periyar gemini ganesan

இந்தியாவின் நன்மையின் பொருட்டும் மக்களின் சம உரிமையின் பொருட்டும் மகாத்மா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் கொண்ட ஒத்துழையாமையை காங்கிரசின் மூலம் நடத்தப்பட்டு வந்த காலத்தில் நாட்டில் சுயநலம் படைத்த பார்ப்பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் தவிர மற்றவர்களுக்குள் ஒற்றுமையும் நம்பிக்கையும் கூடிய வரையில் கட்டுப்பாடும் இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதற்கு முன் இருந்து வந்த வகுப்பு உணர்ச்சிகளுக்கும், வகுப்புத் தந்திரங்களுக்குங்கூட பலம் குறைந்திருந்தது என்பதை யும் யாரும் மறுக்க மாட்டார்கள்.

அவ்விதமிருந்த தேசத்தை, அது முன்னேறி நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் வெற்றி பெற்று மக்கள் சமத்துவமும் சுதந்திரமும் அடைந்து விட்டால் ‘வாழ முடியாத’ வகுப்பார்களாகிய வஞ்சகப் பார்ப்பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் இவற்றை எதிர்த்துப் பலவித சூழ்ச்சிகளால் கூடவே இருந்து குடியைக் கெடுத்து தேசத்தின் மக்களை பழயபடி உயர்வு தாழ்வு வித்தியாசத்திலும் அடிமை வாழ்வில் பிழைக்க வேண்டிய அவசியத்திலும் கொண்டுவந்து விட்டு விட்டார்கள். இதன் பலனாய் இப்போது தேசத்தில் எங்கு பார்த்தாலும் பழயபடி வகுப்பு உணர்ச்சிகள் பெருகி, ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் சுயமரியாதையையே சுதந்திரம் என்பதாகக் கொண்டு, தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள். இப்படிப் பாடுபடுவதானது சாது ஜனங்களை ஏமாற்றி ஏற்கனவே பல சுதந்திரங்களும் சௌகரியங்களிலும் செய்து வைத்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்களுக்கு தங்கள் அதிகாரமும் அதிக சுதந்திரமும் போய்விடுமே என்கிற கவலை ஏற்பட்டு, பொதுமக்கள் அடையும் சமத்துவத்திற்கும் முற்போக்கிற்கும் முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டியது, நமது பார்ப்பனர்களின் வேதக் கடமையாய்ப் போய்விட்டது. இதற்காக ஆங்காங்குள்ள பார்ப்பனர்கள் ஒன்று கூடி எவ்வளவோ சூழ்ச்சிகளும் பகீரதப் பிரயத்தனங்களும் செய்து பார்க்கிறார்கள்.

உதாரணமாக வர்ணாசிரம சபை, இந்து மகாசபை, சங்கதன் சுத்தி, சுயராஜ்யக் கக்ஷி, பெங்கால் பேக்ட், இந்தி பாஷை, இரட்டை ஆக்ஷியை ஒழித்தல் ஆகிய இவ்வளவு இயக்கங்களும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் ஆங்கிலம் படித்த ஒரு சிலர் வயிறு வளர்க்கவும் பொதுமக்கள் சமத்துவமும் சுயமரியாதையும் பெறுவதையும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியவர்கள் விடுதலை பெற்று முன்னேறுவதைத் தடுக்கவும், முட்டுக்கட்டை போடவுமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்போது வர வர பாமர ஜனங்கள் இவைகளை உணர்ந்து, இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமலும், சிக்கினவர்களும் சூழ்ச்சியறிந்து வெளிவருவதாலும் நமது பார்ப்பனர்களுக்கு இதுவரையில் ஏற்பட்டிருந்த கவலையை விட இப்போது கொஞ்சம் அதிகமான கவலை ஏற்பட்டு இதற்கு வழி தேடுகிறார்கள். தற்காலம் நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் எவ்வித ஸ்தாபனங்களுக்கும் பாமர ஜனங்களிடையில் மதிப்பில்லாமல் போய் விட்டபடியால், புதிதாய் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி அதன் மூலம் ஜனங்களை மயக்க நமது பார்ப்பனர்கள் புதியதொரு தந்திரம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அது என்னவென்றால், “தேசீய ஒற்றுமைச் சங்கம்” என்பதாக ஒன்றைப் புதிதாகத் தாங்களே சிருஷ்டித்து அதில் இரண்டொரு ராஜீய விளம்பரக்காரர்களிடம் கையெழுத்து வாங்கி தாங்களும் கையெழுத்திட்டு இன்னும் பல சுயநலத்திற்காக எதையும் தியாகம் செய்யத்தக்க “தியாக புருஷர்களின்?” கையெழுத்தையும் வாங்கப் போகிறார்கள்.

