அமாவாசை வடிவேலு பண்ணையக்காரனின் சகாக்களையும் அவன் மனைவி கவிதாவையும் பார்த்தான்

இவர்களை பார்த்து ஏதோ பேசிக்கொண்டனர் ஆண்டைகள். 

சரி என்னவோ பேசட்டும் நமக்கென்ன என்றபடி ‘‘புள்ள அதைபத்தியெல்லாம் ஒண்ணும்  பயப்படத் தேவையில்ல விடு சீக்கிரமே பெயில் கெடைச்சுடும் வந்துடுவோம் கவலைப்படாத’’ என்று மனைவியை தேற்றினான்.

‘‘மாமா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வெளிய  வா மாமா நீ நம்ம ஊட்ல  இல்லாம  வீடு வீடாவே இல்ல. வர்றவன் போறவன்லாம் ஒரு மாதிரி பாக்கறான் பேசறான்.

ஆத்திர அவசரத்துக்கு எதாச்சும் உதவினு போய் கேட்டாக்காக்க உன்னோட நட்பெல்லாம் பல்ல இளிக்குது மாமா எனக்கு சாவறமாதிரி இருக்குது.

எத்தனை நாளா  இந்த பச்ச கொழந்தைங்கள வச்சிக்கிட்டு பசியும் பட்டினியுமா தூங்கிருப்பேன் தெரியுமா மாமா.

உன்னை ஜெயில்ல மனு போட்டு பாக்க வரனும்னா கூட கையில காசு பணம் கெடைக்க மாட்டேங்குது முந்தியாச்சும் அக்கம் பக்கத்து காடுகரைல வேலை பாத்து  ஏதோ பொழப்ப நடத்துனோம்.

இப்ப நீங்க கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்துட்டீங்க எந்த பண்ணையக்காரனும் வேலை கொடுக்கறதில்ல

உள்ளூர் சேரி வலவுக்காரங்க யாரையுமே அவங்க இப்பல்லாம் வேலைக்கு கூப்புடறதில்ல.

இந்திக்காரனுவ செம்பிலி ஆடு கணக்கா அவனுவ காட்டுல இப்ப பண்ணையம் அடிக்கறானுவ. மூணுவேளை ரேசன் அரிசி சோறு போட்டா போதும்னு மாடுமாதிரி வேலை செய்றானுவ. இப்பல்லாம் ஆம்பள வேலை பொம்பள வேலைங்கற கணக்கெல்லாம் இல்ல மாமா அவனவன் கொழந்த குட்டிய கூட்டிகிட்டு திருட்டு ரயில் ஏறியாச்சும் நம்மூர் பக்கம் வந்துடறானுக. குடும்பமே பண்ணையத்துல வேலை பாக்குது நம்மாளுவளுக்கு வேலை சுத்தமா கெடைக்கறதே இல்ல.

வேற வழியில்லாம நானும் இப்பல்லாம் சித்தாளு வேலைக்கு போறன் மாமா. அங்கயும் அந்த இந்திக்கார கண்டாரோழி மவனுவ நெறைய பேர் வேலை பாக்கறானுக.

மேஸ்திரிக்காரன் எதுக்கெடுத்தாலும் நொட்டஞ்சொல்றான் மாமா. சிடு சிடுனு எரிஞ்சி எரிஞ்சி விழறான் அவனுக்கு ஒரு சில பொன்னுக வளைஞ்சி கொடுத்து போறாளுக அவளுகள எதுமே பேசறதில்ல.

நம்மளாட்டம் ஒருத்தனுக்கே முந்தானி விரிக்கற பொண்ணுக பொம்பளைங்க இந்த உலகத்துல வாழவே முடியாது மாமா.

எம்புள்ளைங்க பசியாத்த யாருக்காச்சும் நான் முந்தானி விரிக்கவேண்டிய நெலமை வந்துருமோனு பயப்படுறேன் மாமா ..’’

‘‘ஓ’’ வென ஓங்கி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். அமாவாசையின் மனைவி.

கண்கள் குளமாக அவளைச் சமாதானப்படுத்தினான் அமாவாசை. ‘‘ஏய் ஏம்புள்ள இப்படிலாம் பேசற ஒண்ணும்  ஆவாதுடீ புள்ள தகிரியமா இரு.

‘‘மாமா உனக்கென்ன மாமா சாதாரணமா சொல்லி ப்புடற இந்த மண்ணுல தாழ்த்தப்பட்ட சேரி வளவு மக்களா வாழ்றது எவ்வளவு கொடுமையோ  அதைவிட கொடுமை பொம்பளையா வாழ்றது. அதிலயும் ஆம்பள இல்லாத வீடுனு தெரிஞ்சாலே கண்ட நாயெல்லாம் ராத்திரில கதவை தட்டுது மாமா. நீ யாரையெல்லாம் உன்னோட பிரண்டு அங்கு பங்காளினு பேசுனியோ அவங்களுக்காக என்கிட்ட சன்டை போட்டியோ அத்தனைபேருமே நீ இல்லைங்கறதால காசு பணம் கொடுத்து உதவற மாதிரி தடவி பாத்து பல்ல இளிச்சவன்தான் மாமா பேருக்குவேணா நீங்கள்லாம் கொல பண்ணிட்டு மீசைய முறுக்கிட்டு கம்பீரமா ஜெயிலுக்கு போய்ட்டு வரலாம் ஆனா ஒரு பொம்பள தனியா இருக்கறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா மாமா.

