ஜாதியை ஒப்புக் கொள்ளாது, அதை ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டு தொண்டாற்றும் நான், ஜாதிக் கூட்டங்களில் இப்படிப் போய்க் கலந்து கொள்ளலாமா என்று சிலருக்குச் சந்தேகம் எழும்.

சலவைத் தொழிலாளர் கூட்டம் என்றோ, சவரத் தொழிலாளர்கள் கூட்டம் என்றோ, செக்குத் தொழிலாளர்கள் கூட்டம் என்றோ, நகரசுத்தித் தொழிலாளர்கள் கூட்டம் என்றோ, இப்படித் தொழிலின் பெயரால் கூட்டம் கூட்டினாலும், அது ஜாதித் தொழிலாளர் கூட்டம்தான். அந்தத் தொழில்களைச் செய்பவர்கள் எல்லாரும் ஒவ்வொரு ஜாதியினர்களே!

periyarஎங்களுடைய பணி தொழிலை அழிக்க வேண்டும் என்பதல்ல;ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். இன்ன இன்ன தொழில், இன்ன ஜாதியாருக்குத்தான் - இவர்களுக்குச் சமூகத்தில் இன்ன இன்ன மரியாதைதான் என்கின்றவர்களை ஒழிக்க இந்தியாவிலேயே நாங்கள்தான் பாடுபடுகின்றோம். எங்களைத் தவிர வேறு ஆளே இல்லை; வேறு கட்சியும் இல்லை.

இன்று மட்டும் அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளாக - சரித்திர காலந்தொட்டும் இதற்காக எவரும் பாடுபடவே இல்லை.

இப்படிச் ஜாதி முறையினை ஒழிக்க வேண்டும் என்கின்றவர்கள் ஜாதிக் கூட்டத்திற்குப் போய்க் கொண்டே இருந்தால் - அந்தச் ஜாதிக்காரர் அந்த அந்த ஜாதிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டே இருந்தால், எப்படிச் ஜாதி தேடிக் கொண்டே இருந்தால் எப்படிச் ஜாதி ஒழிப்புமுறை வெற்றி பெறும்? என்று சிலர் எண்ணலாம்.

நான் ஜாதிக் கூட்டங்களுக்குப் போக ஆசைப்படுபவன்; அது தவறாகாது; அப்படிச் சென்று அந்தச் ஜாதிக் குறைபாடுகளை - குறையை எடுத்துச் சொல்லி, அதனை ஒழிக்கப் பாடுபட வேண்டும்; சலவைத் தொழிலாளர்கள் மாநாடு என்றால் வண்ணார் ஜாதி மாநாடு என்றுதான் அர்த்தம் (பொருள்); அதுபோலவே செக்குத் தொழிலாளர் மாநாடு செக்காளர்கள் - வாணியர்கள் மாநாடு; நகர சுத்தித் தொழிலாளர் கூட்டம் என்றால் தோட்டிகள் மாநாடு; தச்சுத் தொழிலாளர் என்றால் ஆசாரி ஜாதிக் கூட்டம் - இப்படித்தானே உள்ளது! இன்னத் தொழிலுக்கு இன்ன ஜாதி என்றுதானே உள்ளது! இது கூடாது; ஒழிய வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. எனவே, இது ஒரு ஜாதி மாநாடு என்று கருதியே நான் பேசுகின்றேன்.

தோழர்களே, நான் சொல்லப்போவது உங்களுக்குச் சங்கடமாகத் தான் இருக்கும். நீங்கள் இந்தத் தொழிலை விட்டுவிட வேண்டும். கஷ்டமாக (துன்பமாக) இருந்தாலும் வேறு தொழிலை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜாதி என்கிற பெயரால் மக்களுக்கு இருக்கின்ற இழிவு - அசவுகரியங்கள் ஆகியவை ஒழிய வேண்டும். சிறிது கூலி உயர்வதால் உங்களுக்கு என்ன நன்மை? வண்ணார் என்றால் கீழ்ச்ஜாதி என்கின்ற தன்மை ஒழிந்துவிடுமா?

