பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே!

இங்கு நடைபெற்றுவரும் இந்தப் பொங்கல் விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிக்காக என்னை அழைத்ததில் நான் ஏதோ எனக்குத் தோன்றும் சில கருத்துகளை உங்களிடம் சொல்லி அளவளாவ முன் வந்திருக்கிறேன். விழா என்பதன் நோக்கமே, மக்கள் பலர் கூடி அளவளாவிக் களிக்க வேண்டும் என்பது தான் விழாவிற்காகப் பல திறப்பட்ட கருத்துகளுடைய மக்கள் ஒன்று சேரும்போது, அவரவர்களுடைய கருத்தை, ஒருவர்க்கொருவர் பறிமாறிக் கொள்ளச் சந்தர்ப்பம் எழுகிறது. இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் அன்றாடம் ஓர் அறிஞரை வரவழைத்து அவருடைய கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும், அதோடு பயனுள்ள காரியமுமாகும். அநேகமாக விழாக்களெல்லாம் இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும்.

நம்நாட்டு விழாக்கள் என்பவை இன்று பெரும்பாலும் அர்த்தமற்ற சடங்குகளாகவே இருந்து வருகின்றன. மேலும் இவைகள், பெரும்பாலும் எந்தக் காலத்திலோ, யாருடைய நன்மை கருதியோ, யாராலோ எதனாலோ ஏற்படுத்தப்பட்டவைகளாயிருக்கின்றனவே ஒழிய, பெரிதும் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஏற்றனவாக அமைந்திருக்கவில்லை. உதாரணமாக, ஒவ்வொரு விழாவும் மதசம்பந்தமானதாகவும், அவை பெரிதும் பார்ப்பான் மேன்மைக்கும் பிழைப்புக்கும் பயன்படத்தக்க ஒரே தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவுமே நாம் காண்கிறோம். அந்தந்த விழாவை ஒட்டிய சடங்குகளும், பெரும்பாலும் துவக்கிய காலந்தொட்டு ஒரே மாதிரியாக இருந்து வருகின் றனவே ஒழிய நாளுக்கு நாள் எவ்வித முன்னேற்ற மாறுதலும் அடைந்துவரக் காணோம்.

மக்களுடைய அறிவு வளர்ச்சிக்கும், விழாச் சடங்குகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இருப்பதாகக் கூட நமக்குத் தோன்றவில்லை. சென்ற ஆண்டில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை, பிள்ளையார் பூஜை, உற்சவம், கடவுள்கள் திருமணம் ஆகிய இவற்றிற்கும், இவ்வாண்டு நடைபெற்ற இவ்விழாக்களுக்கும் நம்மால் எவ்வித மாறுதலும் காண முடியவில்லை. முன்பு விளக் கெண்ணெய் விளக்கு என்றால், இன்று காஸ் லைட், எலக்ட்ரிக் லைட் இது தான் மாறுதல்! நம்முடைய பழம் பண்டிகைகளுங்கூட எவ்வித மாறுதலும் இன்றியேதான் நடைபெற்று வருகின்றன. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்வதால் மக்களுக்கு ஏதாவது பயன் ஏற்படுகிறதா? என்பதுபற்றி, யாரும் கவலை எடுத்துக் கொண்டு சிந்திப்பதில்லை. இந்த மாதிரி பலர் கூடிக் களிக்கும் சந்தர்ப்பத்தை அவர்களிடையே உள்ள வேற்றுமைகளை நீக்கவும், அவர்களது அறிவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் அறிவாளிகள் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். அந்த மாதிரி நம்முடைய விழாக்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வெகு காலமாகவே இருந்து வருகிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பே பொதுநலத் தொண்டர்கள் இதில் போதிய கவனம் செலுத்தியிருப்பார்களானால் நம் நாடு இதற்குள் எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்கும்.

