இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் கூட்டத்தில் இருந்து வருகின்றன. அவை:

1. "பிராமண" ஜாதி;

2. "சூத்திர" ஜாதி.

அதாவது மேல் ஜாதி; கீழ்ஜாதி;

மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் அந்த இரு ஜாதிகளின் அதாவது "பிராமண ஜாதி", "சூத்திர ஜாதி" என்பதன் உட்பிரிவுகள் தானே அல்லாமல் - தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. உதாரணமாக "பிராமணரில்" அய்யர், அய்யங்கார், ராவ், ஆச்சாரி, சாஸ்திரி என்பவர்கள் எல்லாரும் பிராமணன் என்கின்ற ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். இவர்களுக்கு "இந்து" சாஸ்திரங்களிலும் "இந்து" சட்டங்களிலும் ஒரே அந்தஸ்துதானே ஒழிய தனித்தனி உயர்வு தாழ்வு அந்தஸ்து கிடையாது.

அதுபோலவே "சூத்திரன்"களிலும் வேளாளன், படையாச்சி, நாயக்கன், செட்டி, ஆசாரி, நாடான், வண்ணான், நாவிதன், குயவன், செம்படவன், பள்ளன், பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் பிரிவுகளும் மற்றும் முதலியார், பிள்ளை, கவுண்டர், தேவர், கள்ளர், மறவர், உடையார், அகமுடையார், தேவாங்கர், செங்குந்தர் முதலிய பிரிவுகளும், பட்டங்களும் எல்லாம் "சூத்திர" ஜாதியின் உட்பிரிவுகளே தவிர, பிறவி ஜாதிகளில் சேர்ந்தவை அல்ல.