என்ன கீழ்ச்ஜாதி? நீங்கள் ஆண்களில் 100-க்கு 90- பேர் படிப்பில்லாதவர்கள். பெண்களில் 100-க்கு 95- பேர் தற்குறிகள். பிறர் ஏவலுக்காகக் காத்துக் கிடக்க வேண்டியவர்கள்.

நாங்கள் (திராவிடர் கழகத்தினர்) கண்ணை மூடினால் நீங்கள் பழையபடியும் இன்னும் கேடான, மோசமான அந்தஸ்துக்கு (நிலைக்கு) ஆளாகவேண்டி வரும். இன்னொரு பக்கம் ஜாதி இருக்க வேண்டும், ஜாதித் தொழிலை அவரவர் செய்து ஆகவேண்டும் என்கின்ற முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. எங்களால் தான் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.

தோழர்களே! நீங்கள் மிகச் சிறு பிள்ளைகள். 75- ஆண்டகளுக்கு முன் உங்களுக்கு என்ன சம்பளம் இருந்தது என்று தெரியுமா? ஒரு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு வெளுக்க 8 அணாதான். வாரத்தில் ஒரு நாள் ஒரு தடவை சோறு. ஏதோ விசேஷ (சிறப்பு - விழா) நாள்களில் சோறு பலகாரம் இவ்வளவு தான்; கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஒரு ரூபாயாக உயர்ந்தது.

காரணம் என்ன? இது இழிவான தொழில். இதில் ஈடுபட்டு இருக்கின்றவர்களுக்கு இன்ன இன்ன அந்தஸ்து போதும் என்பதாகத்தான் இருந்து வந்தது. நான் பள்ளிக்கூடத்திற்குப் போன காலத்திலே இரண்டு பசங்கள் (பையன்கள்) படிக்க வருவார்கள். ஒரு பையன் நாவிதர் (முடி திருத்துவோர்) ஜாதி; மற்ற ஒரு பையன் வண்ணார் ஜாதி. அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும்போது வீட்டில் இருந்தே ஆளுக்கு ஒரு தடுக்கும் எடுத்துக் கொண்டு வருவார்கள். அதை வராண்டாவில் (தாழ்வாரம்) போட்டு அதன் மேலேதான் அவர்கள் உட்கார்ந்து கொண்டு படிப்பார்கள். நாங்கள் உள்ளே உட்கார்ந்திருப்போம். இப்படி இருந்த அந்தக்காலத்தில் 8 அணா கொடுத்த நாங்கள் இன்று 5-ரூபாய் மாதத்திற்குக் கொடுக்கின்றோம். பலர் மாதம் 10-ரூபாய்க்கு மேல்கூட கொடுக்கின்றார்கள்.

இன்றோ (சலவை செய்த) துணிக்கு 2- அணா; இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கேட்டாலும்கூடக் கிடைத்துவிடும். ஆனால், சமுதாயத்தில் பிறவியின் பெயரால் இருந்துவரும் அசவுகரியங்களும் (வசதிக் குறைவுகளும்) இழிவும் நீங்க வழி உண்டா? நாலு அணா, 8- அணாவானால், 8- அணா வருமானம் உள்ளவன் 1-ரூபாய்க்காரனாகின்றான். முன்பு தலைச் சவரம் செய்து கொள்ள கால் அணா, அரை அணாதான். இன்று முகச்சவரம் மட்டும் நாலணாவாக உயர்ந்திருக்கின்றது. ஆனால், தொழிலாளியின் கூலி உயர்ந்ததே ஒழிய அவனது கவுரவம் உயர்ந்தா? எங்களுடைய கூப்பாட்டால் ஏதோ ஓர் அளவாவது கவுரவமாக நடத்தப்படுகின்றீர்கள். அதுவும், நகர்ப்புறங்களில்தான். இன்னமும் கிராமப்புறங்களில் உங்களை எப்படி நடத்துகின்றார்கள்? வாடா, போடா என்றுதானே அழைக்கிறார்கள்! சில இடங்களில் அடி, உதை எல்லாம் கூட இருக்கின்றனவே. அவை எல்லாம் இந்தத் தொழிலினால்தானே!

