில் உள்ள கம்மாள ஆசாரியைக் கொண்டு இசக்கி அம்மன் சிலையைப் பெயர்த்து வந்து தனது வீட்டின் கதவு முகப்பு முன்பாக வைத்துவிடுகிறார். வீட்டு வாசல் கதவு முன்பாக இசக்கி அம்மன் சிலை, பின்னால் கதவு, கதவைத் தள்ளிவிடாதபடி கதவுக்கு பின்புறம் பலகை போன்றவை வைத்து யாரும் வீட்டிற்குள் எளிதில் புகுந்து விடாதபடி ஏற்பாடு செய்துள்ளார். பிறகு காலம் செல்லச் செல்ல அரசல் புரசலாக வ.உ.சி. வீட்டில் பட்டியல் இனத்தவர் ஒருவரை வைத்துக் காப்பாற்றி வருவது தெரிந்து விடுகிறது. ஊர்ச் சமுதாயம் அவரை சாதிவிலக்கம் செய்ய முன் வருகிறது. ஆனால் துணைவியார் வள்ளியம்மை துணிச்சலாகத் தட்டில் சோறிட்டுப் பிசைந்து கண் இழந்த இராமையா பரதேசிக்கு வாயில் ஊட்டிவிடவும் செய்தார். இதனை வ.உ.சி. தன் மனைவியை பற்றிக் குறிப்பிடுகையில் “தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்” என்று குறிப்பிடுகிறார்.

(இசக்கி அம்மன் சிலையை வீட்டின் முன்பாக வைத்த தகவல் தெரிவித்தவர் வரலாற்றாய்வாளர் திரு. ஆ. சிவசுப்பிரமணியன்.)

 கதை-7 சாமிப் படையல்

திருநெல்வேலி எழுச்சியின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பலர் பிரிட்டிசு போலீசாரின் பிடியிலிருந்து தப்பித்து பல்வேறு முட்காட்டுப் பகுதிகளில் ஒளிந்து கொண்டார்களாம். அவர்களது வயிற்றுப்பசிக்கு உணவு ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் ஒளிந்திருந்த முட்காடுகளில் திடீரென சாமிகும்பிடும் வண்ணமாகக் கற்களை நட்டு விபூதி, குங்குமம் இட்டு, சாமிப் படையல் என்ற பேரில் அரிசி, புளி மற்றும் சமைக்கத் தேவையான பொருள்கள் அனைத்தும் அந்தக் கல் முன்பு வைத்து விடுவார்களாம். ஒளிந்து கொண்டிருந்த நபர்கள் ஆள்கள் இல்லாத வேளையில் அந்தப் படையலை முட்காட்டுக்குள் கொண்டு போய் சமைத்துச் சாப்பிடுவார்களாம். மேலும் ஈட்டி, வேல் போன்ற போர்க் கருவிகளினை ஆங்காங்கு சிறுதெய்வக் கோவிலில் நட்டு வைத்துத் தனக்குத் துன்பம் நேர்கையில் அந்தக் கருவிகளைப் பயன்படுத்துவார்களாம். பிரிட்டிஷ் போலீஸ் பார்வையில் இந்தக் கருவிகளை எப்படி தற்காப்புக்காகப் பயன்படுத்திக் கொள்வது என்பது போன்ற பல யுத்த தந்திரங்களை வ.உ.சி. சொல்லிக் கொடுப்பாராம்.

(தகவல் பகிர்ந்தவர்: ஈரோடு திரு. மணிகிருஷ்ணன்.)

 கதை-8 கப்பல் கம்பெனிக்கு கட்டணம் வகுத்த கதை

வ.உ.சி. கப்பல் கம்பெனி ஆரம்பிக்கும் வேளையில் பயணக் கட்டணம் வகுப்பதற்காக மற்றொரு கப்பல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த தூத்துக்குடி நகர் வடக்கு ரத வீதியைச் சார்ந்தஏ.டி. திருநாவுக்கரசு என்பவரை வரவழைத்து அந்தக் கப்பல் கம்பெனியில் உள்ள பயணச் சீட்டு விவரக் கணக்குகளை இலாவகமாகப் பேசி வாங்கிக் கொள்வாராம். பின்பு கட்டண விவரங்களைக் குறித்துக் கொண்டு எவ்விதத் தடயமும் தெரியாதபடி துண்டுச் சீட்டை எரித்துச் சாம்பலாக்கி முருங்கை மரத்தடியில் போட்டு விடுவாராம். ஏனெனில் அந்த அளவுக்கு வ.உ.சி.யை பிரிட்டிசு அரசாங்கம் உளவு பார்த்ததாம்.

