periyar karunanidhi veerama

வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் என்பது நம்மில் நீண்ட நாளாக நடைபெற்று வந்தாலும், அதன் முறைகளும், கருத்துக்களும் நம்மை இழிவுபடுத்தி, காட்டுமிராண்டி மக்களாக ஆக்கி இருக்கின்றன. உலகிலேயே நம்மைப்போல மான உணர்ச்சியற்ற இழி மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள். அப்படி எதாவது கூற வேண்டுமேயானால் - இருந்தார்கள் என்ற மட்டும் கூற முடியுமே தவிர இருக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது.

உலகமே திருந்தியுங்கூட இழிநிலைக்கு ஆளாக நாம் மட்டும் ஏன் திருந்தவில்லை என்று பார்க்க வேண்டும். உலகிலேயே விலங்குகளைப்போல இழி மக்களாக இருந்த மக்கள் எல்லாரும் கல்வியிலே, பழக்க வழக்கங்களிலே, கருத்திலே திருத்திவிட்டார்கள்!

நம் நாட்டில் அறிவாளிகள், பக்திமான்கள், அறிஞர்கள் தோன்றினார்கள். ஒருவரும் இந்த இழிநிலையைப் போக்க முன்வரவில்லை. மற்றத் துறைகளில் பக்தித் துறையில் இப்படித்தான் தோன்றினார்கள்.

சிலர் இதுபற்றிச் சிந்தித்து இருக்கலாம். ஏதோ இதுபற்றிச் சில பாடல்கள் பாடி இருக்கலாம். அத்தோடு சரி. அதுவும காற்றோடு காற்றாகத்தான் போய் இருக்கும்.

இந்த 2000, 3000- ஆண்டில் எவராது தோன்றினார் என்றால் அவர் சித்தார்த்தர் என்ற புத்தர் ஒருவர்தான்! அவருக்குப் பிறகு வேறு எவரும் வரவில்லை. நாங்கள் (திராவிடர் கழகத்தினர்) தான் எடுத்துக் கூறி வருகிறோம். புத்தர் போதனைகளை எதிரிகள் அழித்து சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள். இதன் காரணமாக எவரும் வெளிவரவில்லை.

உலக மக்கள் எல்லாரும் அறிவில் முன்னேறி - அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து முன்னேறினாலும் நாம் மட்டும் 3000- ஆண்டுகளாகக் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகின்றோம்

மனித சமுதாயத்தில் மூச்சு விடுவதில் இருந்து எல்லா காரியங்களிலும் மதத்தையும், மூடக் கருத்துகளையும் புகுத்தி விட்டார்கள்.

நாம் ஏன் கீழ்ச்சாதி - சூத்திரர்கள் என்றால், அது நம் மதக் கொள்கை. நாம் ஏன் இழி சாதி, நம் பெண்கள் ஏன் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகள்? ஏன் என்றால் அதுதான் நம் சாத்திரம். ஒருவனுக்கு ஒருவர் சடங்குகளில் வித்தியாசம் ஏன் என்றால் அது அவர் அவர்கள் சாதி வழக்கம் என்று - இப்படியாகப் பல வழிகளைக் கூறிக் கொண்டு சிறிதுகூட மாறுதலுக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

நமது சமுதாயத்தில் சட்டத்தை சாத்திரத்தை, மதத்தைப் பழக்க வழக்கங்களை எதை எடுத்துக் கொண்டாலும் நாம் இழி மக்கள்தானே - சூத்திரர்கள் தானே!

எனவே, நாம் இதனில் இருந்து மாறுதல் அடைய வேண்டுமானால், இன்றைய அமைப்புகளான மதம், கடவுள், சாதி, சாத்திரம், அரசாங்கம் அனைத்தையும் உடைத்தெறிய வேண்டும்.

இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்ல எங்களைத் தவிர வேறு ஆளே இல்லை. இந்த ஒரு காரணத்திற்கே நாங்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறோம்.

இது மாதிரி சீர்திருத்தத் திருமணம் இதுவரையில் நடக்காத முறை ஆகும். இதுவரை நடந்து வந்த முறையில் பார்ப்பான் உயர்ந்தவன், நாம் இழிந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்வது என்பதுதானே?

