(சென்னை  - வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் ராதா மன்றத்தில் 28.2.1968 வெள்ளி மாலை 5.30 மணியளவில் மலேயா சென்று மீண்ட விடுதலை ஆசிரியர் திரு கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்களுக்கு விடுதலை அலுவலகப் பணியாளர் சார்பில், தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் வரவேற்பும், தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

கம்போசிங் செக்ஷன் திரு. இராதா அனைவரையும் வரவேற்றுப் பேசி தந்தை பெரியாரவர்களை தலைமை ஏற்கும்படி வேண்டிக் கொண்டார்.

திரு. துரைராஜ் (உதவி ஆசிரியர்) வழிமொழிந்து பேசினார்.)

பேரன்புமிக்க தாய்மார்களே! தோழர்களே! ஆசிரியர் வீரமணி அவர்களே! அவரது துணைவியார் மோகனா அவர்களே!

periyar_veeramaniநமது விடுதலை ஆசிரியர் அவர்கள் மலாயா நாடு சென்று சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள மக்களால் நல்ல வண்ணம் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக உடல் நலத்தோடு திரும்பி வந்ததை முன்னிட்டு, நமது விடுதலை அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிக்க மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். இந்த வரவேற்பு விழாவானது விடுதலை அலுவலகத்திலுள்ளவர்களால் நடத்தப்படுகிற விழாவானதால், இந்த விழாவில் நானும், மணியம்மையும் பங்கேற்றுக் கொள்கிறோம்.

ஆசிரியர் அவர்கள், மலாயா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும்போது; அவரை வழி அனுப்ப முடியாது பெரிதும் ஏமாற்றமடைந்தேன். அதுபோலவே அவர் திரும்பி வரும்போதும் அவரை வரவேற்க நான் இருக்க முடியாமல் போய் விட்டது. அம்மாதான் இருந்தார்கள். நான் ஏன் இருக்க முடியாமல் போனதென்றால் முன்கூட்டியே ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியவனாகி விட்டேன். என்னை பொறுத்தவரை நான் ஏற்றுக் கொண்ட காரியங்களுக்குத் தவறாமல் போவது என்று பொது வாழ்வில் ஈடுபட்ட அன்று முதல் எனது பழக்கமாக கடமையாகக் கொண்டிருக் கின்றேன். ஆதலால், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இது எனக்குக் குறையாகவே இருந்தது. ஆசிரியர் அவர்கள் கடிதப்படி 4ஆம் தேதி எதிர்பார்த்தோம். ஆனால், என்ன காரணத்தாலோ 4ஆம் தேதி வர முடியாமல் 5 ஆம் தேதியே வர வேண்டியதாயிற்று நான் 5ஆம் தேதிக்கு தர்மபுரியில் எனது தலைமையில் நடைபெற இருந்த நமது நண்பர் ஒருவரின் தங்கை திருமணத்திற்குச் செல்ல வேண்டியவன் ஆனேன். அதனால் முதல் நாள் வரை இருந்தவன் மறுநாள் தங்கியிருந்து ஆசிரியரை வரவேற்க முடியாமலே போய் விட்டது. 4ஆம் தேதியாக இருந்தால் கண்டிப்பாக நானும் சென்றிருப்பேன்.

கடல் கடந்து சென்றும் இயக்கப் பிரச்சாரம்!

மலாயா போயும் அங்கு எல்லா இடங்களிலும் நமது இயக்கப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். அவருடன் அவர் மனைவியாரும், குழந்தைகளும் சென்றிருந்தார்கள்.

அவர் ஆசிரியராயிருந்து நடத்தும் விடுதலையில் தொண்டாற்றும் தோழர்கள் அனைவரும் அவரை வரவேற்பதன் மூலம் தங்கள் அன்பைக் காட்டிக் கொள்கிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியதாகும்.

அலுவலர் கடமை

என்னைப் பொறுத்தவரை எந்த ஸ்தாபனமானாலும் பணியாற்றுபவர்கள் அன்பிற்குரியவர்களாகவும், அதிருப்தியற்றவர்களாகவும் பதவியிலிருப்பவர்களுக்கு நன்றியுள்ளவர் களாகவும் நடந்து கொள்ள வேண்டும். நமது விடுதலையில் பணியாற்றக் கூடியவர்கள் பாராட்டுக்குரிய வகையில் அன்போடும் பணியில் கஷ்டமிருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் தங்கள் வீட்டு வேலை போல் பொறுப்போடு செய்ய வேண்டும்.