(தகவல்பகிர்ந்தவர்: ‘சைவ நெறி’ இதழாசிரியர் திரு காந்தி.)

கதை-9: கப்பல் கவிழ்ந்த கதை

வ.உ.சி. தாத்தாவோட கப்பல் எப்படி கவிழ்ந்துச்சு தெரியுமா? அந்தக் காலத்துல வ.உ.சி. வீட்டுக்கு வந்து போறவங்க எல்லார்க்கும் சோறு வடிச்சு வடிச்சுப் போடுவாங்களாம். பல நாள் அப்படி வடிச்ச சோறு மிச்சமாகிப் போயிடுமாம். அது தாத்தாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாருன்னு தாத்தாவுக்குத் தெரியாம சாக்கடையில கொட்டிடுவாங்களாம் வீட்டுல இருக்கற பெண்கள். அப்படிச் சோற்றை வீணாக்கியதால்தான் வ.உ.சி. கப்பலே கவிழ்ந்து போச்சாம். அதனால வேணுங்கற அளவுக்குச் சோறு வாங்கிச் சாப்பிடணும் இப்படி அதிகமா வாங்கி மிச்சம் வைச்சுச் சாக்கடையில் கொட்டக் கூடாது.

‘சோற்றை வீணாக்கிக் கொட்டியதால்தான் கப்பலே கவிழ்ந்து போச்சு’ என்பது உவமானவமாகப் பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது.

(இந்தக் கதையைச் சொன்னவர் வ.உ.சி.யின் ஒருவழி உறவினர் மதுரை திருமதி விசாலாட்சி சோமசுந்தரம்.)

இது போன்ற ஏராளமான கதைகள் வ.உசி. என்ற ஆளுமையைச் சுற்றி வாய்மொழித் தரவுகளாக விரவிக் கிடக்கின்றன. இந்தக் கதைக்கான தளம் பெரும்பாலும் தூத்துக்குடி பகுதிகளை மையமாக கொண்டே உலவி வருகிறது. இதில் திருக்குறளுடன் வ.உ.சி.யை தொடர்புபடுத்தியே பல கதைகள் மக்கள் மனதில் இருக்கிறது. வீரதீரக் கதைகளும் வ.உ.சி.யை மையப்படுத்தி இருப்பதையும் காணமுடிகிறது. மேற்சொன்ன கதையில் சில எழுத்தாக்கம் பெற்றுள்ளது. பல செய்திகள் இன்னும் எழுத்து வடிவாக்கம் பெறாமல் வாய்மொழித் தகவல்களாகவே சிதறிக் கிடக்கின்றன.

நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் வ.உ.சி.யை மையமாகக் கொண்டு தூத்துக்குடி, நாகலாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடராம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உலவுகின்ற வாய்மொழிக் கதைகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்து புனைவா அல்லது தர்க்கமா என்பதை முடிவு செய்யவும், சில செய்திகள் அறியாத உண்மைகள் வெளிவர உதவி செய்யும். விளிம்பு நிலை ஆய்வுகளில் (Subaltern studies) தொகுதி-3ல் சாகித் அமீன் எழுதிய காந்தி குறித்த புனைவுக் கதைகள் ஆய்வு இடம் பெற்றுள்ளது. ஜெர்மன் நாட்டுச் சர்வாதிகாரி இட்லர் குறித்த வாய்மொழிக் கதைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதைப் போன்று வ.உ.சி. என்ற ஆளுமையை மையமாகக் கொண்ட வாய்மொழித் தரவுகளை சேகரித்து எழுத்து வடிவில் ஆவணமாக்கினால் பல சுவையான நிகழ்வுகள் தெரியவரும்.

- ரெங்கையா முருகன்

Pin It