கான்ஸ்டபிளாகவோ, பியூனாகவோ அல்லது பள்ளிக் கூடத்து வாத்தியாராகவோ இருந்தால் வருமானம் குறைவாகவே இருந்தாலும், எவனாவது வாடா போடா என்று கூப்பிடுவானா? எனவே, இந்தத் தொழில் நம்மோடு தீர்ந்தது - நம் பையன் இந்தத் தொழிலுக்கு வரக்கூடாது என்று ஒவ்வொருவரும் முடிவு கட்டிக் கொள்ள வேண்டும்.

மற்ற நாடுகளில் இப்படி இல்லை. காஃபிக் கடை, மளிகைக்கடை, ஜவுளிக்கடை போன்றுதான் சலவைக் கடை, சவரக்கடை என்பவைகளும் உள்ளன.

கூடுமானவரையில் நீங்கள் இந்தத் தொழிலைக் கைவிட்டுவிட வேண்டும்; இன்றேல் வசதியாகவாவது செய்ய வேண்டும். மேல் நாடுகளில் 10- ஆயிரம், 20-ஆயிரம், 50-ஆயிரம் ரூபாய் முதல் போட்டு சலவைக் கடை, சவரக் கடை நடத்துகிறார்கள். அங்குப் பிறவிப்பேதம் பாராட்டப்படவில்லை.

நீங்கள் ஆண் - பெண் அத்தனை பேரும் படிப்பில் ஈடுபட வேண்டும்; ஏழையாக இருந்தாலும் குறைந்தபட்சம் (குறைந்த அளவு) எஸ்.எஸ்.எல்.சி., (பத்தாம் வகுப்பு) வரையிலாவது படிக்க வேண்டும்.

சர்க்காரில், காமராசர் ஆட்சியில் உங்களுக்குத் தக்க வசதி செய்து கொடுத்து இருக்கின்றார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் (Most Backward Class) என்று கருதி, கல்லூரி வரையிலும்கூட எந்த நிலைப் படிப்பு படிப்பதானாலும் சம்பளம் இல்லாமல் செய்திருக்கின்றனர். ஒருவேளை சோறும் போட்டுப் படிப்புச் சொல்லிக் கொடுக்கின்றனர்.

மேல்படிப்புக்கு ஹாஸ்டலுக்கு (தங்கும் விடுதிக்கு) உண்டான பணம் கொடுக்கின்றார்கள். எப்படியாவது படித்து உங்கள் பிள்ளைகள் எல்லாம் பேனா பிடிக்கும் வேலைக்கு உத்தியோகத்திற்குப் போகவேண்டும்.

சம்பளம் அரை வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தாலும் பரவாயில்லை; ஜாதி இழிவு ஒழிந்தால் அதுவே போதும் என்பதுதான் என்னுடைய ஆசை.

எனக்கு நேர் விரோதமாகவே மற்றவர்களும் சொல்லுகின்றார்கள். 15- ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக இருந்தபோது சென்னை - திருவான்மியூரில் நடந்த உங்கள் ஜாதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தார்; அவர் உங்களுக்குச் சொன்ன புத்திமதி என்ன தெரியுமா?

"நீங்கள் நன்றாக வெளுப்பதில் திறமைசாலிகளாக ஆகுங்கள்; ஜாதித் தொழிலை விட்டு விடாதீர்கள்; உங்களுக்குப் படிப்பு முக்கியம் இல்லை; பதவி, உத்தியோகத்தைப்பற்றிச் சிறிதும் எண்ணாதீர்கள்" என்று கூறினார்.

