முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள மூவரையும் உடனே தூக்கிலிட வேண்டும்.

- துக்ளக் சோ, சுப்பிரமணிய சாமி, தமிழக காங்கிராசர்

***

உயிர் மட்டுமாவது மிச்சமிருக்கட்டும்

வசந்தி ஸ்டான்லி, தி.மு.க. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்

 கண்ணுக்குக் கண் என்னும் பழிவாங்கும் போக்கு மொத்த உலகையே குருடாக்கி விடும் என்று சொன்னார் காந்தியடிகள். ஆனால் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களின் உயிர்களோ கண்ணுக்குக் கண் என்ற காட்டுமிராண்டிக் கொள்கைக்குப் பலியாக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள்.

உலகளாவிய அளவில் கிட்டத்தட்ட ஐம்பத்தெட்டு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. புத்தரின் தேசமாக, காந்தியின் தேசமாக, அகிம்சையின் தேசமாக, அன்பின், சகிப்புத் தன்மையின், மனித உயிரை மதிக்கும் தேசமாகவே இந்தியா அறியப்பட்டிருக்கிறது. கவனிக்கப்பட்டு வருகிறது.

ஆனால்...

தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச் சாட்டு நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படாத நிலையில், தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டதால் மேல்முறையீடு செய்யக்கூட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஒரு ஆயுள் தண்டனை காலத்திற்கும் மேலாக, 20 ஆண்டுகளாக உற்றார் உறவினரைப் பிரிந்து இளமையையயல்லாம் சிறையில்... தனிமைச் சிறையில் தொலைத்து, என்று மரணம் தங்களைத் தேடிவருமோ என்று நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள். கருணை மனுவுக்குப் பதில் சொல்லவே ஒரு மாமாங்க காலம் (11ஆண்டுகள்) அரசாங்கம் எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது... அதை  நிராகரித்திருப்பதன் மூலம் உலகளாவிய அளவில், இந்தியா மனித உரிமைகளுக்காக எடுத்துக் கொண்ட உறுதிப்பாட்டைத் தானே மீறியிருக்கிறது. அவமதித்திருக்கிறது.

தூக்கிலிடுவது மட்டுமல்ல... தலையை வெட்டிக் கொல்லுதல், மின்சார நாற்காலியில் கொல்லுதல், வி­ ஊசி போட்டுக் கொல்லுதல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், கல்லெறிந்து கொல்லுதல், கத்தியால் குத்திக் கொல்லுதல் போன்ற பலவிதமான மரணதண்டனை முறைகளையும் இன்றைய நாகரிக உலகம் கைவிடவில்லை.

இந்தியாவில் 2001இல் 33 பேருக்கும், 2002இல் 23 பேருக்கும், 2005இல் 77 பேருக்கும், 2006இல் 40 பேருக்கும், 2007இல் 100 பேருக்கும் மரணதண்டனை விதித்திருக்கின்றன இந்திய நீதிமன்றங்கள். ஆனால் அவை எவையுமே நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை.

அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட வேண்டும். அதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் கீழ்க் கோர்ட்டில் விடுதலை ஆகியிருந்தாலோ அல்லது நீதிபதிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றாலோ மரணதண்டனை விதிக்கக் கூடாது என்றெல்லாம் உச்சநீதிமன்றம் விதிமுறைகள் வகுத்திருந்தாலும், தண்டனை என்பது ஒரு மனிதன் திருந்தி வாழ மட்டுமே. இயற்கை வழங்கிய உயிரை எடுப்பதற்காக எந்தச் சட்டமும் இருக்கக் கூடாது, என்பதே நமது நோக்கமாக இருக்கிறது. ஏதேனும் மனித உயிர் சட்டப்படி தூக்கிலிடப்பட்டால் மனிதாபிமானத்தின் கொடி கீழே இறங்கிவிட்டது என்றுதான் பொருள் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு கிருஷ்ணய்யர் சரியாகவே சொல்லியிருக்கிறார்.

