காற்றில் அலையும் சிறகொன்று
பெர்டோல்ட் ப்ரெக்டிற்கு:
சிறு பகிர்வும்
சொல்லொன்னாச் சேதிகள் கசியும் குற்றமோ
எனும் காலமாகிப் போனதை
என்னென்பது?
பால் செலான் (1920 - 70)1
ஈழம் குறித்து எழுத முடிவெடுத்தபோது, இக்கவிதையுடன் தொடங்கவே உத்தேசித்திருந்தேன். ‘சிறு பகிர்வே குற்றமோ" எனும் சூழல் இன்று ஈழத்தில். அம்மக்கள் 'சொல்லாத சேதிகள்' எத்தனையோ! "சொல்லொன்னாச் சேதிகள்" இன்னும் எத்தனை எத்தனையோ!
ஆனால், புலம் பெயர்ந்து, இத்தனை ஆண்டுகள் போயும், எந்த ஐரோப்பிய நாடொன்றின் குடிமகனாகவும் ஆகாத, என்றாலும் சர்வசாதாரணமாக 'உலகம் சுற்றும் வாலிபனாக' உலாவரும் (ஈழத்தவர் என்றாலே விசா கிடைப்பது எங்கும் கெடுபிடியாயிருக்க, இது எப்படி சாத்தியமாகிறது என்று கேள்வி கேட்கக் கூடாது) 'விஞ்ஞானி முருகன்' களுக்கும் - அகிலன் வகையறா - ‘இலக்கிய ராஜூ'க்களுக்கும் - பெயர் சொல்ல அவசியம் இல்லை - (சக்ஸஸ்! சக்ஸஸ்! புலிகள் தோத்தாச்சு!) பேட்டி எடுத்தும் பேட்டி கொடுத்தும் அரசியல் பண்ணுவது ஒரு கலையாகவே கைவந்துவிட்டது. மொட்டைக் கேள்விகளுக்கு மக்குப் பதில்கள்! மகாபுத்திசாலித்தனமாக உதிர்க்க பெரும்பத்திரிகைகளைத் தவிர வசதியான இடம் ஏது! அங்குதானே உலகப் பொருளாதாரத்தில் இருந்து உள்ளூர் அரசியல் வரை என்ன அபிப்பிராயத்தை வேண்டுமானாலும் விளாசித் தள்ளலாம்!
ஆனால், சிறு வட்டங்களில் காத்திரமாக எவரும் கேள்விகளைத் தொடுத்தால், ஒன்று மௌனம் (இதன் அர்த்தம் ‘எனக்கு கேள்வி கேக்கத்தான் தெரியும், பதில் சொல்லிப் பழக்கமில்ல') அல்லது 'மண்டபத்தில்' அரட்டை அடித்ததை ஒப்பிப்பது. (கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி ... அடடா என்ன கவித என்ன கவித! இதுக்கு அர்த்தம் கேட்டு உயிர வாங்குறீங்களேய்யா!) இன்னொரு எதிர்வினை, எதிர்க்கேள்வி கேட்பது.
கேள்வி எதற்காக? பதிலுக்காக என்பது 'உலக வழக்கு'. அதில் மறுப்பில்லை. ஆனால், சமகால அரசியல் சிக்கல்களில் இருந்து விடுதலை நோக்கிய வழிகளில் பயணிப்பதற்கான வேட்கையுடன், நிலவும் சூழலைப் புரிந்துகொள்வதற்காக நமக்கு நாமே எழுப்பிக் கொள்ளும் கேள்விகள் மொட்டைப் பதில்களில் திருப்தி கொண்டுவிட்டால் அவற்றை எழுப்பியதன் நோக்கமே பயனற்றதாகிவிடுகிறது. ஆழ்ந்த புரிதலுக்காக நமக்குள் எழுப்பும் கேள்விகள் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நம்மை இட்டுச் செல்லவேண்டும். ஒரு புதிருக்கான விடையைத் தேடும் உற்சாகத்தோடும் வேட்கையோடும் அவற்றுக்குள் பயணிக்க வேண்டும். புதையலைத் தேடும் மும்முரத்துடன் இருட்குகைகளுக்குள் கேள்விகள் எனும் தீப்பந்தத்தின் துணையோடு, துணிச்சலோடு நுழையவேண்டும்.
ஆனால், நமது 'மாற்றுக் கருத்தாளர்கள்' ‘மறுத்தோடி' சூரப்புலிகளின் எழுத்துக்களை வாசித்தால், கேள்விகளே அதிரடி ‘ஸ்டேட்மெண்டுகள்' ஆக திருப்பி அடிப்பதைக் கவனிக்கலாம். மற்றவர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தால், திரும்பக் கிடைப்பது எதிர்க்கேள்விகள். மற்றவர்களை மடக்குவதற்காக இவர்கள் கைக்கொள்ளும் பாணி இது. இவர்களது வழமை.
சரி, இவர்களது 'குருபீடங்கள்' எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று தேடிப்போனால், அதிர்ச்சிதான் காத்திருக்கிறது. உள்ளூர் குருபீடத்தை நன்றாகவே அறிவேன் என்பதால், சர்வதேச பீடம் அப்படி என்னதான் செய்கிறது என்று தீவிரமாக அலசியதில் பகிர்ந்து கொள்ள சுவாரசியமான விஷயங்கள் கிடைத்தன. சுவாரசியம் போக, ஈழத்தின் சமகால நிகழ்வுகளில் கடுமையான தாக்கங்கள் விளைவித்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளோடு தொடர்புடையவை அவை.
ஈழத்தில் போர் கொடூரமான முடிவுக்கு வந்த சில நாட்கள் - வாரங்களில் பிரிட்டன், ஃப்ரான்ஸ் உட்பட IMF, சீனா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா என்று போட்டி போட்டுக் கொண்டு, 'வளர்ச்சி' நிதியாகவும் அகதிகளின் மறுவாழ்விற்காகவும் எனக் கூறிக் கொண்டு கோடிக் கணக்கில் நிதியுதவியை வாரி வழங்கி வருவதைப் பலரும் கவனித்திருக்கலாம். மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய நலன்களும் இலங்கை அரசின் இனப்படுகொலை பாலான அந்நாடுகளின் பாராமுகமும் அப்பட்டமாக வெளிப்பட்டதற்கான அடையாளமாகவும் இதை நோக்கலாம்.
போர் முடிந்த தருணத்தில் ஐ. நாவின் மனித உரிமை ஆணையம் கூட்டிய சிறப்புக் கூட்டத்தில், மேற்கத்திய நாடுகள் கொண்டு வர முயன்ற தீர்மானத்தை இலங்கை அரசு இந்தியா, சீனா, க்யூபா, வெனீசுலா, போன்ற மூன்றாம் உலக, இலத்தின் அமெரிக்க நாடுகளின் துணையோடு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதையே முறியடித்ததையும் தனது தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதையும் பலரும் கவனித்திருக்கலாம். உலக அளவில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக மூன்றாம் உலக சக்திகள் கடும் நிர்ப்பந்த சக்திகளாக மாறியிருப்பதை அடையாளம் காட்டிய நிகழ்வாகவும் அது அமைந்தது.
எனது கேள்வி, இது புதிய நிகழ்வுதானா என்பதே. இதற்கான அறிகுறிகள் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழத் தொடங்கியிருக்கின்றன. நாம் (இவ்விடத்தில் ‘நான்' என்று சொல்வதே சரி) கவனிக்கத் தவறியிருக்கிறோம். இச்சமயம், அகிலன் கதிர்காமரின் எழுத்துக்களைத் தொடர்ந்து சென்றதில் கிடைத்த தெளிவு இது என்பதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.
அவருடைய சிறீலங்கா ஜனநாயகக் களன் வலைப்பக்கத்தில் உள்ள இக்கட்டுரையை (http://www.srilankademocracy.org/docs/CP_AK_EPW.pdf) வாசித்து அதில் அவர் விமர்சிக்கும் Strategic Conflict Assessment 2 (SCA2) என்ற அறிக்கையையும் தேடிப் படிக்க நேர்ந்தது. 6 தொகுதிகளாக (இவற்றையும் தொடர்புள்ள இன்னும் சில அறிக்கைகளையும் இங்கிருந்து (http://www.asiafoundation.org/publications/index.php?q=&searchType=country&country=17&program=0&sort=1&sortrev=1&page=1) தரவிறக்கம் செய்துகொள்ளலாம்) உள்ள இந்த அறிக்கையின் முதல் தொகுதி, உலகின் பல பாகங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போர்கள் குறித்த மேற்குலக ஆதிக்க சக்திகளின் தற்போதைய அணுகுமுறையைத் தெளிவுபடுத்துகிறது.