ஒரு காலத்தில் நீங்கள் முழங்காலுக்கு மேல்தான் உடை உடுத்த வேண்டும் என்று இருந்தது. நாங்கள் அந்தக் காலத்தில் வேட்டியை இப்போதுபோல் அல்லாமல் தூக்கிக் கட்டி இருந்தாலும் முழங்காலுக்குமேல் கட்டி இருந்தால் வீட்டில் உள்ளவர்கள், "என்னடா வண்ணான் மாதிரி வேட்டி கட்டி இருக்கிறாய்?" என்பார்கள். இன்று 100-க்கு 90- பேர்கள் சட்டை அணிந்திருக்கிறீர்கள். இந்தப் பெரிய கூட்டத்தில் சட்டை இல்லாதவர்கள் 10- பேர்களைக் கூடப் பார்க்க முடியவில்லை. அந்தக் காலத்தில் நீங்கள் 'சொக்காய்' (சட்டை) போட முடியாது. உங்கள் பெண்கள் எல்லாரும் இடுப்பில் துண்டும், மேலே ஒரு துண்டும்தான் உடுத்தவேண்டும். இப்படித்தான் இருந்தது. இன்று அவைகள் எல்லாம் எங்கே? நீங்கள் மற்ற மேல் ஜாதி என்பவர்கள் போல உடை உடுத்துவதை இன்று எவரும் தடுப்பதற்குப் பதில் சந்தோஷம் (மகிழ்ச்சி) அல்லவா அடைகின்றனர். இன்று கிராமங்களிலுங்கூட அடி - உதை என்பது போன்ற கஷ்டங்கள் (தொல்லைகள்) எல்லாம் பெரிதும் மறைந்து விட்டன.

இப்படிப்பட்ட நிலை எங்கள் பிரச்சாரத்தின் காரணமாகவே அடைந்தீர்கள். இது நீண்ட நாளைக்கு நிற்காது; நாளைக்கே எங்கள் முயற்சிகளுக்கு மாறானவர் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாளில் மாற்றி விடுவார்கள்.

இந்த இராஜகோபாலாச்சாரியார் 1938, 39- இல் (சென்னை மாகாணத்துக்கு) முதன் மந்திரியாக வந்தபோது 2,000, 2,500- பள்ளிகளுக்கு மேல் மூடினார். இப்போதைய முதன் மந்திரி காமராசருக்கு முன்பு, ஆச்சாரியார் இரண்டாவது தடவையாக முதன் மந்திரியாக வந்தாரே அப்போதும் 4000, 5000 பள்ளிகளை மூடினார். இம்மாதிரி நகரங்களில் உள்ள பள்ளிகளை அல்ல - எல்லாம் கிராமங்களில் உங்கள் போன்றவர்கள் உள்ள பிள்ளைகள் படித்து வந்த பள்ளிகளை மூடினார். இம்மாதிரி நகரங்ளில் உள்ள பள்ளிகளை அல்ல - எல்லாம் கிராமங்களில் உங்கள் போன்றவர்கள் உள்ள பிள்ளைகள் படித்து வந்த பள்ளிகளை மூடினார். பாக்கி இருந்த பள்ளிகளிலும் பிள்ளைகள் ஒரு நேரம் படித்தால் போதும் மறுநேரம் அவன் அவன் ஜாதித் தொழிலைச் செய்யப் பழகவேண்டும் என்று உத்தரவு போட்டார்.

வண்ணார் மகன் வெளுக்கவும், நாவிதர் மகன் சிரைக்கவும், குயவர் மகன் சட்டிப்பானை செய்யவும், இப்படிச் ஜாதித் தொழில் பழகவேண்டும் என்று உத்தரவு போட்டார். சர்க்கார் (அரசு) செலவிலேயே ஜாதித் தொழில் இன்னது என்னது என்று பொம்மை போட்டு விளக்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவு போட்டார். படிப்பு, அறிவுக்காக என்பது தப்பு. படிப்பு என்பது ஜாதி அமைப்பு மாறாமல் இருப்பதற்காக என்று பச்சையாகச் சொன்னார். புதிதாக அய்ஸ்கூல்கள் (உயர்நிலைப்பள்ளிகள்) தேவை இல்லை என்று கூறி உத்தரவு கொடுத்து விட்டார்.

