“அப்பா! அப்பா! னேக்கு பயமா யிருக்கே! என்ன செய்வேன்? அய்யய்யோ! தலை சுத்தறதே! மயக்கமா வர்றதே! அய்யய்யோ! என்ன செய்வேன்?” என்று கதறிக் கொண்டே ஈர வேட்டியுடன் ஓடிவந்தான், இருபது வயதுள்ள கிட்டு.

kuthoosi gurusamy 300“என்னடா, கிட்டு? ஏண்டா இப்படி அலறிண்டு வர்றே? விஷயத்தை சொல்லித் தொலையேண்டா?” என்கிறார், கிட்டுவின் தகப்பனார் கிராதக சாஸ்திரி!

“அப்பா! நானும் நமசிவாயமும் காவேரியாற்றிலே நீந்தி விளையாடீண்டிருந்தோம். ஐயையோ! சொல்லவே பயமாயிருக்கே! விளையாடினோமா? மரத்திலிருந்து தண்ணீரில் குதித்துக் குதித்து நீந்தினோம். ஒரு தடவை இரண்டு பேரும் மரத்தின்மேல் நின்றபடியே குதிக்கப் போகும்போது நான் நமசிவாயத்தை விளையாட்டுக்காகத் தண்ணீரில் தள்ளினேன். அவன் தண்ணீரில் நேரே விழாமல் குறுக்கே நீட்டிண்டிருந்த கிளையில் அடிபட்டு விழுந்துட்டான். நீந்த முடியாமல் தத்தளித்து ஆற்றோடே போயிட்டான்! அப்பா! ஆற்றோடே போயிட்டானே! யாரோ போலீஸ்காரன்கூடப் பார்த்துண்டிருந்தானே! அய்யய்யோ! பயமாயிருக்கே!”

“ஏண்டா அசடு! இதற்காகவா இப்படிக் கதறுகிறே? விணா கூச்சல் போடாதே! ஊராருக்குத் தெரிந்துடப் போறது! நான் பார்த்துக்கிறேன். நீ உள்ளே போய் உணர்ந்த சோமனை உடுத்தீண்டு, பேசாமே போர்த்தீண்டு படுத்துக்கோ! போ!” என்றார், சாஸ்திரி, சிறிது கூடப் பதட்டமோ, பயமோ இல்லாமல்.

“எப்படியப்பா பார்த்திக்குவேள்? நமசிவாயத்து அப்பன் நடேச கவுண்டனுக்குத் தெரிந்தால் என்னை அறைஞ்சு கொண்ணுடுவானே!”

“டேய்! பைத்தியமே, போடா! அவன் தான் ஒரு வாரமா தன் பிள்ளை ஜாதகத்தைப் பார்க்கணுமின்னு என்னிடம் அலைஞ்சிண்டிருக்கானே! இந்த ஜாதகத்தை எடுத்து, “ஜலத்தினால் கண்டம் உண்டு; மரணம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.” என்று எழுதி வைச்சூட மாட்டேனா? எனக்காடா தெரியாது? நீ வாயை மூடீண்டு இரு. நீ தள்ளினதா யாரிடத்திலும் சொல்லவே சொல்லாதே! "அவன் என்ன புண்ணியம் பண்ணினானோ! 18 வயதிலேயே அவனைக் காவேரியம்மாள் அழைச்சிண்டாள்! நல்ல சாவு! யாருக்குக் கொடுத்து வைக்கும்?" என்று பிரசாரம் செய்துட்டாப் போறது? எனக்காடா தெரியாது? நாம் சொல்றது எதுவானாலும் இந்தச் சூத்திரப் பசங்கள் நம்பி விடுவான்களடா?” என்றார் சாஸ்திரியார்.

“அது எப்படி அப்பா நம்புவா? அவாளெல்லாம் படிக்கலையா? புத்தியில்லையா?”

