மகாத்மா காந்தி அவர்களாலும், அவர் பேச்சைக் கேட்டு சிறைக்கு சென்ற பதினாயிரக்கணக்கான தேசபக்தர்களாலும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் செய்ததின் பலனாலும், பாமர மக்களிடையே காங்கிரஸ் என்கிற பதத்திற்கு நமது நாட்டில் ஒருவித மதிப்பும், செல்வாக்கும் ஏற்பட்டதோடு படித்த வகுப்பார்களுக்கு அதன் மூலம் உத்யோகம், பதவி, பட்டம், அதிகாரம் முதலியதுகள் கிடைப்பதற்கு இடமிருப்பதால், அதனிடத்தில் ஒருவித பைத்தியமும் ஏற்பட்டிருக்கிறது.  அதனாலேயே ஒரு கூட்டத்தார் காங்கிரசின் பெயரை சொல்லிக் கொண்டு பிழைப்பதையும் மறைக்க முடியாது.  ஆகவே, காங்கிரசின் பேரில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு நம்பிக்கையில், அதனால் தேசத்திற்கும், தேசத்தின் பெரும்பான்மை மக்களான குடியானவர்கள், தொழிலாளிகள், ஏழை மக்கள் முதலியவர்களுக்கும் ஏற்பட்ட கெடுதியையும், சர்க்காருக்கு அதனால் ஏற்படும் ஆதிக்கத்தையும் பலத்தையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட பயப்படுகிறார்கள்.  யாராவது துணிந்து வெளியில் எடுத்துச் சொல்ல வந்தாலும் அது மிகக் கஷ்டமாக இருக்கிறது.  அதாவது மத சம்மந்தமான புரட்டுகளை வெளியில் எடுத்துச் சொல்வது எப்படி மதத் துரோகமும் நாஸ்திகமும் ஆய்விடுகிறதோ அதுபோல் காங்கிரஸ் புரட்டுகளை எடுத்துச் சொல்வது தேசத் துரோகமும், தேசாபிமானமற்ற தன்மையுமாக ஆய்விடுகிறது.

periyar 364அதற்கு பாமர மக்களிடையே இருக்கும் செல்வாக்கைப் பார்த்தே காங்கிரஸ் யோக்கியதை அறிந்தவர்களும் மக்களை ஏமாற்ற காங்கிரசில் சேர ஆசைப்படுவதும், காங்கிரஸ் பெயரை சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதும் சகஜமாக நடந்து வருகிறது.  ஏதோ சிலர் உண்மையிலேயே காங்கிரஸ் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்பதாக எண்ணி அதனிடத்தில் பக்தி செலுத்த ஆரம்பிப்பதும் சகஜமாக இருக்கிறது. உதாரணமாக மதுரை மகாநாட்டில் கூட ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்துவிட வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் வந்ததும், பலர் அதை எதிர்த்ததும், சிலர் அதை ஆதரித்ததும் விஷயாலோசனைக் கமிட்டியில் கலந்திருந்தவர்களுக்குத் தெரியும்.  எதிர்த்தவர்களில் யாரும் தங்களுக்கு சுயராஜ்யம் வேண்டாமென்றாவது அல்லது அன்னியர்களின் கொடுமையான ஆட்சியிலேயே இருக்க வேண்டுமென்பது அல்லது அவ்வித கொடுமையான ஆட்சிக்கு உதவி செய்ய வேண்டுமென்கிற எண்ணமாவது இல்லாமல் காங்கிரசினால் தேசத்திற்கு எவ்வித பலனுமில்லாமல் இருப்பதோடு பலவித கெடுதி ஏற்படுவதையும் உத்தேசித்தும், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காகவே அதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், காங்கிரஸ் ஏதாவது பலன் அளிக்கக் கூடியதாயிருந்தால் அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆக்கமளிக்கக்கூடியதுதான் என்றும் மனப்பூர்த்தியாய் உணர்ந்தே எதிர்த்தார்களே ஒழிய வேறில்லை.  ஆதரித்தவர்களும் சிலர் உண்மையாய் அதனால் சுயராஜ்யம் அடையலாம் என்றும், சிலர் அதனால் ஏதாவது பாமர மக்களின் ஆதரவும் அரசியலில் அதிகாரமோ பதவியோ அடையலாம் என்றவர்களுமே தவிர வேறில்லை.