நிர்வாகிகள் கடமை

நிர்வாகப் பதவியிலிருப்பவர்கள் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். பணி செய்பவர்களும் தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் நடந்து கொள்வது போல நடந்து கொள்ள வேண்டும். அதுபோல்தான் நடந்து கொண்டு வருகிறார்கள். மற்ற அலுவலகங்களில் நடப்பதுபோல நம் அலுவலகத்தில் எந்தவிதமான தகராறுக்கும் இடமில்லாமல் நடந்து கொள்கிறார்கள்!

நமது ஆசிரியர் வந்து 6 வருஷமாகிறது. ஆனால், நமது ஆபீஸானது ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேலாகவே நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

ஒருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதில்லை!

ஆசிரியர் பொறுப்பிருந்தவர்கள் ஏதோ சொந்த காரணங்களுக்காக விலகிச் சென்றார்களே தவிர, மற்றபடி இங்குப் பணியிலிருந்தவர்கள் வயதான காரணத்தாலும், உடல் நலம் குன்றி வேலை செய்ய முடியாத நிலையில் போயிருக் கிறார்கள். மேலான வாழ்வு கிடைத்து போயிருக்கிறார்களே தவிர, மற்றபடி நாம் யாரையும் போகச் சொல்லியோ அல்லது பிடிக்காமலோ போனவர்கள் கிடையாது.

40 ஆண்டு சர்வீஸ்காரர்!

ஈரோட்டில் முஸ்தபா என்பவர் 40 வருடமாக இருந்து வருகிறார். சண்முகம் பிள்ளை சாகும் வரை குமாஸ்தாவாக இருந்தார். இங்கும் திரு. துரைராஜ் வந்து 20 வருடமாக பணியாற்றுகிறார். திரு. இராதா சிறு பையனாக இருந்தபோதே இங்கு வந்தவர். இப்படி நம்மிடம் வருபவர்கள் எல்லாம் குறையாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் தங்கள் காரியமாக நினைத்தே உழைத்து வருகின்றார்கள். ஒருவருக் கொருவர் உணர்ந்து வேலை செய்து வருகின்றார்கள். இந்த சமயத்தில் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் நீங்கள் வரவேற்பு அன்பு செலுத்துவதோடு பொறுப்போடு ஒற்றுமை யாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

கண்காணிப்பாளர் கடமை

மேலே இருக்கிறவர்களும்  தங்கள் வீட்டு அங்கத்தினர் களிடம் நடந்து கொள்வது போல அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சிறு குற்றங்கள் செய்தாலும் அதை மன்னித்து அவர்கள் திருந்தச் செய்ய வேண்டும். இது பெருமைக்காக மட்டுமல்ல அலுவலகத்தில் நல்ல வண்ணம் வேலை நடக்கவும் சுமூகமாக ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கவுமாகும்.

சுபாவம் அறிந்து நடக்க வேண்டும்

நிர்வாகத்திலிருக்கும்போது, பணியிலிருக்கும்போது சில குறைகள் ஏற்படலாம். துணைவர்களிடமே உயிருக்குயிரானவர் களிடமே குறை ஏற்படுகிறது. அண்ணன் தம்பிகளிடம் தந்தை மகனிடம் கூட சில குறைகள் ஏற்படத்தான் செய்கின்றன. இது இயற்கை. இதை பெரிதுபடுத்தக் கூடாது. சிலரது சுபாவம் ஒரு மாதிரியாக இருக்கலாம். பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கும். அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அவர் கோபக்காரர். அந்த கோபம் போனால் நன்றாக நடப்பார் என்கிற தன்மையை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

சிலருக்கு தேவை இல்லாமலே பொய் சொல்கிற வழக்கம். சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு முகம் கடுகடு என்று எப்போதும் கோபக்காரராகத் தோன்றும்படி இருக்கும். அது அவரவர்கள் சுபாவம். இந்த மனிதச் சுபாவங்களை உணர்ந்து நமது அலுவலகத்திலுள்ளவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்கட்கும் ஒற்றுமையைத்தான் வலியுறுத்தினேன்

திருச்சியில் அரசாங்கத்தில் பணியாற்றும் நிர்வாகஸ்தர்கள், குமாஸ்தாக்கள், சிப்பந்திகள் எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். அதிலேயும் இதைத்தான் சொன்னேன்.

நீங்களெல்லாம் அன்போடு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. உங்களின் ஒற்றுமையை முக்கியமாகக் கருத வேண்டும். மேலே இருப்பவர்களுக்கு அடங்கி நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம்விட நாமெல்லாம் ஓர் இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம் ஈனமற்ற இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொன்னேன். அதைத்தான் உங்களுக்கும் நான் சொல்கிறேன்.

