தோழர்களே! இப்போது நம்நாட்டில் பொது மக்களிடையில் அரசியலின் பேரால் வேகமான பிரசாரங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் மூலம் பெரியதொரு கிளர்ச்சியை உண்டு பண்ணி அதன் மூலம் பாமர மக்களை வசப்படுத்தி அரசியலில் ஆதிக்கம் பெற வேண்டும் என்பதையே, முக்கிய நோக்கமாகக் கொண்டு செய்யப்படுகின்றது. என்றாலும், அக்கிளர்ச்சி பெரிதும், வகுப்பு முறையில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு பிரிவை உண்டாக்கி அதன் மூலம் வகுப்பு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற உள் எண்ணத்தின் பேரிலும்தான் இன்று கிளர்ச்சிகள் நடக்கின்றன. அவ்வளவுடன் மாத்திரமே நடப்பதாகவும் எண்ணுவதற்கில்லை.
இந்துக்கள், முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என்பது போன்ற மதப் பிரிவுகளின் பேரிலும், மத ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற உள் லட்சியத்தின் பேரிலும் சில மதஸ்தர்கள், தாங்கள் எண்ணிக்கையில் குறைவாய் இருப்பதால் அதிக எண்ணிக்கை மக்களைக் கொண்ட மதக்காரர்களால் அடக்கி ஆளாமல் இருக்க வேண்டும் என்கின்ற லட்சியத்தின் பேரிலும் கிளர்ச்சிகள் செய்யப்படுகின்றன.
இந்த மாதிரி கிளர்ச்சி இன்று மாத்திரமல்லாமல், சரித்திரகாலம் தொட்டே மதப்போர் வகுப்பு போர்கள் என்பதாக நடந்து வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி இல்லாமல் பெயரளவில் அரசியல் கிளர்ச்சி அரசியல் போர் என்று சொல்லப்படுகின்றது.
எப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சியும், போரும் மதம், வகுப்பு, ஜாதி ஆகியவைகளில் எதையாவது ஒன்றின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடந்திருக்கின்றன நடைபெறுகின்றன என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, மற்றபடி எல்லாப் பொது ஜனங்களின் நன்மையைப் பொருத்தும், விடுதலையைப் பொருத்தும் நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை.
சாதாரணமாக நம்நாட்டில் சிறப்பாக தென்னாட்டில் நடக்கும் கிளர்ச்சி அரசியல் கிளர்ச்சி என்பதாக முன் சொன்னேன். ஆனால் அது இன்று மாத்திரமல்லாமல் சரித்திர காலம் முதல் நடந்து வருகிறது என்றும் சொன்னேன். அதற்கு ஆதாரம் வேண்டுமென்றால் வேதம், ஸ்மிருதி, புராணம் முதலியவைகளைப் பாருங்கள். வேதம் வேதகாலம் பெரும்பாலும் வெள்ளையர், கருப்பர் சண்டையாகவே இருந்து வந்து இருக்கிறது என்பதை வேதம் அறிந்த யாரும் உணரலாம்.
வேத காலம்
வேதத்தில் கடவுளையோ, அல்லது ஆரியர் தலைவரான இந்திரனையோ பிரார்த்திக்கும் பிரார்த்தனைகள் மந்திரங்கள் எல்லாம் கருப்பு நிறக்காரர்கள் தங்களுக்கு கொடுமைகள் செய்கின்றார்கள் என்றும், தங்கள் சுகபோகங் களுக்கு பங்காளிகளாய் இருக்கிறார்கள் என்றும், தங்கள் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறார்கள் என்றும், ஆதலால் கருப்பர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்றும், ஒழிக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாகவே காணலாம்.
மற்றும் ஸ்மிருதி என்பவைகளைப் பார்த்தாலும் பார்ப்பனர்கள் என்பவர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் உயர்வும், சௌகரியமும் அல்லாதவர்கள் பார்ப்பனர் அல்லது கருப்பு நிறக்காரர்கள் என்பவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் இழிவும் கொடுமையும், அதை ஆதரிக்கும் அரசர்களைத் தவிர மற்றவர்களை அவர்கள் அழித்து வந்திருக்கிறதும் காணலாம்.
புராண காலம்
அதுபோலவே புராணங்களைப் பார்த்தாலும் எங்கும் பூசுரர்கள் அசுரர்கள் சண்டையும், தேவர்கள் ராக்ஷதர்கள் சண்டையும், பூ தேவர்கள் அரக்கர்கள் சண்டையுமாக மலிந்து கிடப்பதைப் பார்க்கலாம்.
