“நாங்கள் பார்த்த கப்பல்”

சூயஸ் துறைமுகத்தில் ஒரு பெரிய கப்பலை 29 - 12 - 31 தேதியில் நாங்கள் பார்த்தோம். அதன் பெயர் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” (Empress of Britain) நேற்றைக்கு முந்திய தினம் கனடியன் பசிபிக் ரெயில்வே கம்பெனியாரால், அக்கப்பலின் மேல் தளத்தில் ஒரு விருந்து கொடுக்கப் பட்டது. அது சமயம் மேன்மை தங்கிய பிரதம மந்திரி அவர்களும் மேன்மை தங்கிய ஹை கமிசனர் அவர்களும் பிரதம விருந்தினராயிருந்தனர். மேற்படி கப்பலைப் பற்றிய சில ருசிகரமான விவரங்கள் கீழ்வருமாறு.

periyar with cadres and cowஉலக அதிசயக் கப்பல்

உலகத்திலே அதிசயமானாதும், பெரியதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே பெருமை தரக் கூடியதுமான, கனடியன் பசிபிக் போக்குவரவுக் கப்பலான “எம்பரஸ் ஆப் பிரிட்டன்”என்ற இந்தக் கப்பலைத் தவிர வேறு ஒன்றையும் கூற முடியாது. பிரிட்டிஷார் கடல் வியாபாரத்தில் மிகவும் கியாதி வாய்ந்தவர் கள் என்ற பரம்பரை புகழை இந்த அதி உந்நத கப்பல் ஒருபடி அதிகம் உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம். இது 800 அடி நீளமும் 100 அடி அகலமும் உள்ளது. மணி 1க்கு 20மைல் வேகம் போகக்கூடியது. மொத்தம் 42,500 டன் எடையுள்ளது. பிரகாசமான வெண்மை வர்ணத்தால் பூசப்பட்டும் மேல் தட்டின் பகுதிகளில் நீலநிறப் பட்டைகள் அழகாகத் தீட்டப்பட்டும், இதனை ஊடுருவிச் செல்லும் மூன்று பெரிய புகை போக்கிகள் மங்கலான பழுப்பு நிறத்தோடும் திகழ்வது கண்ணைக் கவரத் தக்க காட்சியாகும். அதன் அடிப்பாகத்தில் தீட்டப் பெற்றுள்ள பச்சை நிறப் பட்டைகள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அலைகளின் நிறத்தைத் தோற்கடிப்பனவாய் இருக்கின்றன. மேல்தளத்திலிருந்து சுமார் 208 அடி உயரத்தில் பறக்கும் கொடிகளும், கப்பல் அசையும்போது காற்றினால் அலைக்கப்பட்ட அக்கொடிகள் அசையும் கம்பீரமும் தூரத்திலிருந்து காண்போருக்கு, ஓர் மிகப் பெரிய, உன்னத, நவீன ராஜ மாளிகையே தண்ணீரில் மிதப்பது போல் தோன்றும். “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” முதல் வகுப்புப் பிரயாணிகள் மூன்றாம் அறையும், 3ம் வகுப்பும் உடையதாயிருக்கிறது. இதை உண்டாக்கும் போதே ஒன்றுமட்டும் முக்கியமாய் கவனிக்கப்பட்டது. அதாவது, மற்ற எந்தக் கப்பலிலும் இல்லாத மாதிரி ஒவ்வொரு பிரயாணிகளுக்கும் அதிகமான இடவசதி அளிக்கத் தக்கதாய் இருக்க வேண்டுமென்பதே. மற்ற அதிக எடையுள்ள கப்பல்களைக் காட்டிலும், இதில் குறைந்த பிரயாணிகளே இருக்கக் கூடியதாயிருக்கிறது. சுமார் 1195 பிரயாணிகள் மட்டும் இதிலிருக்கலாம். ஆனால் கப்பல் மாலுமிகள் 714 பேர் இருக்கிறார்கள்.