SCA2 என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் இவ்வறிக்கை 2002 - 2005 ஆண்டுகளில் நடைபெற்ற போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பற்றிய விரிவான ஆவணவமும்கூட. (இதில் இருந்தே தகவல்களை இங்கு பெரும்பாலும் எடுத்தாண்டிருக்கிறேன். அவற்றைக் கையாள்கையில் (SCA2: தொகுதி எண்: பக்க எண்) என்ற சுட்டுமுறையைக் கையாண்டிருக்கிறேன். SCA1 என்று குறிப்பிடப்படும் அறிக்கையை இணையத்திலிருந்து எடுத்துவிட்டிருக்கின்றனர். எனினும், இதன் பொதுவான முடிவுகளை அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துகொண்டிருந்த குறிப்பான நிலைமைகளுக்கு பொருத்திய குறிப்பான ஆய்வாகவே SCA2 எனப்படும் இரண்டாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது).
மூன்றாம் உலக நாடுகளுக்கு ‘வளர்ச்சி நிதி' வழங்குவதில் அமெரிக்க - ஐரோப்பிய வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கும் புதிய அணுகுமுறை குறித்தும், மூன்றாம் உலக - ஆசிய நாடுகளிடையே உருவாகியிருக்கும் புதிய அணிசேர்க்கை - குறிப்பாக சீனாவின் வல்லாதிக்க விரிவு - குறித்தும் தனியாக ஒரு பகுதியில் பார்க்கலாம். தற்சமயம் அகிலன் கதிர்காமரின் சில ‘லீலைகளை' வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதில் கவனத்தைக் குவிப்போம்.
Economic and Political Weekly என்ற, கல்வியாளர்களிடையே மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ள ஆய்விதழில், மேலே சுட்டியுள்ள ஆய்வறிக்கையை அலசும் அகிலன் கதிர்காமர், தனது கட்டுரையில் (இக்கட்டுரையில் இருந்து ஆளப்படும் மேற்கோள்கள் இனி (அகிலன்: பக்க எண்) என்று இருக்கும்) கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் செய்யத் துணியாத அறிவார்த்த ரீதியான செயல்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமான intellectual dishonesty என்று சொல்லத்தக்க காரியங்களைச் செய்திருக்கிறார் என்பது எனது நேரடியான குற்றச்சாட்டு. அதற்குக் காரணமாக நான் கருதுவது எந்தச் சூழ்நிலைமையிலும் எல். டி. டி. ஈ இயக்கத்திற்கு எந்தவிதமான அங்கீகாரமும் எத்தரப்பிடமிருந்தும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் அவர் கொண்டிருக்கும் தன்முனைப்பு. எப்படி என்று பார்ப்போம்.
மேற்குறித்த ஆய்வறிக்கையை அலசத் தொடங்கும் கதிர்காமர் முதலில் SCA1 அறிக்கையின் சாதகமான அம்சங்களாகத் தான் கருதுபவற்றைப் பாராட்டுகிறார். அதிலும் குறிப்பாக இவ்வறிக்கைகளின் மிகமுக்கியமான பங்களிப்பாக ஒரு அம்சத்தை உச்சி மோந்து பாராட்டுகிறார். அது பின்வருமாறு: "பிரச்சினையின் அரசியல் பரிமாணங்களைப் பற்றிப் பேசும் ஒரு பகுதியில் SCA1 அறிக்கை, "இனப்பிரச்சினை என்பதாக குறிப்பிடப்பட்டாலும், இலங்கைப் பிரச்சினையின் மையமாக இருப்பது அரசமைப்பின் நெருக்கடியே" (SCA1: 30) என்று குறித்திருக்கிறது. பிரச்சினையின் அடிப்படையை இவ்வாறு முற்றிலும் மறுவரையறை செய்ததானது, இப்பிரச்சினையின் வேர்கள் தேசிய - இனத் தன்மையிலானது என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் மிகப்பரவலானதொரு கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது." (அகிலன்: 1790)2
தொடர்ந்து, அவ்வறிக்கை இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை உதாரணங்களாகக் காட்டி இதை உறுதி செய்கிறது என்றும் இந்தியாவில் செய்ததைப் போன்று 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் இலங்கையின் ஆங்கிலக் கல்வி கற்ற சிங்கள மேட்டுக் குடியினரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு ஜனநாயகப் பண்பாடு இல்லாத நிலையில் சிறுபான்மையினரை ஒடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் அறிக்கை சரியாகவே குறிப்பிடுகிறது என்கிறார். இரண்டாவது அறிக்கை இது குறித்து என்ன பேசுகிறது என்பதற்குள் போகாமல், மிகப் பொதுவாக "SCA2 அரசமைப்பின் மீதான விமர்சனத்தை மீளவும் செய்து தற்போதைய போர்நிறுத்தக் காலத்திற்கு பொருத்திப் பார்க்கவும் செய்கிறது" (அகிலன்: 1791)3 என்று ஒன்றிரண்டு இடங்களில் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்.
ஆனால், SCA2 அறிக்கை இது குறித்து பேசுவது என்ன? மிகத் தெளிவாகவே இருக்கிறது. "SCA1 இலங்கைப் பிரச்சினையை "இனப் பிரச்சினையாக" அல்லாமல் அரசமைப்பின் நெருக்கடியாக கருத்துருவாக்கம் செய்தது. இது இலங்கையில் பிரச்சினையின் தன்மை இனரீதியான வடிவம் கொண்டிருக்கிறது என்பதையோ ஆட்சியமைப்பு, வளர்ச்சி, சமூக உறவுகள் அனைத்தும் அதிகரித்த அளவில் இனமையமானதையோ மறுப்பதாகாது." இந்தப் புரிதல் இருந்தும் முதல் அறிக்கை ஏன் பிரச்சினையை அரசமைப்பு நிர்வாகத்தின் தோல்வியாக கருத்துருவாக்கம் செய்தது என்பதற்கான விளக்கத்தையும் அடுத்த வரிகளிலேயே தொடர்கிறது: "ஆனால், இலங்கையின் அரசமைப்பு மற்றும் நிர்வாகத்தின் தன்மை மீது கவனத்தைக் குவிப்பது வட கிழக்கிலும் தெற்கிலும் நிலவும் இராணுவ வன்முறைகளின் பல்வேறு வடிவங்களுக்கிடையிலான உள்ளுறவுகளைப் பற்றிய புரிதல்களைத் தருவதாக இருக்கும். அரசமைப்பை ஊடுருவாத வரையில் சமூக அதிருப்திகளால் மிகப் பரவலான வன்முறைகளைத் தூண்டிவிட இயலாது." (SCA2: 1: 25)4
சொல்வதோடு நிறுத்திவிடாமல், பிற்பகுதிகளிலும் மற்ற தொகுதிகளிலும் இதை விரிவாக செய்யவும் முயற்சித்திருக்கிறது அறிக்கை. சிங்களக் கட்சிகள், சிங்கள ஆளும் பிரிவினர் அரச எந்திரத்திற்குள் தமக்கு நெருக்கமானவர்களை அதிகாரத்தில் அமர்த்தும் நடைமுறையையும், அதிருப்திக்குள்ளாகும் சிங்கள வெகுமக்களின் கோபங்களுக்கு ஜேவிபி, புத்த பிக்குகள், எனப் பல்வேறு தரப்பினர் எவ்வாறு வடிகால் அமைத்துக் கொடுக்கின்றனர் என்பதையும் விளக்குகிறது. குறிப்பாக, தெற்குப் பகுதி அடித்தள சிங்கள மக்களின் (சிங்கள இனவெறியின் மையம் இலங்கையின் தெற்குப் பகுதி விவசாய மக்களே; மேற்குக் கடற்கரையோரப் பகுதி மக்கள் இனவெறிக்கு ஆட்பட்டிருந்தாலும் சிங்கள இனவெறியின் மையப்பகுதியாக இருப்பதில்லை என்பது இங்கு குறித்துக்கொள்ளப் படவேண்டும்) விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படாமல் போகும்போது எழும் சிங்கள இனவெறியையும் அதை தமக்குச் சார்பாக மடைமாற்றிக்கொள்ள மையநீரோட்ட சிங்கள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையும் குறிப்பிடுகிறது. இச்சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் அதிருப்தியுற்ற தெற்குப்பகுதி அடித்தள விவசாயப் பிரிவினர் இறுதியாக ஜே. வி. பி. யின் பக்கம் நெருங்கத் தொடங்கியிருப்பதையும் குறிக்கிறது (ராஜபக்சேவும் இந்தப் பிரிவினரின் அதிருப்தியை தனக்குச் சாதகமாகத் திருப்பியிருக்கிறார்).
