இராட்சதர்கள் தபசு செய்தார்கள், வரம் பெற்றார்கள். அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் என்பனவெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும் அவர்கள் தலைவர்களை யும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்குக் கடவுள்களும், தேவர் களும் என்ற பெயர் கொண்ட ஆரி யர்கள் வழி தேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல், அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரிய வில்லை.

periyar 307விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யார்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந் தார்கள்? ஏன் வந்தார்கள்? என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.

அதுபோலவே தேவர்கள் யார்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? உலகிற்கு அவர்களால் என்ன பயன்? என்பதற்கும் ஆதாரம் கிடையாது.

இவர்கள் எல்லாம் இமய மலைக்கு இப்புறம்தான், அதாவது இந்தியா கண்டம் என்னும் பிரதேசத்தில் இருந் தார்களே ஒழிய மற்ற இந்தியாவுக்கு அப்பாற்பட்ட அய்ந்து கண்டங்களிலும் இருந்ததாகவோ, அந்தக் கண்டங்களைப் பற்றி இவர்கள் ஏதாவது தெரிந்திருந்த தாகவோ சரியான தகவல்களைக் காணோம்.

கீழ் ஏழு லோகம், மேல் ஏழு லோகம் கண்டு பிடித்தவர்கள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, அய்ரோப்பாக் களைப் பற்றி ஒன்றையும் கண்டு பிடித்ததாகவோ அல்லது அங்குள்ள வர்கள் இந்தியாவையும் சிவ, விஷ்ணு, தேவர், அசுரர், ராட்சதர், சூரன் ஆகிய வர்களை அறிந்திருந்ததாகவோ தகவல் களையும் காண முடியவில்லை.

அவதாரங்களில் கூட அக்கடவுள் களின் ஆட்சியில் அவர்களது பிள்ளை, குட்டி மனைவி முதலியவர்கள் வாழ்க் கையில் உள்ள இடம், மலை, ஆறு, கடல், ஊர், வீடு, வாசல் எல்லாம் இந்தியாவில் இருப்பவைகளைத்தான் சொல்லப்படு கின்றனவே ஒழிய மற்ற நாட்டு மலை, காடு, வனம், நதி, சமுத்திரம் எதுவும் சொல்லப்படவில்லை. கடவுள்கள் தேவர்கள் வாழ்க்கைகளில் காணப்படும் பூலோகமே இந்தியாவாகத்தான் கருதப் பட்டிருக்கின்றதே தவிர வேறு ஒன்றும் சேர்க்கப்படவில்லை .

இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்து, இந்தியக் கண்டத்தின் பூர்வ நிலை அதாவது ஆரியர் வருவதற்குமுன் இருந்த நிலையும் யோசித்துப் பார்த்தால் சிவன், விஷ்ணு அல்லது சேயோன், மாயோன் மற்றும் திருக்குறள், தொல் காப்பியம் ஆகியவற்றில் வரும் உலகம் முதலியவை பெரும்பாலும் இந்தியாவுக் குள் ஆரியர் வந்தபிறகு ஏற்பட்டவை கள்தான் என்பதும் அவை இந்தியாவைப் பொருத்தவைகள்தான் என்பதும் சாதாரணமாய் விளங்கும். அவைகளைப் பற்றித்தான் மற்ற வேறு ஆதாரங்களும் விளங்குகின்றன.

சிந்து நதி தீரத்தைப் பற்றியும் அங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய கண்டுபிடிக்கப்பட்ட பூர்வ சின்னங்களைப் பற்றியும் பேசுவதில் ஆரியர்களுக்கு முன் தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும் இந்தியாக்கண்டம் பூராவும் தமிழர்கள் இருந்தார்கள் என்றும்தான் சொல்லப் படுகிறது.

ஆனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இன்றைக்கு 6000, 7000 வருஷ காலத்துக்கு முந்தியது என்று சொல்லப் படுகிறது. ஆரியர்களுக்கு முன்பே இந்த இடங்கள் நாகரிகமாய் இருந்திருந்தால் ஆரியர் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? இந்தியக் கண்டம் முழுவதும் சமயம், சமுதாயம், கலை, பழக்க வழக்கம் முதலிய யாவும் ஆரியமயமாய் அதில் ஆகமம், ஆரிய ஆச்சாரம், தர்மம், ஆரியக்கதை ஆகியவைகளே கொண்ட இலக்கணம், இலக்கியம், சரித்திரம், காவியம் ஆகியவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?