அதே சண்டைகள் கிளர்ச்சிகள் ஆகியவைகள் தான் இன்று தேசபக்தர்கள், தேசத் துரோகிகள் என்னும் பேரால் நடைபெறுகின்றன.
அந்தக் காலத்தில் புராணங்களில் நடந்ததாகச் சொல்லப்படும் சூட்சிகள் எல்லாம் இந்தக் காலத்திலும் இக்கிளர்ச்சிக்கு நடைபெறுகின்றன.
இந்திர பட்டம் பெறவோ, வேறு மேன்மை பெறவோ (பார்ப்பனர்களைத் தவிர) வேறு யார் தவம் (பாடுபட்டாலும்) செய்தாலும் அவர்களை எவ்வளவு சூழ்ச்சிகள் இழிவான வஞ்சனையான காரியங்கள் செய்திருக் கிறார்கள் என்பதைப் பார்த்தால், இன்றைய காரியங்களைப் பார்த்து யாரும் ஆச்சரியப்பட முடியாது.
தபம் செய்பவர்கள் தவத்தைக் கெடுக்க அனேக தடவைகளில் பெண்டுகளை விட்டே மயக்கிக் கெடுத்திருக்கிறார்கள்.
ராவணனுடைய தவத்தின் மகிமையை எவ்வளவு சூட்சி செய்து கெடுத்திருக்கிறார்கள்.
இரணியன் தபசின் மகிமையை எவ்வளவு சூழ்ச்சி செய்து கெடுத்து இருக்கிறார்கள். பத்மாசூரன் தவத்தின் மகிமையை எப்படிப்பட்ட தந்திரத்தால் கெடுத்திருக்கிறார்கள். இது போலவே புராணங்கள் முழுவதும் ஏறக்குறைய மகா மேன்மையான தவம் செய்து பெற்ற வலிமையை தந்திரங்களாலும், சூழ்ச்சிகளாலும், வஞ்சகத்தாலும் கெடுத்து, அவர்களை ஒழித்ததாகவே தான் காணலாம்.
இவைகள் எல்லாம் உண்மை அல்ல என்றும், பொய்க் கதைகள் என்றும் மிகைப்படுத்தி மாற்றிக் கூறப்பட்டவை என்றும் சொல்லப்படுவது உண்மை ஆனாலும் கூட பார்ப்பனரல்லாதாரை எப்படி நடத்த வேண்டும், எப்படி வஞ்சிக்க வேண்டும், எப்படி அவர்களை தலை எடுக்கவொட்டாதபடி அழுத்தி வைக்க வேண்டும், தலை எடுத்தவர்களை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அந்த முறையில் தான் இன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி அரசியலின் பேரால் தேசபக்தி தேசாபிமானம் என்பதின் பேரால் நடைபெறுகிறது.
தேசாபிமானம்
இந்திய சரித்திரங்களினாலும் சரி, புராணத்தினாலும் சரி முன் காலத்தில் தேசாபிமானம் என்கின்ற பேச்சோ, தேசபக்தி என்கின்ற பேச்சோ, கிளர்ச்சியோ இருந்து வந்ததாக காண்பதற்கில்லை. தேச பக்தி, தேசாபிமானம் என்கின்ற வார்த்தை மேல்நாட்டிலிருந்து வந்ததாகும்.
நம் நாட்டில் ராஜாக்களுக்கும் ராஜாக்களுக்குமாத்தான் சண்டைகள் நடந்திருக்கிறது. அது விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் ஒரு வகுப்பாரை ஒழிக்கவுமே அல்லாமல், தேச நன்மைக்கு என்று தேசபக்தி பூண்டு அரசர்களுடன், பொது ஜனங்கள் போர் புரிந்ததாக சரித்திரம் இல்லை.
மேல்நாட்டு தேசாபிமானத்துக்கும், தேசபக்திக்கும் நாம் இங்கு இன்று கற்பிக்கிற அருத்தம் இருந்ததில்லை. அங்குள்ள தேசாபிமானத்தாலும், தேச பக்தியாலும் எந்த தேச மக்களுக்கும் விடுதலை ஏற்பட்டதாக ஆதாரமோ அனுபவமோ இருந்ததும் இல்லை.
அனேக பெரியார்கள் தேசாபிமானம் என்பதை மிக இழிவாக குறை கூறி இருக்கிறார்கள். தேசாபிமானத்தின் யோக்கியதையும், பலனும் அப்படியேதான் மிக தந்திரமுடையதாகவும், சூழ்ச்சி உடையதாகவும் ஏமாற்றும் குணம் உடையதாகவுந்தான் இருந்து வருகின்றது.