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட - கிழக்குப் பகுதியைக் குறிப்பிடும்போதும் எல். டி. டி. ஈ அமைப்பினரை அடித்தள மக்கள், தலித் சாதியினரை அடித்தளமாகக் கொண்ட, அவர்களது ஆற்றாமைகளுக்கு வடிகாலாக அமைந்த இயக்கமாகக் குறிப்பிடுகிறது அறிக்கை. ஆக, தெற்கு x வட - கிழக்குப் பகுதிகளின், அடித்தள மக்களின் வாழ்வியல் - பொருளாதார - அரசியல் வேட்கைகளை நிறைவேற்றுவதாக தம்மை முன்னிறுத்தும் இயக்கங்கள் அரசதிகாரத்தைக் கைக்கொள்ள, மாறுபட்ட வழிகளில் - அதே சமயம் இனரீதியான அரசியலை முன்வைப்பதில் ஒரே தன்மையானவையாகவும் - வன்முறைகளைக் கைக்கொள்கின்றன என்பதே அறிக்கை நுட்பமாக முன்வைப்பது. அரச நிர்வாகத்தின் தோல்வி என்று அறிக்கை சுட்டிக்காட்ட முனைவதும் இதையே. இதை அறிக்கை நேரடியாகவே இவ்வாறு குறிப்பிடவும் செய்கிறது: "இனமும் மதமும் வன்முறை சாத்தியமாவதற்கான கருத்தியல் மற்றும் குறியீட்டு ரீதியான படைக்கலன்களைத் தருவதாக இருக்கின்றன. என்றாலும், சற்றே வேடிக்கையான புதிராக, எல். டி. டி. ஈ, ஜே. வி. பி. இரண்டுமே ஒரே வகையான பின்புலத்தில் இருந்து - கிராப்புற, அடித்தள சாதிகளைச் சேர்ந்த, தாய் மொழி மட்டுமே கற்ற - ஒரேவிதமான அதிருப்திகளைக் கொண்டிருக்கும் இளைஞர்களிடமிருந்தே தமது அணிகளைத் திரட்டுகின்றன." (SCA2: 1: 27)5
இவ்வர்க்கங்கள் இனரீதியாக பிரிந்திருந்ததால், வன்முறை இனரீதியாக வெளிப்படுவதும் தவிர்க்கவியலாததானது. SCA2 அறிக்கை புகத்தவறும் இடம் இது. இலங்கைத் தீவில் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடமிருந்து நேரடியாகக் கைக்கொண்ட சிங்கள மேட்டுக் குடியினர் தமது அதிகாரத்தைத் உறுதி செய்துகொள்ள சிங்கள அடித்தள மக்களின் அதிருப்தியைக் கிளறி இனவேற்றுமையையும் வெறுப்பையும் வளர்த்து இன்று மேட்டுக்குடி - வெகுமக்கள் என்ற பாகுபாடின்றி இனவெறியாக எங்கும் படந்திருப்பதன் வரலாற்றை, அதன் தடத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கவே இல்லை அறிக்கை. அதற்கும், தமிழ் வெகுமக்களின் மீதான ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகத் - அதைத் தமது நலன்களுக்கு உகந்த வகையில் மடைமாற்றம் செய்துகொள்ள முனைந்த யாழ் வெள்ளாள நலன்களை மீறி - தோன்றி வளர்ந்த ஈழத் தமிழ் வெகுமக்களின் - அடித்தள மக்கட்பிரிவினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக வளர்ந்த எல். டி. டி. ஈ இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அறிக்கை காணத் தவறுகிறது.
ஆனால், இது அத்தனையும் அகிலன் கதிர்காமருக்கு பொருட்டில்லை. அவர் கண்களுக்கு இவை தென்பட்டாலும் பொருட்படுத்துவதில்லை. இலங்கையின் பிரச்சினை இனரீதியானது அல்ல, அரசமைப்பின் தோல்வி என்ற வாசகங்களைக் கண்டதுமே அவருக்கு சந்தோஷத்தில் மூளை செயலிழந்துவிடுகிறது. தேசிய விடுதலைப் போராட்டமே தேவையில்லை என்பதற்கு இதற்குமேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும்?! அரசமைப்பின் தோல்வி எனும்போது உடனே சிறுபான்மையினர், மலையக மக்கள், பெண்கள் என்று அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரும் அரச அதிகாரத்தில் பங்கு பெறுவதை நோக்கிய செயற்பாடுகளில் இறங்கிவிடலாம். இதைத்தான் அவர் தற்சமயம் முன்மொழிந்து கொண்டிருக்கிறார் என்பதும் முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், அதற்கு அவர் கொடுக்கும் விலை?
அடிப்படை அறிவு நாணயம்.
ஒரு அறிக்கை முன்மொழியும் விரிவான கருத்துக்களில் இருந்து தனக்குச் சாதகமான ஒரேயொரு வரியை மட்டும் உருவி எடுத்து அதுவே முழு உண்மை என்பது போலப் பேசும்போது, அது அவ்வறிக்கை சொல்ல வரும் கருத்துக்கே எதிரானதாகப் போய் நிற்கிறது. இது மற்றவர்களுடைய கருத்துக்களை சிதைப்பது, திரித்துப் பேசுவது. இதை அறிவு நாணயம் அற்ற செயல் என்றல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?!
இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் அகிலன் கதிர்காமர் இப்படி நடந்துகொள்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இன்னொரு முக்கியமான உதாரணத்தையும் தருகிறேன்.
இவ்விடத்தில், 'நிதியாளர்கள்' யார் என்பதையும் குறிப்பிட்டுவிட வேண்டும். நெதர்லாந்து, ஸ்வீடன், ப்ரிட்டன் மூன்று அரசுகளும் உலக வங்கியும் ஆசியா ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுமே SCA2 அறிக்கையை எழுத ஆய்வுப் பணி மேற்கொள்வதற்காக நிதி உதவியும் பிற வசதிகளும் செய்துகொடுத்தவர்கள். அறிக்கை ‘நிதியாளர்கள்' - donors - என்று குறிப்பது சர்வதேசிய மூலதனச் சக்திகளை. உதாரணமாக 2002 - 2005 அமைதிப் பேச்சுவார்த்தைக் காலப்பகுதியில் ஜூன் 9, 2003 -ல் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஆறாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு - எல். டி. டி ஈ இருதரப்பிற்கும் மறுகட்டமைப்பு பணிகளுக்கான நிதியை வழங்குவது பற்றி உறுதி செய்வதாக இருந்தது. அதற்கான தயாரிப்புக் கூட்டத்தில் நார்வேயுடன், ஐரோப்பிய யூனியன், ஜப்பான், அமெரிக்கா ஆகியவையும் co - chairs ஆக இணைந்துகொண்டன. அதாகப்பட்டது மேற்சொன்ன சக்திகள் அனைத்தும் எல். டி. டி. ஈ யினரை அரசுக்கு இணையான ஒரு சக்தியாக அணுக முற்பட்டன. ஆனால், நமது 'விஞ்ஞானி முருகன்'களுக்கும் 'இலக்கிய ராஜூ'க்களுக்கும் இது கனவிலும் சாத்தியப்பட்டுவிடக்கூடாத அக்கிரமமாகப் படுகிறது!