மற்றும் ஒரு பிரிவினுள் பல உட்பிரிவுகளும் உண்டு. இவை பெரிதும் உழைப்பு, தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட கோஷ்டிகள் பற்றி ஏற்பட்ட பிரிவுகளே அல்லாமல் புழங்குவதற்கு கொள்வினை கொடுப்பனை செய்ததற்குச் சட்டத்தால் - சாத்திரங்களால் தடையும் தனித்தனி நீதி - நியமமும், ஆசார - அனுஷ்டானமும் ஏற்படுத்தப்பட்ட ஜாதிகள் அல்ல. எனவே, இன்று ஒழிக்கப்பட வேண்டிய ஜாதிகள் மேற்கண்ட "பிராமணன்" "சூத்திரன்" எனப்பட்ட ஜாதிகள் ஆகும். அதாவது, இந்த இரு ஜாதிகளுக்கும் இருந்துவரும் சமூகக் குறைபாடும், வாழ்க்கை நலத்தடைகளுமேயாகும். சமூகக் குறைபாடு என்பது இன்று காணப்படும் தன்மைகளில் சில அதாவது மிகமிகச் சாதாரணத் தன்மையான "கடவுள்" என்ற பெயரால் நட்டுவைக்கப்பட்டு இருக்கும் ஒரு கல். அதன் அறைக்குள் "பிராமணன்தான் போகலாம்; பிராமணன்தான் அந்தக் கல்லுக்குப் பூசை எல்லாம் செய்யலாம்; பிராமணன்தான் அந்தக் கல் சாப்பிட சோறு சமைக்கலாம். பிராமணன்தான் அந்தக் கல்லைக் குளிப்பாட்டலாம்; பிராமணன் தான் அந்தக் கல்லைத் தொடலாம்" என்பன போன்ற நிர்ப்பந்தங்களைச் சாஸ்திராங்களின், பேரால் ஆகமங்களின் பேரால், ஏற்படுத்திக் கொண்டு அவற்றைக் காப்பாற்ற கிரிமினல் முதலிய கட்டங்களில் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதும், இது போன்ற வேறு பல வசதிகள் பிராமண ஜாதிப் பெருமைக்கும் நன்மைக்கும் சுகவாழ்வுக்கும் ஏற்றபடி அமைத்துக் கொண்டு இருப்பவைகளும் ஆகும். இந்த அமைப்புக்கு அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் ஆகும்.
இவற்றின் பயனாய் வாழ்க்கையில் "பிராமணன்" எல்லாத் துறைகளிலும் மேன்மையும், சுகமும் அனுபவிப்பதோடு, உடலுழைப்பு இல்லாமல் ஊரார் உழைப்பில் சுகவாழ்வு, உயர்வாழ்வு வாழ நல்வாய்ப்பு இருப்பதும் ஆகும். மற்றும் இந்த நிலைகள் காப்பாற்றப்படுவதற்கு ஆகவே பொதுக்கல்வி என்ற துறையில் "பிராமணன்" 100-க்கு 100-பேரும் கல்வி உடையவனாய் இருப்பதும், "சூத்திரன்" 100-க்குப் பத்துப் பேர்கூட அதுபோன்ற கல்வி அறிவு இல்லாத மக்களாக இருப்பதும், பொது சேவை என்னும் "நம் சர்க்கார்" பதவிகளில் "இழி தொழில்", "இழி நிலை" - சேவகன், காவல்காரன், அதாவது "அடா" என்று கூப்பிடத்தக்க இழிநிலையில் 100-க்கு 100-பேரும் இருந்து வரவும், "உத்தியோகம்" "பதவி" "உயர் பதவி" என்பவைகளில், தலைமையில் 100-க்கு 100-பிராமணரும் மற்றும் மாதம் ரூ.1000-முதல் ரூ.5000-வரையும் அதற்கு மேலும் சம்பளம் வாங்கும் பதவிகளில் "பிராமணர்" அதாவது மொத்த ஜனத் தொகையில் 100-க்கு 3-பேர்களே உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏக போகமாய் 100-க்கு 75-க்கு மேற்பட்ட பதவிகளில் இருந்து வரவும், மற்ற இடைநிலைப் பதவிகளிலும் "பிராமணனர்" 100-க்கு 50-க்கு மேல் அனுபவித்து வரவுமான தன்மை ஏற்படுத்திக் கொண்டு 100-க்கு 97- விகிதம் உள்ள "சூத்திரர்"கள் இத்துறைகளில் தலை எடுக்க விடாமல் அழுத்தி வரப்படுகிறது. இந்தப்படியான சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும் சரிநிலை, சரி பங்கு, அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே ஜாதிக்கேட்டை ஒரு பெரு; அளவு ஒழிக்க முடியும்.

இதற்கு அரசாங்க - அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் செய்யப்பட வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா என்றால் ஒரே ஒரு காரியம்தான் உண்டு.

அதாவது,

இரண்டு ஜாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதப்படி ஜாதிவாரி உரிமை அளித்து அந்தப்படி அந்தந்த ஜாதியை அமர்த்துதல்

இந்த இரண்டு காரியமும் செய்வதற்கு மக்கள் சட்ட சபைக்கோ, பார்லிமெண்டுகோ போவதால் சாதிக்கக் கூடியதாகி விடாது. இதற்காக அங்கு போய்ச் செய்ய வேண்டிய காரியம் இன்று சாத்தியமானது அல்ல.