“படிச்சுப் பாழாப் போனான்கள்! இதோ பார்! நந்தனார் என்ற பறையன் கோயிலுக்குள் நுழைந்தானே! நம்பளவா அவனை என்ன பண்ணினா தெரியுமோன்னோ? அது போகட்டும். இராமலிங்கம் பிள்ளையிண்ணு ஒருத்தன் வேதம் புராணம் எல்லாத்தையும் தூஷிச்சிண்டு இருந்தானே! அவனை என்னா பண்ணினா தெரியுமோன்னோ?”

“யாரும் ஒண்ணும் பண்ணலையே! ஜோதிலேண்ணா கலந்துட்டா?”

“ஜோதிலேயா? நன்னா சொன்னே! நீயே அப்படி நம்பீண்டிருந்தா அவன்கள் ஏன் நம்ப மாட்டான்கள்? நமசிவாயத்தைக் காவேரியம்மாள் அழைச்சிண்ட மாதிரித்தான்!”

“அப்படீன்னா, யாரானும் கொன்னாபிட்டா?”

“யார் கொல்வா? நீயேதான் சொல்லேன்?”

“ஓஹோ! னேக்குப் புரிஞ்சுது - ஆமா! இப்போ உள்ளவா கூடவா இந்த மாதிரிச் சொன்ன நம்புவா?”

“இப்போ உள்ளவாளா? போடா போ! அசடு! 21 -ந் தேதி சு. மி. பத்திரிகையைப் பாரு!

“திருமைலாடி ஆலயத்தில் மகாத்மாவின் ஈமச்சடங்கு ஞாபகார்த்தமாக விசேஷ ஆராதனை 16-2-48 இரவில் நடந்து முடிந்தது. உடனே காந்திமகானின் திரு உருவம் அங்கே சகல ஜோதியுடன் ஜ்வலித்தது. அடுத்த நாளும் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்."

இந்த மாதிரி பார்டர் கட்டி போட்டிருக்கா, நம்பளவா நியூஸ் பேப்பர்லே! இதை நம்பளவா தவிர மற்ற எல்லா முட்டாள்களும் நம்பத்தானே போரான்கள்? எதற்காக இந்த மாதிரிச் சரடு திரிக்கிறா தெரியுமோன்னோ?”

தெரியலையே! மகாத்மா அவதார புருஷருன்னு ருசுப்படுத்தத் தானே!”

“போடா மண்டு! அவதார புருஷராம்! அதெல்லாம் ஒண்ணு மில்லை, புருஷராவது! புடலங்காயாவது! அவரை ஜோதியில் கலக்குமாறு செய்தவன் யார் தெரியுமோன்னோ?”

“ஆமாம், தெரியும்! ஒரு மராத்தி ஹிந்து!”

“போடா முட்டாள்! நீ ஒருத்தன் என் வயிற்றிலே பிள்ளையாய்ப் பிறந்தியே!..... சரி! அப்படியே சொல்லீண்டிரு. அதுவும் நல்லதுதான்.... அந்தக் காரியத்தை மறைக்கிறதுக்குத்தான் நம்பளவா ஜோதின்னும், கழுகு மலையிலே மயில் வந்து சாமி தரிசனம் செய்ததுண்ணும் ஏதாவது இப்படிக் கற்பனை செய்துண்டே இருப்பது, தெரியுமா? அது கிடக்கட்டும். நமசிவாயத்தைக் காவேரியம்மா அழைச்சிட்டதோடே போகட்டும். நீ இனிமேல் ஆற்றுக்கு ஸ்நானம் செய்யப் போகவே வேண்டாம்! ஆத்திலேயே ஸ்நானம் செய்! சரி! கொஞ்ச நாளைக்கு இந்த ஆர்.எஸ்.எஸ்.ஸிலே சேராமே இருந்த தொலை! அப்புறம் பார்த்துக்கலாம்! இப்போ இருக்கிற இந்தச் சூடு தணிஞ்சுட்டா, அப்புறம் எல்லாம் நம்ம ராஜ்யந்தான்! பயப்படாதே!”

- குத்தூசி குருசாமி (23-02-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It