சரி விஷயத்திற்குத் திரும்புவோம். SCA1 அறிக்கை, சர்வதேச நிதியாளர்கள், ‘வளர்ச்சி நிதி' வழங்குவதில் அரசை மட்டுமே மையப்படுத்தி அரசாக இல்லாத சக்திகளைப் (non - state actors) புறக்கணித்து வந்துள்ளமை மீது விமர்சனம் வைத்திருப்பதை தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார் அகிலன் கதிர்காமர். என்றாலும்கூட SCA2 அறிக்கையை எழுதியவர்களுக்கு அத்தகைய அரசாக இல்லாத சக்திகளை எப்படி அணுகுவது என்பது குறித்த தெளிவு இல்லை என்றும் கூறுகிறார். அவருடைய வார்த்தைகளிலேயே பார்ப்போம்:
"அரசாக இல்லாத சக்திகளை எப்படி அணுகுவது என்பது குறித்த புரிதல் SCA - க்களுக்கு இல்லை என்று நாம் வாதிடுவோம். இந்தத் தெளிவின்மையே SCA2 வை எழுதியவர்களை, ஒரு அரசை அணுகுவதிலிருந்து எந்த வித்தியாசமும் இன்றி எல். டி. டி. ஈ யினரை அணுகுவதற்கு முன்மொழிய வைத்திருக்கிறது. SCA க்கள் எல். டி. டி. ஈ யினரை ஒரு இராணுவ அமைப்பு என்பதாகவே அங்கீகரித்தாலும், அதை ஒரு அரசமைப்பு போன்ற கட்டமைப்பாக உருமாறும் தறுவாயில் இருப்பதாகவும் ஊகிக்கிறார்கள். எல். டி. டி. ஈ யினரின் உருமாறுதல் குறித்த இதுபோன்ற ஊகங்கள் தெளிவுபடுத்தப்படாத நிலையில், ஆபத்தானதாகவும் முடியக்கூடும்.... என்றபோதிலும் அறிக்கையை எழுதியவர்கள் "எல். டி. டி. ஈ யின் உருமாற்றம்" குறித்த கருதுகோளை முன்மொழிகின்றனர். இதற்கான வலுவான வாதமாக இருப்பது, புதிதாக எழும் அரசுகள் பாதுகாப்பை வாக்களித்து முன்னெடுக்கப்படும் ஏமாற்று உத்திகளே என்ற சார்ல்ஸ் டில்லி (Charles Tilly)யின் வாதமே. ஆரம்பகால நவீன ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கம் பற்றிய டில்லியின் கருதுகோளே பிரச்சினைக்குரியது. இந்நிலையில், அக்கருதுகோளை 21 ஆம் நூற்றாண்டு இலங்கையின் வட - கிழக்கிற்குப் பொருத்துவது மேலும் சங்கடத்தை உருவாக்குகிறது. SCA2 ஆசிரிய÷கள், அவர்கள் குறிப்பிடும் கட்டுரையின் தொடக்கத்திலேயே டில்லி விடுத்திருந்த எச்சரிக்கைக்காவது செவிசாய்த்திருக்க வேண்டும்:
"20 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் உலக நாடுகள், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவை பெரிதாக ஒத்திருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளின் கடந்த கால வரலாறுகளில் இருந்து மூன்றாம் உலக நாடுகளின் எதிர்காலத்தை எந்த வகையிலும் நாம் கணிக்கவியலாது." ... எல். டி. டி. ஈ யினரின் உருமாற்றத்தை ஊகிக்காமல், SCA2 வின் ஆசிரியர்களால் எல். டி. டி. ஈ யினரை அணுகுவதை எண்ணிப்பார்க்க இயலாத காரணத்தால், டில்லியின் கோட்பாட்டை பிரச்சினைக்குரிய வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். (அகிலன்: 1794) 6
இதில் ஒரு புள்ளியை தற்போதைக்கு குறித்துக் கொள்ள மட்டும் செய்வோம். அதாகப்பட்டது, விவாதத்திற்குரிய அறிக்கை எல். டி. டி. ஈ யினரை அரசாக உருமாறும் நிலையில் உள்ள ஒரு அமைப்பாக அங்கீகரித்து, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசை எந்த நிலையில் வைத்து அணுகவேண்டுமோ அதற்கு இணையாக வைத்து அணுக முற்பட்டிருக்கிறது. இதை 'வளர்ச்சி நிதி' வழங்குவதற்குத் தயாராக இருந்த சர்வதேச முகவர்களுக்கு பரிந்துரைக்கவும் செய்கிறது. இதையே அகிலன் கதிர்காமர் மறுக்கமுனைகிறார்.
இதன் பொருட்டு எந்த எல்லைகளுக்குச் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதை மட்டும் தற்போதைக்கு கவனிப்போம். முதலாவதாக, சார்ல்ஸ் டில்லி (Charles Tilly) என்பார் எழுதிய War Making and State Making என்ற கட்டுரையை (இக்கட்டுரையை scribd.com - லிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்) அடிப்படையாகக் கொண்டே அறிக்கையை எழுதியவர்கள் எல். டி. டி. ஈ யினரை "அரசாக உருமாறிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாக" அணுகுகிறார்கள் என்பது சரிதானென்றாலும், அகிலன் கதிர்காமர் குறிப்பிடுவதற்கு மாறாக, அக்கருதுகோளை சிறிது எச்சரிக்கையுடனேயே அவர்களும் அணுகியிருக்கிறார்கள். அறிக்கையிலிருந்து சுட்டிகாட்ட இது போதும்: "ஆரம்பகால அரசுகளின் உருவாக்கம் என்பது பாதுகாப்பை வாக்களித்து முன்னெடுக்கப்படும் ஏமாற்று உத்திகளே என்ற டில்லியின் (1985) விளக்கம் வட - கிழக்கில் உருவாகிக் கொண்டிருக்கும் அரசாளுகையின் தன்மையில் ஓரளவிற்கு ஒலிக்கவே செய்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரினாலும், அரசின் இருப்பு குறைந்திருக்கும் சூழ்நிலையிலும் வன்முறை வடிவிலான வரிவிதிப்பு, பணம் பறித்தல், பாதுகாப்பு வலைப்பின்னல்கள் அரசு அமைப்புகளோடு போட்டியிடுவதாக அல்லது அவற்றை பதிலீடு செய்பவையாக உருப்பெற்றிருக்கின்றன." [அழுத்தம் எனது] (SCA2: தொகுதி 1: பக்: 48) 7
ஓரளவிற்கு என்பதன் மீதான எனது அழுத்தம் மேலோட்டமானது என்றே கொள்வோம். அறிக்கை டில்லியை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அகிலன் கதிர்காமர் என்ன செய்திருக்கிறார்? சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையின் ஆரம்பத்தில் இருந்து இரண்டு வரிகளை மட்டும் உருவி எடுத்துத் தருகிறார். ஆனால், சார்ல்ஸ் டில்லி தொடர்ந்து என்ன முன்மொழிந்திருக்கிறார்? அதைப் பார்த்தால் விஷயம் தெளிவாகிவிடும்.
அகிலன் கதிர்காமர் உருவி எடுத்துத் தரும் வரிகளை அடுத்த வரிகள், சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையில் இவ்வாறு இருக்கிறது: "எனினும் ஐரோப்பிய அனுபவத்தை கவனமாக ஆய்வதும் நமக்குப் பலன் தருவதாக இருக்கும். ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கத்தில் வன்முறை நிறைந்த சுரண்டல் மிகப் பெரும் பங்காற்றியிருப்பதை அது நமக்குக் காட்டும். வன்முறை நிறைந்த சுரண்டலுக்கு எதிரான வெகுமக்கள் எழுச்சிகள் அதிகாரத்தைக் கைக்கொண்டவர்களது செயற்பாடுகளின் எல்லைகள், வெகுமக்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் ஆகியவற்றை எவ்வாறு நிர்ப்பந்தித்தன என்பதைக் காட்டும். இது, இன்றைய மூன்றாம் உலக நாடுகளோடு கடந்த காலத்தைய ஐரோப்பாவை ஒப்பிடும் தவற்றைச் செய்வதிலிருந்து நாம் விடுபட உதவியாக இருக்கும். இந்தத் தெளிவு, இன்றைய உலகம் சரியாக எந்த விதத்தில் வித்தியாசமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதையும், அதன் மூலம் நாம் எதை விளக்க வேண்டியிருக்கிறது என்பதையும் எளிதாக்கும். தற்சமயம் உலகம் முழுவதும் அச்சுறுத்திப் படர்ந்திருக்கும் இராணுவ அமைப்பாக்கத்தையும் நடவடிக்கைகளையும் விளக்கவும் இது உதவக்கூடும்." [அழுத்தம் எனது] (டில்லி: பக்: 169 - 170) 8
கூறியது கூறலாகவே பட்டாலும் சார்ல்ஸ் டில்லி மேலுள்ள பத்தியில் அழுத்தம் தர முனையும் கருத்துக்களைக் குறித்துக் கொள்வோம்:
1)அவரது ஆய்வு ஆரம்பகால ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கம் குறித்தது.
2)அதை ஆழ்ந்து ஆய்வு செய்வது, தற்காலத்தைய மூன்றாம் உலக நாடுகளின் அரசுருவாக்க அனுபவங்களை ஐரோப்பிய அனுபவத்தோடு வித்தியாசப்படுத்தி அணுக உதவும். (அதாகப்பட்ட்து, அகிலன் கதிர்காமர் அரைகுறையாக வெட்டிச் சிதைத்திருப்பதற்கு மாறாக, ஐரோப்பிய அனுபவம் குறித்த ஆய்வு, மூன்றாம் உலக நாடுகளின் அனுபவங்களை அவற்றின் தனித்துவத்தோடு அணுக உதவும் என்கிறார்.)
3)தற்காலத்தில், உலகெங்கும் பரவியிருக்கும் இராணுவமயமாதலைப் புரிந்து கொள்ளவும் ஐரோப்பிய அரசுருவாக்க அனுபவம் குறித்த ஆய்வு உதவும்.