இந்து மகாசபை போலவே இச்சங்கத்தை ஒவ்வொரு ஊரிலும் ஸ்தாபிப்பார்கள். அதில் வகுப்பு நலன் நாடுபவர்கள் யாவரும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்களாம். இது ஒரு புதிய தந்திரமென்றே சொல்லுவோம்.

தமிழ்நாடு சார்பாய், ஸ்ரீமான்கள் சீனிவாச சாஸ்திரிகளும் சீனிவாசய்யங்காரும் கையெழுத்திட்டிருக்கிறார்களாம். இந்த இரண்டு பெரியார்களும் வகுப்பு உணர்ச்சியே இல்லாதவர்கள் போலும்! சமத்துவமே ஒரு உருவாய் வந்தவர்கள் போலும்! இருவர்களும் மகாத்மாவையும் ஒத்துழையாமையையும் ஒழித்ததற்குக் கொஞ்சங் குறைய முழுப் பொறுப்பாளிகள். பண்டித மாளவியா அவர்களும் இதில் சேர்ந்து விட்டால் மூவரும் முழுப் பொறுப்பாளிகளாய் விடுவார்கள்.

இந்த சிகாமணிகள் தேச நன்மைக்குப் பாடுபடுகிறவர்களாம். இந்தியாவின் முட்டாள் தனத்தாலும், அடிமைத் தனத்தாலும் அன்னியர்களுக்கு ஒற்றர்களாயிருப்பதாலுமே வாழ வேண்டிய இந்த “பிரபுக்கள்” - இந்தியா சமத்துவமும் சுதந்திரமும் அடைந்த உடன் இந்த நாட்டை விட்டு ஓடவோ அல்லது இந்தியாவிற்கு வேற்றரசரைக் கூட்டி வரவோ வேண்டிய அவசியமுள்ள இந்த ‘வீரர்கள்’ இந்தியாவின் நன்மையை நாடுவதற்கு எப்படி அருகர்களாவார்கள்? இவர்கள் எப்படி நம்முடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உடையவர்கள் ஆவார்கள்? ராஜீய - மத - வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களே இதில் சேரக்கூடாது என்று சொல்லி ஒரு சங்கம் ஸ்தாபித்தால், அதில் யார் போய்ச் சேரக்கூடும்? ராஜ்ஜியத்தை அன்னியனுக்குக் காட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கிறவனும், மதம் இல்லாதவனும், தான் எந்த வகுப்பு என்று தெரிந்து கொள்ள முடியாதவனும் அல்லாமல் வேறு யாராவது இந்த சங்கத்தில் சேரக்கூடுமா என்பது நமக்கு விளங்கவில்லை. மனிதனாய்ப் பிறந்த ஒருவன் தனது தேசாபிமானம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அது போலவே தனது மதாபிமானமும் குலாபிமானமும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இம் மூன்றையும் விட்டுவிட்டு இப்பார்ப்பனர்களிடம் வந்து ஒருவன் அனுபவிக்கப் போகிற லாபம் என்ன? இச்சங்கம் என்பது தற்காலம் ஒவ்வொரு மதஸ்தர்களுக்கும் ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஏற்பட்டிருக்கும் சுயமரியாதை உணர்ச்சியைக் கொல்ல ஏற்பட்ட சங்கமே அல்லாமல் வேறல்லவென்றே கூறுவோம். ஆதலால் நமது முஸ்லீம் சகோதரர்களே! கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்களே! இம் மாய்கையில் சிக்கிக் கொள்ளாமல் உஷாராயிருக்க வேண்டும் . இந்து மகாசபையை எப்படித் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் மண்டையிலடித்து ஒழித்தோமோ, அதுபோலவே இத் தேசீய ஐக்கியச் சங்கம் என்னும் பார்ப்பன அயோக்கியச் சங்கத்தைத் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் வாசற்படியிலேயே அடித்துக்கொல்ல வேண்டும்.