நீ நெனைக்கறமாதிரிலாம் எதுமே இல்ல நல்லவன் யாரு கெட்டவன் யாருங்கற விசயமெல்லாம் புருசன் வீட்ல இல்லாத காலத்துலதான் கண்டு பிடிக்க முடியுது.

மாமா எவ்வள சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துரு என்னோட ஆத்திரம் அங்களாப்பு என் மனசுல பட்டதெல்லாம் பேசிபுட்டேன் எதும் நெனைச்சிக்காத மாமா.’’

‘‘ஏன்பா  அமாவாசை வாங்க போலாம் ரொம்ப நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க காலிங்க் டைம் ஆகப்போகுது. என்று பாதுகாப்புக்கு வந்த போலீசார் தொந்தரவு செய்தனர்.

‘‘தோ வரேன் சார்’’ என்றவாறு தன் சகாக்களை அழைத்துக்கொண்டு கோர்ட் உள்ளே நுழைந்தான் அமாவாசை.

தன்மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் புலம்பியது ‘‘ச்சே ஒரு பொம்பளை இந்த உலகத்துல தனிச்சு நிம்மதியா வாழ முடியல பிள்ளைகளை வச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டம் இந்த உலகத்துல வேலை வெட்டி செய்யற எடத்துலயும் அவளைச் சக உழைப்பாளியாய் எவனும் பாக்கறதில்லயே படுக்கமட்டுமே பெண் என்கிற எண்ணம் இந்த சமூகத்தில் பழக்கப்பட்டு போயிருச்சு போல. எவ்வளவு கஷ்டம் இவளாச்சும் என்கிட்ட நெலைமைய சொல்லி அழுது புலம்பி தீர்த்துட்டா வெளிய சொல்ல முடியாத பொண்ணுக இன்னும் எத்தனைபேர்.

வேலை வாய்ப்புகளெல்லாம் ரொம்ப குறையுதே பொண்டாட்டி சொன்னமாதிரி முழுக்க முழுக்க இந்திக்காரனுங்கள வேலைக்கு சேத்திக்கறானுக.

சொந்த நாட்டு உள்ளூர் விவசாய கூலி வேலைகளையே நம்பி வாழ்ந்த மக்கள் இனி என்ன பண்ணுவாங்க வேற வழி சொந்த மண்லயே அகதியா அல்லது பிச்சைக்காரனா திருடனா அல்லது பெண்களை விபச்சாரியா மாத்திடும் இந்த பழக்கம் அதுக்கு அடித்தளமா தான் இப்ப இந்திக்காரனுகள வேலைல சேத்திக்கரானுவ.

இந்த உழைக்கும் வர்க்கம் உழைப்பை மட்டுமே மூலதனமாய் கொண்டது வெளிமாநில ஆட்கள் இறக்குமதி ங்கறது சொந்த மக்களை அனாதையாக்கற செயல் இல்லையா?

இப்படியே போனாக்கா தமிழ்நாட்ல தமிழன் வாழ முடியாது வடவன் வந்து வலுப்பெற்று நாளைக்கு நம்மையெல்லாம் எதிர்த்து அடிக்க ஆரம்பிச்சுடுவான்’’

தன்நிலை மறந்து புலம்பியபடி இருந்தான் அமாவாசை.

‘‘அமாவாசை கருப்பன் சின்னச்சாமி’’ டவாலி அழைத்தான் பரபரப்பாய் நால்வரும் எழுந்து உள்ளே ஜட்ஜ் யை நோக்கி ஓடினார்கள்.

‘‘எல்லாரும் வந்தாச்சா?’’

ஜட்ஜ் கேட்டார் 

‘‘வந்தாச்சுங்கய்யா சரி அடுத்த 18 ந்தேதி வாய்தா’’

‘‘சரிங்க ஐயா’’ என தலையாட்டியபடி நால்வரும் வெளியே வந்தனர் வந்தவுடன் மீண்டும் கைவிலங்கு போட்ப்பட்டது நால்வரும் வேனை நோக்கி நடந்தனர்

‘‘தோழர் தோழர் தோழர் அமாவாசை தோழர்’’ என்ற குரல் கேட்டு திரும்பினான் அமாவாசை.

நைந்துபோன பழைய கருப்பு ஜிப்பா பழைய பேன்ட் தொளதொளவென தோளில் ஜோல்னா பையுடன் ஒருவர் பக்கத்தில் வந்தார்.

‘‘தோழர் என்பேரு ரவீந்திரன் தோழர் லெனின் காமராசு கிட்ட ஒரு தகவல் தரனும். உங்ககிட்ட கொடுத்து அனுப்ப சொன்னார் கொடுக்கவா’’ என்றார்

‘‘சரி குடுங்க தோழர்’’ என்றான் அமாவாசை.

கடிதமாய் ஏதுமில்லை பொருளாய் ஏதுமில்லை. 4 வார்த்தை மட்டும் சொன்னார். இதை சொல்லிடுங்க தோழர் என்றார்.

‘‘தோழர் மறந்துடாமாட்டீங்களே ?’’

‘‘இல்லை தோழர் மறக்கமாட்டேன் நான் சொல்லிடறேன்’’ என்றான் அமாவாசை.

அவரவர் தன் சொந்த பந்தங்களை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு கண்களில் கண்ணீர் கசிய வேனில் ஏறி அமர்ந்தனர் வேன் சேலம் மத்தியச் சிறையை நோக்கி கிளம்பியது.

- தொடரும்

Pin It