ரஷ்யாவில் தெருக்கூட்டுகின்ற தொழிலாளர்களுக்கு மாதம் 250 ரூபாய் சம்பளம் கிடைக்கிறதென்று தோழர் ஆதித்தன் அங்கிருந்து எழுதியிருக்கிறார். இதுதான் அங்கு தரப்படும் மிகக் குறைந்த சம்பளமாம்! அதாவது 500 ரூபிள் (250 ரூபாய்!)

kuthoosi gurusamyஇதைப் படித்தவுடனே தென்னாட்டிலுள்ள பெரிய பெரிய போலீஸ் உத்யோகஸ்தர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் நாக்கில் நீர் ஊற்றெடுக்கும்!

நான் ராஷ்யா போகாமலிருப்பேனோ? - இந்தப்

பிறவியை வீணாகக் கழிப்பேனோ - (நான்)

- என்று நந்தனார் சிதம்பர nக்ஷத்திரத்தைப் பற்றிப் பாடியதுபோலப் பாடத் தொடங்கி விடுவார்கள்!

அப்பேர்ப்பட்டவர்களுக்கு நான் கூறும் திருமந்திரம் ஒன்றுண்டு! அதை ஜபித்தால் போதும்! எந்த மனக்குறையுமே இருக்காது. அதுதான், “ஜேய்ஹிந்த்!”

அங்கே கூட்டுகிறவருக்கு 250 ரூபாய்!

இங்கே கூட்டுவது மட்டுமல்ல; பெருக்குவது, கழிப்பது, வகுப்பது - ஆகிய நான்கு தொழில்களையும் செய்து, எழுத்துக்களையும் கற்பிக்கின்ற இறைவனுக்கு (“எழுத்தறிவித்தவன் இறைவனாகும்”) 25 ரூபாய் தான்! மூளை உழைப்புத் தொழிலாளியாகட்டும்! உடல் உழைப்புத் தொழிலாளி யாகட்டும்! மாதம் 250 ரூபாய்க்கு மேல் சர்க்காரிடமோ தனிப்பட்ட முதலாளிகளிடமோ சம்பளம் பெறுகின்றவர் லட்சத்துக்கு ஒருவர்தான் இருப்பார்கள்.

இதற்குக் காரணமென்னவென்று கேட்பீர்கள்!

“ஜெய் ஹிந்த்!”

இதற்காக இந்தியர்களில் யாரும் மனமுடைந்து போக வேண்டியதில்லை. கூட்டுகின்ற தொழில் கூடத் தெரியவிட்டாலும் சரி! எழுதப் படிக்கவே தெரியாவிட்டாலும் சரி! ஒரு சினிமா ஸ்டார் ஆகிவிட்டால் மாதம் 250 ரூபாய் அல்ல! நிமிஷத்துக்கு 250 ரூபாய் வரும்!

நிலப்புரபு - வெண்டைக்காய்ப் பிரபு! - என்றெல்லாம் அரசியல்வாதிகள் அடிக்கடி பொது மேடையில் பேசுகிறார்களே! எல்லாப் பிரபுக்களும் இந்த சினிமாக்கலைப் பிரபுக்குக்கீழே தான்! கோவில்களுக்குப் போனால் என்னென்ன தீமைகள் விளைகின்றனவோ, அவைகளைக் காட்டிலும் லட்சம் மடங்கு (சரியாக எண்ணிவிட்டுத்தான் சொல்கிறேன்!) அதிகமான தீமைகள் இந்தப் புதிய கலையினால் துளிர்விட்டிருக்கின்றன! சந்தேக மிருந்தால் சினிமாக் கலையினால் படிப்பைப் பாழாக்கிக் கொண்ட மாணவ-மாணவிகள் எத்தனை பேர் என்று நல்ல பெற்றோர்களைக் கேட்டுப் பாருங்கள், 100க்கு 75க்குக் குறையாது!

பரவாயில்லை! பணந்தானே முக்கியம்? நாய் விற்ற காசு குரைக்குமா? கள் விற்ற காசு மயக்கந்தருமா?

நிமிஷத்துக்கு 250 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஒரே துறையைக் கைவிடாதீர்கள்!

பெரிய ஹோட்டல்காரர், மாபெரும் வக்கீல்கள், உயர்ந்த ரகமான டாக்டர்கள், திருப்பதி வெங்கடாசலபதி - ஆகியோரைக் காட்டிலும் அதிகமான வருமானம் வரக் கூடிய தொழில் இந்தச் சினிமாக்கலை ஒன்று தான்! இதற்குக் கூட்டவோ, கழிக்கவோ, எழுதவோ, படிக்கவோ - எதுவும் தெரிய வேண்டியதில்லை. இதற்கு மேற்பட்ட விவரம் வேண்டியவர்கள் இந்தத் துறையில் நிபுணர்களாயிருப்பவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்க!

குத்தூசி குருசாமி (30-1-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It