சென்னைக் கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக் கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிக்கைகள் விஷமப் பிரசாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள்காட்சி என்ற பெயர் வைத்துக் கொண்டு காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களை காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம்.
பட்டாஸ் வெடி விற்றுத் தருவதாகவும் கல்பூரம் விற்றுத் தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக் கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால் பட்டாசு வாங்காதீர்கள் கல்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள் என்று நாம் சொன்னால் அது மத துவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி மிரட்டி கை கண்டு விட்டாலும் நம்மில் சில கேனங்களும் வயிற்று சோற்று ஆசாமிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிவதாலும் பார்ப்பனர் சொல்வதெல்லாம் செலாவணியாகி வருகிறது. இன்னும் அப்படி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா? சுயமரியாதைக்காக உயிர் விடப் போகிறீர்களா? என்று கேட்கின்றோம்.
(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)