அரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறது. அரசியல் போட்டி என்பது மிகமிகக் கீழ்த்தரத்திற்கே போய்க் கொண்டிருக்கிறது.

இவை நம் பின் சந்ததிகளைப் பாழாக்கி விடும் போலத் தெரிகிறது.

periyarஇன்றைய மாணவர் சமுதாயத்திற்கு, கிளர்ச்சி - அதாவது சட்டம், அமைதி, ஒழுங்கு தன்மைகளை, அலட்சியமாய்க் கருதிப் போராட்டம் நடத்துவதைத் தான் உற்சாகமாய்க் கருதும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, மனிதப் பண்பு பற்றிய கவலையோ, கல்வியைப் பற்றிய கவலையோ, சிறிதும் இல்லாமல் போய்விட்டது. இதற்கு அரசியல் போட்டியாளர்களே காரணமாவார்கள்.

ஜனநாயகம் என்பது தான் இதற்குக் காரணம் என்றும் சொல்ல வேண்டி இருக்கிறது.

சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலிய காரியங்கள் நம் நாட்டில் முதல் முதல் அரசியலின் பேரால் தான் துவக்கமானதாகத் தெரிகிறது. இதற்குக் காரணஸ்தர்கள் பார்ப்பனர் என்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோல் மனுதரும சாஸ்திரம் தான்.

பார்ப்பன ஜாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாகத் தான் இருந்து வரும். பொதுவாகச் சொல்லப்படுமானால், அரசியலில் காலித்தனம் புகுத்தப்பட்டது. முதல் முதல் சிப்பாய்க் கலகத்தின் போது என்றாலும், நாம் அறிய வங்காலப் பார்ப்பனர்களால் தான் என்று சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அரசியல் காலித்தனம் பொது மக்கள் செயலாக ஆக்கப்பட்டது காந்தியால் தான் என்று சொல்லலாம்.

சட்டசபைகளில் காலித்தனம் என்பது சத்தியமூர்த்தி அய்யர், மோதிலால் நேரு முதலிய பார்ப்பனர்களாலேயே ஆகும். சட்டசபையின் கவுரவமும் ஒழிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ் பக்தர்கள் (காலிகள்) என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலைமை வளர்ச்சிக்கு உற்சாகம் கொடுத்தவர்கள் பார்ப்பனப் பத்திரிக்கைகளே ஆவர்.

பொதுவாழ்வில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கம் குறைந்ததுடன் அவர்கள் காலித்தனத்தை வளர்த்து, நாட்டில் அமைதியையும், பொது ஒழுக்கத்தையும் பாழாக்கிவிட்டார்கள். பார்ப்பனர்கள் தங்களுக்குப் பார்ப்பனர் அல்லாதார்களில் மானம், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் பற்றும், அருகதையும் உள்ள பெரிய மனிதர்கள் என்பவர்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன் அயோக்கியர்கள், காலிகள், பொறுப்பற்ற கீழ்மக்கள் ஆகியோரையே பெரிதும் வேட்டையாடி விளம்பரம் கொடுத்து உண்மையில் பெருமையும், கவுரவமுள்ள பெரியவர்கள் என்பவர்களை எல்லாம் மூலையில் ஒடுங்கும்படிச் செய்துவிட்டார்கள். நல்ல பாரம்பரியத்தின் மதிப்பை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.

மனிதர்களின் தன்மையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், பண்பைப் பற்றிக் கவலைப்படவில்லையானால், மனித சமூதாயத்திற்குப் பாதுகாப்பு எப்படி இருக்க முடியும்?

சமதர்மம் பேசுகிறோம், எப்படிப்பட்ட சமதர்மம் ஏற்பட்டாலும் நம் சமுதாயமும், நாடும், பொது உடைமைச் சமுதாயமாகவும், பொது உடைமை நாடாகவும் ஆகும் வரையில் ஏழை, பணக்காரன் இருந்து தான் தீருவார்கள்; மற்றும் முதலாளி, தொழிலாளி இருந்துதான் தீருவார்கள்; எஜமான் - வேலைக்காரர்கள் இருந்து தான் தீருவார்கள்; இந்த நிலை இருக்குமானால் இருக்கும் வரை ஒரு கட்டுத்திட்டம், ஒழுங்கு முறை இருந்தால் தானே மனித வாழ்வும், காரிய நடப்பும் சரிவர நடந்தேற முடியும்?

மனிதனுக்கு இன்று சொத்துரிமை இருக்கிறது. இதில் மற்றவன் தனது பலாத்காரத்தைப் பயன்படுத்தி உரிமை பெறுவதென்றால், கையில் வலுத்தவன் பயனடைவது என்றால் மனித சமுதாயத்தில் அமைதியும், சமாதானமும் ஆன வாழ்வு எப்படி இருக்க முடியும்?

காந்தி, பார்ப்பானுக்குக் கூலியாகவும், பொறுப்பற்ற மனிதனாகவும் இருந்ததால் சட்டம் மீறுதல், உரிமையை ஒழித்தல், சண்டிததனம் செய்தல் முதலிய காரியங்களைத் தூண்டிவிடுவதில் உற்சாகமாக இருந்து விட்டார்.

இன்றைய தினம் அறிவில்லாமல் காந்தியைப் புகழ்ந்து கூறி பெருமை அடைகிறார்களே ஒழிய, இன்றைய பலாத்காரம், சமாதான பங்கம், காலித்தனம் ஆகிய காரியங்களுக்கு யார் காரணம் என்பதைப் புகழ்கிறவர் எவரும் சிந்திப்பதே இல்லையே!

கட்டுப்பாடும், சமாதானமும் அற்ற தன்மையை சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கி விட்டு ஜனநாயகத்தையும் ஏற்படுத்திவிட்டால் - எந்தக்குணம் எந்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவாரியாய் இருக்கிறார்களோ, அந்த மக்கள் ஆட்சிதான் நிலவும். "தொழிலாளர் தொல்லை," "கூலிக்காரர்கள் தொல்லை" இவர்களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், நாட்டில் இந்த இனம் தானே மெஜாரிட்டியாக உள்ளனர்.

இந்த நிலையில் சமதர்மம், ஜனநாயகம் என்றால் நாடும் - மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

ஆகவே நமது "அரசியல் வாழ்வு" என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரும்.

----------
31.01.1969 அன்று 'விடுதலை'யில் வெளிவந்த தலையங்கம்.
அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Pin It