2011 மே மாதம் உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலித் பெண்மணி மாயாவதி முதலமைச்சராக உள்ள ஆட்சியில், கவுதமபுத்தர் நகர் மாவட்டத்தில், யமுனா விரைவுச் சாலை அமைப்பதற்காகத் தங்கள் விளை நிலங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து உழவர்கள் போராடினர். காவல் துறையினரை ஏவி அரசு அவர்களை ஒடுக்கியது.

தாராளமய - தனியார் மயத்தைத் தீவிரமாக நடை முறைப்படுத்துவதைக் குறிக் கோளாகக் கொண்டுள்ள காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இராகுல் காந்தி, தன் பாதுகாப்பு அரணுக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, மோட்டர் சைக்கிளின் பின் னால் அமர்ந்து, காலை 6 மணிக்கு உ.பி.யின் போராட் டத்தில் ஈடுபட்ட உழவர்க ளைச் சந்தித்துப் பேசினார். இராகுல் காந்தியின் பாட்டி இந்திராகாந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒருமுறை யானை மீது ஏறிச் சென்று, பாதிக்கப்பட்ட மக்க ளைச் சந்தித்தார். இராகுல் காந்தி, இந்தியா முழுவதும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்காகப் பழங்குடியினரின் நிலங்களையும், உழவர்களின் நிலங்களையும் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவாரா?

யமுனா விரைவு நெடுஞ்சாலை, புதுதில்லியையும் ஆக்ராவையும் இணைக்கும் எட்டு வழிச் சாலையாகும். இச்சாலையை அமைக்க 2007இல் உ.பி. அரசு திட்ட மிட்டது. ரூ.9500 கோடி முதலீடு கொண்டது இத்திட்டம். இந்த நெடுஞ்சாலையை அமைக்க 43,000 எக்டேர் நிலம் தேவை. 1,191 கிராமங்கள் இதனால் பாதிக்கப் படும். இத்திட்டத்தை ஜெ.பி. இன்ஃபராடெக் என்ற தனியார் நிறுவனம் நிறைவேற்ற ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, இந்நிறுவனம் இந்த நெடுஞ்சாலை யில், 36 ஆண்டுகளுக்கு வாகனங்களிடம் சுங்கவரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது.

மேலும் 165 கி.மீ. தொலைவுள்ள யமுனா விரைவு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில், உயர் தொழில்நுட்ப நகரங்களை அமைக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப நகரங் களில், தொழிற்பூங்காக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பல அடுக்குப் பேரங்காடிகள், பள்ளிகள், மருத்து வமனைகள் அமைக்கப்படும். ஏழை எளிய மக்கள் இங்கு வேலை பெறவோ, குடியிருக் கவோ, பொருள் வாங்கவோ, படிக்கவோ, மருத்துவம் செய்து கொள்ளவோ முடியாது. 20 விழுக்காட்டினராக உள்ள மேட்டுக் குடியினருக்காகவே ஹை-டெக் நகரங்கள் அமைக் கப்படுகின்றன. ஏனெனில் அமெரிக்காவிலும் பெரும் பணக்காரர்களுக்கு இதுபோன்ற ஹை-டெக் நக ரங்கள் இருக்கின்றன. இந்த ஹை-டெக் நகரங்கள் அமைப் பதால் உ.பி.யில் ஆறு மாவட் டங்களில் 334 கிராமங் களும் 7 இலட்சம் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இப் பகுதியில் உள்ள மேல்சாதி யினரான பார்ப்பனர், ஜாட், தாக்கூர் விவசாயிகளின் நிலங்களும் பறிக்கப்படுவ தால் இப்போது இவர்கள் இப்போராட்டத்தை முன் னின்று நடத்துகின்றனர். வேளாண் கூலித் தொழி லாளர்களாக உள்ள தலித்துகளும் ஜாதவ்களும் (சமார்) இதை ஆதரிக்கின்றனர்.

