திரு. பட்டேலின் யோக்கியதை
கடந்த மூன்று வருட காலமாக நமது பார்ப்பனர்கள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட்டு வந்த தமிழ் மாகாணத் தேசிய மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி வேதாரண்யம் என்னும் ஓர் கிராமத்தில் கூடிக் கலைந்ததாக பேர் செய்து விளம்பரமும் செய்தாய்விட்டது.
ஆனாலும் அம்மகாநாடு நடைபெற்றதன் யோக்கியதைதான் என்ன என்று பார்ப்போமானால், சுருங்கக் கூறுமிடத்து பார்ப்பனரல்லாதார் பணத்தையே இரண்டு பார்ப்பனத் தலைவர்கள் செலவு செய்து, பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இருவரும் படை திரட்டிக் கொண்டு போய் ஒருவருக்கொருவர் தங்கள் சாமர்த்தியத்தை வெளியாக்கிக் கொண்டதுதான் வேதாரண்ய மகாநாட்டின் தத்துவம் என்று சொல்ல வேண்டும்.
அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள் காங்கிரசின் பேரால் பொதுப் பணத்தை அள்ளிக் கொடுத்துச் சேர்த்து வைத்திருக்கும் படைகளான திருவாளர்கள் பழனியாண்டி பண்டாரம், சாமிநாத செட்டியார், அண்ணாமலை பிள்ளை, சத்தியமூர்த்தி, கிருஷ்ண சாமிப் பாவலர் முதலிய தேசீயத் தொண்டர்களாகிய திரு. அய்யங்கார் படைகள் ஒருபுறமும்; கதரின் பேரால் பார்ப்பனரல்லாதார் கொடுத்தப் பொதுப் பணத்தையே பார்ப்பனர்களுக்கே அள்ளிக் கொடுத்து சேர்த்து வைத்திருக்கும் படைகளான திருவாளர்கள் சந்தானம், என்.எஸ்.வரதாச்சாரி முதலிய ‘கதர் தொண்டர்’களான திரு.சி. ராஜ கோபாலாச்சாரியாரின் படைகள் ஒருபுறமும் இருந்து போர் செய்து முடிவில் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் வெற்றி மாலை சூடி இப்போதிக்கு விஜயமும் செய்து வருகிறார்.
திரு. அய்யங்காரை விட திரு. ஆச்சாரியார் சூழ்ச்சியில் தேர்ந்தவர் என்பதை அய்யங்கார் தெரிந்திருந்தும் தனது பணத்திமிறினாலும் பேராசையினாலும் ஆணவம் கொண்டு வேதாரண்யத்தில் ஆச்சாரியாரிடம் நல்ல அடிபட்டுத் திரும்பிவிட்டார்.
இது ஒரு புறமிருக்க, தமிழ்நாடு என்னும் 14 ஜில்லாக்களின் பேரால் மூன்று வருடம் பொறுத்துக் கூட்டப்பட்ட இந்த மாகாண மகாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதிநிதிகள் எத்துணை பேர்கள் என்று பார்ப்போமானால் சுமார் நூறு பேர்களேதான் இருக்கக்கூடும் என்று தெரிகின்றது.
அதாவது பூரண சுயேச்சை தீர்மானம் சம்பந்தமாய் இரண்டு கட்சியிலும் தீவிரப் பிரசாரம் செய்து சேகரித்த ஓட்டுக்களின் எண்ணிக்கை 240 என்பதாக மித்திரன் பத்திரிகையில் தெரிய வருகின்றது.
இதில் வரவேற்புக் கழக அங்கத்தினர்களும் ஓட்டு கொடுத்திருப் பதாயும், அவர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டதாயும் கண்டிருக்கின்றது.
இதில் வரவேற்புக் கழகத்தினர் நூறு கனவான்களுக்கு மேலாகவே இருந்திருக்கிறார்கள். பிறகு தஞ்சை ஜில்லா பிரதிநிதிகள் என்று சுமார் 50, 60 கனவான்களுக்கு மேலாகவே அந்த ஜில்லாக்காரர்கள் இருந்திருக்கிறார்கள்.
