இனத்தின் எழுச்சிக்கு வெற்றி 

பேறிவாளன், சாந்தன், முருகன் - மூவரின் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் மூண்டெழுந்த எழுச்சி - இந்த மனித உரிமையை மீட்டுத் தந்திருக்கிறது. 

ஆகஸ்ட் 30 - தமிழின வரலாற்றில் மகிழ்ச்சித் திருநாள்! அன்றுதான் இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், அடுத்த சில நிமிடங்களில் தூக்குத் தண்டனைக்கு 8 வாரத் தடை விதித்து, உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பும், ஒன்று சேர்ந்து தமிழர்களுக்குக் கிடைத்தது. மகிழ்ச்சி ஆரவாரத்தில் உயர்நீதிமன்றத்தில் குழுமியிருந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், உணர்வாளர்களும் மூழ்கிப் போனார்கள்.

“தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை வேண்டுமென ஜனாதிபதியை சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று இந்தத் தீர்மானம் கூறுகிறது. தமிழர்களின் உணர்வுகளை மதித்து தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றிய இத்தீர்மானத்தை தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். 

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கி.நாகப்பன், எம்.சத்யநாராயணா ஆகியோரடங்கிய அமர்வு நீதிமன்றத்தின் முன் முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்த முக்கிய வாதங்கள்: 

•              30 விநாடிகளில் ஒருவரை தூக்கில் போட்டு உயிரைப் பறித்து விடலாம் ஆனால் 11 ஆண்டு காலம் 4 மாதம் இவர்கள், அதற்காகக் காத்திருக்கிறார்கள். 

•              இந்த வழக்கு விசாரணை 1999 மே 11 ஆம் தேதி முடிந்தவுடன் அதே ஆண்டு அக்டோபர் 17 ம் தேதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு போட்டார்கள். 10 நாட்களில் அது நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக தமிழக ஆளுநருக்கு அக்.17 ஆம் தேதி கருணை மனு போட்டார்கள். 10 நாட்களில் அது நிராகரிக்கப்பட்டது. மீண்டும் தமிழக ஆளுநருக்கே இரண்டாவது கருணை மனு போடப்பட்டது. 5 மாதம் கழித்து, அது தள்ளுபடியானது. தொடர்ந்து 2004 பிப். 26 அன்று குடியரசுத் தலைவருக்கு கருணை மனு போடப்பட்டது. 11 ஆண்டுகள் 4 மாதம் கழித்து 2011 ஆகஸ்டு 12 இல் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து, ஆக. 25 ஆம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். இவ்வளவு கால தாமதத்துக்கான காரணம் கூறாமல், தண்டனையை நிறைவேற்றுவது அரசியல் சட்டம் 21 ஆவது பிரிவு வழங்கும் உரிமையைப் பறிப்பதாகும்” என்று ராம் ஜெத்மாலனி வாதிட்டார். 

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றாத பல வழக்குகளில் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மூத்த வழக்கறிஞர்கள் வைகை, காலின் சால்வேகம் ஆகியோரும் இதே அடிப்படையிலேயே வாதங்களை எடுத்து வைத்தனர். 

இடைக்காலத் தடை சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பிறகு சென்னை கோயம்பேட்டில் ‘பெரியாரியலாளர்’ திருச்சி சவுந்தரராசன் அவர்களுக்கு உரிய கட்டிட வளாகத்தில் பட்டினிப் போராட்டம் நடத்தி வந்த பெண் வழக்கறிஞர்கள் வடிவாம்பாள், சுஜாதா, அங்கயற்கண்ணி ஆகியோர் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனர். 

வை.கோ., பழ. நெடுமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு போராட்டத்தை முடித்து வைத்தார். 

டெக்கான் கிரானிக்கல்கூறுகிறது உலகத் தமிழரிடையே ஜெயலலிதா உயர்ந்து நிற்கிறார் 

‘உலகத் தமிழர்களின் நிலைத்த புகழுக்குரியவராக தமிழக முதல்வர், ஒரே நாளில் உயர்ந்து விட்டார்’ என்று ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டில (ஆக. 31) அதன் சிறப்பு செய்தியாளர் எம்.குணசேகரன் எழுதியுள்ளார். இது குறித்து அவர் முன் வைத்துள்ள செய்தி ஆய்வு: 

“இத் தீர்மானத்தை ஜெயலலிதாவின் அரசியலில் திடீர் மாற்றம் என்று சிலர் கூறலாம். ஆனால், அரசியல் சாதுர்யமிக்க ஜெயலலிதா கடந்த செவ்வாய் கிழமை சட்டமன்றத்தில் ‘அரங்கேற்றிய’ இந்த அதிரடி செயல்பாடு, உலகத் தமிழர்களிடையே அவரது புகழை நிலைத்த உச்சத்திற்குக் கொண்டு சென்று விட்டது. நளினியின் தண்டனை குறைப்பையே ஒரு காலத்தில் குறை கூறிய ஜெயலலிதா, இன்று உலகத் தமிழர்களின் ‘தேவதை’யாக மாறியிருப்பதற்கு இடையில் நீண்ட கால இடைவெளியை கடக்க வேண்டியிருந்தது என்றே கூறலாம். அனேகமாக, அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், ஜெயலலிதா வெளிப்படுத்திய இந்தத் துணிவை பாராட்டி வரவேற்கிறார்கள். இதற்கு முன் எப்போதுமே நடந்திராத, முன் உதாரணமாக இது அமைந்துள்ளது. பொது மக்களிடம் தூக்கு தண்டனைக்கு எதிராக எழுந்த உணர்வுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது” - என்று அந்த செய்தி ஆய்வு கூறுகிறது.

Pin It