பார்ப்பான் வந்து திருமணம் செய்கின்றான் என்றால் நம் முட்டாள்தனத்தை நிலை நிறுத்தி வைக்கவே வருகின்றான். நாம் எத்தனை டிகிரி முட்டாள் என்பதனைப் பரிசோதிக்கவே பகலில் விளக்கு வைக்கச் சொல்லுவான். செத்தை, குப்பைகளைப் போட்டுக் கொளுத்தி அதில் பதறப் பதற நெய்யை ஊற்றச் சொல்லுவான். நாமும் முட்டாள்தனமாக அவற்றை எல்லாம் செய்கின்றோம். இப்படி வேண்டத் தகாத செய்கைகளை எல்லாம் நிறையப் புகுத்தி விடுகின்றார்கள். இவற்றை மாற்ற வேண்டியதே எங்களது கொள்கையாகும்.

தோழர்களே! நம்மிடையே இந்தத் திருமண முறை எப்படி நடந்து வந்தது என்று ஒருவரும் கூறமுடியாது. பார்ப்பான் வந்த பிறகுதான் புரோகித முறை வந்தது என்று கூறப்பட்டாலும், பார்ப்பான் வருவதற்கு முன் ஏதாவது முறை உண்டா என்றும் கூறுவதற்கே இல்லை. இதற்கு ஏற்ற பெயரும் நம் மொழியில் இல்லையே!

மனிதன் கடவுளை ஏன் திருமணத்தில் புகுத்த வேண்டும்? மனிதன் வட்டி வாங்கவோ, பூமி வாங்கவோ, சாப்பிடவோ கடவுளைக் கூப்பிடுகின்றானா? ஏன் திருமணத்திற்கு மட்டும் இருக்க வேண்டும்?

தோழர்களே! புரோகித முறைப்படி நடக்கும். திருமணம் ஒரு பெண்ணை ஓர் ஆண் அடிமை கொள்ளல் என்பது தானே? இம்மாதிரி சீர்திருத்தத் திருமணத்தினால் பெண் ஆணுக்கு அடிமையல்ல, நண்பர்கள் மாதிரியே என்றாகின்றது.

சுயமரியாதை இயக்கத்தின் காரணமாக நாம் பிரச்சாரம் செய்து வந்த கொள்கை எல்லாம் இன்று சட்டமாகி இருப்பதைக் காண்கின்றோம். பெண்களுக்குச் சொத்துரிமை, மணவிலக்கு, பலதார மணத்தடை, உத்தியோகம் ஆகியவற்றிலும் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது.

நான் காங்கிரசில் தலைவனாக இருந்தவன். செயலாளனாக, தலைவனாக, வழிகாட்டியாகக் கூட இருந்தவன். அந்த ஸ்தாபனத்தின் பித்தலாட்டங்களை எல்லாம் நன்கு உணர்ந்து வெளியேறியவன்.

மற்றவர்கள் மாதிரி நான் சாதாரண ஆளாக இருந்து காங்கிரசில் சேர்ந்தவன் அல்ல. திரு.வி. கலியாணசுந்தர முதலியாராவது வாத்தியாராக இருந்து அரசியலுக்கு வந்தவர். வரதராஜூலு மட்டும் என்ன? அவரும் சாதாரண ஆளாக இருந்து காங்கிரசிற்கு வந்தவர் தான். நான் காங்கிரசுக்கு வரும்போது ஒரு பெரிய வியாபாரியாக இருந்து, ஏராளமான வருவாய் வரும் அந்தத் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவன். காந்தியாருக்கும், இந்த இராஜகோபாலாச்சாரியாருக்கும் உண்மை சீடனாக இருந்தவன் நான்.