சுதந்தரப் போராட்டக் காலத்தில், காங்கிரசுக் கட்சி, சுதந்தர இந்தியாவில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்படும் என்பதைக் கொள்கையாக அறிவித்தது. 1955 முதல் 1970 வரையில் மாநிலங்களில் நில உச்சவரம்புச் சட்டம் இயற்றப்பட்டது. மேற்குவங்காளம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஓரளவு முறையாக இச்சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது; உபரி நிலம் பிரித்தளிக்கப்பட்டது. மற்ற மாநி லங்களில் பெயரளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் இன்னும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்துள்ள தனியார் குடும்பங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. பீகாரில் சோசலிசவாதியான நிதீஷ் குமார் ஆட்சியில், 500 ஏக்கருக்கு மேல் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் 500 பேர்களின் பட்டியல் சட்டமன்றத்திலேயே படித்துக்காட்டப்பட்டது. அந்தப் பெரும் பண்ணையார்களின் நிலம் பறிக்கப்படவில்லை.

நிலம் மாநில அதிகாரத்துக்குட்பட்டதாயினும், பொது அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. நில உச்சவரம்புச் சட்டங்களின்படி, 1951-1970களில் உபரி நிலத்தைக் கைப்பற்றி நிலமற்ற விவசாயிகளுக்கு அரசுகள் அளித் திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறின. ஆனால் 1990க்குப்பின் தாராளமயம் - தனியார்மயம் என்ற பெயரில் பெரு முதலாளியக் குழுமங்களுக்காக உழவர் களின் விளை நிலங்களையும், பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாக அனுபவித்துவரும் வனப் பகுதி களையும் உருட்டி, மிரட்டி மய்ய - மாநில அரசுகள் பறித்து வருகின்றன. இதற்காக வெள்ளையர் ஆட்சியில் 1894ஆம் ஆண்டு இயற்றப்பட்ட, “பொது நலனுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்” என்ற கொடிய சட்டத்தை நடுவண் அரசு மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறது.

சுதந்தரம் பெற்ற பின், 1894ஆம் ஆண்டையச் சட்ட அதிகாரத்தைக் கொண்டே இருப்புப் பாதைகள், சாலைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவ மனைகள், அணைகள், சுரங்கங்கள், முதலானவற்றை அமைக்க, அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது. 1947 முதல் 2010 வரையிலான காலத்தில் 3 கோடி மக்கள் ‘பொதுநன்மைக்காக’ என்ற பெயரில் அவர் களின் நிலத்திலிருந்தும், வாழிடங்களிலிருந்தும், வாழ் வாதாரங்களிலிருந்தும் அரசால் வெளியேற்றப்பட்டுள் ளனர். உலகில் பெரும்பாலான நாடுகளின் மக்கள் தொகை 3 கோடிக்குக் குறைவு என்பதுடன் ஒப்பிடும் போதுதான், இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடு மையை உணர முடியும். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட வர்களில் 40ரூ பழங்குடியினராவர். காடுகளில் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்த பழங்குடியினரை வெளியேற்றிய போது மற்றவர்கள் இதுபற்றி கவலைப் படவில்லை. ஆனால் 1990க்குப்பின் பெருமுதலாளியக் குழுமங்களுக்காக அரசு கிராமங்களிலும் நகரங் களில் நிலத்தைக் கையகப்படுத்தத் தொடங்கிய பிறகே இது பிரச்சினையாக வடிவெடுத்தது. எதிர்ப்புகளும் போராட்டங்களும் எழுந்தன.

1950 முதல் தொழில்கள் பெருகின; சிறுதொழில் கள் வளர்ந்தன. வேளாண்மையில் நீர்ப்பாசன வசதி பெருகியது. 1960களின் பிற்பகுதி முதல் 1985 வரையில் வேளாண்மையில் வளர்ச்சி நீடித்தது. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஈடு கொடுக்கின்ற வகையில், தொழில்களிலும், வேளாண்மையிலும் வேலை வாய்ப்புகள் உருவாயின.அரசுகள் வேளாண் மையிலும் தொழில்களிலும் முதலீடு செய்தன. முதலாளிகளின் முதலீடுகள், தொழில்கள், வணிகம் முதலானவற்றின் மீது அரசுகள் கட்டுப்பாடு செலுத் தின. இக்காரணங்களால், ‘பொது நன்மைக்காக’ நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று வேலை கிடைக்க வாய்ப்புகள்இருந்தன. ஆயினும் இயற்கையோடு இயைந்த எளிய இனிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நிலையிலிருந்து வெளியேற் றப்பட்ட பழங்குடியினர், நீரிலிருந்து வெளியே எடுக் கப்பட்ட மீனைப் போல கொடுந் துன்பங்களை அனு பவித்தனர் என்பதையும் மறந்து விட முடியாது.

