அம்பேத்கர், பெரியார், காமராசர் ஆகியோரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று சொன்ன நடிகர் விஜயை இந்த ஊடகங்கள் முதன்மைப்படுத்துகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, தமிழக பாஜக நபர் கைதைக் கண்டிக்கும் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அமெரிக்கா செல்லும் மோடி இவர்களைப் பற்றி வாய் கிழிய பேசும் இந்திய ஊடகங்கள்.. `பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்’ பற்றி மோடியைப் போல் வாய் மூடி மௌனமாய் வேடிக்கை பார்க்கின்றன.

உலக ஓக நாளில் உலகம் எங்கும் ஓகத்தைப் பரப்பத் துடிக்கும் ஊடகங்கள் மற்றும் பாஜகவினர், அதே நாளில் மணிப்பூரில் இந்து மைத்தி மக்கள், பாதுகாப்புப் படையினர், காவல் படையினர் இணைந்து நடத்தும் மனிதத் தன்மையற்ற காட்டு மிராண்டி தாக்குதலை யார் வெளியே கொண்டு வருவது?

manipur violence 367சொந்த மண்ணில் பல நூறு கிராமத்தினர் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டிருப்பதை ஆளும் பாஜக அரசு கண்டும் காணாமல் இருப்பது வியப்பல்ல.

அங்கு 11 மாவட்டங்களில் ஊரடங்கு ஆணை அமுலில் உள்ளது. இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு முழுமையாக எரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் பாஜக அரசின் அமைச்சர் நெம்சா கடுமையாகத் தாக்கப்பட்டு வீடு எரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் பொதுப்பணித் துறை அமைச்சர் கோவிந்த தாஸ் வீடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அமைச்சர் பிஸ்வாஜித் வீடும் தாக்கப்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் வால்டே கடுமையாகத் தாக்கப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார். இம்பால் நகரமே சிதைந்து போய் உள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே குடியேறிய மற்றொரு சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாக்பூர் கும்பல் மணிப்பூரில் நடத்தும் இந்த மத வெறி வன்முறையை உடனே நிறுத்த வேண்டும். ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களும், ஆளும் பாஜக அரசின் மேல் கடும் கோபத்தில் உள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இப்படிப்பட்ட கலவரம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகிய ஏழு மாநிலங்கள் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இவற்றோடு சிக்கிமும் இணைந்து கொண்டது.

19ஆம் நூற்றாண்டில் வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, அப்பகுதியில் நெருங்க முடியாத மலைப்பகுதியில் பழங்குடிகள் அவர்களுக்கென இன குழுக்களாகப் பிரிந்து, அந்த இன குழுக்களின் தலைவர்களைக் கொண்டு அவர்களின் கலாச்சாரப் பண்பாட்டோடு தங்கள் ஆட்சியை அமைத்துக் கொண்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை, இலங்கை, மலேசியா போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்ற ஒடுக்கப்பட்ட எளிய தமிழர்களை ஆங்கிலேயர்கள் அழைத்து சென்றது போலவே, வடகிழக்கு மாநிலங்களில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்ற பீகார், உத்தரப்பிரதேசத்தில் இருந்து உழைக்கும் எளிய மக்களை அழைத்துச் சென்றனர். வங்காளத்தில் இருந்தும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் இவர்களை நிர்வாகம் செய்ய அன்றைக்கு அதிகம் படித்தவர்களாக இருந்த வங்காளிகளைப் பணியமர்த்தினர்.

இந்நிலையில் ஆங்கிலேயர்களின் ஒரு பகுதியினர் மலைப்பகுதியில் உட்பகுதிக்கு சென்று நாக, மிசோர மக்களுக்கு கல்வி அறிவு கொடுத்தனர். இந்த மக்களும் தங்கள் அடிமைத் தனத்தை உணர்ந்து விடுதலை பெற தங்களுக் கென தனி நாடு கேட்டுப் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். மறுபுறம் மணிப்பூர் திரிபுரா அரச குடும்பத்தினர் தங்களை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள விரும்பினர். இந்திய விடுதலைக்குப் பின் அசாம் பகுதி அசாம், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் என மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. பின்னர் மணிப்பூரும், திரிபுராவும் அடுத்து சிக்கிமும் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டன.

1963 வரை வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அசாம் மாநிலம் என்றுதான் அழைக்கப்பட்டது. நாகா இன மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாக நாகலாந்து மாநிலம் உருவானது. பின்னர் ஒவ்வொரு தேசிய இனமும் தனி நாடு கேட்டுப் போராடியதன் விளைவாகத் தனித்தனி மாநிலங்கள் பெறப்பட்டன.

அசாம்

மியான்மரில் இருந்த அசாம் பகுதியைப் பிரித்து இந்தியாவுடன் இணைத்தது. ஆங்கிலேய அரசு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பெருமளவில் அசாமில் குடியேறினர். விடுதலைக்குப் பின் ஏற்பட்ட மதக் கலவரத்தால், இந்து வங்காளிகள், அசாமின் பூர்வ குடிகளான போடோ இன மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் அசாமில் குடியேறினர். இந்தியாவின் துணையோடு வங்காள தேசம் தனி நாடாக அமைந்தாலும், அசாமுக்குள் குடியேறிய வங்காளிகள் அங்கேயே தங்கிவிட்டனர்.

