வாசகசாலை நம் நாட்டில் அதிகமாயில்லை, காரணம் நூற்றுக்குப் பத்து பேர்தான் படித்துள்ளோம். அந்தப் படித்த கூட்டமோ எனின் பார்ப்பானுக்கு அடிமைப்பட்டுள்ளது.

periyarஎனவேதான், பார்ப்பானைவிட நம் இனத்திலுள்ள சில படித்த மேதாவிகள் என்பவர்களின் தொல்லை நமக்கு அதிகமாயிருந்து வருகிறது. இதற்குக் காரணம் பார்ப்பானுக்கு `ஆமாம் சாமி' போட்டால்தான் அவர்கள் வாழ முடிகிறது. அவ்வித வேலை நிலைக்கு நம் சமுதாயம் அடிமைப்-படுத்தப்பட்டிருக்கிறது.

வெள்ளையன் ஆட்சியில் நமக்குப் படிப்பில்லாமல் செய்யப்-பட்டதென்றால் அது அவர்கள் தப்பிதமல்ல. பார்ப்பனர்கள் நடராஜர் கோவிலில் மாடு படுத்து மறைத்திருப்பதைப் போல, நமக்கும் வெள்ளையருக்குமிடையே புகுந்து கல்வி நம் மக்களுக்குத் தாராளமாக வழங்க விடாமல் தடுத்துவிட்டனர். அதனாலேயேதான் வெள்ளையன் வெளியேறியபோது கணக்குப் பார்த்தால் பார்ப்பனர்களே 100-க்கு 100 படித்திருக்கின்றனர்.

இவ்வித நிலையில் இப்பேர்ப்-பட்ட வாசகசாலைகளிலாவது நம் மக்கள் உலக ஞானத்தை ஓரளவாவது பெற முடியும். பள்ளிக்கூடங்களைவிட இவ்வித வாசகசாலைகளினாலேயே மக்கள் பொது அறிவு பெறமுடியும். எனவே வாசகசாலைகள் தெருக்கள்தோறும் நம் நாட்டில் பெருக வேண்டுமென்பதே எனது பேராசை.

வாசகசாலைகளில் எவ்வித புத்தகங்களிருக்க வேண்டுமென்று அருமைத் தளபதி அண்ணாதுரை அவர்கள் எடுத்துக் கூறினார்.

நான் புராணப் புத்தகத்தைப் படிக்கவேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அத்துடன் அதற்கு நேர்மாறாயிருக்கும் நூல்களையும் படிக்க வேண்டும். இராமாயணம் என்று எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமா-யணமும், கம்பராமாயணமும் படிக்கட்டும். அத்துடன் எங்களது ரூ.1-12-0 விலையிலுள்ள ஏழு புத்தகங்களைக் கொண்ட இராமாயணத்தையும் படித்து இவைகளை எல்லாம் நன்றாகச் சிந்தித்து உண்மையும், உணர்வும் கொள்ளவேண்டும். அதுவே எங்களது கொள்கையுமாகும்.

ஒன்றைத்தான் படிக்க வேண்டும், ஒருவர் சொன்னதுதான் சரி. அதை எதிர்த்துக் கேட்டால் மாபாதகமாகும். நரகம் கிட்டும் என்று கூறி அந்தப் பழக்கத்திலிருந்து வருவதாலேதான் வீரமும், அறிவும் அறமும் பெற்றிருந்த, நம் நாடும் மக்களும் இன்றைய ஈன நிலைக்கு _ -அடிமை வாழ்வுக்கு ஆளாக நேர்ந்தது.

அண்ணாதுரை அவர்கள் கூறியதுபோல் பஞ்சாங்கத்தை நம்பாதவர்கள் நூற்றுக்கு மூன்று பேர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகமேயாகும்.

நாங்கள் நேற்று ஒரு பொதுக் காரியத்துக்காக கோச்சுவண்டி வாங்கினோம். விலை பேசி வாங்கிய பிறகு அந்த வண்டி ஓட்டும் தோழரை ஆபீசில் கொண்டுபோய் வண்டியை விட்டுவிட்டுப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால், இன்றைக்குப் பணம் வேண்டாம், ஒன்பது மணி முதல் பத்தரை மணிவரை ராகு காலம் என்று, அதுவும் பட்டணத்திலுள்ள கோச்மான் கூறுகிறான் என்றால், இவன் பிள்ளை குட்டியும், கோச்மான் வேலை செய்யாமல் வேறு எப்படியிருக்க முடியும்.

அருமை நண்பர்களே! வண்டியோட்டுபவர் மட்டுமென்ன? ராஜாக்கள் முதல் வீராதிவீரர்கள் கூட இந்தப் பாழாய்ப்போன ராகுகாலம், தலைவிதி, முற்பிறப்பு, கருமம், கடாட்சம் என்ற ஏமாற்றுதலில் சிக்குண்டதனால் அல்லவோ நாட்டை ஆண்ட நம் சமுதாயம் பஞ்சை-களாகவும், பனாதிகளாகவும், பறையர்களாகவும், சூத்திரர்களாகவும் இருக்கிறோம்.