பாரத தேசம்
சாதாரணமாக இந்த நாட்டை பாரத தேசம் என்று சொல்லுவதுகூட யோக்கியமான பெயராகாது. பரதன் என்கின்றவன் ஆண்டதால் பாரத தேசம் என்று சொல்லப்படுமானால் அதற்கு முன் ஆண்டவர்கள் பெயர் ஏன் சொல்லக் கூடாது? அதற்கு பின் ஆண்டவர்கள் ஆளுகின்றவர்கள் பெயர்கள் என்ன கதியாவது? எந்த தேசத்துக்காவது எப்பவோ ஒரு காலத்தில் ஆண்டவன் பெயர் சொல்லப்படுகிறதா? இந்தப் பெயர் ஆரிய ஆதிக்கத்தைக் குறிப்பதே தவிர வேறில்லை. அக்காலத்திய அரசர்களை நாம் மதிப்பதாகவோ, பாராட்டுவதாகவோ சொல்லுவதும், பழங்கால அரசர்கள் ஆட்சி போன்ற அரசியல் முறை வேண்டுமென்று சொல்லுவதும் பெரிதும், சுயமரியாதை அற்றதும் முட்டாள்தனமானதுமான காரியமாகும்.
பழைய ஆட்சி
பழங்கால அரசர்களின் ராஜா விசாரணை, ராஜ நீதி என்பவை என்ன என்பதற்கு அக்கால ஆதாரங்கள் சரித்திரங்கள் அல்லாமல், அவர்களைப் போல் நடிக்கும் நாடகங்களைப் பார்த்தாலும் நன்றாய் விளங்கும். உதாரணமாக, ஒரு அரசன் ராஜா சபைக்கு வந்த உடன் மந்திரியை என்ன கேட்கின்றான்.
"பிராமணர்களுக்கு மான்யம், அன்ன சத்திரம், வேதபாட சாலை, (இலவசப் படிப்பு) ஆகியவைகள் தாராளமாய் வழங்கி இருக்கிறாயா, அவர்கள் மனம் நோகாமல் சந்தோஷத்தோடு வாழ உதவி செய்து வருகிறாயா" என்று கேட்டுவிட்டு, "மற்ற வகுப்பார் பிராமணர்களுக்கு அடங்கி அவரவர்களுக்கு இட்ட கருமப்படி நடந்து வருகிறார்களா" என்றுதான் கேள்க்கின்றானே ஒழிய, வேறு என்ன? அதாவது வர்ணாச்சிரம ராஜ்யபாரம் தானே இதுவரை நடந்து வந்திருக்கிறதே ஒழிய வேறு என்ன?
ராமராஜ்ஜியம்
ஆகவே இன்று இந்நாட்டில் நடக்கும் கிளர்ச்சியை வெரும் அரசியல் கிளர்ச்சி என்பதாகவே வைத்துக் கொண்டாலும்கூட எவ்வித ஆட்சி முறையை விரும்பும் அரசியல் கிளர்ச்சி என்று பார்ப்போமானால், அது பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் பலப்படுத்தவும் நடக்கும் வருணாச்சிரம ஆட்சி அல்லது, ராமராஜ்ஜிய தர்ம ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதை இன்றைய அரசியல் கிளர்ச்சியின் சர்வாதிகாரத் தலைவராய் இருந்த காந்தியார் பல தடவை சொல்லி இருக்கிறார்கள். மற்றும், இன்றைய அரசியல் கிளர்ச்சிக்கு உதாரணங்கள் பார்ப்பனீய ஆதிக்கப் புராணங்களிலிருந்தே கையாளப்படுகின்றன. யாராவது அவ்வாட்சி முறையைப் பார்ப்பன ஆதிக்க முறையாய் இருக்குமோ என்று சந்தேகப்பட்டால் அவர்களை இன்று ராட்சதர்கள், அசுரர்கள், அரக்கர்கள் என்றுதான் கூறப்படுகின்றது.
இவைகளைக் கண்ட எவன்தான் இன்றைய அரசியல் கிளர்ச்சி பார்ப்பன ஆதிக்கத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிக் கிளர்ச்சியல்ல வென்று சொல்ல முடியும்?