ஐரோப்பிய நாடுகளின் அரச உருவாக்க அனுபவம் குறித்த சார்ல்ஸ் டில்லியின் ஆய்வுகளும் அவர் முன்மொழியும் கருதுகோள்களும் தனிச்சிறப்பானவை. நவீன அரசுகள், உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பளிப்பதாக தமது குடிமக்களுக்கு வாக்குறுதி அளித்து, போரை மைய்யமாக வைத்தே படிப்படியாக உருக்கொண்டன என்பதே தமது வரலாற்று ஆய்வுகளில் இருந்து அவர் முன்வைக்கும் மொழிதல். தமது குடிமக்களுக்கு ‘பாதுகாப்பு' குறித்த அச்சத்தை உருவாக்கி, அதிலிருந்து பாதுகாப்பளிப்பதாக வாக்குறுதியும் தந்து, போர்களை நடத்தி, அரசுகளை உருவாக்கியது என்பதே கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கையை ஒத்த ஒரு ஏமாற்று உத்தி என்றும் முன்மொழிகிறார். நவீன அரசுகளின் பொருளாதாரமே ‘போர்ப் பொருளாதாரம்' என்பதாகவும் விளக்குகிறார். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, படிப்படியாக நடந்தேறிய இந்நிகழ்வுகளின் போக்கில், ஐரோப்பிய வெகுமக்கள் இம்முயற்சிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தமது நலன்களையும் உரிமைகளையும் வென்றெடுத்ததன் மூலம் அவ்வரசுகளின் புலங்களை வரையறுத்தார்கள் என்ற முக்கிய அம்சத்தையும் தொடுகிறார்.
மூன்றாம் உலக நாடுகளின் தற்காலத்தைய அரசுருவாக்க அனுபவத்தில் விடுபடும் புள்ளி இதுதான். இதுவே, இன்றைய இராணுவ மயமாக்கலுக்கான காரணம் என்பதையும் கட்டுரையின் இறுதியில் மிகத் தெளிவாக விளக்கவும் அவர் தவறவில்லை. விரிவானதாக இருந்தாலும் சார்ல்ஸ் டில்லியின் வார்த்தைகளில் இதைப் பார்த்துவிடுவது நல்லது:
"ஐரோப்பிய அனுபவ அடிப்படையிலான அரசுருவாக்க நிகழ்வுப்போக்கு உலகின் பிற பாகங்களுக்கு நீட்டிக்கப்பட்டதானது, இறுக்கமான ஐரோப்பிய வடிவிலான அரசுகள் எழுவதில் முடிந்துவிடவில்லை. விரிவாக நோக்கினால், பிரதேச அளவிலான பெரும் கிழார்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவது, விவசாயிகள் மீதான வரிவிதிப்பு நடவடிக்கைகள் ஆகிய உள்முகமான போராட்டங்கள் ஐரோப்பிய அரசுகளின் அமைப்பாக்கத்தில் முக்கியமான சில அம்சங்களை உருவாக்கின: ஒப்பீட்டளவில் இராணுவ நலன்கள் பொதுமக்களின் நலன்களுக்கு கீழ்ப்பட்டிருப்பது, பொருளாதாரத்தைக் கண்காணிக்க விரிந்ததொரு அதிகார வர்க்கம், தவறிழைக்கப்பட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முறையீட்டு முறைகள், பாராளுமன்றம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மொத்தத்தில், பிற இடங்களில் அரசுருவாக்கம் வேறு வகையில் நிகழ்ந்தது. அந்த வித்தியாசத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சம் இராணுவ அமைப்பாக்கம். ஐரோப்பிய அரசுகள் வெகுமக்களுடனான தொடர்ந்த போராட்டத்தின் ஊடாகவும் மக்கட்பிரிவினரிடையே நிலவிய பல்வேறுபட்ட வர்க்கங்களில் சிலவற்றைத் தேர்வு செய்து பாதுகாப்பை வழங்கியதன் மூலமாகவும் தமது இராணுவ அமைப்பைக் கட்டமைத்தன. பாதுகாப்பின் மீதான ஒப்பந்தங்கள் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தி வழக்காடுமன்றங்கள், சட்டம் இயற்றும் சபைகள், நிதி ஒதுக்கீடு, சேவைகள், போர்த் திறன்கள் போன்ற விஷயங்களில் கடப்பாடுகொள்ளச் செய்தன.
காலனிய நீக்கம் மூலமாகவும், ஆதிக்கத்தில் இருந்த அரசுகள் பிரதேசங்களை மறுபகிர்வு செய்ததன் மூலமாகவும் சமீப காலங்களில் தோன்றிய அரசுகள் பெரும்பாலும் தமது இராணுவ அமைப்பாக்கத்தை, ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையிலான பரஸ்பர உள்முகமான கட்டுப்பாடுகள் இன்றி வெளியில் இருந்தே பெற்றுக் கொண்டுள்ளன. இராணுவ ஒத்துழைப்பு, பண்டங்கள் இவற்றில் ஒன்றுக்காக அல்லது இரண்டிற்குமாக வெளிநாட்டு அரசுகள் இராணுவ தளவாடங்களைத் தரத் தாயாராக இருக்கும் அளவில், புதிய அரசுகள் தமது வரையறைக்குட்பட்ட பகுதிகளுக்குள் அனைத்து பிற அமைப்புகளையும் மறைந்தொழியச் செய்யும், எக்கட்டுப்பாடுகளுமற்ற அதிகாரம் கொண்ட அமைப்புகள் உருவாக வழிகோலுகின்றன. வெளிநாட்டு அரசுகள் தமது எல்லைகளை உறுதி செய்கிற அளவில், இத்தகைய இராணுவ அமைப்புகளின் நிர்வாகிகள் அவற்றுள் அளவற்ற அதிகாரத்தைக் கைக்கொள்கின்றனர். இராணுவ அதிகாரத்தின் பலாபலன்கள் பெருமளவு அதிகரிக்கின்றன. இச்செல்வாக்கு இதன் வழியாக அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தூண்டுதல்களையும் அதிகரிக்கின்றது. ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கத்தில் போர் செய்தல் வகித்த மாபெரும் பங்கையும் மீறி, ஐரோப்பாவின் பழைய தேசிய அரசுகள், உலகம் முழுவதும் படர்ந்துள்ள அவற்றின் இன்றைய முகவர் அரசுகள் எதிர்கொண்டிருக்கும் தலைவிதியை - இராணுவ அமைப்பாக்கத்திற்கும் பிற அனைத்து அமைப்புகளுக்கும் இடையிலான மாபெரும் இடைவெளியை ஒருபோதும் அனுபவித்ததில்லை. சிவில் அரசாங்கத்தை உலகம் முழுக்க பரப்பியதற்காக, ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக ஐரோப்பியர்கள் பெருமைப்பட்டிருக்கலாம். நமது காலத்தில், அரசு உருவாக்கத்திற்கும் போர் செய்வதற்கும் இடையிலான உறவு - திட்டமிட்ட குற்றங்கள், இவற்றுக்கிடையிலான ஒற்றுமை ஒரு துன்பியல் நிகழ்வைப் போன்று பொருந்தி வருகின்றன. (டில்லி: பக்: 186) 9
இவ்வரிகளுடன் சார்ல்ஸ் டில்லியின் கட்டுரை முடிகிறது. இவற்றிலிருந்து நாம் என்ன புரிதல்களுக்கு வரலாம்?
மேலே மூன்றாவதாகப் பட்டியலிட்டதன் தொடர்ச்சியாக:
4)பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற, தெற்காசியப் பிராந்தியத்தில் தற்போதுள்ள மூன்றாம் உலக நாடுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அந்திமக்காலத்தில் அதன் நலன்கள் தொடர்ந்திருக்க, அது உருவாக்கிய நிர்வாகப் பிரிவினைகளை அவ்வாறே தொடர்ந்த அரசுகள். இவற்றுள் உருவான இராணுவ - சிவில் நிர்வாகப் பங்கீடு வெகுமக்களின் பங்களிப்புகள், இடையீடுகள் இன்றி அல்லது அவர்களது போராட்டங்களிலிருந்து வெகுதூரம் விலக்கி வைத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் கையளிக்கப்பட்டவை. இவற்றுள் இராணுவ நிதிஒதுக்கீடு (இந்தியா) தலையீடு (இலங்கை) ஆட்சி (பாகிஸ்தான்) அவற்றுள் எழுந்த வெகுமக்கள் எழுச்சி/பங்களிப்பின் தன்மையைப் பிரதிபலிப்பவை.