கோவில்கள் எல்லாம் தமிழர்களுடை யதா? ஆரியர்களுடையதா? என்று பார்த் தாலும் அவற்றிற்குப் பணம் செய்தவனும், கட்டிடம் கட்டியவனும், அதற்கு மான்யம், மடப்பள்ளி விட்டவனும் தமிழனாக இருக்கலாம், சந்தேகமேயில்லை. ஆனால் சொந்தக்காரனும் கோவில் ஆகமக்காரனும் கடவுள் தன்மைக் காரனும் ஆரியனாகத் தானே இருக்கிறான்? கோவில்களில் உள்ள உருவங்கள், அதன் தோற்றத்துக்கு ஆன கதைகள், பூஜை உற்சவ முறைகள், நைவேத்திய சாதனங்கள் ஆகியவை ஆரியர்களுடையதாகத்தானே இருந்து வருகின்றன? அந்தக் கோவில்கள் கட்டப் பட்ட காலத்திலும் அப்போதுள்ள அரசர்கள் ஆட்சியிலும் ஆரிய ஆதிக்கம் தலை சிறந்து உச்ச ஸ்தானத்தில் இருந்தது என்பதற்கு முதல் இடை கடைச்சங்கங் களும் அப்போதிருந்த புலவர்களும், அரசர்களும், அரச நீதியும் அவர்கள் கைக் கொண்டிருந்த சமயங்களும் உதாரணமாக இல்லையா?

இந்த நிலையில் அசுரர்கள் இராட் சதர்கள் என்பவர்கள் யாராக இருந்திருக்க முடியும்? அவர்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? அதுவும் இந்தியாவிற்குள் உள்ள அயோத்தி, மதுரை, டெல்லி, மிதிலை, காந்தாரம், விராடம், விதர்ப்பம், தண்ட காரண்யம், கோதாவரி, சித்திர கூடம் ஆகிய இடங்களும் அங்கும் அதற்குப் பக்கத்திலுமே தாடகை, கரன், சூர்ப்பநகை, மாரிசன் முதலியவர்களும் இருந்தார்கள் என்றால் இவர்கள் யாராக இருந்திருக்க முடியும்? இதைக் கண்டு பிடிக்க பெரிய பெரிய புராண சரித்திர இலக்கிய காவிய நூல் ஆராய்ச்சி ஏன் வேண்டும்?

இவை பொய்க்கதை, கற்பனைக் கதைகளாக இருந்தால் கவலை வேண்டாம். மெய்க்கதை சிறிதாவது நடந்த கதை என்றால் கோதாவரி நதிக்குப் பக்கத்திய தேசத்தில் தான் இராவணன் தங்கை சூர்ப்பநகை, இராவணன் தம்பி கரன் முதலியவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து உங்களைக் கொல்லவே நான் வந்தேன் என்று இராமன் சொல்கிறான். முனிவர்களும் பக்கத்தில் ஜனஸ்தானம் இருக்கிறது, அங்கு இராட்ச தர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்திய கண்டத்தின் பாகத்தைக் கடல் கொண்ட காலம் பதினாயிரம் வருஷத்துக்கு மேற்பட்டது என்கிறார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தது 6000-வருஷத்துக்கு உட்பட்டது என்கிறார்கள். அதற்கு முன்பே தமிழர்கள் இந்திய கண்டம் பூராவும் பரவி இருந்ததோடு தமிழர் ஆட்சியும் அங்கெல் லாம் பரவி இருந்தது என்றும் சொல்லி அஸ்ஸாம் கண்டுபிடிப்புகளையும். சிந்து கண்டுபிடிப்புகளையும் உதாரணம் காட்டுகிறார்கள்.