முஸ்லீம்கள் கண் விழிப்பு
அன்றியும் இன்றையக் கிளர்ச்சி இந்துமத ஆதிக்கக் கிளர்ச்சியாய் இருக்கக்கூடும் என்று கருதி சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பாகவே, முஸ்லீம்கள் பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும், அதற்காக அரசியல் பதவிகளில் தங்கள் பிரதிநிதித்துவத்துக்கு வரையன ஏற்பட்டு விடவேண்டும் என்றும் கிளர்ச்சி செய்து ஒரு திட்டத்தையும் அளவையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அதுபோலவே கிருஸ்தவர்களும், ஆங்கிலேயர் களும், ஆங்கிலோ இந்தியர்களும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஆட்சேபனை ஏன்?
அதைப் பின்பற்றியே, இந்தியர்களில் மற்றொரு சார்பார்களாகிய இந்துக்கள் என்பவர்களிலும் உள்ள மூன்று பிரிவார்களில் அதாவது மேல் ஜாதி, நடு ஜாதி, கீழ் ஜாதி என்று சொல்லப்படுபவர்களுக்குள்ளும், அரசியலிலும், சமூக இயலிலும் பிற்பட்டு தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப் பட்டு கல்வியிலும், செல்வத்திலும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும், குறைவான, கீழான நிலையில் இருப்பவர்கள் மேல் நிலையில் இருப்பவர் களிடம் சந்தேகமோ, பயமோ கொண்டு தங்கள் நிலையைப் பந்தோபஸ்த்து செய்து கொள்ள வேண்டுமானால், மேல் நிலையில் மேல் ஜாதிக்காரர்கள் என்னும் பேரால் அரசியல் உரிமை என்பவற்றை ஏகபோகமாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் மறுக்க வேண்டும்? கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், ஆங்கிலேயர்கள், ஆங்கிலேய இந்தியர்கள் என்கின்ற வகுப்பார்கள் விஷயத்தில் சர்க்கார் பிரவேசமில்லாமல் தாங்களாகவே ஒப்புக் கொண்ட பார்ப்பனர்கள் தங்களால் கீழ் ஜாதி, கடை ஜாதி என்று சொல்லப்பட்டு உண்மையாகவே தாழ்மையாய் இழிவாய் நடத்தப்படுகின்றவர்களுக்கு சமமாய் நடத்து கிறோம் என்று ஏன் பந்தோபஸ்த்து அளிக்கக் கூடாது.
"அந்தப்படி இவர்களுக்கு எல்லாம் பந்தோபஸ்த்து அளிப்பதானால், பிரிட்டிஷ் ராஜாங்கமே மேலானதென்றும் தங்களுக்கு சுயராஜ்ஜியம்கூட வேண்டாம்" என்றும் ஏன் சொல்ல வேண்டும். பயப்படுகிறவனுக்கும் நம்பாதவனுக்கும் கஷ்டப்பட்டு இழிநிலையில் இருக்கிறவனுக்கும் சமாதானம் சொல்லவில்லையானால், எப்படி எல்லா மக்களுடையவும் கூட்டுறவைப் பெற முடியும். ஏதோ இரண்டொரு மோசிடி, போக்கற்றவன், வயிற்றுச் சோற்றுக் கூலிகளை புராண காலத்து சூழ்ச்சிகள் செய்து வசப்படுத்திக் கொண்டு அனுமார்களாக ஆக்கி, மற்றவர்கள் மீது ஏவி விடுவதாலும், தேசத்துரோகிகள், ராட்சதர்கள், அசுரர்கள், அடிமைகள், குலாம்கள் என்று வைவதினாலும், வைய்யச் செய்வதினாலும் சந்தேகமும், பயமும், துவேஷமும், வெறுப்பும் பலப்படுமா? குறையுமா? என்றும் கேட்கின்றேன்.
பார்ப்பன ஆட்சி இனி முடியாது
இன்னமும் ஒரு ஆயிரம் கூலிகளை வசப்படுத்தி, உசுப்படுத்தி விட்டாலும், பயமும், துவேஷமும் வளர்ந்து எதிர்ப்பு அதிகமாகி அதிகத் தொல்லையைத்தான் விளைவிக்குமே தவிர ஒரு நாளும் இக்கிளர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை என்பதோடு, பிரிட்டிஷ் ராஜாங்கத்தையே சுயராஜ்ஜியத்தைவிட 1000 பங்கு மேலான ராஜ்ஜியம் என்று சொல்லும் படியாக ஆக்கத்தான் முடியும் என்பதோடு, பார்ப்பனர்கள் கோரும் தங்கள் ஆதிக்க ஆட்சி கனவாக ஆகிவிடும்.