ஒன்பது அடுக்குகள்

பிரயாணிகளது உபயோகத்திற்காக ஒன்பது தட்டுகள் விடப்பட்டிருக் கின்றன. சலூன் பிரயாணிகளின் உபயோகத்திற்காக 11 பொது அறைகளும், ஒரு சிசுபோஷண சாலையும், யாத்ரீகர்களுக்கு 3 பொது அறையும், ஒரு சிசு போஷண சாலையும் 3ம் வகுப்புப் பிரயாணிகளுக்கு 2 பொது அறைகளும், ஒரு சிசு போஷண சாலையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஏ தட்டிலும், பி தட்டிலும் பிரயாணிகள் உலாவவும் காற்று வாங்கவும் தகுந்த திறந்த வெளிகள் இருக்கின்றன. மற்றும் ஏ தட்டில் ஒரு பாகம் நடனத் திற்காக ஒதுக்கிவிடப் பட்டிருக்கிறது. பி தட்டு மிகவும் அலங்கார மாகவும் முதல் வகுப்புப் பிரயாணிகள் சௌகரியமாய் இளைப்பாறத்தக்க தாயும் இருக்கிறது. சலூன் பிரயாணிகளின் சௌகரியத்தை முன்னிட்டு டென்னிஸ் முதலிய விளையாடுமிடங்கள் கொண்ட தட்டு ஒன்றும் இணைக்கப்பட்டி ருக்கிறது. டி தட்டில் இரண்டு பெரிய சாப்பிடும் அறைகளும் அதிலிருந்து ஏணி வழியாக மேலே எப் தட்டுக்குச் சென்றால் அங்கு நீந்தும் குளமும் சிற்றுண்டிச் சாலையும், தேகாப்பியாச இடங்களும் மனோரம்மியமான காட்சி யளிப்பனவாயிக்கின்றன.

நவீன தோற்றங்கள்

ஜனங்கள் சௌகரியமாய் உட்கார்ந்து பார்க்கத்தக்க காலரிகள் நிறைந்த டென்னிஸ் பந்து விளையாடுமிடமும் அதன் சமீபத்திலேயே சிற்றுண்டிச் சாலையும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எம்ப்ரஸ் ஆப் பிரிட்டனின் இன் னொரு முக்கியக் காட்சி என்ன வெனில் ஒவ்வொரு தட்டிலுள்ளவர்களும் நீந்துவதற்குக் கொண்டுள்ள ஆர்வமே தண்ணீர் மட்டத்தில் அவர்கள் எல்லோரும் நீந்துவது கண்டு களிக்கவேண்டிய ஆச்சரிய காட்சியேயாகும். கை கால் முதலிய அங்கங்களைப் பரீட்சை செய்து வேண்டிய சிகிச்சை செய்ய ஏற்பட்ட தனி அறைகள் பி. தட்டின் மத்தியில் இருக்கிறது. ஜி. தட்டில் பற்பல புதிய காட்சியளிக்கும் பல அறைகள் சுமார் 30 அடி அகலத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. மேற்சொன்ன பல நவீனங்களோடு எப். தட்டில் டர்க்கிஷ் பாத் (Turkish Bath) என்று சொல்லப்படும் ஒரு வித ஸ்நானத்திற்குரிய சாதனங்களெல்லாம் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

நூதன அலங்காரம்

இத்தகைய பெரிய கப்பலின் அலங்காரம் மிகவும் நூதனமானவை. ஒவ்வொரு இடத்திலும் அலங்காரங்கள் ஒழுங்காயும், நவீனமாயும் மேனாட் டுப் புராதன சித்திர வேலைப்பாட்டுடன் நவீன கொள்கைகளைப் புகுத்தி எங்கும் வளைவுகளாகவும், கோணங்களாகவும், சரிகோடுகளாகவும் உள்ள அலங்காரம் பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

பல கற்றுத்தேர்ந்த நிபுணர்களின் மேற்பார்வையில் எவ்வித குறை பாடுமில்லாது செவ்வனே அலங்கரிக்கப்பட்ட தோற்றம் போற்றக் கூடியதே.

எம்பரஸ் அறை

முதல் முதல் கண்களைக்கவர்வது எம்பரஸ் அறை என்ற நடன அறையேயாகும். இதை மிகவும் பிரக்யாதி பெற்ற எம்பயர் நடன சாலைக்கு அடுத்தபடியாகச் சொல்லலாம். இருண்ட நீலநிற மேற்கூரையும், அதன் வழியாக மின்சார சாதனத்தால் தோன்றி மறையும் நட்சத்திரங்களின் ஒளியும், அவற்றைச் சுற்றிய வெண்ணிறமான சுவராகச் சதுரத் தூண்களும், மெல்லிய சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்தம்பத்தின் பீடங்களும் ஜரிகை வேலைப் பாடமைந்த இளஞ்சிவப்பான வெல்வட் பட்டினால் தொங்கவிடப் பட்ட ஜன்னல் திறைகளும், மற்றொரு மூலையில் மேடையின் பின்புறம் ஜன்னல் திறைகளையும் தோற்கடிக்கக் கூடிய சிங்காரத்தோடு தொங்கவிடப் பட்ட திறையின் பிரகாசமும் ஒருங்கே சேர்ந்து மனோரம்மியமான காட்சியளிப் பதோடு, இஃதோர் வாத்தியகாரர் மேடையோ, அன்றி பேசும் படக்காட்சி சாலையோவென்ற ஐயத்தை உண்டாக்காதிராது.

அடுத்தாற்போல் பசும் சலவைக்கல் தூண்களும், கண்ணாடிவில் கூரையும் கொண்டு, சிவப்பும் நீலமும் கலந்த வெல்வட் பட்டுத் திறைகள் தொங்கவிடப்பட்டதுமான இளைப்பாறும் கூடம் காணப்படுகிறது.

