periyar 21தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரிசிடெண்ட் திருவாளர் ராவ்பகதூர் சீதாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து பெருமித ஓட்டுகளால் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தெரிய வருகின்றது.

திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர். ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதைப் பிரசாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவைப் பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கியும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்கு கூட வொட்டாமல் செய்தவர். முயற்சி செய்தவர்களையும், பொறுப்பற்றவர்கள் என்று சொன்னவர்.

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்க கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலக் கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர்.

ஐயோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவது போல் கண்மூடி கண் திறப்பதற்குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந்தோடி விட்டது. ‘தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு’ என்கின்ற பெரியார் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஒன்றும் முழுகிப் போகவில்லை, குறைந்த பட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது என்ன என்பதை கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமே அனுகூலமான பயனை கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீதாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.

(குடி அரசு - கட்டுரை - 17.03.1929)

Pin It