இரயில் பிரயாணம் செய்யும் பொழுது மூன்றாம் வகுப்பில் தான் செல்வேன். அப்படி யாராவது வலுக் கட்டாயம் செய்து முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகளில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்களானால் நான் அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு, முதலாவது அல்லது இரண்டாவது வகுப்புக்கு உள்ள பிரயாணச் சீட்டின் கட் டணத்தை வாங்கிக் கொள்வேன். ஆனால் பிரயாணச்சீட்டு வாங்கும் பொழுது மூன்றாவது வகுப்புக்கு வாங்கிக் கொண்டு, மீதி உண்டாகும் தொகையை பத்திரமாக முடிப்போட்டு வைத்துக் கொள்வேன்.

ஏனெனில், அவசியமற்ற காரியத்துக்காக பணத்தை வீண் விரயமாக்குவது என்பது எனக்கு வெறுப்பானதும், பிடித்தமில்லாததுமானதாகும். காசு கையில் சிக்கிக் கொண்டது என்பதற்காக தேவையற்றதை அனுபவிக்க ஆசைப்படுவதா? இப்போதைய புதுப்பணக்காரர் பலர் இப்படித்தான் செய்து பணத்தைப் பாழாக்குகிறார்கள்.

நான் காங்கிரசுத் தலைவனாக இருக்கும் போதும் 3ஆம் வகுப்பிலும், கட்டை வண்டியிலும்தான் செல்வேன். சுயமரியாதை இயக்கத் தலைவனாக இருந்தபோதும், கண்ணப்பர் செகண்ட் கிளாசில் வருவார்; நான் கூடவே தேர்ட் கிளாசில் போவேன். ஆச்சாரியார் திரு.வி.க., டாக்டர் நாயுடு செகண்ட் கிளாசில் வருவார்கள்.

நான் தேர்ட் கிளாசில்தான் போவேன். சாதாரணமாக நான் ஈசிச்சேரில் உட்காருவது கிடையாது. எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும், சோபாக்களும் இருக்கிறதென்றாலும்,  ஈசிச் சேர் (சாய்வு நாற்காலி) கிடையாது; இருந்தாலும் அதை உபயோகிப்பதில்லை. ஏனெனில், நான் முதலாவதாக உட்காரும் பொழுது சாய்ந்து கொண்டு கால் கைகளை நீட்டிக் கொண்டு உட்காருவதுமில்லை.

இவையெல்லாம் சுகவாசிகள் அனுப விக்க வேண்டியவை. அப்படி சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புகிறவன் அல்ல. மேலும், சீட்டில் உட்காரும் போது முழு சீட்டில்கூட இல்லாமல் பாதி அளவு மட்டும் சீட்டில் முன் தள்ளி உட்காருவேன். மேலும் என்னுடைய வாழ் நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும், பிரயாண காலத்தில் அனேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக் கொண்டேதான் செல்வேன்.

ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்குமும் படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதோதோ கூறி தப்பித்துக் கொள்ள பார்த்துவிட்டு கடைசியல் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால், அதிகம் தூங்கமாட்டேன். இப்படிப்பட்ட ரகளையின் காரணமாகக்கூட, நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் வரை ஒருவருக்கொருவர் பேசாமல் கூட வருத்தமாக இருப்போம்.

எனக்கு சுகம் பிடிக்காது!

இப்படி, எனக்கு தூங்குகின்ற பழக்கம்கூட வெறுப்பாகிவிட்டது. தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதாகவேயில்லை. அப்படி சுகம் என்கிற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவித கஷ்டமும் இன்றியும் இருக்கிறது. அப்படி இருக்கும் எனக்கு திடீரென்று சுகம் பிறந்து விட்டால் அதை அனுபவிக்க வெட்கமாகத் தானே இருக்கும்!

-----------------------------

21.12.1955 அன்று சென்னையில் தந்தை பெரியாருக்கு புதிய வேன் வழங்கப்பட்ட பொழுது தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It