புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்மவாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர்களிடம் ஏமாறாமலிருக்கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ., பி. எல்., அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும். சென்ற வருஷத்தில் புதுக்கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்ததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளேயே வசிக்கக் கூடாதென, சமஸ்தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்துவிட்டு விட்டார்கள்.

periyar rajajiநாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மையிலேயே அரசாங்கதின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியைத் தவிர வேறில்லை என்று தான் நாம் கூற வேண்டியிருக்கிறது. திரு. வல்லத்தரசு அவர்கள், புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் கூடிக் கொண்டு செய்த காங்கிரஸ் கிளர்ச்சிக்கு விரோதமாகக் கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் கிளர்ச்சி தலையெடுப்பதற்கு விரோதமாக இருந்தார். பார்ப்பனர்களைப் பாமர மக்கள் நம்பி அவர்களுடைய சாஸ்திரங்களுக்கும், மதங்களுக்கும், சடங்குகளுக்கும் கட்டுப்பட்டுக் கிடப்பதை அகற்றப் பாடுபட்டார். பார்ப்பனர் சூழ்ச்சியில் ஈடுபட்ட பாமர மக்களைக் கண்விழிக்கச் செய்து பகுத்தறிவுடையவராக்கப் பிரசாரம் பண்ணும் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டவராயிருந்தார். இதன் பயனாகப் புதுக்கோட்டையில், நமது சுயமரியாதை இயக்கமும், அதி தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது. இக்காரணத்தால் அந்தச் சமஸ்தானத்திலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் அவர்மேல் துவேஷமும், பொறாமையுங் கொண்டு, அவரை எப்பொழுது அழுத்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புதுக்கோட்டை கலகமே ஒரு காரணமாக அகப்பட்டது. எப்படியோ எந்தக் காரணத்தாலோ, யார் வைத்த கொள்ளியோ வீடு வெந்து போயிற்று. அரசாங்கத்தாரும், ஒரு நல்ல தோழரை வெளியேற்றி விட்டார்கள் என்று நாம் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் திரு. வல்லத்தரசு அவர்களை வெளியேற்றி விட்டதினால், புதுக்கோட்டையில் சமதர்மக் கொள்கை பரவவொட்டாமல் செய்து விடலாம் என்று வீண் எண்ணங் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் எண்ணம் பயனற்றது என்பதை மாத்திரம் கூறுகிறோம். இனிதான் அந்த சமஸ்தானத்தில் நமது இயக்கக் கொள்கைகள் அதிதீவிரமாகப் பரவுமென்பதைக் கூறுகிறோம். இறுதியாகத் திரு. வல்லத்தரசு அவர்களும், தம்மை சமஸ்தானத்தார் வெளியேற்றியது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமது கொள்கையாகிய சமதர்ம ஊழியத்தைத் தளர்ச்சியின்றி பிரிட்டிஷ் இந்தியாவில் புரிந்து புகழ்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பார்ப்பன ஆதிக்கம் பெற்ற சுதேச சமஸ்தானத்தில், சமதர்ம நோக்கமுடைய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு நேர்ந்த கதியைப் பார்த்தவர்கள், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த சுயராஜியம் ஏற்படுமாயின் சமதர்ம நோக்கமுடைய நம் போன்றவர்களுக்கெல்லாம் என்ன கதி நேருமென்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.01.1932)

Pin It