சுதந்திரம் வந்த பின்னும் அதுவும் மதப் பற்றற்ற ஆட்சி என்று கூறிக் கொண்டிருக்கும் 1948- இல் கூடவா ராகுகாலமும், சகுனத் தடைகளுமிருக்க வேண்டும். இதைப்பற்றி எங்களைத் தவிர வேறு யார் சிந்தித்தார்கள், அல்லது தைரியமாகக் கூப்பாடு போட்டார்கள் என்று கேட்கிறேன். இப்படி உயிருக்கு ஊசலாடி அரசியலார் அடக்குமுறைக்கு ஆளாகி நாட்டைப் பிடித்தாட்டும் மூடப்பழக்க வழக்க பார்ப்பனியப் பீடையை ஒழிக்க முன்வரும் எங்கள் தலைமீதா கல் எறிவது? பார்ப்பன அடிமைகளை, குண்டர்களை ஏவிவிட்டுக் கலகம் செய்ய முயற்சிப்பது? இந்த மானங்கெட்ட செய்கைகளுக்கு இனியுமா நாட்டில் இடமிருக்க வேண்டும்?

எனவேதான், மனிதன் தான் காணும் விஷயங்களில் உண்மையை அறிய வேண்டு-மானால் வாசகசாலைகள் பெருக வேண்டும். அவ்வித அரிய சேவையை இக்கழகத்தார் வெற்றிகரமாகச் செய்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டு வ.உ.சி. அவர்கள் பேரால் உள்ள இவ் வாசக சாலையைத் திறந்து வைக்க மனமுவந்து ஒப்புக்கொண்டேன்.

* * *

கம்பராமாயணத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் தோன்றி இல்லாவிட்டால் நம் நாட்டின் கலை, ஒழுக்கம் கெட்டிருக்காது.

வால்மீகி இராமாயணத்தில் ஆரியர்களின் இழிவு நன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பன் அவைகளை மறைத்து அவர்களைக் கடவுளாக்கிவிட்டான். கம்பராமாயணத்தைப் போற்றுகிறவர்கள் ஆரிய அடிமைகளாய்த்தானிருக்க முடியும் என்பதே எனது உறுதியான எண்ணமாகும்.

இராமன் ஒரு சகோதரத் துரோகி, அயோக்கியன் என்றும் கூறுவேன். தம்பியைத் துரோகம் செய்தவன் நாடு பரதனுக்கே உரித்தானதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதை முன்னமே அறிந்திருந்தும், தசரதன் பட்டாபிஷேகம் செய்கிறேன் என்று கூறியபோது, இராமன் ஒப்புக்கொள்ளலாமா? அப்போதாவது தம்பி எங்கே என்று ஒரு வார்த்தையாவது கேட்டானா? சாதாரணக் குடும்பங்களில்கூட திருமணம் என்றால் அண்ணன் தம்பி எங்கே? பாட்டன் பூட்டன் எங்கே? தங்கை தமக்கை, உற்றார், உறவினரைக் கேட்கிறோமே. பரதனின் பாட்டனுக்குக்கூட கடிதம் எழுதவில்லை. இவைகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகின்றன.

பரதன் வருவதற்கு முன்னதாகவே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் அவசர அவசரமாக நாள் பார்த்தபோதுகூட, இராமன் ஏன் என்று தடுத்திருப்பானா? இந்தச் சூழ்ச்சியை வேலைக்காரி அறிந்து கொண்ட பிறகல்லவோ பரதனுடைய தாய்க்கு உண்மை தெரியவந்தது. இது எவ்வளவு படுமோசம்.

மகளைத் துரோகம் செய்வதும், தம்பியைத் துரோகம் செய்வதும் மட்டுமல்ல இராமாயணத்திலிருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பொரேஷன் கூட போதாது இக்குடும்பத்துக்கு? இந்த அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் இராமனாவது கேட்டானா? அவன் எப்படிக் கேட்க முடியும்?

ஒரு பெண்ணின் மார்பையும், மூக்கையும் மானமின்றி அறுக்கத் துணிந்தவனுக்குப் பெண்ணின் பெருமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்?

இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளைக் கடவுள் என்று கூறும் கம்பன் பித்தலாட்டக்-காரன் இல்லாமல், வேறு எவனாக இருக்க முடியும். அதேபோன்று அவன் எழுதி வைத்த இராமாயணத்தைப் போற்றித் திரிந்தவர்கள் கம்பனின் பித்தலாட்டத்துக்குத் துணை புரிபவர்கள் என்பதல்லாமல், எந்த வகையில் அவர்களை மக்கள் யோக்கியர்களாய்க் கருத முடியும் என்று கேட்கிறேன்.

எனவே, இந்த இராமாயணங்களையும், புராணங்களையும் நம்பினால் நம் நாட்டின் உயர்வும் மக்களின் ஒழுக்கமும் கெட்டுவிடும்.

நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இரு கண்கள் போன்றிருப்பது குறள். அரசியலார் முதல் மக்கள் வரை அதன்படி நடந்தால், நாடு விரைவில் முன்னேறும். அக்கிரமங்களும் அநீதிகளும் இன்றிருக்கும் சீர்கேடான ஆட்சி அலங்கோலங்களும் ஒழியும். அதிலும் சில குறைகள் இருக்கலாம்; அவைகளை நீக்கி நாம் நமது திருக்குறளைப் படித்து அதன்படி நடைமுறையிலும் இருப்போமானால் மீண்டும் நாம் உலகத்துக்கேகூட வழிகாட்டிகளாகவும், நாகரிகத்தை _ ஒழுக்கத்தைக் கற்பிக்கும் கர்த்தர்களாகவும் கூட விளங்கலாம்.

நான் புராணத்தை நம்புகிறவனல்ல என்றாலும், யாரையாகிலும் குறிப்பிடும்போது `எமன்' போல இருக்கிறான் `பிசாசு' போல இருக்கிறது `ஜம்'மென்று இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறோம். எமனைப் பார்த்தேனா அல்லது பிசாசோடு பழகினேனா இந்திர லோகத்தில் `ஜம்'மென்று வாழ்ந்தேனா, பழக்கத்தில் வரப்பட்ட சொற்களை நாம் வழங்குகிறோம். அதேபோன்று அக்காலத்துக்கு வள்ளுவர் சிலவற்றை உவமையாகக் காட்டியிருக்கக்கூடும். அவைகளை விட்டுவிட்டு இனிக் குறள்களையே படிப்போம், போற்றுவோம், அதன்படி நடப்போம் என்ற உறுதி உங்களுக்கு வேண்டும். ஆடு மாடு மேய்ப்பவனுக்குக்கூட இராமாயணம் பாரதம் தெரியும். இராசா சர்களுக்குக்கூட `குறள்' தெரியாது.

நமது பண்டைய பெருமையான ஏடுகள் அழிக்கப்பட்டன. ஆற்றில் எறியப்பட்டன. மிஞ்சியிருப்பவைகளுக்கு பார்ப்பானே அர்த்தமும், விளக்கமும் எழுதி வந்து-விடுகின்றான். அவன் நீதி சொன்னால், பகவான் சொன்னார், அசரீரி சொல்லிற்று. பார்வதிக்கு பரமசிவன் சொல்ல அதை நந்தி கேட்டிருந்து நாரதரிடம் கூற, நாரதர் ரிஷியிடம் சொல்ல அதை தேசியப் பாஷையில் பிராமணோத்தமர்-களுக்குக் காதில் கூற அதற்கு நான் அர்த்தம் கூறுகிறேன். இதை நம்பு இல்லாவிடில் நரகம் என்று எழுதிவிடுகிறான்.

ஏன், வள்ளுவரையே பார்ப்பானுக்குப் பிறந்தவர் என்று எழுதியிருக்கிறதே! இன்னும் என்ன அக்கிரமத்திற்கு இவர்கள் துணியமாட்டார்கள்.

எனவே, இனியாவது நம்நாட்டின் அரசியல் முதல் மக்களின் ஒழுக்கம் வரை சீர்பட வேண்டுமானால் குறளைப் படியுங்கள். இராமாயணத்தைக் கொளுத்துங்கள். புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்.

எனக்கு யார்மீதும் எந்தக் குறிப்பிட்ட வகுப்பார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ விருப்போ கிடையாது. இனிமேல், நான் ஒன்றும் பட்டத்துக்கோ ஆசைப்பட்டு வாழ வேண்டிய அவசியமுமில்லை, எண்ணமுமில்லை. எங்கள் இயக்கத்துக்கும் அத்தகைய கொள்கை கிடையாது.

எனவே, நம் திராவிட மந்திரிகள் மீதா எனக்குக் கெட்ட எண்ணம் உண்டாகப் போகிறது. அப்படி வேணுமென்றே யாராகிலும் துவேஷப் பிரச்சாரம் செய்தாலும், அதை நீங்கள் தான் நம்பலாமா? நமது மக்களும், நாடும் மந்திரிகளும் உள்ளபடியே தன்மானம் பெற்று எவருக்கும் அடிமைப்பட்டிருத்தல் கூடாதென்-பதற்காகவே இவைகளை எடுத்துக் கூறி வருகிறோம்.

ஒன்று மட்டும் உறுதி. நாங்கள் ஒழிந்தாலும் அடக்குமுறைக்கு இரையானாலும், தங்கள் கொள்கை மட்டும் வெற்றி பெற்றே தீரும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதைக் காணப்போகிறீர்கள்.

--------------------------

7.11.1948 அன்று சென்னை சேத்துப்பட்டு வ.உ.சி. இளைஞர் கழகம் சார்பில் நடைபெற்ற நூல் நிலைய வாசக சாலையினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் ஆற்றிய உரை.- (விடுதலை 10.11.1948)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It