இவைபோக. வெளி ஜில்லாக்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் சுமார் 70, 80 பேர்களே இருந்திருக்கக் கூடும் என்பதாக நன்கறியலாகும். அந்த 70, 80 பேர்களும் அய்யங்கார் தன் பணமும் காங்கிரசு பணமும் போட்டு டிக்கட் வாங்கிக் கொடுத்து, சாப்பாடும் போட்டு அழைத்துக் கொண்டு போன கூட்டம் முக்கால் பகுதியும் ஆச்சாரியாரால் கதர் பணத்தைச் செலவு செய்து டிக்கட் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு போகப்பட்ட திரு. ஆச்சாரியர் கூட்டம் கால் பகுதியும் சேர்ந்ததாகத்தானிருக்க முடியும்.
ஈதன்றித் தனிப்பட்ட முறையில் மகாநாட்டிற்கு (வேடிக்கை பார்க்கவாவது) தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து போயிருந்தவர்கள் சுமார் 5,6 பேர்களாவது இருக்க முடியுமா? என்று தீர்மானிப்பதுகூட கஷ்டமாயிருக்கின்றது.
எனவே, இந்தக் கூட்டம்தான் இப்போதைய தமிழ்நாடு தேசிய வாதிகள் கூட்டமென்றும் அதிலும் பூரண சுயேச்சைக் கூட்டமென்றும், ஒத்துழையாதார் கூட்டமென்றும் சொல்லிக் கொள்ளப்படுவதாகும். நிற்க;
காங்கிரசுக்காக உழைக்கவே உடலை விடுவேன் என்று சொல்லும் காங்கிரஸ் பக்தர் திரு.வி.கலியாணசுந்தர முதலியாருடையவும் தேசியத்திற்காகவே உடல், பொருள், ஆவி மூன்றையும் விடுவேன் என்று சொல்லும் “தேசிய வீரரும், தேசியக் கட்சித் தலைவரு”மான திரு.வரதராஜுலு உடையவும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் (இருந்தால்) அவர்களுடையவும் வாசனையே “மகாநாட்டில்” இருந்ததாகத் தெரியவில்லை.
ஏனெனில், காஞ்சிபுரம் மகாநாட் டில் மேற்கண்ட இருகனவான்களும் அய்யங்காருக்கும், ஆச்சாரியாருக்கும் நல்ல பிள்ளைகளாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை கொண்டுவர வொட்டாமல் செய்த “புண்ணிய காரியத் திற்கு”ப் பிறகு இருகனவான்களையும் எந்த மாகாண மகாநாட்டாரும் மதித்ததாகவாவது இவர்களாக அங்கு போனதாகவாவது தெரியவில்லையாதலால் இவ்விரு கனவான்களைப் பொறுத்தவரை, மாகாண மகாநாட்டைப் பொறுத்த அளவுக்கு அவரவர்கள் “கருமத்தின் பலனை” அவரவர்கள் அடைந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
மகாநாட்டுத் தலைமைக்கு தமிழ் மாகாணத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற போட்டியில் திருவாளர்கள் சத்திய மூர்த்தியும், வரதராஜுலுவும் ஆகிய இருவர்களும் தாங்கள் தாங்கள் வர வேண்டும் என்று இரு கட்சிகளுக்கும் பல சூட்சி பிரசாரம் செய்தும் கடைசியாக ஒருவரும் வர முடியாமல் போனதோடு வடநாட்டிலிருந்து ஒரு பொம்மையைக் கொண்டு வந்து ஆட்டிவைத்து, அதன் மூலம் வழக்கம் போல் பார்ப்பனப் பிரசாரம் செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது.
இது எப்பொழுதும் இந்த மாகாணப் பார்ப்பனர்கள் செய்து கொண்டு வரும் வழிவழிச் சூட்சியேயாகும். அதாவது, தமிழ்நாட்டில் பார்ப்பன சூட்சிகள் வெளியாகி அவர்களுடைய யோக்கியதை குறைந்துவிட்டால் வெளி மாகாணத்தில் இருந்து ஒரு பார்ப்பனரல்லாதாரைக் கூட்டி வந்து அவர் வாய் மூலம் பார்ப்பனப் பிரசாரம் செய்வதாகும்.
வெளியில் இருந்துவரும் பார்ப்பனரல்லாதாரும் அநேகமாய் பார்ப்பனர் கைக்குழந்தைகளாகவே இருந்து அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கிராம போன் மிஷின் மாதிரி ஒப்புவித்துவிட்டு அவர்கள் ஆட்டின படி பயாஸ்கோப் மிஷின் போல் ஆடிவிட்டு போய் விடுவது வழக்கம்.
