இது ஆகஸ்ட் மாதம். 1947ஆம் ஆண்டு, பிரித்தானியரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற மாதம். விடுதலைக்கு முந்திய சில ஆண்டுகளின் போது, காங்கிரஸ் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியன எப்படி நடந்து கொண்டன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த இயக்கத்தின் நிலைப்பாடு சரியானது என்பது நமக்குப் புரியும்.

Gandhi_321விடுதலைப் போராட்டக் காலத்தில், திராவிட இயக்கம் துரோகம் செய்ததாய், ஒரு பச்சைப் பார்ப்பன வார ஏட்டில் தொடர் கட்டுரை ஒன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. பொய் சொல்வதற்கு எப்போதும் அவர்கள் கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை என்பது ஊரறிந்த செய்தி. 1942 வெள்ளை யனே வெளியேறு ஆகஸ்ட் போராட்டத்தின்போது, அரசியல் கட்சிகளின் நிலை என்னவாக இருந்தது என்பதை இப்போது நாம் கணக்குப் போட்டுப் பார்க்கலாம்.

உண்மைதான்... இந்த சுதந்திரத்தில் எப்போதும் பெரியார் மகிழ்ந்ததில்லை. ஆகஸ்ட் 15‡நமக்குத் துக்க நாள் என்று அறிவித்தவர் அவர். வெள்ளைக்காரன் போய், கொள்ளைக்காரன் வருவது எப்படிச் சுதந்திரமாகும் என்று கேட்டவர் அவர். சாவி கை மாறுகிறதே தவிர, நமக்குப் போடப்பட்ட விலங்குகள் அப்படியேதானே இருக்கின்றன என்பது அவர் வாதம்.

அதனால்தான் அவரைத் தேசத் துரோகி என்றும், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர் என்றும், அன்றிலிருந்து இன்றுவரை பூணூல் போட்ட ' தேசபக்தர்கள் ' பலர் குற்றம் சாட்டிக்கொண்டே உள்ளனர்.

சரி போகட்டும்... வீராதி வீரர்களான தேசபக்தர்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை நாம் பார்க்கலாம்.

1939இல் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஓர் அணியாகவும், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகள் இன்னோர்  அணியாகவும் எதிர் எதிர் நின்றன.

1939‡41 காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சி பிரித்தானிய அரசை எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. 1942இல், ஜப்பானியப் படைகள் இந்தியாவை மிக நெருங்கி வந்தன. 1941 டிசம்பரில் பர்மாவையும், 42 பிப்ரவரியில் சிங்கப்பூரையும் கைப்பற்றிவிட்டது ஜப்பானியப் படை. 1942 ஏப்ரலில் சிலோனின்(இன்றைய இலங்கை) தலைநகரம் கொழும்புவிலும், இந்தியாவில் காக்கிநாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் ஜப்பானி யர்கள் குண்டு வீசினர். அவர்களின் அடுத்த இலக்கு சென்னையாகவே இருந்தது. பிரித்தானியர்களைக் கடுமையாக எதிர்த்த மக்களின் நெஞ்சில், ஜப்பானியப் படை வந்துவிட்டுப் போகட்டுமே என்ற எண்ணமும் தோன்றியது.

அந்தச் சூழலில்தான், காங்கிரஸ் 1942 ஆகஸ்டில் ' வெள்ளையனே வெளியேறு ' போராட்டத்தைத் தொடக்கியது. அப்போதும் கூட, ராஜாஜி போன்றவர்கள், ஆகஸ்ட் போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். வன்முறையும், காலித்தனமும் நிறைந்த போராட்டம் என்றார் ராஜாஜி. அதனால்தான் அவரை  ' ஆகஸ்ட் துரோகி ஆச்சாரியார் ' என்று காங்கிரஸ் காரர்களே அன்று அழைத்தனர். ஆனால் அதே காங்கிரஸ், அதே ராஜாஜிக்குப் பிற்காலத்தில் ' தலைமை ஆளுநர் ' (கவர்னர் ஜெனரல்) உள்ளிட்ட பல பதவிகளை வழங்கிச் சிறப்பித்தது.