சட்டசபையும் பார்லிமெண்டும் இந்தக் காரியம் செய்ய முடியாத நிபந்தனைக்கு கட்டுப்பாட்டுக்கு அடிமைப்பட்ட இடங்களாகும். ஆனால் ஆட்சியை இந்த இரண்டு காரியங்களையும் செய்யக்கூடாது என்று அரசமைப்புச் சட்டம் தடுப்பதில்லை. செய் என்று நிர்பந்தப்படுத்தக் கூடாதபடிதான் அவைகள் அமைத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றன. எதுபோல் என்றால், ஒரு பார்ப்பனனை அவனது ஜாதி அந்தஸ்தைக் காட்டும் உச்சிக்குடுமியைக் கத்திரித்துக் கொள்வதையும், பூணூல் அறுத்து எரிந்து விடவும் செய்வதில் அவனுக்கு ஒரு தடையும் இல்லை. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நாம் உச்சிக் குடுமியும், பூணூலும் போட்டுக் கொள்வதால் போட்டுக் கொண்டால், அவைகளுக்கு மரியாதை கிடைத்துவிடுகிறது. ஆகவே நாம் செய்யக்கூடியது எல்லாம் அவைகளுக்கு மதிப்பில்லாமல் அவைகளைக் கண்டால் மக்கள் வெறுக்கும்படிச் செய்தால், அவைகளை அவர்களே - பார்ப்பனர்களே எடுத்து விடுவார்கள்; அல்லது மறைத்துக் கொள்ளுவார்கள். அதுபோல் சட்டசபை, பார்லிமெண்ட் பதவிகளைப் பகிஷ்காரம் செய்து பதவிகளுக்கு மதிப்பு இல்லாமலும், போகிறவர்களைப் பரிசிக்கும்படியும் வெறுக்கும்படியும் செய்வோம். ஆனால் அப்பதவியில் ஆதிக்கத்தோடு இருப்பவர்கள் அப்பதவிக்கு மரியாதை சம்பாதிப்பதற்கு ஆசைப்படுவார்கள்; மற்றும் எதனால் மக்கள் பரிகசிக்கிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்து தங்களுக்கு வசதிப்பட்ட அளவுக்கு மக்கள் குறையை நீக்கி, தேவையை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். இதுதான் இயற்கை நியதி ஆகும்.

மற்றும் இன்று நம் மக்கள் தமிழர்கள் என்பவர்களுக்கும் இந்த ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், அதற்கு ஆக முதலாவதும் முக்கியமானதுமான காரியங்களாக எல்லோருக்கும் - இரு ஜாதிக்கும் சமஅளவு சமவிகிதம் சம அந்தஸ்து சமதரம் உள்ள கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பேன். இதை 100 க்கு 3 பேர் எண்ணிக்கை உள்ள சிறு ஜாதியான பார்ப்பான்தான் எதிர்ப்பும், தொல்லையும் கொடுப்பானே ஒழிய மற்ற ஜாதியான் எதிர்க்கவோ தொல்லை கொடுக்கவோ கண்டிப்பாக வெளிவரமாட்டான்.

அதுபோலவே, எல்லா ஜாதியானுக்கும் சர்க்கார் (அரசு) உத்தியோகம், பதவி, ஆதிக்கம் ஆகியவற்றின் எண்ணிக்கை விகிதமே முன்பின் பாராமல் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். இதையும் பார்ப்பானைத் தவிர வேறு எவனும் தடுப்புக்கு வரமாட்டான். இதற்கு - இக்காரியங்கள் செய்யப்படுவதற்குக் கிளர்ச்சிதான் வேண்டுமே தவிர சட்டசபை - பார்லிமெண்டு தேவை இல்லை.

உண்மையான பொதுத் தொண்டு ஆர்வமுள்ள மனிதன் தன் முயற்சி, உழைப்பு, செல்வம், "தியாகம்" ஆகியவைகளைச் செலவழிப்பதுதான், நாணயமும், ஒழுக்கமும், யோக்கியமும் ஆன காரியம் ஆகுமே தவிர மற்ற எந்தக் காரியத்திற்குச் செலவழிப்பதும் மேற்காட்டிய குணங்களுக்கு எதிர்மறை குணங்களே ஆகும்.

"இந்தக் காரியங்களில் ஜாதி ஒழிந்துவிடுமோ" என்று தங்களை "அறிவாளிகள்" என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களை நான் கேட்பதாவது: தம்பீ! "ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமும், முதலாவதுமான காரியம்" என்று நீ நினைக்கிறாயா?" என்பதுதான். "ஆம் நினைக்கிறேன்" என்றால் அதற்கு ஆக இதுவரை நீ செய்தது என்ன? அதற்கு ருஜூ (சாட்சியம்) என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன?" என்பதே எனது தாழ்மையான அடுத்த கேள்வியாகும்.