அதுபோலவே இப்போதும் திரு.பட்டேலைக் கூட்டி வந்து ஆட்டுகின்றார்கள். திரு. பட்டேல் பார்ப்பன தாசராய் இருந்து பாடினார், ஆடினார் என்பதற்கு நாம் அதிகமாகக் கஷ்டப்பட்டு ஆதாரம் தேட வேண்டியதில்லை.
அவர் வேதாரண்யத்தில் பார்ப்பனரல்லாதாரைப் பற்றிப் பேசி இருக்கும் பேச்சுக்களைப் பார்த்தாலே தெரியவரும். அதாவது, இங்கு ‘பிராமண வகுப்புக்கே விரோதமாய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்தப் பிரசாரமானது பிராமணர்களைத் தாக்குவதாக மாத்திரமல்லாமல் நம்முடைய ஆரிய நாகரிகத் தில் சிறந்த வற்றையெல்லாம் தாக்குவதாக இருக்கின்றது.
பிராமணரல்லாதாரில் ஒரு சிலர் சுயநலத்தினால் அறியாத ஜனங்களைக் குத்திவிட்டு குரோதத்தை உண்டாக்கி உத்தியோக வேட்டையாக இந்த இயக்கத்தை செய்துவிட்டார்கள்.
கதர் இயக்கத்தின்மேலும் பிராமண இயக்கமென்று தோஷம் கூறப்படுகிறது. மாசற்றவரும் பார்ப்பனீயப் பிற்போக்கில் எதுவும் தம்மிடம் காணப்படாதவரும், பிராமணரல்லாதாருக்கு ஊழியம் செய்யவென்றே தமது ஆயுள்காலம் முழுவதையும் அர்ப்பணம் செய்துவிட்டவருமான ஒரு பிராமணரை (திரு.ராஜகோபா லாச்சாரியாரை) ‘சைத்தான் சொரூபம்’ என்று ஒரு சாரார் தூஷிக்கின்றார்கள்.
இது தேசிய தற்கொலையேயாகும். வகுப்பு துவேஷத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதைக் காட்டிலும் சிறந்த தேசிய வேலை வேறு கிடையாது” என்பதாகும், மற்றும் அவர் தனது முடிவுரையில்,
“இந்த மாகாணத்தில் சுயராஜ்யக் கட்சியினருக்கு அவர்கள் கோரும் உதவியை செய்துவரும்படி மாறுதல் வேண்டாதவர்களை நான் கேட்டுக் கொள்ளுகிறேன்”
என்றும், மற்றும் பூரண சுயேச்சைத் தீர்மானத்தை தான் எதிர்த்துப் பேசு கையில்,
“நான் வைதீக ஒத்துழையாதாராயினும் இந்த மாகாணத்தின் நிலையைக் கவனிக்கும்போது அதிகாரத்தைக் கொடுக்கக் கூடிய எல்லாப் பதவிகளையும் (சுயராஜ்ஜிய கட்சியார்) கைப்பற்றிக் கொள்வது சாத்தியமாகும்படி இங்கு ஒரு தனி வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்கு மாறாக நீங்கள் சொல்வது தற்கொலைக்கு ஒப்பாகும்”
என்றும் சொல்லி இருக்கிறார். பின்பு மிராசுதார் மகாநாட்டில் பேசும்போது,
“உங்களுடைய அரசியல் பிரசினைகள் எனக்குப் புரியவில்லை. இங்கு பிராமணர் பிராமணரல்லாதார் தகராறுக்கு காரணம் என்ன வென்று இன்னும் நான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்”
என்று சொல்லி இருக்கிறார். இவைகளிலிருந்து திரு.பட்டேல் கிராமபோன் மிஷினாயிருந்திருக்கின்றாரா இல்லையா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம்.
முதலாவதாக, இங்கு பிராமணர்களுக்கு விரோதமாக பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகச் சொல்லி வருவதற்கு திரு.பட்டேல் தனது பிரசங்கத்தில் என்ன ஆதாரம் கூறியிருக்கிறார்? அல்லது என்ன ஆதாரம் கூறக்கூடும்? என்பதை யோசித்தால் இது பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாதார்மீது சுமத்தும் யோசனையற்றதும் அக்கிரமமுமானதுமான வீண் பழி அல்லவா? என்று கேட்கின்றோம்.