தனி நாடு கேட்டு 1987இல் அனைத்து போடோ மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. 1993-இல் பல ஒடுக்குமுறைக்குப் பின் போடோலாந்து கோரிக்கை நீர்த்துப் போகும் வகையில் மிகக் குறைந்த அளவு உரிமைகள் கொண்ட தனி மாநில ஒப்பந்தம் உருவானது. இதை ஏற்றுக் கொள்ளாமல் போடோ விடுதலைப் புலிகள், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி ஆகிய அமைப்புகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டன. 2003இல் போடோ விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் ஏற்பட்டு போடோ தன்னாட்சி உரிமை பெறப்பட்டது. ஆனாலும் வங்காளிகளின் குடியேற்றமும், நில ஆக்கிரமிப்பும் மேலோங்கின. அசாமில் சரிபாதி நிலத்தில் வங்காளிகள் பெரும்பான்மை ஆயினர். வாக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்ட காங்கிரஸ் அரசு அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. போடோ மக்களின் தாய் நிலம் வங்காள மக்களின் தாய் மண்ணாக மாறிக் கொண்டிருந்தது.

நாகலாந்து

ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் நாகலாந்தைக் கொண்டு வர ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதத்தால் நாகா மக்களை முறியடித்து இந்தியப் பகுதியில் இணைத்தனர். பெரும் நிலப்பரப்பு கொண்ட நாகலாந்தின் சரி பாதி அளவு மியான்மரிலும், மீதியளவு இந்தியாவுடன் நாகலாந்து மாநிலமாக இணைக்கப்பட்டது. பல்வேறு குழுக்களாக இருந்த நாகா மக்கள் ஒன்றிணைந்தனர்.

1946இல் நாகா மக்களுக்கான அமைப்பு NNC (Naga National Council) தங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டாம் என்று கேட்டனர். 1947 ஜூலை 19 காந்தியுடன் நடந்த பேச்சு வார்த்தையில் தங்களைத் தனி நாடாகக் கருத வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க காந்தியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் நாகலாந்து தனி நாடாகவே இருந்தது. 1958க்கு பிறகு நேரு தன் இராணுவ நடவடிக்கையால் மிகப் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து அட்டூழியங்கள் நடத்தி நாகலாந்தை, நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம், அசாம் என உடைத்தார்.

மணிப்பூர்

நேரு அவர்கள் வடகிழக்கு மாநிலங்களைப் பிரிக்கும்போது அந்தந்த தேசிய இனத்தின் வழியாகப் பிரிக்காமல் சூழ்ச்சியுடன் பெரும்பான்மைத் தேசிய இனங்களை உடைத்து மாநிலங்களை பிரித்தார். இந்திய எல்லைக்குள் இருந்த பெரும்பான்மை சமூகங்களான நாகா, மிசோ, மைத்தி ஆகியவற்றை அந்தந்த தேசிய இனங்களாகப் பிரிக்காமல் நாகர்கள் வாழும் பகுதியைத் தனி நாகலாந்தாக அறிவிக்காமல் அசாம், மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் இருக்குமாறு பிரித்தார்.

மணிப்பூர் மாநிலம் மைத்தி, நாகா, குக்கி இனங்களையும் இணைத்துப் பிரிக்கப்பட்டது. அதிலும் மணிப்பூர், மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் வனப்பகுதி மியான்மருடன் இணைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்து வந்த குக்கி இன மக்கள் மியான்மரிலேயே தங்கி விட்டனர்.

மணிப்பூர் மக்கள் தொகையில் பழங்குடி அல்லாத மைத்தி இனம் மக்கள் 53 விழுக்காட்டினரும், குக்கி, நாகா உள்ளிட்ட பிற அனைத்துப் பழங்குடியினர் 40 விழுகாட்டளவிலும் இருந்தனர்.

மணிப்பூர் நிலத்தின் மையப் பகுதி சமவெளியாகவும், சமவெளியைச் சுற்றியுள்ள பகுதி வனம் சார்ந்த மலைப்பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்த சமவெளிப் பகுதி முழுவதும் மைத்தி இன மக்களும், காடுகளில் குக்கி நாகா மற்றும் பல்வேறு பிற பழங்குடியின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியில் சமவெளிப் பகுதியில் வாழ்ந்த மைத்தி இன மக்கள் கல்வி அறிவு பெற்று அதன் வழியே அம்மக்கள் வேலை வாய்ப்புகளிலும், நில உடைமையிலும், விவசாயத்திலும், சமூகப் பொருளாதார நிலையிலும் மேலோங்கி இருந்து வருகின்றனர்.