ஒரிசாவில் மகாநதியின் குறுக்கே ஹீராகுந்த் அணை யை சவகர்லால் நேரு 1948 ஏப்பிரல் 12 அன்று தொடங்கி வைத்தார். அப்போது நேரு, “இந்தஅணை யைக் கட்டியதால் நிலத்தை இழந்தவர்கள், நாட்டின் பொது நலனை மனதிற் கொண்டு, அவர்களுடைய துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றார். இப்போது சோனியா காந்தி, “புதிய தொழிற் சாலைகளும், வளர்ச்சிக்கான கட்டமைப்புகளும் நிலத் தைக் கையகப்படுத்தாமல் உருவாக்க முடியாது. ஆனால் நிலத்தைக் கையகப்படுத்தும் போது வளமான விளை நிலங்களைப் பெருமளவில் கைப்பற்றக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறு கிறார். இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை யின் ‘பிதாமகன்’, பிரதமர் மன்மோகன் சிங், “வறு மையை நிலைக்க வைப்பதன் மூலம் இந்த நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆனால் 1947க்குப்பின் நிலத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட மூன்றுகோடிப் பேர்களில் 2.25 கோடிப் பேர்களுக்கு (75ரூ) முறையான மறுகுடியமர்த்தலும், மறுவாழ்வும் அளிக்கப்படவில்லை என்பது மாபெரும் அவலமாகும்.

1990 முதல் தாராளமய - தனியார்மய - உலக மயக் கொள்கையை இந்தியாவில் நடுவண் அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. தொழில்களில், உயர் தொழில் நுட் பங்கள் புகுத்தப்பட்டன. இதனால் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். உயர் தொழில்நுட்பக் கல்வி பெற்ற வர்களுள் உச்சநிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே பெருமுதலாளிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. 1990க்குப்பின் வேளாண்மை தேய்ந்தது. உழவர்களின் தற்கொலை பெருகியது. வேளாண்மையிலும் வேலை வாய்ப்பு மிகவும் சுருங்கியது. எந்த வகையிலும் மாற்று வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டதால், நிலத்தை விட்டு வெளியேற்றுவதை எதிர்த்து மக்கள் கடுமை யாகப் போராடி வருகின்றனர்.

2005 சூன் 22 அன்று ஒரிசா அரசு, தென்கொரி யாவின் பன்னாட்டு நிறுவனமான போஸ்கோவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி ரூ.54,000 கோடி முதலீட்டில், ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் திங்கியா பகுதியில் இரும்பு உருக்காலை அமைக்கப்படும். இதற்கு 4000 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தித் தரவேண்டும். எனவே இப்பகுதியில் வாழும் மக்கள் போஸ்கோ உருக்காலை அமைக்கப்படுவதை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருகின்றனர். போஸ்கோ ஆலை வந்தால், 7000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அரசு கூறுகிறது. ஆனால் மொத்தம் 20,000 பேர்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் பறிக்கப் படுவது பற்றி அரசு கவலைப்படவில்லை.

சூன் மாதம் போஸ்கோ ஆலை அமைப்பதற்கான நிலத்தைக் கையகப்படுத்த முடியாதவாறு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சுட்டெரிக்கும் வெயிலில் நிலத்தில் படுத்து மறியல் செய்தனர். அதனால் ஒரிசா அரசு அங்குமட்டும் நிலத்தைக் கையகப்படுத்துவதைத் தள்ளி வைத்துள்ளது.

2000ஆம் ஆண்டு நவீன்பட்நாயக் முதலமைச் சராகப் பொறுப்பேற்றார். 8 இலட்சம் கோடி உருபாய் முதலீடு கொண்ட 184 தொழில் திட்டங்களுக்கு நவீன் பட்நாயக் அரசு அனுமதியளித்துள்ளது. இதில் 2.5 இலட்சம் கோடி முதலீட்டில் 830 இலட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யும் 50 உருக்காலைகளும் அடங்கும். இத்திட்டங்களுக்கு 50,000 ஏக்கர் நிலம் தேவை. ஆனால் அரசு இதுவரை 15,000 ஏக்கர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. எதிர்ப்பவர்கள் மீது அரசு கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவுகிறது. துப்பாக்கியால் சுடுகிறது. ஆயினும் மக்களின் எதிர்ப்பும், போராட்டமும் வலுத்து வருகின்றன.

சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்புக்கிடையிலும், 1.71 இலட்சம் வேளாண் நிலங்கள், வேளாண்மை அல்லாத தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 68ரூ நிலம் சுரங்கத் தொழிலுக்காக முதலாளிகளுக்குத் தரப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் பா.ச.க. ஆட்சியில் 150 முதலாளியக் குழுமங்களுக்கு 2.44 இலட்சம் எக்டர் நிலத்தைக் கையகப்படுத்தி அரசு கொடுத்துள்ளது. இதில் 1.94 இலட்சம் எக்டர் உழவர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்டதாகும்.

ஜார்க்கண்ட் மாநிலம் 2000ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டது. அதுமுதல் அங்கு அமைந்த 8 அமைச் சரவைகளில் 7 பா.ச.க. அமைச்சுகள் . கடந்த பத்து ஆண்டுகளில் மிட்டல், ஜிண்டால், டாட்டா உள்ளிட்ட முதலாளியக் குழுமங்களுடன் 133 புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக இரண்டு இலட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் சிறப்புப் பொருளியல் மண்ட லங்களுக்காக இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் அரசுகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இவர்களின் மறுவாழ்வுக்கும், மறுகுடியமர்த்தலுக்கும் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை.

அடாவடித்தனமாக மக்களின் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு அடிப்படையாக உள்ள 1894 ஆம் சட்டத்தை நீக்க வேண்டும்; இச்சட்டம் நீடிக்கின்ற வரையில் இது முதலாளிகளுக்கும் பணக்காரர் களுக்கும் ஆதரவாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்தியா முழுவதும் கண்டனமும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வருகிறது.

1894ஆம் ஆண்டையச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வருவதென 1998இல் வாஜ்பாய் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து, 2007 திசம்பர் 6 அன்று நாடாளுமன்றத்தில் இதற் கான சட்டத்திருத்த வரைவு முன்மொழியப்பட்டது. வழக்கம் போல் இது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 2009 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்னர் இறுதி யாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளுக்கு முதல் நாள் 25.2.2009 அன்று இச்சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. அடுத்தநாள், 26.2.2009 அன்று இது மாநிலங்கள் அவையில் முன்மொழியப்பட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. மக்களவையின் காலம் முடிந்துவிட்டதால், இச்சட்டத் திருத்தமும் காலாவதியாகி விட்டது.

1894ஆம் ஆண்டின் சட்டத்தை அடியோடு நீக்கி விட்டு, பொது நன்மைக்காக நிலம் கையகப்படுத்து வதற்கான புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. ஏனெனில் 2007 திசம்பரில் அறிமுகப்படுத்திய திருத்தச் சட்டத்தில் பல குழப்பங்களும், குளறுபடிகளும் இருக்கின்றன என்பதை நிலைக்குழு சுட்டிக்காட்டியது. 1894ஆம் ஆண்டின் மூலச்சட்டத்தில் ‘பொது நன்மைக்காக’ என்பதுடன் பிரிவு 5 (லு) (க) (iii) இல், ‘வேறுபயனுள்ள நோக்கங்களுக்காகவும்’ என்று இருக்கிறது. இதன் அடிப் படையில்தான், பணக்காரர்களுக்கும், பெருமுதலாளி களுக்கும் அரசு மக்களின் நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்து வருகிறது. எனவே 1894 சட்டம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

மேலும் நிலைக்குழு, நிலத்துக்கான இழப்பீடு தொகையைக் கடந்த மூன்று ஆண்டுகளில் அப் பகுதியில் நடந்த நில விற்பனையின் உச்ச விலை யைக் கணக்கில் கொண்டு, அத்தொகையில் 50ரூ கூடுதலாகச் சேர்த்து விலை நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் அரசு இதை ஏற்கவில்லை.

2009ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் குறித்த சட்டத்திருத்தத்தில், மொத்தம் தேவைப்படும் நிலத்தில் 70 விழுக்காடு நிலத்தை முதலாளியக் குழுமமே நில உரிமையாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும்; அதன்பிறகுதான் அரசு மீதி 30ரூ நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும். எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அதற்காகப் பயன்படுத்தவில்லையெனில், அந்நிலம் அதன் சொந்தக்காரர்களுக்கே ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தீய விளைவுகளையே உண் டாக்கும். ஏன்?