சமீபகாலத்தில் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலின் வெற்றியானது பார்ப்பனர்களுக்கு பெருத்த ஆணவத்தைக் கொடுத்துவிட்டதோடு, துணிகரமாக காசைக் கொடுத்து காலிகளை ஏவிவிட்டு, ஈனத்தனமாக வையும்படி செய்து வருகிறார்கள். இதன் பின் விளைவு அவர்களுக்கு தற்கொலையாகத்தான் ஏற்படப் போகின்றது.
அசம்பளி வெற்றி
இந்திய சட்டசபைத் தேர்தல் வெற்றியானது, பார்ப்பனர்களின் யோக்கியதையையும் அவர்களது ஆயுதமாகிய காங்கிரசின் யோக்கிய தையையும் பாமர மக்கள் அறிவதற்கு ஒரு கண்ணாடி போல் இன்று நமக்கு பயன்பட்டு வருகிறது. அதோடு நம் மக்களைத் தட்டி எழுப்பி ஊக்கத்தையும், உணர்ச்சியையும் உண்டாக்கப் பயன்பட்டிருக்கிறது.
இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஜெயித்து இருந்தால்கூட இந்த நன்மைகள் இவ்வளவு நன்மைகள் நமக்கு ஏற்பட்டிருக்க முடியாது.
காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் இந்திய சட்டசபைக்குப் போய் என்ன செய்து விட்டார்கள்? அவர்களின் வாக்குத் தத்தங்கள் என்ன ஆயிற்று? அவர்களுக்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு வெற்றி ஏற்பட்டால் இன்ன இன்னது செய்வார்கள் என்றும் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்குக் கொடுக்க ஓட்டு கேட்டு வாங்கிக் கொடுத்த தலைவர்கள், காந்தியார், ராஜகோபலாச்சாரியார்களான மகாத்மாக்களும், குட்டி மகாத்மாக்களும் இன்று ஏன் ஓடி ஒளிந்து கொண்டார்கள்? தங்களுக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி ஏன் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்?
இவர்கள் ஓடி ஒளிந்து கொண்டதாலேயே இவர்களது வாக்குத் தத்தங்கள் மறக்கப்பட்டு விடுமா? நாளை இந்த யோக்கியர்கள் பொது ஜனங்கள் முன்னால் வந்து ஓட்டுக் கேட்க யோக்கியதை உண்டா? இந்த நிலைமை எல்லாம் நாம் இந்திய சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டதாலேயே ஏற்பட்டதென்று மகிழ்ச்சியடைய வேண்டும்.
மந்திரிகள் மீது குறை
நிற்க, இன்று பார்ப்பனக் கிளர்ச்சியில், நம் மந்திரிகளை குறை கூறி மக்களுக்கு அவர்களிடத்தில் வெறுப்பை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். மந்திரிகள் செய்த குற்றம் என்ன என்றாவது அவர்கள் நடந்து கொண்ட நாணயக் குறைவான காரியம் இன்னது என்றாவது இதுவரை எவரும் மெய்ப்பித்தது கிடையாது. பாமர மக்கள் ஏமாறும்படி விஷமமாய் பிரசாரம் செய்வது என்பதைத் தவிர காரியத்தில் நிரூபிக்க யோக்கியதை இல்லாமலே இருந்து வருகிறார்கள்.
இதுவரை மந்திரிகள் மீது சொல்லப்படும் குறைகள் எல்லாம் மந்திரி களுக்கு சம்மந்தமில்லாத காரியங்களைப் பற்றியே சொல்லி வருகிறார்கள்.
போலீசார் தொண்டர்களை அடித்தது பற்றியும், சர்க்காரார் பூமிகளுக்கு வரிகளைக் குறைக்கவில்லை என்றும், ஜெயில் கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை என்றும், உத்தியோகத்தில் நத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ராஜீனாமா கொடுக்கவில்லை என்றும், முட்டாள்தனமாக உளறு கிறார்களே தவிர, நியாயமானதும் உண்மையானதுமான ஒரு குற்றத்தையும் எடுத்துச் சொல்ல யோக்கியதை இல்லாமலே இருந்து வருகிறார்கள்.