நான் காங்கிரசில் சேர்ந்தது பார்ப்பனர் அல்லாதார் நலனுக்காகப் பாடுபட்டு வந்த ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று எண்ணிச் சேர்ந்தேன். ஆனால், இரண்டாண்டுகளுக்கு உள்ளாகவே பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சியைக் காங்கிரசிலேயே உண்டாக்க வேண்டியவனாகி விட்டேன். காங்கிரசில் உள்ளூர நுழைந்து பார்த்தபோது அது பார்ப்பனர் ஆதிக்கத்திற்கும், பார்ப்பனர்கள் நலனுக்குமாகவே பாடுட்டு வருவதைக் கண்டேன். பெரிய தேசப்பக்தன் எனப் பேர் வாங்கிய பச்சை வருணாசிரமப் பார்ப்பான் வ.வே.சு. அய்யர் நடத்திய சேரன்மா தேவி பரத்து வாஜர் ஆசிரமத்தில் பார்ப்பனப் பிள்ளைக்கு ஒரு மாதிரி பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளுக்கு வேறு மாதிரி என்று உணவு விசயத்திலும், மற்ற நடவடிக்கையிலும் நடத்தி வந்தார். பார்ப்பனப் பிள்ளைகளுக்கு இட்லி, உப்புமா, நமது பையன்களுக்குப் பழைய சோறு! அவன்களுக்கு உள்ளேயும், நம் பையன்களுக்கு வெளியிலேயும் வைத்துப் போடும் அக்கிரமம் நடைபெற்றது. இவ்வளவுக்கும் இந்த ஆசிரமம் காங்கிரசு உதவி நிதியில் நடைபெற்று வந்தது. இந்த அக்கிரமத்தை வெளிப்படையாகவே எதிர்த்துப் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சனை பற்றியும் அக்கிரமங்கள் பற்றியும் வெளுத்து வாங்கினேன்.

அடுத்து ரோடுகளிலும், வீடுகளிலும் மற்றப் பொது இடங்களிலும்கூடத் தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள் நடக்கக் கூடாது என்று மலையாளத்தில் இருந்த முறையையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் வந்தது. இந்தப் போராட்டத்தில் சிறைப்பட்ட திரு. ஜார்ஜ் ஜோசஃப் எனக்குக் கடிதம் எழுதினார்.

"நாயக்கரே இந்தப் பகுதியில் மக்கள் வீதியில் கூட நடக்கக் கூடாதவர்களாக கஷ்டப் (தொல்லைப்)படுகின்றனர். நீங்கள் இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராட வேண்டும்."

என்று எழுதினார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கேசவமேனன், அய்யப்பன், மாதவன் போன்றவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். நானும் போனேன். பொது மக்கள் ஆதரவு நல்ல வண்ணம் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்திலும் - பார்ப்பனர்கள், அவர்கள் வருணாசிரம தர்மம், கடவுள், மதம், சாஸ்திரங்களை எல்லாம் கண்டிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. சாதிக் கொடுமையைக் கண்டிக்க வேண்டுமானால் அதற்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரங்களையும் எதிர்த்துத்தானே ஆகவேண்டும்?

சத்தியாக்கிரகத்தின் காரணமாகக் கடின காவல் தண்டனை அடைந்தேன். இந்தக் காலம் போல அந்தக் காலத்துச் சிறைச்சாலை இருக்காது. அது, சட்டியில் சோறு வாங்கி சாப்பிட்ட காலம்; மூத்திரம், மலம் முதலியவைகளைச் சட்டியில் போய்க்கொண்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்! படுக்க சாக்குதான் தருவார்கள்.

இப்படிச் சிறையில் இருக்கும்போது இராஜா இறந்துவிட்டார். பிறகு எல்லோரையும் விடுவித்தார்கள்.

மீண்டும் போராட்டம் தொடங்கினேன். இராணி வழிக்கு வந்தார். எல்லா ரோடிலும் (சாலையிலும்), எல்லா வீதிகளிலும், எல்லாப் பொது இடங்களிலும் எல்லா பிரசைகளுக்கும் (மக்களுக்கும்) செல்ல உரிமை உண்டு என்று உத்தரவு போட்டார்கள்.

அப்போது எனது பிரச்சாரங்கண்டு பார்ப்பானுக்கு ஆத்திரமும், அச்சமும் ஏற்பட்டது. அவர்களால் என்னைத் தட்டிக் கேட்கவும் முடியவில்லை. அந்தக் காலத்திலேயே "சத்தியாக்கிரகம், சண்டித்தனம் என்பதெல்லாம் வாயில்தான் அகிம்சையே தவிர, நடைமுறையில் மக்களுக்குத் தொல்லை இம்சை கொடுப்பதே ஆகும்" என்று கூறினேன். ஸ்ட்ரைக்கு - வேலை நிறுத்தம் என்பதெல்லாம் காலித்தனம்" என்று அன்றே சொன்னேன். அதையே இன்றைய வரைக்கும் கூறிக்கொண்டுதான் வருகின்றேன்.

--------------------------------

05.07.1960- அன்று சின்னாளப்பட்டியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 22.07.1960
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It