முதலாளி விலைக்கு வாங்கும் 70% நிலத்தில் வாழ்பவர்களின் மறுவாழ்வுக்கு முதலாளியே பொறுப் பாவார்; அரசு இதில் தலையிடாது என்று சட்டம் செய்து, தனியார் என்கிற பொறியில் தள்ளி, அவர்களைக் கொல்லுவதாகும்; அரசு அவர்களைக் கைகழுவிவிடும். ஆனால் அரசு கையகப்படுத்தும் 30ரூ நிலத்தின் உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கு மட்டுமே அரசு பொறுப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிலத்தை இழந்து பாதிக்கப்படும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி இது! இரு தரப்பினரின் மறு குடியமர்த்தலுக்கும், மறு வாழ்வுக்கும் அரசு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சியின் இரண்டாண்டுகள் நிறைவு விழா, தில்லியில் 19.5.2011 அன்று நடைபெற்றது. அப்போது, சோனியா காந்தி, சூலை மாதம் தொடங்க வுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில், நில உரிமையாளர்களுக்குப் பயன்தரும் வகையிலான, நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார். ஆனால் 1894ஆம் ஆண்டின் சட்டத்தை அடியோடு நீக்கி, புதிய சட்டம் இயற்றப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவின் 13ஆவது கூட்டம் தில்லியில் 25.5.2011 அன்று கூடியது. அக்கூட்டத்தில் கீழ்க் காணும் பரிந்துரைகள் முடிவு செய்யப்பட்டன; நிலத்தின் பதிவுத் துறையின் பதிவு விலையைவிட 6 மடங்கு அதிகமாக நிலத்தின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இதுதவிர, வாழ்வாதாரத்தை அவர்கள் இழப்ப தற்காகத் தனியாக இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்படும் பகுதியைச் சார்ந்து வாழும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், கைவினை ஞர்கள், மீனவர்கள், காடுகளைச் சார்ந்து வாழும் பழங் குடியினர் ஆகியோர் அவர்களின் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டால், அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கூலியின் அடிப்படையில், மாதத்துக்கு 10 நாள் களுக்கான கூலித் தொகையை 33 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் பகுதி மக்களின் ஒப்பு தலைப் பெறாமல் கையகப்படுத்தக் கூடாது. தொழி லுக்கு 100 ஏக்கர் தேவையெனில் 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளின் கொள்ளை இலாபம் தரும் முதன்மையான தொழிலாக வீட்டு மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) இருந்து வருகிறது. அதனால் தேவைக்குமேல் நிலத்தைக் கையகப்படுத்தி, பிறகு அது கொள்ளை இலாபத்திற்கு விற்கப்படுகிறது. மேலும் எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அதைவிடக் கொள்ளை இலாபம் தரும் தொழிலுக்கும் வணிகத்துக்கும் பயன் படுத்தப்படுகிறது.

நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதில் தொழில் தொடங்கப்பட்ட பின் அந்நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்கிறது. இப்பயனில் ஒரு பகுதி நிலத்தை இழந்த வர் பெறுமாறு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். மாற்று நிலம் அளிப்பதற்கு முதன்மை தர வேண்டும். மேலும் இழப்பீடு தொகை பெற்றவர்கள் சில ஆண்டு களிலேயே அதைச் செலவழித்து நடுத்தெருவில் நிற்கின்றனர். எனவே இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியை நிலத்தைக் கையகப்படுத்தும் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து, அதன்மூலம் தொடர்ந்து வருவாய் கிடைக்க வழிகாண வேண்டும். நிலம் தந்தவர்கள் இந்நிலத்தில் அமைக்கப்படுகிற தனியார் நிறுவனம் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் முதலீட்டுப் பங்குதாரர் ஆக்கப்பட வேண்டும்.

நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படுவோருடன் மற்ற உழைக்கும் மக்களும் இணைந்து கடுமையாகப் போராடினால் மட்டுமே இவர்களுக்கு உரிய இழப்பீடும், மறுவாழ்வும் கிடைக்கும்.

Pin It