சர்க்கார் பரீட்சை தேர்வு முடிவுகளைத் தெரிவிக்கும் சர்ட்டிஃபிகேட் (நற்சான்று பத்திரங்)களில் சர்க்கார் (முடிவை வெளியிடும்) இலாகாதாரர்கள் - பாஸ் ஃபெயல் (Pass - Fail) தேர்வு பெற்றார் - தேர்வு பெறவில்லை என்பதான இரண்டு சொற்களில் ஒன்றைத்தான் எழுதுவேண்டுமே ஒழிய மார்க்கு (குறியீடு) எண்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதாக அரசாங்கத்தார் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

சில பரீட்சைகளில் (தேர்வுகளில்) அப்படித்தான் சர்டிஃபிகேட்களில் குறிப்பிடப்படுகின்றன.

இப்போது சர்க்கார் பார்ப்பனருக்கு விரோதமாக முடியும் என்கிற கருத்தின்மீது உத்யோக அபேட்சை விண்ணப்பங்களில், தொழில் கல்லூரி அபேட்சை விண்ணப்பங்களில் தெரிந்தெடுப்பவருக்கு தெரியாமல் இருக்க வேண்டுமென்பதற்கு ஆகவே ஜாதிப்பெயர்இருக்கக்கூடாது என்று உத்தரவு போடவில்லையா? சர்க்கார் தெரிந்தெடுக்க ஒரு மாணவனுக்கு வேண்டியது குறிப்பிட்ட பரீட்சையில் தேர்வு பெற்றானா?  இல்லையா? என்பதும், நேர்ப் பார்வையில் போதிய அறிவு உடையவனா, இல்லையா என்பவை மாத்திரமே கவனிக்கப்பட வேண்டுமே ஒழிய, மற்றவை பற்றிய கவலை எதற்கு என்றுதான் கேட்கிறேன்.

மார்க்குகளைப் பார்ப்பதில் ஒரு மாணவன் தமிழில், ஆங்கிலத்தில் 42 மார்க்கு வீதம் வாங்கி தேர்வு பெற்றிருக்கிறான்; மற்றொரு மாணவன் 85 மார்க்கு வீதம் வாங்கினதாலும் முதல் வகுப்பில் வெற்றி பெற்று இருக்கிறான். இந்தப்படி மொத்தம் 170 மார்க் அதாவது 86 மார்க்குகள் அதிகம் வாங்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டதால் இந்தப் பையன் எப்படி வைத்தியத்திற்கும், பொறியியலுக்கும் வேண்டிய உயர்ந்த யோக்கியதாம்சமுடையவனாகிவிடுவான்? தேவையான அளவுக்கு 42+42=84 மார்க்கு வாங்கிய பையன் எப்படி தாழ்ந்த யோக்கியதாம் சமுடையவனாகிவிடுவான்? மனிதனுடைய அறிவுசக்தி, திறமை சக்தி வேறு, உருப்போடும் புரோகித சக்தி வேறு என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக்கொண்டே தீர்வான்.

உருப்போடுவது என்பது ஒரு வித்தை. அதை பொது அறிவிலும் பொது யோக்கியதாம்சத்திலும் சேர்ப்பது சுத்த மதியீனம்; அல்லது சூழ்ச்சி_தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். உருப்போடுவதில் ஞாபகசக்தியில் திறமை உடைய அஷ்டாவதானிகள், சதாவதானிகள், வேதபாராயண புரோகிதர், புலவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் பொது அறிவில் மேம்பட்டவர்கள் ஆகிவிடுவார்களா? எனவே பரீட்சைத் தேர்வுப்பத்திரங்களில் மார்க்கு எண்களைக் குறிப்பிடுவதும் அந்த அளவை யோக்கியதாம்சத்தில் சேர்ப்பதும் தகுதி திறமையைப் பாழாக்கிவிடும் என்றே கூறுவேன். உருப்போடுவதில் தேர்ந்தவன் எல்லாம் ஒழுக்கம், நாணயம், வேலைத்தகுதி உடையவன் ஆகிவிடுவானா என்பதை உருப்போடும் திறமையை யோக்கியதாம்சமாய் எடுத்துக்கொள்ள வாதாடும் ஒவ்வொரு பார்ப்பனரையும் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

-----------------

ஈ.வெ.ராமசாமி 7.10.1962

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It