5)இந்தியத் துணைக்கண்டத்தைப் பொருத்த அளவில், ஒரு தனித்தேசிய இனமாக அடையாளம் காணமுடியாத, ஆனால் அனைத்திந்திய அளவில் ஆதிக்க சக்தியாக இருந்த/இருக்கும் பார்ப்பனர்களின் கையில் அதிகாரம் போய்ச் சேர்ந்தது. இதனால், இன்று வரையிலும் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனப் போராட்டங்களுக்கு ஒடுக்கும் தேசிய இனம் என்ற அளவில் ஒரு குவி மையம் இல்லாதிருக்கிறது. அதிகபட்சமாக, போராடும் தேசிய இனங்களுக்கு தில்லி அதிகார மையம் என்ற அருவமே முன்நின்று நிழலாடிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானைப் பொருத்த அளவில், சிந்தி தேசிய ஆதிக்கம் - இஸ்லாமிய மதவாதிகள் - இராணுவ அதிகாரம் என்று மையம் சிதறியிருக்கிறது. இவற்றுக்கெதிராக குவிமையம் சிதறிய நிலையில் பழங்குடியினரும் பிற தேசிய இனங்களும் இருக்கின்றனர். இலங்கையைப் பொருத்தவரையில், இவற்றிலிருந்து மாறுபட்டு, சிங்கள இனவெறியும் - அரசதிகாரமும் ஈழத்தமிழர்களுக்கு ஒடுக்கும் குவிமையமானது. இம்மூன்று நாடுகளிலும் அரசதிகாரத்தில் இருக்கும், ஐரோப்பிய அதிகார சக்திகளால் ‘ஆசி' வழங்கப்பட்ட சக்திகளுக்கு பண்டங்கள் - இராணுவத் தளவாட வணிகத்தின் வழி அதிகாரம் தொடர்ந்து உறுதியளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
6)இந்நிலையில், இலங்கையில் தன்மானத்துடன் வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திப் போராடத் துணிந்த ஈழத்தமிழ் மக்களுக்கு - இயக்கங்களுக்கு, இந்த உள்நாட்டு அரசுகளை உருவாக்கி, ஆயுத தளவாடங்கள் தந்து அவற்றின் இருப்பை உறுதி செய்துகொண்டிருக்கும் அமெரிக்க - ஐரோப்பிய சக்திகள் முற்றிலும் எதிரானவை. ஆனாலும், தமது வணிக நலன்கள் சீராகச் செயல்படவேண்டுமென்ற விருப்பில் இந்த மேற்கத்திய வல்லாதிக்க சக்திகள் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர முனைகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றன அல்லது வழிமொழிகின்றன, அவை தொடரத் துணை செய்கின்றன. எல். டி. டி. ஈ யினரை "அரசாக உருமாறும் போக்கில் உள்ள ஒரு அமைப்பாக" அங்கீகரிக்கின்றன.
7)எல். டி. டி. ஈ ஐப் போன்றதொரு அமைப்பு, அரசு உருவாக்கும் முயற்சியில் தனக்கான வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்படாத குறுகிய ஒரு நிலப்பரப்பில் - மக்கட்தொகுதியுள், மேற்கண்ட சார்ல்ஸ் டில்லியின் விளக்கத்தின்படி ஒரு கடுமையான இராணுவமயப்பட்ட அமைப்பாக உருப்பெறுவதும், அவ்வழிப்பட்ட நடைமுறைகளைக் கைக்கொள்வதும், ஈழத்திலும் புலம் பெயர் மக்களிடத்திலும் கட்டாய வரிவசூல், பணம் பறித்தல், இவற்றுக்கு தமிழ் மக்களின் ஒரே பாதுகாவலனாக, விடுதலையைப் உறுதி செய்யக்கூடிய அமைப்பாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்வதும் அரசுருவாக்க முயற்சிகளில் இருந்து விதிவிலக்கான நடவடிக்கைகள் அல்ல. அந்த அளவில் SCA2 அறிக்கை அவ்வியக்கத்தை ஆரம்பகால ஐரோப்பிய அரசு உருவாக்க நிகழ்வோடு ஓரளவிற்கு ஒத்திசைந்திருப்பதாகக் குறிப்பிடுவது சரியே. (இதே நடவடிக்கைகளை சிங்கள அரசுடன் கூட்டு வைத்துக்கொண்டு தமிழ் மக்களை வதைக்குட்படுத்தும் இயக்கங்கள் மேற்கொள்ளும்போது முற்றிலும் மாறுபட்ட விளைவுகளையும் அர்த்தங்களையும் கொள்கிறது).
8)இதே நடவடிக்கைகளை சிங்கள அரசும் - பிற எல்லா அரசுகளும் பல்வேறு அளவுகளில் - செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதற்கு அரசியல் அனுமதி, வெகுமக்களின் மௌனித்த மந்தை அங்கீகாரம், சர்வதேச அரசுகளின் அங்கீகாரம், சுருக்கமாகச் சொல்வதானால் அரசியல் சட்ட அங்கீகாரம் - legitimacy - இருக்கிறது. எல். டி. டி. ஈ யினருக்கு legitimacy உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் இல்லை. Legitimacy இருக்கிறதோ இல்லையோ எல்லா அரசுகளும், அரசு உருவாக்க முயற்சியில் இருக்கும் அமைப்புகளும் இதையே செய்கின்றன. இது ஒரு கள உண்மை (ground reality - in a very Machiavellian sense) என்பதாகப் பார்க்க வேண்டும். விமர்சனத்துடன் அணுகவும் வேண்டும்.
9)அப்படியல்லாமல், மேற்கத்திய அதிகார மையங்கள் வடிவமைத்துத் தந்திருக்கும் 'மனித உரிமைகள்' ‘குழந்தைப் போராளிகள்' ‘கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு' குறித்த மையநீரோட்ட கருத்தமைவுகள் வழி மட்டுமே நின்று விமர்சனங்கள் என்ற போர்வையில் தாக்குதல்களை வைப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாகாது (ஆப்பிரிக்கச் சூழலில், மஹ்மூத் மம்தானி என்ற கல்வியாளர் இதுதொடர்பாக முன்னெடுத்திருக்கும் விவாதங்களை இவற்றோடு ஒப்பிட்டும் பார்க்கலாம். உதாரணத்திற்கு இக்கட்டுரையை (http://pambazuka.org/en/category/features/55143) வாசித்துப் பார்க்கலாம்). இரண்டாம் உலகப் போருக்கு முன்வரை மேற்சொன்ன சொல்லாடல்கள் எதுவும் உலக அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், அதன் பின்னரே மேற்குலக அரசுகளாலும் அரசு சாரா நிறுவனங்களாலும் இத்தகைய சொல்லாடல்கள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இச்சொல்லாடல்கள் உருப்பெற்றதில் புதிய அரசுகளின் உருவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது ஒரு முக்கிய காரணியாக தொழிற்பட்டதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (இந்த விமர்சனங்களை இத்தகைய இயக்கங்கள் மீது வைக்கக்கூடாது என்பதாகப் பொருள்கொள்ள இக்குறிப்புகளை நோக்கத் தேவையில்லை. இவற்றைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை என்பதே இவற்றின் உட்கிடக்கை).
10) தமது வெகுமக்கள் தளம், சர்வதேச - பிராந்திய அரசுகளிடமிருந்தான அங்கீகரிப்பிற்கான (legitimacy) தளம் மிகவும் சுருங்கிய ஒரு நிலையில், எல். டி. டி. ஈ யினரைப் போன்ற ஒரு அமைப்பு ஒன்று தம்மை முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் சக்தியாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அது இயலாத நிலையில் மேற்குறித்தது போன்ற மக்கள் மீதான வன்முறை வழிகளைத் தவிர அதற்கு வேறு வழிகள் திறந்திருக்கவில்லை என்பதையும் நாம் காண வேண்டும். முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் சக்தியாக மாறுவதற்கான கதவுகள் சிங்கள அரசால் எப்போதும் அடைத்து வைக்கப்பட்டே இருந்திருக்கின்றன என்பதையும் எவரும் மறுத்துவிட முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்திலும்கூட சிங்கள அரசு செய்த சதிகளையும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் (diplomacy) புறந்தள்ளி இவ்விஷயங்களைக் காணமுடியாது.
11)இவை அனைத்தையும் (இன்னும் பலவற்றையும்) கவனத்தில் எடுத்துக் கொள்ளாத அல்லது எடுத்துக் கொள்ள மறுக்கிற, எல். டி. டி. ஈ போன்ற ஒரு அமைப்பினரை வசைபாடுவதை மட்டுமே தொழிலாக வைத்திருக்கும் தரப்பினர் ஒன்று வெற்று மார்க்சியப் புரட்சிகர வாய்ப்பாடுகளை (halo marxist rhetoric என்பேன்) ஒப்பிப்பவர்கள் அல்லது ஃபேஷனுக்கு ஏற்றபடி பின் - நவீனத்துவ, பின் - காலனிய, தலித்திய, சிறுபான்மை விடுதலை (post - modern, post - colonial, subaltern) முழக்கங்களை வைப்பவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இதல்லாமல் மேற்சொன்ன வாய்ப்பாடுகளைப் பாடிக்கொண்டே சிங்கள அரசுக்குத் துணைபோகும் சக்திகளும் இவர்களில் ஊடுவியிருக்கிறார்கள் என்பதும் நிதர்சனம்.