நீங்களெல்லாம் ஒற்றுமையாக இருந்து காரியம் செய்ய வேண்டும்
இந்த நிறுவனம் லாபகரமான தொழிலல்ல. பொதுத் தொண்டில் இது ஒரு பகுதி என்பதைத்தவிர இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.3000-த்துக்குக் குறையாமல் நஷ்டமாகிறது என்பது உங்களுக்கும் தெரியும். தாயை ஒளித்த சூல் இல்லை என்பது போல உங்களிடம் நான் மறைக்க வேண்டியதில்லை.

விடுதலை அலுவலகப் பணியும்  பொதுத் தொண்டே!

இது ஒரு பொதுத் தொண்டு செய்ய வேண்டிய தொண்டு என்பதால் செய்கிறோம். இதில் ஆசிரியராக  இருக்கிறவருக்கு சம்பளமில்லை மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை. வேறு இடமாக இருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.

ஆசிரியரின் தியாகம்!

நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மலாயா சென்றதன் நோக்கம் இயக்கத் தொண்டுக்கே!

அவர் மலாயா சென்றது தொண்டை முக்கியமாகக் கொண்டு, மற்ற நிலைமையும் தெரிந்து கொண்டு வரவே யாகும். அவருக்கு நீங்களெல்லாம் வரவேற்பளிப்பது மிகவும் பொருத்தமும், கடமையும் ஆகும் என்று சொல்லி பாராட்டு கிறேன். இந்த உணர்ச்சி கடைசி வரை உங்களிடத்திலே இருக்க வேண்டும். நம்மிடத்திலே ஒன்றும் முறையல்ல; கிட்டத் தட்ட நமது மானேஜர் அவர்களும் இந்தக் கருத்துக்காகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். மற்றபடி எந்த லாபமும் கிடையாது. இதில் எனக்கு தலைமை வகிக்கும் பணியைக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சகிப்புத்தன்மை வேண்டும்

ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிற தன்மை வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிற தன்மை வேண்டும். நான் இரண்டு முறை மலாயா சென்றிருந்த போதும் அங்கிருக்கிற நண்பர்கள் நமக்கு உதவியாக இருந்தார்கள். துரைராஜ் குறிப்பிட்டதுபோல தமிழ் முரசு உரிமையாளர் தமிழவேள் திரு. சாரங்கபாணி அவர்கள் மிக உதவியாக இருந்தார்கள். நானும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக் கிறேன். நான் இரண்டு முறை போயிருந்தபோதும் திரு. சாரங் கபாணி அவர்கள் என்னோடு மிக உதவியாக இருந்தார்கள்.

தமிழ்முரசுவின் சமுதாயத் தொண்டு

சிங்கப்பூரில் நான் போயிருந்தபோதுதான் பத்திரிகையை ஆரம்பித்து வைத்தேன். அவரால் நடத்தப்படுகிற தமிழ்முரசு நமது கொள்கைகளை எல்லாம் அங்கு நல்ல வண்ணம் எடுத்து மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது. நமது குடிஅரசுக்கு ஆதரவளித்தவர்களும் அவர்கள்தான். தமிழ்நாட்டில் விற்பனையான அளவுக்கு அங்கும் விற்பனையானது. நிறைய பணமும் வந்தது. நம்முடைய கொள்கைகள் தமிழகத்தைவிட அதிகம் பரவியதற்குக் காரணமே தமிழ்முரசு பத்திரிகை யேயாகும். ஒன்று சொல்கிறேன். நீங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாழ்க்கையையே முக்கிய மாகக் கருதியல்ல. பொதுத் தொண்டுக்காக இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது சமுதாயம் முன்னேற வேண்டுமானால் இன்னும் பல காலம் செல்ல வேண்டும்

வெளிச்சம் கொடுக்குது வெளிச்சத்திற்கு எண்ணெய் தேவை வெளிச்சத்திற்கு யாரும் நன்றி செலுத்த மாட்டார்கள். நீங்களெல்லாம் வெளிச்சம் கொடுப்பவர்கள் உங்களுக்கு எல்லாம் என்ன வேண்டும்? எண்ணெய்; அதைத்தான் கொடுக்கிறோம். உங்களுக்கெல்லாம் இது போதாது தான் அது தெரியும். ஆனால் அவ்வளவுதான் முடிகிறது.

இன்னும் நல்ல வாய்ப்பு வந்து வளரும் படியான காலம் வரலாம். அப்படி ஏற்பட்டால் நிறையச் செய்வதற்கு வசதி ஏற்படும். நீங்கள் எல்லாம் பற்றுதலோடு ஒற்றுமையாக இருந்து தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு எனது மனப்பூர்த்தியான நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

தந்தை பெரியார்-”விடுதலை” 25-2-1968

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It