kuthuoosi gurusamyபார்ப்பனரில் பைத்தியக்காரரேயில்லை என்பது என் நீண்ட நாள் முடிவு. “பார்ப்பனுக்குப் பைத்தியம் பிடித்தால் தெருச் சாமான்களைத் தூக்கித் தன் விட்டிற்குள் வீசுவான்,” என்று பெரியார் கூட அடிக்கடிச் சொல்வார்.

காவடி தூக்குகிற நம்மைப் “பக்தர்” என்பார்கள்; ஆனால் குடிகாரப் பார்ப்பான் கூட காவடி தூக்கி ஆட மாட்டான். தீ மிதிக்கின்ற நம்மை ‘அற்புத பக்தர், அடாடா!’ என்பார்கள். பித்துப் பிடித்த பார்ப்பான் கூடத் தீக்குழியில் இறங்க மாட்டான்!

அதாவது ரொம்ப கெட்டிக்காரர்கள்! அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆயிரத்துக்கு மேல் இருக்கின்றன!

இவ்வளவு புகழுக்குரிய ஆரியர் இனத்தில் சில சமயம் ஏதோ ஒரு சில மண்டுகளும் தோன்றி விடுகின்றன!

மதுரையில் ஒரு விசித்திரம்! சுப்பய்யர் என்ற பூதேவர் ஒரு குழந்தையின் பவுன் சங்கிலியைத் திருடி விட்டாராம். கையும் களவுமாகப் பிடித்து மதுரை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனார்களாம். செயின் மாயமாக மறைந்து விட்டதாம்! உடலைப் பரிசோதித்தார்களாம். எங்குமே அகப்படவில்லையாம்.

பிறகு அய்யர் பேச்சு ஏதோ ஒரு மாதிரி (வேதம் ஓதுகிற மாதிரியோ?) இருந்ததாம்! விடாக்கண்டர்களான போலீசார் அய்யர் வாயைத் திறக்கச் சொன்னார்களாம்! நாக்கின் அடியில் அந்தச் செயின் ஒளிந்து கொண்டிருந்ததாம்! இதைவிட; விசித்திரம் என்ன வென்றால் 7-8 மாதங்களுக்கு முன்பு இந்தத் திருட்டு நடைபெற்றதாம்.

இப்போதுதான் தீர்ப்புக் கூறியிருக்கிறார்கள். நன்நடத்தை ஜாமீன் கொடுக்கும்படியான நல்ல தீர்ப்பு! அதிகாரிகள் சுறுசுறுப்புக்கு என் ‘அப்ளாஸ்’!

சுப்பய்யர் நாக்கின் அடியில் செயின்! பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி! அவருடைய குலத்திலுதித்த பிராமணர் (பிரம்மா-பிராமணர்) நாக்கில் சங்கிலி! நாக்கு வேலையில் நடுநாயகமாயிருப்பவர்கள் போலும்!

இந்தச் சுப்பயர் சுத்த மண்டு என்பதே என் தீர்ப்பு! சுப்பய்யரே! இப்படிக் கூறுவதற்காத் தயவு செய்து மன்னியுங்கள்! யோசித்துப் பாருங்கள்! உங்கள் குலமென்ன! கோத்திரமென்ன! எதற்காக நீங்கள் திருட வேண்டும்? மற்ற ஜாதிக்காரர்தான் திருடி, உதைபட்டு, சிறைத் தண்டனை அடைகிறார்கள்! உங்களுக்குச் சுயராஜ்யத்தில் அந்த மாதிரித் தண்டனை கிடைக்கா தென்றாலுங்கூட நல்ல நடத்தை ஜாமீன் கூட எதற்காகத் தர வேண்டும்?

ஏதோ ஒரு கோவிலில் அர்ச்சகராக இருந்தால் போதுமே! தினம் ஒரு நகையாக, அல்லது நகையின் பகுதியாக, எடுத்துக் கொள்ளலாமே! மதுரையில் உம்மைப் பிடித்துக் கொடுத்த நாகம்மாள்மாதிரி எந்தச் சாமியோ, அம்மனோ பிடிக்குமா? உங்கள் மீது கை வைக்குமா? கண்ணைத் திறந்த தான் பார்க்குமா? கில்ட் நகையைப் போட் விட்டு அசல் தங்க நகையை எடுத்து வந்தால் கூடப் பேசாமலிருக்குமே! வாயைத் திறக்காதே! எல்லாக் கடவுள்களும் அம்மன்களும் உங்களுக்கு வேண்டியவைகள்தானே!

இப்படியெல்லாம் பணஞ் சேர்த்தவர்களின் பேரன்களும் கொள்ளுப் பேரன்களும்தானே இன்றைக்குக் கலெக்டர்களாகவும், ஜட்ஜ்களாகவும், டாக்டர்களாகவும் இருக்கிறார்கள்? உங்களுக்கு இதுகூடவா தெரியாது?

அர்ச்சகர் வேலை ஒருக்கால் பிடிக்கவில்லை யென்றாலும் ஒரு சாண் தர்ப்பைக்கட்டும் ஒரு கிழிந்த பஞ்சாங்கமும் எடுத்துக்கொண்டு, நாலுவீதி சுற்றினால் எத்தனையோ முட்டாள்கள் சாமி, சாமி, என்று காலில் விழுந்த கும்பிட்டு காணிக்கை தருவார்களே!

ஏனய்யா, பிள்ளையின் செயினைப் போய்த் திருடினீர்? இனியாவது புத்தியாகப் பிழையும்! பூனைக்குப் பிறந்தும் எலியாகி விட்டீரே ரொம்ப ரொம்ப வெட்கக்கேடு, உம் குலத்துக்கு!

குத்தூசி குருசாமி (10-6-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It