பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

Pin It