எந்த எதிர்க்கட்சிக்காரர்களாலும் அவரை (முதலமைச்சர் ஆச்சாரியாரை) அசைக்க முடியவில்லை. பிறகு எங்களுடைய கூப்பாட்டால் இரகளை (கலகம்) ஏற்படும் என்று பயந்து ஆட்சியை விட்டு ஓடினார். அப்போது காமராசர் அவர்கள் முதன் மந்திரிப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆச்சாரியாரின் வருணாசிரமத் திட்டத்தை இரத்து செய்தார்.

ஆச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் திறந்து மேற்கொண்டும் 5000, 6000- பள்ளிகளைப் புதிதாக ஏற்பாடு செய்தார். முதலில் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்க சம்பளம் இல்லை என்றார். நாளைய வருஷம் முதல் எஸ்.எஸ்.எல்.சி (உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு) வரையிலும் சம்பளம் இல்லை என்று ஆக்கப் போகின்றார். சோற்றுக்கு இல்லாத பிள்ளைகளுக்கு ஒருவேளை சாப்பாடும் போட ஏற்பாடு செய்து உள்ளார்.

நாம் கல்வி இன்மையால்தான் இந்த இழிநிலையில் உள்ளோம். நாடு கல்வி கற்று விட்டால் ஜாதி இழிவு ஒழிந்துவிடும் என்று எண்ணுகின்றார். காமராசர் அவர்களும் ஓர் இழிவான ஜாதி என்று கூறப்பட்ட ஜாதியில் வந்தவர் ஆனதால், மக்களின் இழிநிலையினைப் போக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.

தோழர்களே! வருணாசிரமக் கல்வித் திட்டமானது இன்றும் ஒழிந்தாடில்லை. அதனை மறைமுகமாகப் புகுத்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன சக்கிலிகள் (கால் செருப்பு தைப்போர்) என்றென்றைக்கும் சக்கிலியாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத் தோலை எப்படிப் பதனிடுவது என்று கற்றும் கொடுக்கவும், நெசவாளி பிள்ளைகளுக்கு நெசவு சொல்லிக் கொடுக்கப் பள்ளிகளும், கன்னார் பிள்ளைகளுக்குக் கன்னார் வேலை, தச்சு வேலை சொல்லிக் கொடுக்கப் பள்ளிகளும், இப்படியாகச் சவரத் தொழிலை அவன் நிரந்தமாகவே செய்துவரக் கற்றுக் கொடுக்க அரசாங்கத்தாரால் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளிலும் மறுபடியும் ஜாதித் தொழில் போதிக்க, ஆதாரக் கல்வி என்ற உருப்படாத திட்டமும் புகுத்தப்பட்டு இருக்கின்றது. நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையுமே இப்படிச் ஜாதித் தொழில் பள்ளியாக மாற்ற அரசாங்கம் உத்தரவு இட்டு இருக்கின்றது.

எங்களால் அவர்கள் இந்தத் திட்டத்தை - குலக்கல்வி என்பதைச் சொல்லப் பயப்படுகின்றார்கள். ஆனால், காரியத்தில் புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். மக்கள் இத்தகைய அக்கிரமங்களை எல்லாம் கண்டிக்க முன்வர வேண்டும்.

தோழர்களே! உங்களுக்கு உத்தியோகத்திற்கு வகை இல்லை. சக்கிலி, பறையர்களுக்கு வகை இருக்கின்றது. ஆனால், உங்களுக்கு இல்லை பார்ப்பானுடன் படிப்புப் போட்டியில் ஏதோ தப்பித் தவறி வெற்றி பெற்று வந்தால் ஏதோ உங்களுக்கு உத்தியோகம் உண்டு.