மைத்தி இன மக்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள். மலைப்பகுதியில் வாழும் குக்கி, நாகா மற்றும் பிற பழங்குடியின மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள். ஆனாலும் கல்வியறிவிலும், சமூகப் பொருளாதார நிலைகளிலும் பின்தங்கி எளிய நிலையில் உள்ளனர். சமவெளிப் பகுதியில் வாழும் பழங்குடியல்லாத மைத்தி இன மக்கள் பழங்குடியினர் வாழும் மலைப்பகுதியில் நிலம் வாங்கவும் முடியாது, வனப் பகுதியில் தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளவும் முடியாது. இந்திய விடுதலைக்கு முன் மைத்தி இன மக்களும் பழங்குடியின பட்டியலில் இருந்ததாக அவர்கள் தரப்பு வாதமாக இருக்கிறது.

2017 ஆம் ஆண்டு பாஜக மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து அங்கு இந்து - கிறிஸ்தவர் பிரிவினை ஏற்படுத்தி இந்து மைத்தி மக்களின் வாக்குகளை வைத்து அரசியல் நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியிலும் மைத்தி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதாக உறுதி அளித்துள்ளனர். திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தற்போது பாஜக நேரடியாக ஆட்சியில் இருக்கிறது. மற்ற பிற வட கிழக்கு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக உள்ளது. மணிப்பூரில் 60 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மைத்தி இனத்தினரும், மீதி 20 பேர் குக்கி, நாகா மற்றும் பிற பழங்குடியினர் மக்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இதுவரை ஆட்சி செய்த 12 முதல்வர்களில் 10 பேர் மைத்தி இனத்தினராகவும், இரண்டு பேர் மட்டுமே பழங்குடியினராகவும் இருந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் மோடி அரசு வனப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்தது. அதில் ஒன்றிய அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வனப்பகுதியை மாநில அரசு தனியாருக்கு ஒதுக்கீடு செய்யலாம்.

சர்வதேச எல்லையில் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காடுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டு வந்தது. இந்தத் திருத்தத்தால் பாதிக்கப்பட்டது குக்கி இன மக்களே. காரணம் மணிப்பூர் மியான்மர் எல்லையில் வசிப்பது குக்கி இன மக்களே. இந்தப் பகுதி சர்வதேச எல்லையாக இருப்பதால் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள காடுகளைப் பாதுகாக்க.. நூற்றுக்கணக்கான கிராமங்களை அகற்றி வருகின்றனர். இங்குள்ள ராணுவத்தினர் மியான்மர் பகுதியில் இருந்து பல்வேறு காரணங்களால் மணிப்பூருக்கு குடிபெயரும் குக்கி இனமக்களின் உறவினர்களை இங்குள்ள பாஜக அரசு தடுத்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதி அளித்த பாஜக அரசு மைத்தி இன மக்களை வைத்து மணிப்பூர் தலைநகரமான இம்பால் உயர்நீதிமன்றத்தில் தங்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தது. வழக்கம் போலவே பாஜகவுக்கு சார்பான பல்வேறு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வழியே மணிப்பூர் உயர்நீதிமன்றமும் நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்க பாஜக அரசுக்கு உத்தரவிட்டது. ஒன்றிய அரசு கள்ள மவுனம் காத்த நிலையில், மாநில பாஜக அரசு இந்து மைத்தி இனமக்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கத் திட்டமிட்டது.

இந்நிலையில் மலைகளில் வாழும் குக்கி நாகா பழங்குடியினர் அமைப்பு சார்ந்த அனைத்துப் பழங்குடியின மாணவர் அமைப்பு தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்தியது. அப்போது ஆரம்பித்த வன்முறை இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேல் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கலவரத்தை ஒட்டி இதுவரை எந்தக் கருத்தையும் கூறாமல், அந்த மக்களைச் சென்று பார்க்காமல் வானொலியில் மட்டுமே பேசுகின்ற இந்திய பிரதமர் மோடி, தற்போது அமெரிக்காவில் இந்தியப் பெருமை பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த கலவரத்தைப் பற்றி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் அவர்கள் கூறுகிறார்,

'மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்றுவரை வெளியில் வராமல் இருக்கிறது. அங்கு ஓர் இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மதவாத அரசியல் நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு மணிப்பூர் கலவரம் ஒரு முன்னுதாரணம். குக்கி நாகா இன மக்கள் கிறிஸ்தவர்கள் என்பதனால் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும், காவல்துறையினரும் சேர்ந்து கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்திக் கொன்று குவித்து வருகிறார்கள். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள். மணிப்பூர் மக்கள் ராணுவம் மற்றும் காவல் துறையினர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாக்கை மட்டுமே வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிற பாஜக அரசு மதவாத அரசியலை கையில் எடுத்து அதன் வழியாகப் பெரும்பான்மை சமூகமான மைத்தி இன மக்களை வென்றுவிடலாம், அவர்களின் வாக்கைப் பெற்றுவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறது. எதிர்காலத்தில் வடகிழக்கு மாநில மக்கள் இதற்குச் சரியான பாடம் புகட்டுவார்கள்.

- அநி மண்

Pin It