சாப்பாடு மண்டபமும் - நீந்தும் குளமும்

விலையுயர்ந்த மரத்தினால் தூண்களே இல்லாது நுண்ணிய வேலைப் பாடுகளமைந்து இரண்டு பாகமாக தடுக்கப்பட்ட சாப்பிடும் மண்டபத்தின் சுவற்றில் காணப்படும் சித்திரங்கள் ஆச்சரியப்படத்தக்கன வாயிருக்கின்றன. ஒரு புறம் புஷ்பங்கள், பறவைகள் முதலிய சித்திரங்களும் மற்றொருபுறம் வானமும், நட்சத்திரங்களைப் போலும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 40 அடி அகலமும் தூண்கள் தாங்கிய கண்ணாடிக் கூரையும், பளிங்கு போன்ற தண்ணீரும் கொண்ட நீந்தும் குளம் மிகவும் அழகானது. அக்கண்ணாடிக் கூரையின் வழியாக செயற்கை சூரிய ஒளி செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பாகத்திலிருந்து படிக்கட்டுகளின் வழியாக மேல் தளத்துக்கும், சிற்றுண்டிச் சாலைக்கும், உடைமாற்றிக் கொள்ளும் அறைக்கும் செல்ல வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆகாயவசனி

எம்பரஸ் ஆப் பிரிட்டனில் பிரயாணிகள் இரண்டு கண்டத்திலிருந்தும் ஆகாயவசனியின் உபயோகத்தால் ஆனந்தமடைகிறார்கள். சேமிக்கப் பட்ட ஓரிடத்திலிருந்து சுமார் 10 அல்லது 12 ஒலி பெருக்கும் கருவியின் மூலம், மேல் தட்டுகளுக்கும் முக்கியமான பொது அறைகளுக்கும் நிகழ்ச்சிகள் கேட்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

சுத்தக் காற்று

எம்பரஸ் ஆப் பிரிட்டனில் உள்ள பிரயாணிகள் வெளியேவிடும் சுவாசக் காற்று ஒவ்வொரு 7 நிமிஷத்துக்கு ஒரு தரம் சுத்தமாக்கப்பட்டு, புதிய ஆரோக்கிய காற்று நிரப்பப்படுகிறது. ஓர் நூதன சாதனத்தால் கடல் காற்று ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு பின்னர் காலநிலைக்குத் தக்கவாறு உஷ்ணமோ அல்லது குளிர்ச்சியோ ஆக்கப்பட்டு, பொது அறைகளிலும், மண்டபத்திலும் பொருத்தியிருக்கும் விசைகளை அழுத்துவதன் மூலம் எல்லாவிடங்களிலும் சுத்தக் காற்று நிறப்பப்படுகிறது. மற்றும் தனிப்பட்ட நபர்களது விருப்பத் திற்கேற்றவாறு இளங்காற்றாகவோ அல்லது பெருங் காற்றாகவோ, தாங்கள் விரும்பிய அறைகளுக்கும் இடத்திற்கும் வரவழைத்துக் கொள்ளலாம்.

இணையற்றது

எம்ப்ரஸ் ஆப் பிரிட்டன் எல்லா வகையிலும், இணையற்றதாகும். 42500 டன் எடையுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்கப்பல், பிரிட் டிஷ் ஏகாதிபத்திய துறைமுகங்களின் மத்தியில் செல்லும் கப்பல்களெல் லாம் பெரியது, ஐரோப்பாவுக்கு சென்ட் லாரன்ஸ் வழியாகப் பிரயாணம் செய்யும் கப்பல்களிலெல்லாம் பெரியது, உலகப் போக்குவறவு கப்பல்களிலே பெரியது, லண்டன் துறைமுகத்திலேயே பெரியதென பதிவு செய்யப்பட்டது, மகா யுத்தத்திற்குப் பிறகு இங்லாந்திலோ, அமெரிக்காவிலோ இது போன்று கட்டப் படாத இணையிலாதது. சென்ட் லான்ரஸ் வழியிலேயே அதிக வேகமானது. இக் கப்பலின் முக்கிய அம்சமாக கவனிக்கப்பட்ட கரைக்கும் கப்பலுக்கும் டெலிபோன் சம்பந்தம் இணைக்கப்பட்டது. ராயல் கழகத்தினராலேயே அலங்கரிக்கும் பெருமை வாய்ந்த முதல் கப்பல் இது ஒன்றே. இன்னும் சில்லரை விஷயங்களைப் பற்றி எழுத வேண்டுமானால் விரிந்து கொண்டே போகும். மேற்கூறப்பட்ட காரணங்களால் இக்கப்பலின் தனிச் சிறப்பு தெள்ளென விளங்குகிறது.

(குடி அரசு - பயணக் கடிதம் - 24.01.1932)

Pin It