மீனக்கொடியோனாகிய தெற்கத்திய சம்பாரன் என்னும் அசுர அரசனுடன் தசரதன் சண்டை போட்டதாகவும் வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது. சம்பாரன் என்று ஒரு பாண்டிய மன்னன் இருந்த தாகவும் இலக்கியம் கூறுகிறது. கதையை வளர்த்துவதற்காக இராமன் சீதையை அங்கு போய்த் தேடினான் என்று சொல்லப் பட்டிருக்கிறதே அல்லாமல், சீதை காணா மல் போன சிறிது காலத்திற்குள்ளாகவே இராவணன்தான் தூக்கிக் கொண்டு போனான் என்பதும், அவன் தெற்கே போனான் என்பதும் தெரிந்து போய் விட்டதாகக் காணப்படுகிறது.

அன்றியும் இராவணன் சீதையின் பக்கத்திலேயே இருந்து லட்சுமணன் வெளியில் சென்றவுடன் தூக்கி வந்து இருக்கிறான். மாரிசன், தாடகையின் மகள் பக்கத்திலேயே வசித்திருக்கிறான். சூர்ப்ப நகை தனது மூக்கறுபட்ட உடனே இராவணனிடம் சென்று இரத்த ஒழுக லோடு முறையிட்டிருக்கிறாள். இராவ ணன் உடனே மாரிசனோடு அதைப் பற்றிப் பேசுகிறான்.

விஸ்வாமித்திரன் யாகம் செய்ததும் தாடகை கெடுத்ததும் இந்தியாவில் இன்னும் வடக்கில் என்றா லும் சமீபமாகத்தான் காணப்படுகின்றன. சுக்ரீவன், அனுமார் முதலியவர்களையும் பர்ண சாலைக்கு சமீபத்திலேயே சந்திக் கிறான். ஜடாயு இரத்தம் காயாமல் உயி ருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே இராம லட்சுமணர்கள் காண் கிறார்கள். இராமன் நான் புத்தியில்லாமல் இராட்சதர்களை விரோதித்துக் கொண் டேன் என்று வருந்துகிறான்.

ஆகையால், வால்மீகி கதைப்படி இராட்சதர்கள் இராட்சத அரசர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் பெரும்பா லும் திராவிட நாட்டிற்குள் அல்லது நமக்கு சமீபத்திற்குள்தான் இருந்திருக்க வேண்டுமே ஒழிய அவர்கள் வெளி நாட்டார் என்றோ, வேறு இனத்தார் என்றோ சொல்லுவதற்குத் தக்க ஆதாரம் எதுவும் அதில் காணப்பட வில்லை. வால்மீகி இராமாயணத்தை வால்மீகி கதை முகமாய் எழுதியதால் வர்ணனைக்கு ஆகவும், கவர்ச்சிக்கு ஆகவும் சில கற்பனைகள் சேர்க்க வேண்டியதாக ஆகி, அவை ஒன்றுக் கொன்று முரண்படத்தக்கதாகவும் ஆகிவிட்டதால் பண்டிதர்கள் வக்கீல் களைப் போல் உண்மையைப் பற்றிய லட்சியமில்லாமல் தங்கள் வெற்றி யையே குறி வைத்தும் சில அற்பக் குறிப்புகளை எடுத்துக்கொண்டும் மனசாட்சிக்கு விரோதமாய் கூச்சல் போட்டுத் தேவ அசுரர்களை உறுதிப் படுத்துகிறார்கள், என்பதல்லாமல் வேறு உண்மை என்ன இருக்கிறது. புரா ணங்கள், இதிகாசங்கள், வேத சாஸ் திரங்கள், ஸ்மிருதிகள் என்பவைகள் உள்பட ஆரியர்கள் தங்கள் உயர்வுக்கும் திராவிடர்களை இழிவு படுத்தவும் செய்து கொண்டவைகளே தவிர வேறில்லை. அக்காலத் தமிழர்கள் ஒரு சமயம் பாமர மக்களாக இருந்திருக்கலாம். ஆதலால் சமய சரித்திர ஆதாரங்களைக் கொண்டு நாம் நம்மைக் கவனிக்காமல் தற்கால அறிவைக் கொண்டு நிலையைக் கொண்டு பார்ப்பதுதான் பயன்தரக் கூடியதாகும்.

------------------

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை --”குடிஅரசு” - கட்டுரை - 20.09.1947

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It