"அதற்கு ஆக நான் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பாடுபட்டு சட்ட சபைக்குப் போனேன். பார்லிமெண்டுக்குப் போனேன்" என்று சொல்லக்கூடும்.

சரி, நீ போனாய், அங்கு போய் ஜாதியை ஒழிக்க நீ என்ன செய்தாய்? கேள்வி கேட்டாயா? மசோதா கொண்டு போனாயா?

"கேள்வி கேட்டேன், மசோதா கொண்டு போகவில்லை" என்றுதான் நீ சொல்லக்கூடும்; என்றாலும், இரண்டும் உன்னால் ஆகக்கூடிய காரியமல்ல, ஏன் என்றால் சட்டசபையில் ஜாதிப் பேச்சுக்கே இடமில்லை. ஆதலால் அங்குக் கேட்டிருக்க முடியாது. கேட்டாலும் பயன் இல்லை.

பார்லிமெண்ட்டில் மசோதா கொண்டு போயிருக்கலாம். அங்குக் காங்கிரஸ் தவிர பல கட்சிகள் உண்டு. அதற்கு வேண்டிய தகுதி, திறமை, வசதி, வாய்ப்பு உனக்கு இல்லாவிட்டாலும் உள்ளவர்கள் கொண்டு போயிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்குக் கிடைத்த பயன் (பதில்) என்ன தெரியுமா உனக்கு?

அதுதான்,

"சட்டத்தால் ஜாதியை ஒழிக்க முடியாது"

என்பதுதான். அத்தோடு தீர்ந்து விட்டது அந்தப் பேச்சு! இனி யாரும் கொண்டு போகமாட்டார்கள். ஏன் என்றால் "ஜாதியை ஒழிக்க அரசமைப்பு அரசியல் சட்டத்தில் இடமில்லை" என்பது தான் அந்தப் பதிலின் பொருள்.

பிறகு இதற்கு நீ என்ன செய்தாய்? செய்யப் போகிறாய்? சொல்லு தம்பீ! நான் சொல்லட்டுமா? அன்று முதல் இன்றுவரை அந்தப் பேச்சையே பேசக்கூடாது என்று கருதி என்று கருதி மறந்தேவிட்டாய் அவ்வளவுதான்.

அந்தப்பேச்சு:-

"அந்தப் பேச்சு" என்பதற்கு ஒரு கதை உண்டு.