ஆனாலும், அக்கூட்டத்தில் அத்தீர்மானம் தோல்வியே அடைந்து விட்டால் கட்சி கட்டுப்பாட்டுக்கு அடங்கி யாவரும் அத்தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இப்போதும் ஜஸ்டிஸ் கட்சியிலுள்ள அனேகருக்கு காங்கிரசினிடத்தில் ஒரு பைத்தியம் இருப்பதாகவே தெரிய வருகிறது.  அதாவது சமீபத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் பேசியிருக்கும் பேச்சிலிருந்து அறிகிறோம்.  இது அவரவர்கள் தனி அபிப்பிராயமாய் இருக்கலாமே தவிர கட்சி அபிப்பிராயமாயிருக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது. இதுபோலவே சுயராஜ்யக் கட்சியில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் பலருக்கும் ஜஸ்டிஸ் கட்சியினிடத்தில் பக்தியிருக்கிறது.  ஆனாலும் ஏதோ சில குறிப்பிட்ட தடைகள் இருப்பதாக கனவு காண்கிறார்கள்.

காங்கிரசில் சேர வேண்டுமென்கிற ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த சிலருக்கும், ஜஸ்டிஸ் கட்சியில் சேர வேண்டும் என்கிற காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியார் சிலருக்கும், மத்தியில் நாம் தடைக் கல்லாய் இருக்க பிரியப்படவில்லை.  காங்கிரசில் சேருவதென்பது உபயோகமற்ற காரியம் என்பதாக மாத்திரம் சொல்லுகிறோமேயொழிய காங்கிரசில் சேருவதானால் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமென்றாவது காங்கிரஸ்காரர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேருவது தப்பிதம் என்றாவது நாம் சொல்ல வரவில்லை.  இரண்டிற்கும் இப்போது உள்ள கொள்கைகளின்படி இவர்கள் அதில் சேருவதானாலும், அவர்கள் இதில் சேருவதானாலும் ஒருவருக்கும் ஒருவித பலனும் உண்டாகி விடாது என்பதே நமது அபிப்பிராயம். என்னவெனில் காங்கிரசிலிருக்கிறவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தால் அவர்களை காங்கிரசுக்கு வார்சுதாரர்களான பார்ப்பனர்கள் தேர்தல்களுக்கு நிறுத்த மாட்டார்கள்.  “காங்கிரஸ் கமிட்டியும்” அவர்களை நிறுத்தாது.

  அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து காங்கிரசில் சேருகிறவர்களையும் தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் தலைவர்களான பார்ப்பனர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.  காரணம் கேட்கப் போனால் “வகுப்பு சம்பந்தமான கட்சியில் நீ மெம்பராய் இருக்கிறாய். அது தேச முன்னேற்றத்திற்கு விரோதம். ஆதலால் கூடாது”  என்று சொல்லிவிடுவார்கள்.  இதைச் சொல்ல பார்ப்பனர்கள் கூட தேவையில்லை.  ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுகார், கல்யாணசுந்திர முதலியார் முதலிய பார்ப்பனரல்லாதார்களாலேயே சொல்லப்பட்டுவிடும்.  ஏனென்றால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று ஏற்பட்டிருக்கும் கக்ஷிகள் எல்லாம், எல்லா வகுப்புகளுக்கும் சம சுதந்திரமும் வகுப்புவாரி உரிமையும் கேட்கிறது.  இப்போதைய காங்கிரசோ இதை தேசத் துரோகமென முடிவு செய்கிறது.  ஆகவே தேர்தல்களுக்கு நிற்க முடியாது.  இப்போது காங்கிரசினிடத்தில் ஒரு சிலருக்கு (பெரும்பான்மையாய்ப் படித்தக் கூட்டத்தாருக்கு) மோகம் இருப்பதெல்லாம் தேர்தலுக்கு நிற்கத் தானே அல்லாமல் வேறல்ல.  அத்தேர்தலில் காங்கிரஸ் பேரால் நிற்க அனுமதி கிடைக்கவில்லையானால் பிறகு காங்கிரசில் சேருவதிலென்ன லாபம் இருக்கிறது? ஒரு சமயம் பார்ப்பனரல்லாதார் மொத்தமாய் சேர்ந்து காங்கிரசைக் கைப்பற்றி விடலாம் என்பதாக வைத்துக் கொண்டாலும் “வகுப்புவாரி உரிமையும், சம சுதந்திரமும் தேசத் துரோகம்” என்று சொல்லும் பார்ப்பனரல்லாதாரும் அதற்குள் இருந்து கொண்டுதானே இருப்பார்கள்.  பார்ப்பனர்கள் வழக்கம்போல் இக் கூட்டத்தாரையும் அரசியலை வாழ்வுக்குக் கொண்டவர்களையும் உபயோகித்துக் கொண்டு கலகம் செய்வித்துக் கொண்டுதானே இருப்பார்கள்?