அன்றியும் பார்ப்பனர்கள் மீதுள்ள துவேஷத்தால் ஆரிய நாகரிகத்தில் எது எது சிறந்ததோ அதை எல்லாம் பார்ப்பனரல்லாதார் தாக்குவதாக சொல்லி இருக்கிறார்.
இதில் எந்த சிறந்த ஆரிய தர்மமானது தாக்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தையாவது திரு. பட்டேல் எடுத்துக் காட்டியிருக்கிறாரா? அல்லது காட்டக்கூடுமா? திரு.பட்டேல் எதைச் சிறந்த ஆரிய தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் நமக்கு சிறிதும் விளங்கவில்லை.
திரு.ராஜகோபாலாச்சாரியின் பூநூலையும், உச்சிக் குடுமியையும், கொண்டி நாமத்தையும், சிறந்த ஆரிய தர்மமென்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா? அல்லது புராணங்களையும், இதிகாசங்களையும் மநுதர்ம சாஸ்திரம், பராசர ஸ்மிருதிகளையும் அவற்றினால் ஏற்பட்ட கோயில்களையும் உற்சவங்களையும், பார்ப்பன பூசாரிகளையும், சிறந்த ஆரிய தர்மமென்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? அல்லது விக்கிரகங்களையும் அதன் பூஜை உற்சவங்களுக்காக பல கோடி ரூபாய்கள் செலவு செய்யப் படுபவைகளையும் சிறந்த ஆரிய தர்மமென்று கருதிக் கொண்டிருக்கிறாரா? அல்லது வர்ணாச்சிரம தர்மத்தையும், சமஸ்கிருத பாஷை “உயர்வையும்” சிறந்த ஆரிய தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? என்பது நமக்கு விளங்கவில்லை.
திராவிட தேசத்துக்கு வந்த இவருக்கு ஆரிய தர்மத்தைப் பற்றிய பிரசாரத்தில் கவலை எதற்காக ஏற்படவேண்டும்? திராவிட தர்மம் இன்னது என்று இவர் அறிந்தாரா? திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன? ஆரியர்கள் திராவிடர்களை எவ்விதம் மதித்திருக்கிறார்கள்.
எவ்விதம் நடத்துகிறார்கள் என்பது இவருக்குத் தெரியுமா? ஆரிய பிரசாரம் என்பது அரசியல் தர்மத்துடன் சேர்ந்ததா? பார்ப்பன தர்மத்துடன் சேர்ந்ததா? என்பதையாவது இவர் உணர்ந்தாரா? இந்த நாட்டில் ஏற்பட்டிருக்க வேண்டிய சீர்த்திருத்தங்கட்கு எல்லாம் இதுவரையில் முட்டுக் கட்டையாக இருந்து வந்திருப்பது ஆரிய பிரசாரமா? அல்லது “பார்ப்பனத் துவேஷ” பிரசாரமா? முதலாவது இந்த நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாதார் யோக்கியதையும், அந்தஸ்தும், இன்னது என்பது இவருக்குத் தெரியுமா?.
பார்ப்பனர்களில் திருவாளர்கள் சி.ராஜகோபாலாச்சாரி, சீனிவாசய்யங்கார், சந்தானம், சத்திய மூர்த்தி, வரதாச்சாரி, ஏ.ரெங்கசாமி ஐயங்கார், எம்.கே.ஆச்சாரியார் முதலியோர்களுடைய யோக்கியதை திரு.பட்டேலுக்குத் தெரிந்தது சரியாயிருக்குமா? அல்லது திரு.ராமனாதன், திரு.ராமசாமி முதலியோர்களுக்குத் தெரிந்தது சரியாயிருக்குமா? தேசாபிமானம் என்பதும், தேசியமென்பதும் தென்னாட்டுப் பார்ப்பனருக்கும், வடநாட்டுப் பார்ப்பனரல்லாதார்களுக்கு மட்டும் தான் சொந்தமா? அல்லது திரு.பட்டேலுக்குத் தெரிந்த தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதார் யாருக்கும் சொந்தமாயிருக்க முடியாதா? தென்னாட்டில் வந்து திரு.பட்டேல் பார்ப்பனரல்லாதாரைப் பற்றி பேசுவதற்கு முன்பு, எந்த பார்ப்பனரல்லாதாரிடத்திலாவது பேசி எந்த விஷயத்தையாவது தெரிந்து கொண்டாரா?.