அதாவது:- ஒருவன் காலையில் வெளிக்குப் போகக் குளத்து மேட்டுக்குப் போகிறவன் - புகையிலைச் சுருட்டு வாங்க ஒரு கடைக்குப் போனான். சுருட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுக்கத் தனது முடிச்சை அவிழ்த்துக் கொண்டே அந்தக் கடைக்காரனைப் பார்த்து "என்ன அய்யா, இந்தச் சுருட்டு பத்துமா? அதாவது நெருப்புப் பிடிக்குமா?" என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரன் "நம்ப கடையில் மாத்திரம் அந்தப் பேச்சை பேசக்கூடாது" தெரியுமா? என்று பெருமிதமாய்ப் பதில் சொன்னான். சுருட்டு வாங்கியவன் "கடைக்காரன் இவ்வளவு உறுதியாய்ச் சொல்லுகிறானே, சுருட்டு நல்லதாகத்தான் இருக்கும்" என்று மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு போய்க் குளத்தங்கரையில் நின்றுக்கொண்டு சுருட்டைப் பற்றவைக்க ஒரு பெட்டி நெருப்புக்குச்சியை உரைத்து உரைத்துச் சுருட்டுக்கு நெருப்புப் பற்றவைக்கப் பார்த்தான். சுருட்டுக் கருகிக் கருகிக் குறைகிறதே ஒழிய நெருப்புப் பற்றவே இல்லை. உடனே சுருட்டு வாங்கியவன் ஆத்திரத்தோடும், கோபத்தோடும் கடைக்காரனிடம் வந்து "என்னய்யா! உன் சுருட்டு அரைப்பெட்டி நெருப்புக்குச்சிக் கிழித்தும் பத்தவே இல்லையே? எல்லாம் கருகிப் போச்சே - இதுதான் யோக்கியமா?" என்று கேட்டான்.
அதற்கு அந்தக் கடைக்காரனுக்கு அதற்கு மேல் ஆத்திரமும் கோபமும் வந்து, "அட மடையா! நான் தான் நீ காசு கொடுக்கிறதற்கு முன்னமேயே அந்தச் பேச்சே இங்குப் பேசக் கூடாது" என்று சொன்னேனே; அப்பறம் தானே நீ காசு கொடுத்தே? இப்ப வந்து இது யோக்கியமா? யோக்கியமா? என்று கேட்கரையே; உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கிறதா? என்று கேட்டான். உடனே சுருட்டு வாங்கினவன், "சரி! சரி!! அதிகமாகப் பேசாதே! உன் கடையிலே வந்து நான் சுருட்டு வாங்கினேனே; என்னைப் போட வேண்டும் பழைய செருப்பாலே என்று சொல்லிக் கொண்டு நடந்து கொண்டு குளத்துக்குச் சுருட்டுப் பற்ற வைத்துக் கொண்டு போகிறவர்களை எல்லாம் நிறுத்தி நிறுத்தி அவர்கள் சுருட்டில் தன் சுருட்டை ஒட்டவைத்துப் பற்ற வைத்துக் கொள்ளுகிறவன் போல் பாவனைக் காட்டி, அவர்கள் சுருட்டுப் புகையை எல்லாம் இவன் சுருட்டு மூலம் இழுத்துவிட்டு தனக்கு வெளிக்குப் போகும் உணர்ச்சி வந்த பிறகு வெளிக்குப் போனான்" என்று ஒரு கதை உண்டு. அதுபோல் சட்டசபையில் போய்ச் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சட்டசபைக்காரன் (கடைக்காரன்) உனக்குப் புத்தி இல்லையா?" என்கிறான்.

அது மாத்திரமல்லவே! உன்னைப் போலவே உனக்கும் மேலாகவே நேருவும், காமராசரும் "ஜாதி ஒழியணும்! ஜாதி ஒழியணும்!! ஜாதி ஒழியாத சுதந்திரம் இது என்ன சுதந்தரம்!!" என்றுதானே முழக்கம் இடுகிறார்கள்? உனக்குப் புத்தி இருந்தால் நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர்கள் அதிகாரத்தில் ஜாதியை ஒழிக்க முடியாது என்று கருதித்தானே அப்படித் துக்கப்படுகிறார்கள்? அவர்கள் என்ன அறிவு இல்லாதவர்களா? அல்லது நாணயம் இல்லாதவர்களா?

நேருவையாவது "மேல்ஜாதி"க்காரர் என்று சந்தேகப்படலாம்! காமராசர் மற்றக் கட்சித் தலைவர்களைவிட "கீழ்ஜாதி"க்காரர் என்பவர்தானே? ஏன் அவர் சட்டத்தின் மூலம் சட்டசபை மூலம் ஒழிக்கக் கூடுமானால் ஒழித்திருக்கமாட்டாரா?

ஆனாலும் இவர்கள் உண்மையாய், மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறார்கள் என்பதற்கு அடையாளமாக அவர்களால் கூடியவரை செய்து வருகிறார்களே! அதென்னவென்றால் அதுதானே இதுவரையில் யாரும் செய்திருக்க முடியாத அருமையான வேலை! அதாவது பார்ப்பனர் மாத்திரமல்லாமல், வசதி உள்ளவர்கள் மாத்திரமல்லாமல் இந்தத் தமிழ் நாட்டில் சூத்திரர்கள் என்கின்ற பட்டியலில் வருகிற எல்லா மக்களும் படிக்க வேண்டும். அதுவும் இலவசமாய்ப் படிக்கலாம். இலவசச் சோறு; இலவசப் புத்தகம் முதலிய சாதனம்; இலவசத் துணியும்கூட எனத் தண்டோரா போட்டு படிக்க வைக்கிறார். "இதற்கான செலவு சர்க்காருடையது" என்று முழக்கம் இடுகிறார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாமே ஜாதி ஒழிக்கிற விஷயத்தில் காமராசர் எவ்வளவு உண்மையாக - மனதாரப் பாடுபடுகிறார்கள் என்பதை.