12)ஒரு ஒப்பீடாக, பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் செயல்பாடுகள், அது தன் சக போராளி இயக்கமான ஃபதா மீது கட்டவிழ்த்த வன்முறைகள், சர்வதேச அளவில் ஹமாஸ் இயக்கத்திற்கு அங்கீகாரம் (legitimacy) கிடைத்ததன் காரணங்கள் ஆகியவற்றை அதன் வித்தியாசங்களோடு பரிசீலித்துப் பார்க்கவும் செய்யலாம் (இத்தொடரில் அதுவும் வரும்). அத்தகைய வன்முறை நிறைந்த வழிப்பட்ட இயக்கமான ஹமாஸ் எதற்காகப் போராடுகிறதோ - சுதந்திர பாலஸ்தீனம் - அது கிடைத்தால்தான் அம்மக்களுக்கு விடிவு கிடைக்கும்10 என்கிறது 'தமிழ்நாட்டு மடம்'. ஆனால், ஈழத்திற்கு மட்டும் இது பொருந்தாது 'மடத் தலைமைக்கு' (இங்கு "மடையன்" அதாகப்பட்டது சமையல்காரன் என்ற பொருளில் அல்ல; "மடம்" - அதன் தலைவர் என்ற பொருளில்).
யோசிக்க ஒரு புள்ளியாக: பாலஸ்தீனம், இஸ்லாமிய உலகம் - மேற்குலகம் இரண்டும் சந்திக்கும் புலமாக இருப்பதுதான் அதற்குக் கிடைத்திருக்கும் சர்வதேசக் கவனமோ? மேற்குலகின் ஐரோப்பிய மையவாதத்திற்கான மற்றுமொரு தற்காலத்தைய உதாரணமோ? தெற்காசியப் பிராந்தியத்தில் - இந்து மகா சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வணிக வழியாக - பொருளாதார - இராணுவப் புலமாக மட்டுமே இருப்பதால்தான் என்னவோ ஈழம் சொல்லாடல் களத்தில் பாலஸ்தீனத்திற்கு இணையான கவனக்குவிப்பைப் பெறவில்லையோ?
தெளிவுகளைப் பெற, தெளிவுகளை செயல்வடிவாக்க விழைவோர் இவற்றுள் தம்மை ஆழ்த்திக் கொள்ளலாம். ‘இன்னைக்கு நான் தான் பெரிய புரச்சியாளன்' என்று பீற்றித் தம் மீது கவனம் குவிப்பதிலேயே முனைந்திருப்போர் இவற்றைப் புறக்கணித்து தம் 'தொழிலில்' கவனம் செலுத்துவது சாலச்சிறந்தது.
சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையில் இருந்து காட்டிய - அகிலன் கதிர்காமர் முழுமையாக காட்ட விரும்பாத - பகுதிகளில் இருந்து மேலும் பல துணிபுகளுக்கு நாம் வர முடியும். வரவேண்டும். அடுத்த கட்ட கேள்விகளுக்கு, நகர்வுகளுக்கு கற்பனைகளுக்கு, கருதுகோள்களுக்கு, செயல் உபாயங்களுக்குப் பல கதவுகளைத் திறந்துவிடுபவை அவருடைய ஆய்வுவழி முன்மொழிபுகள்.
ஆனால், நமது ‘விஞ்ஞானி முருகனுக்கு' - அகிலன் கதிர்காமர் - ஏற்படுவது பதைபதைப்பு மட்டுமே. எல். டி. டி. ஈ யிருக்கு சர்வதேச அங்கீகாரமா! சத்திய வழிப்படி (கடுதாசிப்படியும்) சாத்தியமாகக் கூடாது என்று ‘களத்தில்' இறங்குகிறார். எல். டி. டி. ஈ யினரை ‘அரசாக உருவாகும் போக்கில் உள்ள ஒரு அமைப்பாகக்' கருதக்கூடாது என்கிறார். அரசோடு சமமாக வைத்து அணுகக்கூடாது என்று வாதம் செய்ய இறங்கிவிடுகிறார். அதற்கான கோட்பாட்டு அடித்தளம் வழங்கச் சாத்தியம் உள்ள ஒரு கட்டுரையில் இருந்து, ஒரு வரி மட்டும் உருவி, அதை முன்மொழிந்தவர்கள் சார்ல்ஸ் டில்லியின் கருத்துகோளை - அவரே எச்சரித்ததற்கு மாறாக - மூன்றாம் உலகத்திற்குத் தவறாகப் பொருத்துகிறார்கள் என்கிறார்.
மேலே, சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையிலிருந்து பார்த்தவற்றிலிருந்தே அகிலன் கதிர்காமர் தமது விருப்பத்திற்கு, மனச்சாய்விற்கு, முன்முடிவிற்கு, வெறுப்பிற்கு ஏற்றார்போல டில்லியின் கருதுகோளை மறைப்பது மட்டுமல்லாமல் வலிந்து அவருக்கு எதிராகவே திரிக்கிறார் என்பது தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன்.
இதற்குப் பெயர் என்ன?
அப்பட்டமான intellectual dishonesty. அறிவுத்துறை அயோக்கியத்தனம். தனது முன் தீர்மானித்த கருத்துக்காக மற்றொருவரின் கருத்தைத் துண்டித்து - உருவி - ஒருவர் சொல்ல விழையும் கருத்துக்கு எதிரான முடிவுக்கு அவரது வார்த்தைகளிலிருந்தே வரவழைப்பது. இந்த அயோக்கியத்தனத்தைத் தான் அகிலன் கதிர்காமர் செய்திருக்கிறார். அதிலும் Economic and Political Weekly போன்ற இந்தியாவில் இருந்து வரும், சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரே கல்வியாளர் இதழாக அறியப்பட்ட ஒன்றில். எந்தக் 'கழுதை' இதையெல்லாம் cross - reference (SCA1, SCA2, போன்ற அறிக்கைகளை, Charles Tilly யின் கட்டுரையை) செய்து படிக்கப் போகிறது என்ற தைரியத்தில்!!!
இந்த அகிலன் கதிர்காமர்தான் மனித உரிமை மீறல்களைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர் என்றால், தலித் அரசியல், சிறுபான்மையினர் அரசியலுக்காக முன்நிற்பவர் என்றால், குமட்டிச் சிரிப்பதைத் தவிர வேறு வழி! இந்தக் கதிர்காமரோடு இணைந்து செயல்படுபவர்கள்தான் ராகவனும் சுசீந்திரனும் என்றால் வெறுத்தொதுக்குவதைத் தவிர வழி! இந்த ‘விஞ்ஞானி முருகன்' முன்மொழிவதைத்தான் நம்ம ‘இலக்கிய ராஜூ' ஒப்பிக்கிறார் என்றால் (சக்ஸஸ்! சக்ஸஸ்! புலிகள் தோத்தாச்சு!) கெக்கலித்துச் சிரிப்பதைத் தவிர வழி!
புலம் பெயர் அறிவு'சீவி'கள், இலக்கிய ராஜூக்களை அகிலன் கதிர்காமர் ஒன்றிணைக்கத் தொடங்கிய பின்னர் அல்லது ஒருங்கிணைத்த பின்னர், இவர்களது சொல்லாடல் களனில் முக்கியதொரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. எல். டி. டி. ஈ யினரின் ஒட்டுமொத்த அரசியலுமே துரோகிகள் X தியாகிகள் என்பதற்குள் அடங்கிவிடும் என்ற கூச்சல் அதீத அளவில் ஓங்கி ஒலித்ததையே குறிப்பிடுகிறேன். ஷோபா சக்தி, சுகன் இருவரும் இணைந்து செய்த ஆரம்பகாலத் தொகுப்பு முயற்சிகளில் இந்த ‘துரோகிப் பட்ட்த்திற்கு' எதிரான கூக்குரலை அரிதாகவே காணமுடியும். சற்றேறக்குறைய 2006 வாக்கில் (அதாகப்பட்டது கருணாவின் பிளவிற்குப் பிறகு - அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முறிந்தபிறகு) இந்தக் கூச்சல் அதிகரித்தது என்பது என் கணிப்பு. கிட்டத்தட்ட இதே காலகட்டத்திலேயே இவர்கள் அனைவரும் அகிலனின் ‘குடையின் கீழ்' இணைகின்றனர். இச்சொல்லாடலை, அகிலன் 2002 வாக்கில் இருந்தே வலுவாக முன்னெடுத்தவர். அது மட்டுமல்லாமல், இத்தரப்பினருக்கான 'கோட்பாட்டுத்தளத்தை' (அதன் இலட்சணத்தைத் தான் பார்த்தோம்) கல்வியாளர் வட்டங்களில் தீவிரமாக முன்னெடுத்தவர். அதன் பொருட்டே அவரது கோட்பாட்டு அடித்தளத்தை பரிசீலனை செய்ய இறங்கியதில் கிடைத்த ‘பொக்கிஷங்களையே' - அதன் மோசடி கருதியே இலக்காகக் கொண்டு இங்கு பகிர்ந்து கொள்ள நேரிட்டது.