போலீசார் தொண்டர்களை அடித்ததும், வரி குறைத்ததும், கைதிகளுக்கு மோர் கொடுப்பதும் மந்திரிகள் இலாக்காவைச் சேர்ந்த காரியங்கள் அல்ல என்பது அரசியலில் ஏ.பி. கூட படிக்காத மூடனுக்கும் தெரிந்திருக்கும். அப்படி இருக்க இவ்விஷயங்களுக்காக மந்திரிகள் மீது பழி சுமத்துவது என்பது "அரசியல் என்பதும், தேசாபிமானம், தேசபக்தி என்பதும், வடிகட்டின அயோக்கியத்தனம் என்று சொன்ன ஞானிகளின் மொழியை பரமார்த்த சத்தியம் என்பதாக ருஜுப்பிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
மந்திரிகள் ராஜினாமா செய்யவில்லை
நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றியும், பார்ப்பனரல்லாதார் மந்திரிகளைப் பற்றியும் கூறி வரும் விஷமத்தனமான புகார்களுக்கும், பழிக்கும் அவ்வப்போது ஜஸ்டிஸ், விடுதலை, குடிஅரசு, நகர தூதன் முதலிய பத்திரிகைகள் மறுப்புகள் கூறி வந்திருப்பதுடன், இனியும் அந்தப்படி விஷமப் பிரசாரங்கள் செய்யாமல் இருக்கத்தக்க புத்தி வரும்படி எழுதியும், பேசியும் வந்திருக்கிறோம். அப்படி இருந்தும், பாமர மக்களின் முட்டாள்தனத்தை அனுகூலமாய்க் கொண்டு இனியும் முன்போலவே செய்து வருகிறார்கள்.
சமீபகாலத்தில் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள், "ஜஸ்டிஸ் மந்திரிகள் சில காரியங்கள் செய்வதை அவை தங்கள் அதிகாரத்தில் அடங்கினதல்ல என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் ஏன் ராஜீனாமா செய்யவில்லை" என்று கேட்டிருக்கிறார்.
காங்கிரஸ்காரர் ஜாமீன் கொடுப்பார்களா?
மந்திரிகள் ராஜினாமா செய்துவிட்டால் பிறகு அந்த மந்திரி பதவி காலியாக இருக்கும் என்பதற்கு சிலர் ஜாமீன் கொடுப்பார்களா? அல்லது தங்களைப் பொருத்த வரையிலாவது அந்த மந்திரி பதவிகளை ஏற்பதில்லை என்பதற்கு ஆவது தக்க ஜாமீன் கொடுப்பார்களா? இவர்களது அரசியல் சர்வாதிகாரியான காந்தியாராவது, இவர்களது ஜாதி தலைவரான சங்கராச்சாரியார்களாவது உத்திரவாதம் கொடுப்பார்களா? ஒன்று மில்லாமல் "நீங்கள் ராஜினாமா கொடுங்கள், நாங்கள் போய் குந்திக்கொள்ளுகிறோம்" என்றால் யார்தான் ராஜினாமா கொடுப்பார்கள்.
தோழர் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது வால்களாக மற்றும் சுமார் 10 தோழர்களும் தென்னாட்டில் இருந்து இந்திய சட்டசபைக்கு போய் பல தடவை தோல்வி அடைந்து, பல தடவை அவமானமடைந்தார்களே அதாவது 43 தடவை சர்க்காரை தோல்வி அடைய செய்து 43 தீர்மானங்களில் வெற்றி பெற்று அந்த 43 வெற்றியையும் வில்லிங்டன் துரைமகனார் குப்பைத் தொட்டியில் போட்டு காரி உமிழ்ந்து விட்டாரே அதற்கு ஆக எந்த தேசிய வீரராவது, தேச பக்தராவது அவமானமடைந்து ராஜினாமா செய்தார்களா? "ஒரு காசுக்குப் பயனில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாமல் இருப்பதும், நாய், கழுதைகள் கூட போய் உட்காருவதற்கு தகுதி அற்றதுமான ஸ்தானம்" என்று இவர்களாலேயே சொல்லப்பட்ட பதவியில் போய் உட்கார்ந்து கொண்டு எவ்வளவோ பாடுபட்டுச் செய்த 3லீ டஜன் தீர்மானங்களை சர்க்கார் அலட்சியம் செய்த பிறகுகூட அந்த ஸ்தானத்தைவிட மானமோ ரோஷமோ ஏற்படவில்லையானால், தாங்கள் கருதுகிறபடி ஒரு அளவுக்காவது நன்மை செய்யக் கூடிய பதவியை தங்கள் அதிகாரத்தில் இல்லாத காரியங்கள் நடைபெறவில்லை என்பதற்காக யார் ராஜினாமா செய்யக் கூடும். லார்டு வில்லிங்டன் துரை அவர்களை பார்க்க வேண்டுமென்று தோழர் காந்தியார் பல தடவை கெஞ்சியும் "வாசற்படியை மிதிக்க அனுமதி தரமாட்டேன் போ" என்று சொன்னவரின் தலைமையில் உள்ள ஸ்தானத்துக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்து கொண்டு போய் ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு மேலும் 43 அவமானங்கள் ஏற்பட்ட பிறகும் அதை விட்டுவிட்டு வர முடியவில்லையானால், யார் மானமில்லாமல் ஒட்டிக் கொண்டு இருக்கிறவர்கள். இவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளைப் பற்றி பேச சிறிதளவாவது யோக்கியதை உண்டா என்று கேட்கிறேன்.