மற்றும் உத்தியோகம், பதவி விஷயங்களிலும் எவ்வளவு தொல்லைகளுக்கு இடையில் அவர்களால் கூடியதை எல்லாம் செய்து, இதுவரை யாரும் செய்யாத அளவுக்குச் செய்து வருகிறார்களே! கல்வி, வைத்தியம், போலீசு, ஜெயில், மின்சாரம், தொழில்துறை, எஞ்சினீயர், வழிநடை எஞ்சினீயர், ரிஜீஸ்ட் ரேஷன், கோவாப்பரேட்டிவ், தேவஸ்தானம், பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ஸ்தல ஸ்தாபனம் மற்றும் சில இலாகா தலைமைப் பதவிகள் அநேகமாக இரண்டாவது (கீழ்) ஜாதிக்காரர்களுக்குத்தானே கொடுத்து வருகிறார்? நாளைக்கும் கொடுக்கப் போகிறார்.

மற்றும் இவர் வந்த பிறகு அய்க்கோர்ட்டுக்கு ஜட்ஜூகளாக,

திரு. கணபதியாபிள்ளை

திரு. சுப்ரமணி நாடார்

திரு. வீராசாமி நாயுடு

திரு. வெங்கடாத்திரி நாயுடு

திரு. கைலாசக் கவுண்டர்

திரு. குட்டி சாயபு

ஆகிய ஆறு பேர்களைக் "கீழான" ஜாதியில் இருந்து நியமித்து இருப்பதோடு, மற்றும் அய்க்கோர்ட்டுக்கே இரண்டு சர்க்கார் வக்கீல், 2-பப்ளிக் பிராசிகியுட்டர்கள் ஆகிய நாலு பேர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதோடு இதற்கு ஆகக் காமராசரும் அவருடைய சகாக்களும் இந்தப் பார்ப்பனர்களிடம் படுகிறபாடும் தொல்லையும் ஆச்சரியார் கட்சிப் பிரச்சாரமும் பார்ப்பன ஜட்ஜூகளின் தீர்ப்புகளும், பார்ப்பன வக்கீல்களின் தொல்லையும், ஓலமும், பார்த்தாலே குருடனுக்கும் விளங்குமே? இதற்குப் பயந்து காமராசர் ஆட்சி மேல்சாதிக்கும் பல பதவிகள் கொடுத்தாலும் கீழே இருப்பவனை அழுத்தும்படியான தலைமைப் பதவி மாத்திரம் மேல் ஜாதிக்கு இல்லாமல் இருந்தால் போதுமானதாகும் என்பேன்.

இவ்வளவு இந்த ஆட்சி செய்தாலும் அவை "கீழ்" ஜாதி மக்களுக்கு, அவர்கள் உரிமைக்கு 16-ல் ஒரு பங்ககூட செய்ததாக ஆகாது என்பதோடு இது இந்தப் பதவியில் முன்பு இருந்த பார்ப்பனர்கள் கீழ் ஜாதிக்குச் செய்துவந்த கொடுமைக்கு 100-ல் ஒரு பங்குப் பரிகாரம்கூடச் செய்ததாக ஆகாது என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதாவது இந்தக் காரியங்கள் முழுக்க முழுக்கவும் உரிமைக்கு ஏற்றதாக இல்லை. ஆனாலும் விகிதாச்சாரம் என்பதில் சிறிது கூட இலட்சியம் காட்டவில்லை. ஆனாலும், இதுவரை இந்த 40, 50-வருட காலங்களில் ஏன் 100-வருஷ காலங்களில் நடந்திராத அளவுக்கு நடந்திருக்கும்படிச் செய்திருக்கிறாரே! இந்தக் காரியங்களால் ஜாதி அடியோடு ஒழியவில்லை. ஆனாலும் ஜாதியால் ஏற்பட்ட, ஏற்பட்டு வருகிற பல கேடுகளில் முக்கியமான இரண்டு கேடு ஒழிந்துவிடுவதுடன், ஜாதி ஆணவத்திற்கு ஆதாரமான மேல்ஜாதியின் "இருசு" (ஆக்சிஸ்) அதிக பாரம் ஏற்ற முடியாதபடி வெடிப்பு கண்டுவிட்டதா இல்லையா? என்று கேட்கிறேன். கல்வியாலும், உத்தியோகம், பதவியாலும் மிகமிகப் பின்னணியில் இருக்கிற மக்களான - இரண்டாம் ஜாதியாகிய - நீங்களும் - நாங்களும் - இன்றைய நம்நாட்டு ஆட்சி ஆதிக்கத்தில் இருக்கிறவர்களும் ஆகிய, நாம் தானே.