இது சமயம் தமிழ் மக்களின் தலையெழுத்து எவ்வளவு மானக் கேடானதாகவும் இழிவானதாகவும் இருக்கிறது என்பதை சற்று நிதானமாய்க் கவனித்துப் பாருங்கள். கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் யார்? ஸ்ரீமான்களான எஸ்.சத்திய மூர்த்தி அய்யர், எ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே.ஆச்சாரியார், எஸ்.சீனிவாசய்யங்கார், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரிகள் முதலிய பார்ப்பனர்களே. இவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் பிறப்பு என்ன? இவர்கள் ஒழுக்கம் என்ன? இவர்கள் வளர்ப்பு என்ன? இவர்கள் ஜீவனம் என்ன? எந்த வகையில் இப்பொழுது மனிதர்களாய் வாழ்கிறார்கள்? என்ன எண்ணத்தின்மேல் நமக்கு இவர்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்? நமக்குத் தலைவர்களாய் இருக்க இவர்களுக்கு என்ன பாத்தியதையும் யோக்கியதையும் இருக்கிறது? பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளையானது போல் நமது நாட்டைக் காட்டிக் கொடுத்ததல்லாமல், அரசையும் போக போக்கியத்தையும் பாழாக்கியதல்லாமல் நமது சுயமரியாதையை அடியோடு துலைத்ததல்லாமல், நமக்குள் ஒற்றுமைக்கே மார்க்கமில்லாமல் செய்ததோடல்லாமல், நம்மைத் தாழ்ந்தவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் கண்ணில் பார்க்கக் கூடாதவர்கள், கூடப் பேசக் கூடாதவர்கள், சுவாமியினிடம் போகக் கூடாதவர்கள், கோயிலுக்குள் நுழையக் கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள், தாசி மக்கள், வேசி மக்கள், தங்கள் வைப்பாட்டி மக்கள், சண்டாளர்கள் என இப்படிப் பல மாதிரியாக ஆக்கி வைத்துக் கொண்டதோடல்லாமல் இன்னமும் நம்மைக் கெடுத்து ‘நமது இரத்தத்தை’ உறிஞ்சிக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் கொஞ்சமேனும் அச்சமும் நாணமும் இல்லாமல் இனியும் நமக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் நாம் இவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் இருப்பதென்றால், நமக்கு அறிவு உணர்ச்சி ஆண்மை ரத்தம் இருக்கிறதா என்றுதான் கேட்கிறோம்.

ஆதலால் இந்து முஸ்லீம் கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனப் பூண்டு கலந்த எந்தச் சங்கமானாலும் எந்த ஸ்தாபனமானாலும் அதைத் திரும்பிக்கூடப் பார்க்காதீர்கள்! மோக்ஷமானாலும் சரி நரகமானாலும் சரி, உங்கள் காலைக் கொண்டு நீங்கள் நில்லுங்கள். உங்களிடம் பார்ப்பனர்கள் உங்களை தங்களோடு சேரும்படிக்கோ அல்லது தங்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ளும் படிக்கோ வந்து கேட்பார்களேயானால் முதலாவதாக இந்து மகாசபையையும் வர்ணாசிரம சபையையும் ஒழித்துக் கதவடைத்து விட்டு வரச் சொல்லுங்கள்! தாங்கள் கடவுளின் முகத்திலிருந்து பிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், நாம் அவர்கள் வைப்பாட்டி மக்கள், தாழ்ந்தவர்கள், அடிமைகள் என்று சொல்லும் சாஸ்திரங்களையும் ஆதாரங்களையும் நெருப்பில் போட்டுப் பொசுக்கி சாம்பலாக்கி விட்டு வரச் சொல்லுங்கள்! அதை யாராவது இனிமேல் வைத்திருந்தால் அவர்களைக் கழுவிலேற்றுவது என்றும் தூக்கில் போடுவது என்றும் சட்டம் செய்து கொண்டு வரும்படி சொல்லுங்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் நம்மை இப்படிச் செய்துதான், அதாவது நம்முடைய பழைய ஆதாரங்களையும் நமது பெருமைகளையும் கூறும் நூல்களைப் பொசுக்கி அவர்களுக்கு சாதகமாகப் பலவித சட்டங்களைச் செய்து நம்மை இவ்விழிந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லும்படி செய்து கொண்டார்கள். நாம் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நாம் கேட்பது என்ன? சமத்துவமாக இருக்கச் சொல்லுகிறோம். “நீயும் சரி நானும் சரி, இருவருக்கும் சம உரிமை உண்டு” என்றுதான் சொல்லும்படி கேட்கிறோம். இந்து முஸ்லீம் கிறிஸ்துவ சகோதரர்களே! நல்ல சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள்! பார்ப்பனரின் பசப்பு வார்த்தையில் ஏமாந்து விடாதீர்கள்! உங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இத்தருணம் தப்பினால் இனி எத்தருணமும் வாய்க்காது! இதுதான் சமயம்! மகாத்மா காந்தியை நினையுங்கள்! மறுபடியும் அவரை உங்களது தலைவராயிருந்து இழிதன்மையையும் தாழ்மை நிலைமையையும் அடிமைத்தனத்தையும் போக்கிச் சுயமரியாதையையும் சமத்துவத்தையும் விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்கச் சொல்லுங்கள்! இவைகளுக்காக உங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறோம் என்று உங்கள் சுத்தமான இரத்தத்தினால் பேனாவைத் துவைத்து உறுதிமொழிக் கையெழுத்திட்ட விண்ணப்பம் அனுப்புங்கள்! வருவார்! வருவார்!! வருவார்!!! வந்து வினை தீர்ப்பார்!!!!

(குடி அரசு - தலையங்கம் - 15.08.1926)

Pin It