ஒன்றுமில்லாமல் அங்கிருந்து தடதட என்று வந்தவுடன் மேளத்தையும், தாளத்தையும், பாண்டையும், மாலையையும் பார்த்ததும் திடீரென்று பார்ப்பனர்கள் மகா உத்தமர்கள், பார்ப்பனரல்லாதார்கள் சுயநலக் காரர்கள், துவேஷக்காரர்கள் என்று சொல்லி விடுவதென்றால் இது ஒரு யோக்கியப் பொறுப்புடைய தலைவருக்கு ஏற்றதாகுமா?
இவர் சத்தியாக் கிரகமோ, வரிகொடா இயக்கமோ ஆரம்பித்தால் இவரை நம்பி எந்த பார்ப்பனரல்லாதாராவது பின்பற்ற முடியுமா? தவிர, பார்ப்பனரல்லாதார் இயக்கம் சுயநலக்காரர்கள் செய்யும் உத்தியோக வேட்டை இயக்கமென்று சொல்லி இருக்கிறார்.
இது யோக்கியமான பேச்சாகுமா? இந்த மாகாணத்தில் பெரும் பான்மையான உத்தியோகத்தில் இருப்பவர்கள் யார் என்றும் பரம்பரையாக உத்தியோக வேட்டையாடிக் கொண்டிருப்பது யார் என்றும் கடுகளவாவது புத்தியையும் நேரத்தையும் செலவு செய்து பார்த்திருப்பாரானால், இம்மாதிரி சொல்லி இருக்க முடியுமா? இதிலிருந்தாவது வடதேசத்திலுள்ள அரசியல் தலைவர்களென்பவர்கள் எவ்வளவு தூரம் புத்தியிலும், பொறுப்பிலும் கட்டையானவர்கள் என்பது விளங்கவில்லையா?
அன்றியும், மற்றோர் இடத்தில் இந்த நாட்டின் அரசியல் பிரச்சினை தனக்குப் புரியவில்லை என்றும், இங்கு பிராமணர் பிராமணரல்லாதாருக்கு இடையிலுள்ள தகராறுக்கு மூல காரணம் இன்னதென்று தனக்கு இன்னும் தெரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
அப்படி இருக்கையில் இவர் எப்படி பார்ப்பனரல்லாதாரை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்வதுடன் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியம் என்று சொல்லக்கூடும்? இதிலிருந்தாவது இவர் வேண்டுமென்றே இந்த நாட்டுக்கு பார்ப்பனர் பேச்சைக் கேட்டுக்கொண்டு பார்ப்பன பிரசாரம் செய்ய வந்தவரேயல்லாமல் வேறல்லவென்பது விளங்கவில்லையா?.
தவிர, இந்த மாகாணத்தில் சுயராஜ்யக் கட்சியாருக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்ய வேண்டுமென்றும், இந்த மாகாணத்து நிலைமையை பொறுத்தவரையில், அதிகாரம், பதவிகள் ஆகியவைகளையெல்லாம் சுயராஜ்யக் கட்சியாரே கைப்பற்றும்படி ஒரு தனி வழி ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அப்படிச் செய்யாவிட்டால் அது தேசத் துரோகம் என்றும் சொல்லி இருப்பது எவ்வளவு தூரம் பார்ப்பனர் மாய்கையில் சிக்கி, அவர்களால் ஊட்டப்பட்டதை அப்படியே கக்கி இருக்கிறார் என்பது வாசகர்களுக்கு விளங்கவில்லையா.
இதற்குமுன் திருவாளர்கள் எஸ்.சீனிவாச ஐயங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் சேர்ந்து “ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்”காக மந்திரி பதவியை கைப்பற்றவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டி இருக்கிறது என்று சொல்லி, ஒரு (பினாமி) மந்திரி சபையை உற்பத்தி செய்து, அதை இவர்கள் சுயநலத்திற்கு ஆட்டி வைத்துக்கொண்டிருந்ததைச் சரி என்று ஒப்புக்கொள்வதோடு, இனியும் அப்படியே செய்யவேண்டும் என்பதற்கு இவர் ஒரு தூண்டு கோலா அல்லவா? வாயில் வைதீக ஒத்துழையாதார் என்று பேர் சொல்லிக் கொண்டு காரியத்தில் சர்க்கார் அதிகாரங்களையும், பதவிகளையும் கைப்பற்ற வேண்டியது அவசியம் என்று சொல்லுகிற ஒத்துழையாதார்கள் திரு.காந்தியுட்பட எவ்வளவு யோக்கியர் களாக இருக்கக்கூடுமென்பதும் ஒத்துழையாமை தோற்றுப் போனதற்குக் காரணமென்ன வென்பதும் தாராளமாக இதிலிருந்து விளங்கவில்லையா என்று கேட்கிறோம்.