ஆக, இப்பகுதி கொஞ்சம் நிதானித்து, ஊறப்போட்டு, வாசிக்க வேண்டியது. ஊறப்போடுவது என்பதும்தான் புளியும் நினைவுக்கு வருகிறது.
தமிழ்த் திருநாட்டில், கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத் தெருமுனைக் கடைகளில் பாக்கெட் தயிர் கிடைப்பதற்கு முன்பாக, middle class moronகளாக 'வளர்ந்து' விட்டவர்களின் வீடுகளில் refrigerator சகஜமான பொருளாகப் புழங்குவதற்கு முன்பாக, தயிர் ‘தொய்ப்பதற்கு' இரவில் பாலில் சிறு 'புழுக்கை' புளியைப் போட்டு வைப்பது வழக்கமாக இருந்தது சிலருக்காவது நினைவில் இருக்கலாம். இப்பகுதியை அது போல எடுத்துக் கொள்ளலாம்.
கொஞ்சம் யோசிக்க. ஊற வைக்க. பால் புளிக்க. தயிர் தளுக்க.
பின்குறிப்பு:
முதல் பகுதியில் அகிலன் கதிர்காமரை லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்த்தைப் பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர். தவறுக்கு வருந்துகிறேன். அவர் சீலன் கதிர்காமரின் மகனார் என்பதையும் பலர் சரியாகவே சுட்டிக் காட்டியிருந்தனர். சில நண்பர்கள் சீலன் கதிர்காமர் லக்ஷ்மன் கதிர்காமரின் first cousin ஆகையால், ஒருவகையில் பின்னவரின் மகன் முறையே என்றும் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
(தொடரும் ...)
அடிக்குறிபுகள்:
1 A Leaf, treeless
for Bertolt Brecht:
What times are these
when a conversation
is almost a crime
because it includes
so much made explicit?
Paul Celan: Selected Poems
Translated by Michael Hamburger and
Christopher Middleton, with an
Introduction be Michael Hamburger
Penguin, 1972.
2 In a section on political dimensions of the conflict, the SCA1 notes, “Although it is labelled an “ethnic war”, at the heart of the Sri Lankan crisis is a crisis of the state” (SCA1:30). This complete redefinition of the basis of conflict repudiates the widely held understanding that the root cause of the conflict is of an ethno-nationalist character.
3 "the SCA2 rehashes its critique of the government and applies it to the current ceasefire".
4 SCA1 conceptualized conflict in Sri Lanka as a crisis of the state rather than an "ethnic conflict." This is not to deny the ethnically patterned nature of conflict in Sri Lanka and the processes through which governance, development, and social relations have become increasingly ethnicized. But a focus on the nature of the state and the quality of governance in Sri Lanka generates insights about the inter-relations between different forms of militarized violence in the North-East and the South. Societal discontents are seldom sufficient to trigger widespread conflict until they penetrate the state itself.
5 Ethnicity and religion provide the ideological and symbolic repertoires that make violence possible. Yet, paradoxically, both the LTTE and JVP recruit youth from similar social backgrounds - low caste, rural, Swabasha educated - with similar sets of grievances.
6 We would argue that the SCAs themselves lack a framework to conceptualise an engagement with non-state actors, which leads the writers of the SCA2 to conceptualise engagement with the LTTE as being no different from engagement with a state-like organisation. While the SCAs recognise the LTTE as a military outfit, they assume that it is in the process of transforming into a state-like structure.15 Such assumptions about the transformation of the LTTE are not clearly substantiated, and may also be dangerous. Indeed, the SCAs acknowledge the LTTE’s military structure and the absence of an independent political wing, the thousands of ceasefire violations it has committed, the elimination of Tamil dissent and its attempt to control all civil society organisations. They nevertheless advance a “transformation of the LTTE” thesis, the strongest argument for which is Tilly’s claim that emerging states can be protection rackets. Tilly’s theory of the rise of early modern European states itself is controversial, but to transpose that theory onto the north and east of Sri Lanka in the 21st century is even more worrying. The authors of the SCA2 should have heeded Tilly’s warning in the very essay to which they refer: “The third world of the 20th century does not greatly resemble Europe of the 16th or 17th century. In no simple sense can we read the future of third world countries from the pasts of European countries”.16 The important question for those concerned about governance is whether a non-state actor may continue in a cycle of such abusive practices or even worse, transform into an even more totalitarian or fascist structure, if it is given legitimacy without accountability.17 Without assuming the transformation of the LTTE, the authors of the SCA2 are unable to conceptualise engagement with the LTTE, and for this they make problematic use of Tilly’s theory.
7 Tilly's (1985) characterization of early states as protection rackets, to some extent, resonates with the evolving dynamics of governance in the North-East. In the context of a limited state presence and an ongoing civil war, predatory networks for taxation, extortion, and protection competed with or even replaced the agencies of the state.
8 The Third World of the twentieth century does not greatly resemble Europe of the sixteenth or seventeenth century. In no simple sense can we read the future of Third World countries from the pasts of European countries (முன்னுள்ள இரு வரிகள் அகிலன் கதிர்காமர் உருவி எடுத்தவை. பின்வருபவை அதைத் தொடர்ந்து வரும் வரிகள்) Yet a thoughtful exploration of European experience will serve us well. It will show us that coercive exploitation played a large part in the creation of the European states. It will show us that popular resistance to (pg. 169) coercive exploitation forced would-be power holders to concede protection and constraints on their own action. It will therefore help us to eliminate faulty implicit comparisons between today's Third World and yesterday's Europe. That clarification will make it easier to understand exactly how today's world is different and what we therefore have to explain. It may even help us to explain the current looming presence of military organization and action throughout the world. (pg. 170)
9 The extension of the Europe-based state-making process to the rest of the world, however, did not result in the creation of states in the strict European image. Broadly speaking, internal struggles such as the checking of great regional lords and the imposition of taxation on peasant villages produced important organizational features of European states: the relative subordination of military power to civilian control, the extensive bureaucracy of fiscal surveillance, the representation of wronged interests via petition and parliament. On the whole, states elsewhere developed differently. The most telling feature of that difference appears in military organization. European states built up their military apparatuses through sustained struggles with their subject populations and by means of selective extension of protection to different classes within those popula- (pg. 185) tions. The agreements on protection constrained the rulers themselves, making them vulnerable to courts, to assemblies, to withdrawals of credit, services, and expertise. To a larger degree, states that have come into being recently through decolonization or through reallocations of territory by dominant states have acquired their military organization from outside, without the same internal forging of mutual constraints between rulers and ruled. To the extent that outside states continue to supply military goods and expertise in return for commodities, military alliance or both, the new states harbor powerful, unconstrained organisations that easily overshadow all other organizations within their territories. To the extent that outside states guarantee their boundaries, the managers of those military organisations exercise extraordinary power within them. The advantages of military power become enormous, the incentives to seize power over the state as a whole by means of that advantage very strong. Despite the great place that war making occupied in the making of European states, the old national states of Europe almost never experienced the great disproportion between military organization and all other forms of organization that seems the fate of client states throughout the contemporary world. A century ago, Europeans might have congratulated themselves on the spread of civil government throughout the world. In our own time, the analogy between war making and state making, on the one hand, and organized crime, on the other, is becoming tragically apt. (pg. 186)
10 பலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறி, முழுமையான இறையாண்மை உள்ள நாடுகள் உருவாகும் வரை அங்கே அமைதி சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்! (அ. மார்க்ஸ், ‘காஸா'வில் ஒரு கண்ணீர் நாடகம்? பக்: 137; “ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் - சுனாமி முதல் ஒபாமா வரை” புலம், 2009).
- வளர்மதி (http://vinaiaanathogai.blogspot.com)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
"சக்ஸஸ்! சக்ஸஸ்! புலிகள் தோத்தாச்சு!" - 'விஞ்ஞானி முருகன்களும், இலக்கிய ராஜூக்களும்'
- விவரங்கள்
- வளர்மதி
- பிரிவு: கட்டுரைகள்