நான் இதுபற்றி கவலை யெடுத்துக் கொண்டு, மேல் நாடுகளில் நடைபெறும் விழாக்களைப்பற்றியும் அவை களின் முறைகளைப்பற்றியும் ஆராய்ந்திருக்கிறேன். எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின்போது, பல விழாக்களில் நான் கலந்துகொண்டும் இருக்கிறேன்.

அவர்களது விழாக்கள் ஒவ்வொன்றிலும், ஏதாவது புதிய படிப்பினை இருக்கும். ஏதாவது முற்போக்கு உணர்ச்சிப் பெருக்கத்திற்கான வசதி இருக்கும். ஆனால், இங்கு எந்த விழாவும் அப்படி இருப்பதில்லை. அறிவுக்கு உணர்ச்சி கொடுக்கும் தன்மையே, நமது விழா முறையில் இருப்பதில்லை. இங்கும் பெரிய பெரிய உற்சவ விழாக்கள், பல லட்சக்கணக்கான பொருட் செலவில் லட்சக்கணக்கான மக்களைக் கூட்டுவித்து நடைபெற்று வருகின்றன. என்றாலும், அவற்றால் அறிவும் நாகரிகமும் மேலும் மேலும் அந்தகாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறதேயல்லாது, ஒன்றேனும் அறிவு விளக்கத்திற்கு நவநாகரிகத்திற்கு ஏற்ற தாய் அமைந்திருக்கவில்லை.

மற்ற நாடுகளில் இம் மாதிரியான விழா நாட்களைக் கண்காட்சி மாதிரி நடத்துவார்கள். அக்கண் காட்சிச் சாலைகளில் , புதிய கற்பனைகள் பல மலிந்திருக்கும் வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள், கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு துறையிலும் எழுத்து, யந்திரம், கைத்தொழில், சித்திரம் ஆகிய சகல துறைகளிலும், அது பெரிய படிப்பினையாக அமைந்திருக்கும். கண்காட்சிச் சாலையின் ஒரு பக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் வெளிவருவதற்குள், ஒருவன் சகல துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக்கொண்டு விடுவான். அவன் உலகத்தின் முன்னேற்ற வளர்ச்சியைத் தன் கண்முன் கண்டு களித்துத் தெளிவு பெறுகிறான். பல ஆராய்ச்சி நுணுக்கங்களை அறியும் வாய்ப்பு பெறுகிறான். பல அதிசய கருவிகளைக் கண்டு அகமகிழ்கிறான்.

சுருங்கக்கூறின், கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெறவேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சியின்மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே பெற்று விடுகிறான். அவ்வளவு பயன் தரத்தக்க முறையில் அவர்கள் கண்காட்சிச் சாலைகளை நடத்துகிறார்கள். மனித சமுதாயத்தின் அறிவு முன்னேற்றத்திற்கென்றே வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கென்றே அவைகள் நடத்தப்பட்டு வருவதால், அதில் அறிவாளிகள் பெருங்கவலை எடுத்துக் கொண்டு உழைக்கிறார்கள். அரசாங்கம் மட்டுமல்ல, தனிப்பட்ட நபர்களும், மனித சமுதாயத்தின் நல் வாழ்வுக்குத் தம்மாலான சகல உதவிகளையும் செய்ய முயற்சிக்கிறார்கள். தொழில் துறையில் இருந்து வருகிற மக்கள், அத்துறையில் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி, மக்கள் தேவைக் கான நற்பொருள்களை நயமான விலைக்குத் தருவதற்கான முயற்சி எடுத்துக் கொள்கிறார்கள். பொதுமக்களின் நன்மைக்கான புதிய புதிய கண்டு பிடிப்புகளை மக்களுக்குக் கண்காட்சியின் மூலம் அறிமுகம் செய்து வருகிறார்கள். தமது வாழ்க்கையையே பொதுமக்களின் நன்மைக்காக அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

(19-1-1948 - அன்று திருவத்திபுரத்தில் கொண்டாடப்பெற்ற பொங்கல் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய கருத்துரை) 

Pin It