என்றைக்கும் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த மூன்று தமிழர்களுக்காகக் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். சிறையில் கழித்த இருபது ஆண்டு காலத்தையே தண்டனையாகக் கருதி இவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்தியா காந்தி அம்மையார் அவர்களின் மறைவின் போது யாரோ இரண்டு சீக்கியர்கள் செய்த தவறுக்குக் காங்கிரஸ் தொண்டர்கள் கட்டுமீறி, உணர்ச்சி வசப்பட்டுச் சீக்கியர்களுக்கு இழைத்த தவறுகளுக்குப் பின்னர் வருந்தி, சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவரையே பிரதமராக அமர்த்தவில்லையா?

ஏற்கனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

எனவே, இளைமை முழுவதையும் இருட்டில் இழந்துவிட்ட,  இந்த மூன்று தமிழர்களின், உயிர் மட்டுமாவது மிச்சமிருக்கும் வகையில், அவர்களின் மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதே மனித நேயத்தின் குரலாகும்.

 ***

'சாமி'களின் கோரமுகம்

வழக். கயல்விழி, சென்னை, உயர்நீதிமன்றம்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை விண்ணப்பத்தை நடுவணரசு விலக்கி அவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

அரசே மரண தண்டனை விதிப்பது என்பது அறநெறிக்கு முரணானது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் அத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நடைமுறையில் இல்லாத தடா சட்டத்தில் ஒரு தீர்ப்பை வழங்கி அதை நிறைவேற்றுவது நீதிக்கு முரணானது. தூக்குத்  தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதி மன்ற நடுவர் கிருஷ்ணய்யர்.

தமிழகமே இன்று எழுச்சியுற்று மூவரின் தூக்குத் தண்டனையைத் தூக்கியயறியக் குரல் எழுப்புகின்றது. ஆனால் இன்றைய தமிழக காங்கிரசும், பார்ப்பனிய சுப்பிரமணிய சாமி மற்றும் துக்ளக் சோ போன்றவர்களும் எந்த ஒரு அடிப்படையும் இன்றி பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறுவது அவர்களின் கோர முகங்களைக் காட்டுகிறது என்பதே உண்மை.

மூவரின் தூக்குத்தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்பது, மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமன்று. அதைக் கடந்து இந்தியப் பார்ப்பனிய அரசக் கட்டமைப்பை உடைத்தெறியும் தமிழ்த் தேசிய எழுச்சியின் அடையாளமாகவும் அது இருக்கிறது. அதில் தமிழகம் தன் அடிமைத்தனத்தை எதிர்க்கும் குரலாகத்தான் மூவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தும் குரலும் உள்ளடங்கும்.

இங்கே மதக்கலவரங்களும், சாதிக்கலவரங்களும் நடக்கும் போது அது நடக்கக் காரணமாக இருக்கும் ஆதிக்க சக்திகளைத்  தண்டிக்க முன்வராத இந்திய அரசும், அதற்கு எதிராக பேசாத காங்கிரஸ் மற்றும் துக்ளக் சுப்பிரமணிய சாமி போன்றோர், இத்தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூறுவது தமிழ்த் தேசிய எழுச்சியை ஒடுக்கும் நோக்கத்தை உள்ளடக்கியதே.

தங்களின் இளமைக்காலத்தை இழந்து 20 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில்  வாழ்ந்தவர்களுக்கு தூக்குத் தண்டனை தருவது இறந்தவர்களை மீண்டும் இறக்க வைப்பது போலாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 20 உட்பிரிவு 2ன் படி, இது இரட்டை மரண தண்டனை ஆகும். இதை செய்வதற்கு இந்திய அரசிற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? உலகின் 193 நாடுகளில் 95 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டது. 8 நாடுகள் போர்க் காலத் துரோகத்திற்கு மட்டுமே இத்தண்டனையை வைத்துள்ளன. 44 நாடுகள் அச்சட்டத்தை வைத்திருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தாமல் உள்ளன.

இந்தச் சூழலில் இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் படி மாநில அரசுகளுக்கும் வழங்கியுள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, மூவர் உயிர்களையும் தமிழக அரசு காப்பாற்ற முடியும். அதற்குத் தமிழக மக்களின் ஒட்டு மொத்தக் குரலும் எழுச்சியுற்றிருக்கிற இந்தச் சூழலில் காங்கிரஸ், சோ சாமிகளின் ஒலி, முடங்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்வோம்.

Pin It