மந்திரிகள் அதிகச் சம்பளம் வாங்குவதாக வயிற்றெரிச்சல் படுவதோடு தாங்கள் அந்த வேலைகளை N 500 ரூ. சம்பளம் பெற்றுக் கொண்டு பார்ப்பதாகச் சொல்லுகிறார்கள். இவர்களின் முன் பின் யோக்கியதையை அறிந்த எவரும் இவர்களது வாய் வார்த்தையை எப்படி நம்ப முடியும்.
ஆதலால் இவர்கள் மந்திரி பதவி அடைந்தால் 500 ரூ. மாத்திரம் எடுத்துக் கொண்டு பாக்கியைச் சர்க்காருக்கே விட்டுவிடுகிறோம் என்பதாக கூறி அந்த மேல்கண்ட தொகையாகிய மீதி ரூ.483354 பையை ஐந்து வருஷத்துக்கு கணக்குப் போட்டு இம்பீரியல் பாங்கியிலோ, இந்தியன் பாங்கியிலோ டிப்பாசிட்டு கட்ட சம்மதிக்கிறார்களா என்று கேட்கின்றேன்.
முன்பு ஒரு தடவை இப்படித்தான் பிரயாணப்படி கூட வாங்குவ தில்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் சிலர் பொய்ப் பிரயாணப்படி கொடுத்து சிக்கிக் கொண்டு விழித்தது பலருக்குத் தெரிந்த விஷயம்.
சமீபகாலத்தில் இந்தத் தடவைகூட பகுதி பிரயாணப்படியாவது காங்கிரஸ் நிதிக்கு காங்கிரஸ் தலைவர் கேட்டதற்கு முடியாது என்று சொன்னதும் பலருக்குத் தெரியும். இந்த நிலையில் உள்ள சத்திய கீர்த்திகள் தாராளப் பிரபுக்கள் தான் ஜஸ்டிஸ் கட்சியார் வாங்கும் சம்பளத்தில் பொறாமைப் படுகிறார்கள். காங்கிரசுக்காரர்கள் பொது ஜனங்களை ஏமாற்றி சுயராஜ்ஜியம், கதர், தீண்டாமை விலக்கு, கிராமப்புனருத்தாரணம், தலைவர்களுக்குப் பண முடிப்பு என்னும் பேரால் பொது மக்கள் பணம் கொள்ளை அடித்து நன்றாய் அனுபவிக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் அப்படி இல்லாமல் தங்களுக்குக் கிடைக்கும் சட்டப்படியான சம்பளம் பெற்று கட்சி நலனுக்கு ஒரு அளவைச் செலவு செய்கிறார்கள். இதைப் பற்றி ஏன் பேச வேண்டும்?
காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரியானால் அவ்வளவு பணம் வாங்குவதில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
"சர்க்கார் சாப்பிடுவதை நாங்கள் கதருக்கு உபயோகப்படுத்தினால் என்ன, தீண்டாமை விலக்குக்கு உபயோகப்படுத்தினால் என்ன?" என்று சொல்லி வாயில் போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன ஜவாப்தாரித்தனம் இருக்கிறது.
அவர்கள் மந்திரியானால் 500 ரூபாயுக்கு மேல் எடுத்துக் கொள்ளுவ தில்லை என்பது உறுதியானால் இப்பொழுதே மீதி பணம் எவ்வளவு ஏற்படுமோ அதை பாங்கியில் போட்டு விடுவார்களா? அல்லது காந்தியாரோ, சங்கராச்சாரியாரோ இந்தப் பார்ப்பனர்களுக்காக ஜாமீன் கொடுப்பார்களா?
வீணாக வாய் இனிக்கப் பேசி மக்களை ஏமாற்றுவதைவிட வேறு என்ன இருக்கிறது.
ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டிகளைக் கைப்பற்றி பரிசுத்தப்படுத்த வேண்டுமாம். அதற்காக பழைய ஆட்களைத்தான் காங்கிரசின் பேரால் நிற்கும்படி கெஞ்சுகிறார்களே ஒழிய புதிய ஆள்கள் ஒருவரையும் பிடிப்பதாக காணவில்லை.