இது பெரும்பாலும் சாத்தியம் இல்லாதது. பறையர், சக்கிலிகள் அப்படிப் போட்டிப் போட வேண்டி, அவர்கள் துலுக்கர், கிறிஸ்தவர்களாக ஆக்க நடைபெற்ற முயற்சி கண்டு பயந்து அவர்களுக்கு இத்தனை உத்தியோகம் சட்டசபை - பார்லிமெண்டு (நாடாளுமன்றம்), ஸ்தலஸ்தாபனங்களிலும் (உள்ளாட்சித் துறை நிறுவனங்களிலும்) இத்தனை பதவிகள் என்று ஒதுக்கியுள்ளார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) ஆட்சியில் இருந்தபோதுதான் பறையனுக்கு முனிசிபல் கவுன்சிலர் (நகராட்சி உறுப்பினர்) பதவி, சட்டசபை, பார்லிமெண்டு ஆகிய ஒன்றில் அங்கத்தினராக (உறுப்பினராக) நியமனம் செய்து முதல் மந்திரி பதவி கொடுத்தும் உயர்ந்த உத்தியோகங்கள் அவர்கள் அடைய வழிவகை செய்தது.

ஆனால், உங்களுக்கு இன்று நாதியே இல்லை. கேட்டால் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொன்று கொடுக்க எங்கே போவது என்பார்கள். நீங்கள் (ஆதிதிராவிடர்) எப்படிப் பொதுத் தொகுதியில் நின்று போட்டியிட்டுத் தேர்தலில் வெற்றி பெற முடியும்? உங்களுக்கு வசதிதான் என்ன இருக்கின்றது? எனவே, உங்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்டசபை பார்லிமெண்டு ஆகியவைகளிலும் ஸ்தானம் (பதவி இடம்) அளிக்க வேண்டியது நியாயமானதேயாகும்.

உங்களுக்கு இருக்கின்ற குறைபாடுகளை எல்லாம் - தேவைகளை எல்லாம் - நீங்கள் உங்கள் சங்கத்தின் மூலமாகத் தீர்மானம் போட்டு அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டுவதோடு இரண்டொரு சட்டசபை மெம்பர்களை (உறுப்பினர்களை) விட்டு அதுபற்றிச் சட்டசபையில் பேசச் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உங்கள் பிரதிநிதிகள் சந்தித்து எடுத்துச் சொல்ல வேண்டும். கூடிய வரையில் கவனிப்பார்கள். முன்பு நான் குறிப்பிட்டது போலவே நமது நல்ல வாய்ப்பாக நமக்கு வாய்த்த முதலமைச்சரும் (காமராசரும்) ஒரு கீழ்ச் ஜாதியில் இருந்து வந்தவர்தான். அவருக்கு மக்களுடைய குறைபாடுகள் நன்றாகத் தெரியும். நீங்கள் எல்லோரும் மக்களுடைய கல்வி, உத்தியோகம் ஆகியவற்றில் அக்கறை காட்டி அடுத்துவரும் தேர்தலிலும் காமராசரையே ஆதரிக்க வேண்டும். அதற்காக அவர் கையைப் பலப்படுத்த அவர் நிறுத்தி வைக்கும் காங்கிரஸ்காரர்களையே ஆதரிக்க வேண்டும்.

நம்மைக் காட்டுமிராண்டியாகவும், இழிமக்களாகவும், ஆக்கிவரும் கடவுள், மதம், பண்டிகைகளைவிட்டு ஒழித்து விடவேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.

நான் கடைசியாக வாக்காளரிடம் மீண்டும் கூறுவது, நீங்கள் ஆண்களும், பெண்களும் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி., வரையிலாவது படிக்க எப்படியாவது முயற்சி செய்ய செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு வர துணிக்காரர் வீடுகளுக்குப் போவதையாவது முதலில் விட்டு ஒழிக்க வேண்டும். அவர்கள் உங்கள் வீடு தேடி, கடை தேடி, துணி கொண்டு வந்து போடச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஒரு சிறிதாவது உங்களுக்குக் கவுரவமும், தொழிலுக்கு மதிப்பும் ஏற்படும்.

-----------------------------------

15.04.1960 ஈரோடு பெரியார் நகரமன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. ”விடுதலை”, 19.04.1960
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It