இந்த மாகாணத்தில் சுயராஜ்யக்கட்சி என்பதும் ஜஸ்டிஸ் கட்சி என்பதும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் கட்சியே தவிர வேறல்ல என்று ஆயிரம் தடவை திரு.காந்தியுட்பட வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களுக் கெல்லாம் பலமுறை விளக்கப்பட்டிருந்தும், மறுபடியும் சுயராஜ்யக் கட்சிக்காரர்களுக்கு ஒத்துழையாதார்கள் உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு உதவி செய்ய வேண்டியது தேசிய தர்மமென்று சொல்லவந்தால், ஒத்துழையாமைக் கட்சியை பார்ப்பனக் கூலிக்கட்சி என்று சொல்லாமல் வேறு என்னவென்றுதான் சொல்லுவது?.
இவைகளிலிருந்து அரசியலின்பேரால், எந்தக்கட்சி ஏற்பட்டாலும், எந்தக் கனவான் புறப்பட்டாலும், அவை அயோக்கிய கட்சி என்றும், அயோக்கியர்களின் கூட்டமென்றும், இதற்கு முன் சொல்லிக் கொண்டு வந்தவர்களெல்லாம் பெரிய தீர்க்கதரிசிகள் என்றும், அநுபவசாலிகள் என்றும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.
முடிவாக, திரு.பட்டேல் அவர்களின் தென்னாட்டு விஜயம் ஆரிய தர்ம பிரசாரமும், சுயராஜ்யகட்சி பிரசாரமும் பார்ப்பன ஆதிக்க பிரசாரமும் ஆகியவைகள் தான் என்பதோடு முடிவுகட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறோம்.
சென்ற ஆண்டில் திரு.காந்தி தென்னாட்டுக்கு வந்த பிறகு “வர்ணாச் சிரமம்” இருக்க வேண்டும் என்றும், பிறவியிலேயே “பிராமணர்கள்” “சூத்திரர்கள்” உண்டென்றும், மநுதர்ம சாஸ்திரப்படி அவரவர்கள் அவரவர்களுக்கேற்பட்ட வேலையை செய்ய வேண்டுமென்றும், பிரசாரம் செய்துவிட்டுப் போனார்.
அதற்குப் பிறகு திரு. மாளவியா வந்து, ஜாதி இருக்கவேண்டுமென்றும், கோயிலில் அந்தந்த ஜாதிக்குத் தகுந்த இடம் பிரிக்க வேண்டுமென்றும், சொல்லி “ராமாயண பிரசங்கம்” செய்து விட்டுப்போனார்.
இப்பொழுது திரு.பட்டேலோ வந்தவர் களையெல்லாம் விட ஒரு அடி முன்னால் வந்து பார்ப்பனரல்லாதார் சுயநலக்காரர்கள் என்றும், அவர்களது கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி என்றும் சொன்னதோடு, பார்ப்பனர் கட்சியாகிய சுயராஜ்யக்கட்சிக்கு உத்தியோ கங்களும் அதிகாரங்களும் பதவிகளும் கிடைக்கும்படி செய்ய வேண்டியதே தேசிய வேலை என்று சொல்லி ஆரிய தர்ம பிரசாரம் செய்துவிட்டுப் போகிறார்.
எனவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும், தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதார் “சுயராஜ்யம்” “தேசீயம்”, “காங்கிரஸ்”, “ஒத்துழையாமை” ஆகிய பார்ப்பனீய விஷயங்களில் கலந்து கொள்ளக் கூடாதென்றும், அப்படிக் கலந்து கொள்வது பார்ப்பனரல்லாத சமூக முன்னேற்றத்தின் தற்கொலையும், பார்ப்பனரல்லாத சமூகத் துரோகமும் ஆகுமென்றும்தான் நாம் கூற வேண்டி இருக்கின்றதே தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
(குடி அரசு - தலையங்கம் - 08.09.1929)