இன்று பதவியில் இருக்கும் ஆட்கள் காங்கிரசில் கையெழுத்துப் போட்டு விட்டால் மாத்திரம் யோக்கியர்களாகி விடுவார்களா? ஆகவே பல துறையிலும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு தகுந்த அடிமைகள் வேண்டும் என்று தேடுவதைத் தவிர காரியத்தில் அவர்களுக்கு எவ்வித கொள்கையும் இல்லை.
காங்கிரஸ்காரர்கள் என்றாலும் சரி, பார்ப்பனர்கள் என்றாலும் சரி எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியை மந்திரி பதவியில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதே அவர்களது கொள்கை.
மந்திரி பதவி போகப் போவதில்லை என்றாலும், மந்திரி பதவி போய்விட்டது என்றே வைத்துக் கொள்ளுவோம். இதனால் என்ன முழுகிப் போகும். முன்பு ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சிக்கு மந்திரி பதவி கிடைக்க வில்லை. அதனால் கட்சி இரட்டிப்பு பலம் பெற்றதுடன் காங்கிரசினால் ராஜகோபாலாச்சாரியாரால் விஜயராகாவாச்சாரியரால் பிடித்து வைத்த தேசீய மந்திரிகள் ஜஸ்டிஸ் கட்சிக்கு தாசானுதாசர்களாய் இருந்தார்களே ஒழிய பார்ப்பன கூலிகளாக ஒரு நாளும் இருக்கவில்லை.
பிறகு அவர்களை ஒழிக்க காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் பத்திரிகை களுமே பாடுபட வேண்டியதாயிற்று. சென்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தான் மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ராஜகோபாலாச்சாரியார், இந்துப் பத்திரிகை எல்லாம் கூப்பாடு போட்டன.
அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டால், ஜஸ்டிஸ் கட்சி பலப்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். சுயமரியாதைக்காரர்கள் சர்வாதிகாரிகளாக இடமும் ஏற்படும். ஆதலால் நமது கடமையைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேனே ஒழிய ஜஸ்டிஸ் கட்சி தோற்று விட்டால் உலகம் முழுகிப் போகும் என்றோ, பார்ப்பனரல்லாதார் அழிந்து விடுவார்கள் என்றோ நான் பயப்படவில்லை.
தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்கள் மீதும் நான் குற்றம் சொல்ல வரவில்லை. அவர்களைக் குற்றம் சொல்லுவதும் குற்றமாகும்.
ஏனெனில் அவர்கள் உண்மையான சமூக பக்தர்கள். தங்கள் சமூகத்தை எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. அதற்காக அவர்களிடம் எனக்கு மதிப்பு உண்டு.
தங்கள் சமூகத்துக்காக உழைக்கும் மற்ற பார்ப்பனர்களையும் பாராட்டுகிறேன்.
ஆனால் அவர்களுடன் கூடிக் கொண்டு தங்கள் வயிற்றுப் பிழைப்புக் காகவும் தங்கள் தனிப்பட்ட சுயநலத்துக்காகவும் குறைக்கும் பார்ப்பனரல்லாத கடைகெட்ட கூலிகளிடம் தான் எனக்கு ஆத்திரமும், வெட்கமும் ஏற்படு கின்றது. நமது சமூகம் இவ்வளவு கேவலமான இழிவான நிலைமைக்கு போகக்கூடிய மக்களை பெற்றுவிட்டதே என்று மனம் வருந்துகிறது.
எப்படி ஆனாலும் யோக்கியமான முறையில் நடக்கும் எதிர் பிரசாரத்தை நான் வரவேற்கிறேன். வீண் காலித்தனம், கூலித்தனமுமான பிரசாரம் பொதுவாகவே ஜனசமூக யோக்கியதையையே கெடுத்துவரும். யார் வந்து என்ன அபிப்பிராயம் சொன்னாலும் பொருமையாய் யோக்கியமாய் கேளுங்கள். கூட்டத்தில் குழப்பம், காலித்தனம் என்பவைகளை கையாடாதீர்கள். சொல்வதை பொருமையோடு கேட்க வேண்டும். விஷயங்கள் கேட்ட பின்பு ஆராய்ந்து பார்க்க வேண்டும். சரியானது என்று பட்டதை ஒப்புக் கொண்டு மற்றதை தள்ளிவிட வேண்டும்.
(குறிப்பு: 31.08.1935 இல் திருத்துரைப்பூண்டி, 01.09.1935 இல் திருச்சி (டவுன் ஹால்), 03.09.1935 இல் திண்டுக்கல் (டவுன் ஹால்) முதலிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்.
குடி அரசு சொற்பொழிவு 08.09.1935)