காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள் இதுகாறும் பல துறையில் வியாபார முறைகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். "சுயராஜ்யம் கொடுக்கிறோம் பணம் கொடுங்கள்" என்பார் ஒருவேளை, "ஜெயிலுக்கும் போனோம், "ஓட்"டுக்கொடுங்கள்" என்பார் வேறொருவேளை, "தடியடி பட்டோம், சட்டசபைக்கு எங்களை அனுப்புங்கள்" என்பார் மற்றொரு வேளை. இப்படித் தாங்கள் செய்ததாகக் கூறப்பட்ட "தியாகங்களை" வியாபாரப் பண்டங்களாக்கி அரசியலில் தொழில் புரியும் அறிவாளர்களைப்பற்றி நாம் அதிகம் கூறவேண்டியதில்லை. நாளாக ஆக, காங்கிரஸ் கட்சியினருடைய யோக்கியதை பொதுஜனங்களுக்கு நன்றாகப் புலப்பட்டுக்கொண்டு வருகிறது. எனினும், சுயநலக் கூட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள் செய்து கொண்டு வரும் செய்கைகள் பலவற்றைப் பொதுஜனங்கள் அறிவார்கள்.
உதாரணமாக, காங்கிரஸ் தலைவர் வரவேற்பிற்காக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து, காசியில் எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கும் தோழர் துர்க்காபாய் அம்மாளுடைய செலவிற்காகப் பணம் அனுப்பப்பட்டிருக்கிறதென்று நம்பத்தக்க இடத்திலிருந்து தெரியவருகிறது. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரால் பொதுஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதிகள் எக்கதியாகின்றன, எங்கு போகின்றன என்ற விஷயம் கீழ்க்கண்ட விவரங்களால் விளங்கும். அவர்கள் தம்முடைய சுற்றுப் பிரயாணங்களில் சிலவிடங்களில் காங்கிரஸ் "கமிட்டி" காரியாலயத்தில் தங்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட சில நண்பர்களில்லத்தில் உண்டு தம்முடைய பிரசாரத்தைச் செய்தபோதிலும், கணக்குப் புத்தகங்களில் தங்குமிடத்திற்கும், உணவிற்கும் செலவாயிற்று என்று தவறாகச் சில தொகைகளை எழுதி யிருக்கிறார்களென்றால், அவர்களைப் பற்றி என்னென்று சொல்வது?
ஒரு காங்கிரஸ் பிரமுகர் தன்னுடைய "கம்பெனி"யின் வேலையாகச் சென்றபோது காங்கரஸ் பிரசாரமும் செய்ததனால் தனக்கு நேர்ந்த செலவு விவரங்கள் முழுவதையும் "கம்பெனி" கணக்கில் எழுதி, அதே சிலவு விவரங்களை காங்கிரஸ் கணக்கிலும் எழுதியிருக்கிறாரென்றாலும் அவருடைய தியாக புத்தியை எப்படி மெச்சிக் கொள்ளுவது? தாழ்த்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டு ஒரு சங்கக் காரியாலயத்தின் வருகைக்காக மாதம் ஐம்பது ரூபாய் வசூலிக்கப்பட்ட நிதியிலிருந்து பதினொன்று மாதங்கள் வரைக்கும் கொடுக்கப்பட்டு வந்து, அது பதினொன்று மாதங்களுக்கும் குறிப்பிட்ட கட்டடத்தில் அச் சங்க காரியாலயம் இல்லை யென்றால் யாரை நோவது? இவற்றையெல்லாம் அறிந்து பொதுஜனங்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.
("விடுதலை"
குடி அரசு மறு பிரசுரம் 13.10.1935)