எனக்கு இந்தச் சர்க்காரைப் பற்றிக் கவலை இல்லை. வேறு எந்த சர்க்கார் வந்தாலும் கவலையில்லை. காந்தியார் சொல்வது போல் ராமராஜ்யம் வந்து ஒரு ஜதை செருப்பு (செருப்பின் பேரால்) 14 வருஷம் மாத்திரமல்ல, 50 வருஷம் ஆண்டாலும் கவலையில்லை. ஆனால், உங்களைப் போல் இழிவும் கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்த பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கிப் போகக் கூடாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறேன்.

உங்கள் சமூக வாழ்வில் சமத்துவம் வேண்டுமானால் நீங்கள் இந்தக் கணமே இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் பறையர், சண்டாளர் ஆகித் தீண்டப்படாதவர்கள் என்று ஆனதற்கு இந்து மதம் தான் காரணம். இந்து மதம் என்றால் பறையன், சூத்திரன், பிராமணன் இருக்க வேண்டும் என்பது தான் கருத்து இந்த பிரிவுகளை நிலைநிறுத்துவதுதான் இந்த மதத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஆகும்.

உங்களைப் பொருத்த வரையில் அம்மதத்தில் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இதை உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு இஸ்லாம் மதத்தைச் சிபாரிசு செய்கிறேன். பெளத்தர்களையும் பிற பெளத்தர்கள் என்றும் பெளத்த பறையர்கள் என்றும் மற்றவர்கள் சொல்லுகிறார்கள். பல பெளத்தர்கள் ஆதிதிராவிடர்களாகத் தான் இன்றும் கருதப்படுகிறார்க்ள்.

கிறிஸ்தவர்களிலும் பறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாதிரிகளே அப்படி கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஆள் எண்ணிக்கை தான் கவலையே தான் தவிர, சுயமரியாதையில் கவலை கிடையாது.

கிறிஸ்தவத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் சுயமரியாதை வேண்டுமானால் அதை விட்டு இஸ்லாமியர்களாகுங்கள் என்று தான் சொல்லி வருகிறேன். மற்றபடி "மோட்சத்தில்", "பாவமன்னிப்பிலோ" எந்த மதம் எப்படி இருந்தாலும் மனிதத் தன்மையில் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மதந்தான் பறைத் தன்மையை ஒழிக்கிறது. பறை துலுக்கன், பறை முகம்மதியர் கிடையாது. பார்ப்பன முஸ்லிம் கிடையாது. மனித முஸ்லிம் தான் உண்டு.

நீங்கள் அதில் விழுந்தாலொழிய 100 வருஷமானாலும் உங்கள் பறை தன்மை போகாது.

தோழர்களே! !இவை என் அபிப்ராயம். இவற்றைக் கேட்ட நீங்கள் உங்கள் புத்தி கொண்டு சிந்தித்து உங்களுக்கு சரியென்றபடி நடங்கள்.

(ஆம்பூரில் 4.7.1937 அன்று நடைப்பெற்ற ஆதிதிராவிடர்கள் மகாநாட்டில் தந்தை பெரியார் சொற்பொழிவு. - 'குடியரசு' இதழ் 16.7.1937)

அனுப்பி உதவியவர்: ஷாஹிது ஒலி

Pin It