இதற்கு ஆக தம்பீ! நீ செய்த காரியம் என்ன? இந்த இவ்வளவு அசாத்திய காரியத்தை நீ எப்போதாவது கண் ஜாடை - கை ஜாடையாலாவதுப் பாராட் இருக்கிறாயா? ஆதரித்து இருக்கிறாயா? தொல்லை கொடுக்காமலாவது இருந்திருக்கிறாயா தம்பீ? எதிர்க்காமலாவது தூற்றாமலாவது இருந்திருக்கிறாயா? இல்லாவிட்டாலும் தொலைந்து போகட்டும் எதிரியோடு சேரும் விபீஷணத் துரோகமாவது செய்யாமல் இருந்திருக்கிறாயா? விரலை மடக்கு தம்பிகளா? பார்க்கிறேன். இப்படிப்பட்ட ஓர் அமிழ்தினும் இனிய காரியத்தை எதிர்க்கிறவர்கள் யாராய் இருக்க வேண்டும்? என்று உன் அறிவைச் சிக்கனப்படுத்தாமல் தாரானமாய்ப் பயன்படுத்தி யோசித்துப்பார்.

காமராசர் ஆட்சி நமக்குக் கொடுத்து வரும் சஞ்சீவி மாத்திரையான கல்வி - உத்தியோகம் - பதவி ஆகிய காரியங்களால் எந்த ஜாதிக்கு ஆபத்தோ -கேடு காலமோ ஏற்படுமோ அந்த ஜாதிதானே எதிர்க்க வேண்டும்? எதிர்த்துத் தீரவேண்டும்? அப்படிப்பட்ட ஜாதிதானே இன்று எதிர்ப்பதோடு காமராசரையே கவிழ்க்க வேண்டும் என்று பாடுபடுகிறது. இது ஒன்றே போதுமே எப்படிப்பட்ட மூடசிகாமணியும் காமராசர் ஆட்சியால் ஜாதி ஒழிவதற்குக் கல்நடு விழா நடத்திக் கட்டடம் துவக்கப்பட்டு விட்டது" என்பதை உணர்ந்து கொள்ள முடியுமே! இதைப் பார்த்த மற்றத் தமிழன் இந்தக் கட்டடம் பலமாகக் கட்டப்படவும், சீக்கிரம் முடிவு பெறவும் பாடுபடுவதுதான் அவனது பிறப்பை உயர்த்திக் காட்டும் சின்னம் ஆகுமே தவிர, எதிர்ப்பது, கவிழ்க்கப் பார்ப்பது எதைக் காட்டும் என்பதை நீயே யோசனை செய்துபார்.

ஆகவே என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை ஆனால்,

முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு!

இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காரியங்களை உடல் - பொருள் - ஆவியைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்.
----------------------
13.12.1960- 'விடுதலை'யில் பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய தலையங்கம். 'விடுதலை', 13.12.1960
அனுப்பி உதவியவர்:-- தமிழ் ஓவியா