சேலம் மகாநாடு சென்ற வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு விறோதமாக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி கொஞ்சமல்ல. இது விஷயத்தில் ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடுவும், ஜி. ராமசந்திர நாயுடுவும் எடுத்துக் கொண்ட முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

periyar 342பார்ப்பனர்கள் இவர்கள் முயற்சிக்கு செய்த கொடுமைகளையும் இடையூறுகளையும் பார்த்து மனம் பொறுக்காமலேயே பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் அநேகர் சேலம் மகாநாட்டிற்கு வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் சேலம் மகாநாட்டால் வெளியாயிற்று. அதென்னவெனில் காங்கிரசை பார்ப்பனர்களிடமிருந்து பார்ப்பனரல்லாதார் லேசில் கைப்பற்றிவிடலாம் என்று வெகு சுலபமாக சிலர் வாயில் பேசிக் கொண்டிருந்தது தப்பு என்பதும், அது சுலபத்தில் முடியக்கூடிய காரியம் அல்ல என்பதும் நன்றாய் வெளியாய்விட்டது.

பார்ப்பனரல்லாதார் சேலம் ஜில்லா மகாநாட்டு வரவேற்புக் கமிட்டியைக் கைப்பற்ற மாத்திரம் 1000ரூ. சிலவு செய்ய வேண்டியிருந்தது. அப்படிக் கைப்பற்றியும் கூட அநேகமாய் எல்லா பார்ப்பனர்களும் வெளியேறியதுடன் சில கோடரிக் காம்புகளையும் பிடித்து இது சரியான கமிட்டி அல்ல, இது சரியான தேர்தல் அல்ல என்று பலவித குற்றங்களைச் சொல்லித் தள்ளிவிட்டார்கள். தற்கால ஏற்பாடாய் நடக்கும் மகாநாட்டுக் கமிட்டியை கைப்பற்றவே 1000ரூ செலவு செய்தும் கமிட்டி சரியானதல்லவென்று சொல்லப்பட்டு விடுமானால் இனி வருஷமெல்லாம் நிரந்தரமாயிருக்கும் காங்கிரஸ் கமிட்டியை கைப்பற்றுவதென்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமாகுமா? அந்தப்படி முடிந்த இரண்டொரு இடங்களில் கூட அவை தப்பான கமிட்டிகள் என்று சொல்லி அவைகளை செல்லாததாக்கிவிட்டு வேறு கமிட்டிகள் ஏற்படுத்திக் கொண்டதாகச் சொல்லி தங்களுக்கே ஏகபோகமாக்கிக் கொண்டார்கள். சேலம் ஜில்லா காங்கிரசையும் கூட இப்படியேதான் செய்துவிட்டார்கள்.

எங்காவது தேச ஊழியம் செய்ய வேண்டும் என்கிற ஒருவன் இந்த மாதிரி அயோக்கிய பார்ப்பனர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்பதை யோசித்தால் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கதி விளங்காமல் போகாது.

நிற்க. இவ்வளவு கஷ்டப்பட்டு நடத்திய சேலம் மகாநாட்டால் என்ன பலன் உண்டாயிற்று என்று பார்த்தால் பார்ப்பன ஆதிக்க காங்கிரசு ஒரு ரூபாயானால் சேலத்தில் பார்ப்பனரல்லாதார் 1000ரூ செலவு செய்து கைப்பற்றி நடத்திய பார்ப்பனரல்லாதார் காங்கிரசு 16 அணா என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும் வகுப்புவாரி உரிமைக்கும் ஏற்றதான சில தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் மக்களை ஏமாற்றும் தீர்மானங்களும் அரசியலின் பேரால் தாராளமாய் நிறைவேற்றப்பட்டிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். அதாவது ராயல் கமிஷனில் சரியான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தால் அதை பகிஷ்கரிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமும் பெசண்டம்மையாரின் காமன்வெல்த்து பில் என்னும் மசோதாவை ஒப்புக் கொள்வதான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதையுமே முக்கியமாய்ச் சொல்லலாம்.

ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதென்பதும் அதற்கு நிபந்தனை சரியான இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் என்பதும் எவ்வளவு மோசமானது என்பதும் விளங்காமல் போகாது. இதை அங்கு பலர் ஆnக்ஷபித்து அவ்வாnக்ஷபனை எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டும் சிலருடைய சொந்த மரியாதையைக் காப்பாற்ற வேண்டி இத்தீர்மானம் தாக்ஷண்ணியத்தின் பேரில் நிறைவேற்றப்பட வேண்டியதாகி விட்டது. அதற்கு ஓட்டுக் கொடுத்த பலர் இத்தீர்மானத்தை நிறைவேற்றினால் ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடுவுக்கும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாருக்கும் ராயல் கமிஷனில் இடம் கிடைக்கக்கூடும் என்கின்ற ஆசையுடனேயே ஓட்டு கொடுத்தார்கள் என்று நினைக்கத்தக்கதாகவே இருந்தது. யார் சரியானவர்கள் என்பதும் யாரை நியமித்தால் பலனளிக்கக்கூடியதாயிருக்குமென்பதும் இவ்விருகனவான்களுக்கே அர்த்தமாகாமல் ராயல் கமிஷனைப் பற்றி அபிப்பிராயம் கொடுத்து பாமர மக்களைப் பைத்தியக்காரர்களாக்கி கெட்ட பெயர் சம்பாதித்துக் கொடுத்து விட்டார்கள்.

இரண்டாவதாக பெசன்டம்மையார் காமன்வெல்த் மசோதா தீர்மான விஷயத்தையும் அது இன்னது என்றும் அதில் இன்னது இருக்கின்றது என்றும் அங்குள்ள மக்களுக்கு தெரிவிக்காமலேயே அதை ஒப்புக் கொள்வதாக தீர்மானித்துக் கொண்டார்கள். பார்ப்பனர்கள் எப்படி வேதத்தை படிக்க இடங்கொடுக்காமலேயே எல்லோரையும் ஒப்புக் கொண்டதாகச் சொல்லும்படி ஏமாற்றி வருகின்றார்களோ அதுபோலவே இவ்விஷயத்திலும் செய்திருக்கின்றார்கள். இதுபோல மோசமான காரியம் வேறொன்றைச் சொல்லவே முடியாது.

பார்ப்பனரல்லாத மக்கள் காங்கிரசில் சேர்ந்தால் எப்படி ஏமாற்றப்படுவார்கள் என்பதையும் எப்படி பாமர மக்களை மற்றவர்கள் தங்கள் சுயநலத்துக்கு உபயோகித்துக் கொள்வார்கள் என்பதையும் சேலம் ஜில்லா மகாநாடு காட்டிவிட்டது.

ராயல் கமிஷனைப் பற்றியாவது, பெசன்டம்மை காமன்வெல்த் மசோதாவைப் பற்றியாவது, அதனால் நமது நாட்டு மக்களுக்கோ அல்லது அம்மகாநாட்டில் அநேகமாய் முழுதுமாயிருந்த பார்ப்பனரல்லாத மக்களுக்காவது ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது உண்டு என்று யாராவது சொல்லக்கூடுமாயென்று கேட்கிறோம். நாளைக்கு யாராவது சொல்வதானாலும் கேட்டுக் கொள்ளத்தயாராயிருக்கின்றோம். ஆகவே காங்கிரசைப் பார்ப்பனரல்லாதார் கைப்பற்றியதால் பலன் என்ன என்பதும் சேலம் மகாநாட்டால் தெரிந்து போயிற்று என்றே சொல்லலாம். மற்றபடி மகாநாடு ஏற்பாடுகளும் வந்த பிரதிநிதிகளுக்கும் மற்றும் அழைப்புக்காரர்களுக்கும் வேண்டிய சவுகரியங்களும் போஜன வசதிகளும் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது.

(குடி அரசு - கட்டுரை - 13.11.1927)

Pin It