சரி, இந்த கஷ்டங்களை எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகவே வைத்துக் கொண்டாலும் காங்கிரசில் சேராத ஜஸ்டிஸ் கட்சிக்காரர் ஒருவர் தேர்தலுக்கு நின்றால் ஜஸ்டிஸ் கட்சியார் யாரை ஆதரிப்பது?  காங்கிரசைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஆசாமியையா?  அல்லது சேராத ஜஸ்டிஸ் ஆசாமியையா?

இப்பொழுது முஸ்லீம் லீக்கென்று மகமதியச் சகோதரருக்குத் தனியாய் ஒன்று இருந்தாலும் அவர்களுக்கு தனித்தொகுதி வகுப்புவாரி உரிமை இருப்பதால், காங்கிரசில் இருப்பதால் அவர்களுக்கு கஷ்டமில்லை.  அவர்களும் கலப்புத் தொகுதியில் நிற்பதாயிருந்தால் முஸ்லீம் லீகுக்கும் பெரிய ஆபத்தாய்த்தான் இருக்கும். ஆகவே, எவ்வித தந்திரம் செய்தாலும் பார்ப்பனர்களை ஏமாற்ற முடியாது.  உண்மையான நல்லெண்ணத்தோடு காங்கிரசில் சேரவேண்டுமென்கிற ஜஸ்டிஸ் கட்சியாருக்கும், ஜஸ்டிசில் சேர வேண்டுமென்கிற காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியாருக்கும் நாம் ஒன்று சொல்லுவோம். அதாவது, எவ்விதமான அரசியல் அபிப்பிராயமுள்ளவர்களும் அதாவது, அராஜகக்காரனென்று சொல்லப்படுபவன் முதல், அரசாங்க சிப்பந்திகள் வரை சேரும்படியாக ஜஸ்டிஸ் கட்சியில் அதிலுள்ள அரசியல் திட்டத்தை எடுத்துவிட வேண்டும்.

  ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரே நோக்கம்தான் இருக்க வேண்டும்.  சமத்துவம், சுயமரியாதை, சகல வகுப்பார்களும் அவரவர்கள் உரிமையையும் பிரதிநிதித்துவத்தையும் அடைய வேண்டியது என்கிற கொள்கை மாத்திரம் இருக்க வேண்டும்.  ஜஸ்டிஸ் கட்சியின் பேரால்  தேர்தல்களுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தக்கூடாது என்கிற நிபந்தனையும் இருக்க வேண்டும். வேண்டுமானால் காங்கிரசுக்குள் உள்ள பார்ப்பனரல்லாதார் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை ஏற்பாடு செய்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்காக பிரதிநிதிகளை நிறுத்திக் கொள்ளட்டும்.  அப்போது இரண் டொருவர் போக மற்ற பார்ப்பனரல்லாதார் எல்லாருக்கும் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவதில் ஆnக்ஷபணை இருக்காது.  நமது கட்சிக்கு விரோதம் செய்யவும் சக்தி இருக்காது.  அப்படிக்கில்லாமல் அதிலொரு கால், இதிலொரு கால் வைத்துக்கொண்டு தங்கள் காரியத்தையும் கெடுத்துக் கொண்டு பொது காரியத்தையும் கெடுத்து “தினம் ஒரு கட்சி மாறுகிறவர்” என்கிற கெட்ட பெயரை வாங்கி மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றே சொல்லுவோம். வேறு ஒன்றும் வேண்டியதில்லை.

  தேசத்திற்கு உண்மையான விடுதலை வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராயிருக்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்கு காங்கிரசும், ஜஸ்டிஸ் கட்சியும் எல்லாம் ஒன்றுதான்.  ஒன்றிலும் பிரயோஜனம் உண்டாகாது.  ஒரே அடியாய் ஒத்துழையாமையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.  ஒத்துழையாமைக்குத் தேசமும் தானும் லாயக்கில்லை என்று நினைப்பதனால் மக்கள் சுயமரியாதைக்கு உழைக்க வேண்டியதுதான். இரண்டையும் விட்டு விட்டு தேசம், தேசீயம் என்று மக்களை ஏமாற்றுவதில் தாங்கள் மாத்திரம் பிழைக்கலாமே ஒழிய மக்களுக்கு யாதொரு பிரயோஜனமும் உண்டாகாது.

(குடி அரசு - கட்டுரை - 17.04.1927)

Pin It