ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு' தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல் வரும், பசுந்
தோகை மயில் வரும் அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியெ‎ன்
ஆவியில் வந்து கலந்ததுவே
'இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் -
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'

Pin It