காங்கிரசும், பிரித்தானிய எதிர்ப்பில் இறுதிவரை உறுதி காட்டவில்லை. 1944ஆம் ஆண்டு அது தன் நிலையை மாற்றிக்கொண்டது. அன்றைய வைஸ்ராய்க்குக் காந்தியார் எழுதிய கடிதத்தை 14.07.1944ஆம் நாளிட்ட ' சுதேச மித்திரன் ' வெளியிட்டுள்ளது. அதில் அவர் பின்வரும் மூன்று உறுதி மொழிகளை வழங்கியுள்ளார்.

1. சட்டமறுப்பு இயக்கம் எதனையும் மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம்  எதுவும் இல்லை.

2. முன் நிகழ்ந்தவைகள் (அதாவது வன்முறைகள்) இனி நிகழ மாட்டா.

3. சிவில் நிர்வாகம் மட்டும் உள்ள சர்க்கார் போதும்!

இதுதான் வெள்ளையரை எதிர்த்த வீரர்களின் லட்சியம். இனிமேல போராட்டம் இல்லை என்பதும், சிவில் நிர்வாகம் மட்டும் போதும் (அதாவது பஞ்சாயத்து, நகராட்சி மட்டும்) என்பதும், விடுதலை வீரர்களின் வீர முழக்கங்கள்!

இன்னொரு பக்கம்... நம் பொதுவுடைமைக் கட்சியினர் என்ன செய்தனர் என்பதையும் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் நிலைக்கு நேர் எதிரான நிலையைப் பொதுவுடைமைக் கட்சியினர் எடுத்திருந்தனர். அதாவது, 1941வரை உலகப் போரை  ' ஏகாதி பத்தியப் போர் ' என்று கூறி எதிர்த்தனர். ஆனால் 42இல், சோவியத் யூனியன் போரில் பங்கேற்க நேர்ந்ததும், ' இது மக்கள் யுத்தம் ' (peoples war) என்று கூறி, பிரிட்டன் உள்ளிட்ட சோவியத் அணியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். ஏகாதிபத்தியப் போர், திடீரென்று மக்கள் போராக மாறிவிட்டது.

1942க்குப் பிறகு "இந்திய விடுதலைப் போராட்டம், கண்மூடித்தனமான பிரிட்டிஷ் எதிர்ப்பில் ஈடுபட்டு, ஐப்பானியர்களின் மடியில் போய் விழுந்துவிடக் கூடாது" என்று கம்யூனிஸ்டுகள் எச்சரிக்கத் தொடங்கினர்.

கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டியது காங்கிரஸ். பொதுவுடைமைக் கட்சியினரோ, காங்கிரசைச் சாடி அம்பலப்படுத்தாமல், "எங்களைப் போய்த் தேசத் துரோகிகள் என்று சொல்லலாமா?" எனப் புலம்பினர்.

வரலாற்றில் குறித்துக் கொள்ள வேண்டிய, மிகப்பெரும் வேடிக்கையும்அந்தக் காலகட்டத்தில் நடைபெற்றது. ஆலை முதலாளிகளில் பலர் காங்கிரசின் ஆதரவாளர்களாக இருந்தனர். குஜராத்தில், ஆகஸ்ட் போராட்டத்தை முன்நின்று நடத்தியவதே, கஸ்தூரிபாய் லால்பாய் என்னும் பெருமுதலாளிதான். புருஷோத்தம்தாஸ், தாகூர்தாஸ், கோஸ்வாஸ்ஜி, ஐஹாங்கீர் போன்ற ஆலை முதலாளிகள் பலர், காந்தியாரின் பக்தர்கள்.

ஆகவே, ஆகஸ்ட் போராட்டத்தின்போது, பம்பாய், அகமதாபாத், கோவை போன்ற பெரு நகரங்களில், ஆலை முதலாளிகளே, வேலை நிறுத்தத்தில் இறங்குமாறு தொழிலாளர்களைத் தூண்டினர். காங்கிரசின் போராட்டம் வெற்றி பெறவும், பிரித்தானிய அரசு திணறவும் அவர்கள் இவ்வாறு வழி வகுத்தனர்.

ஆனால், நடப்பது உலகப் போரன்று, மக்கள் யுத்தம் என்று கூறிய பொதுவுடைமைத் தோழர்கள், பிரித்தானிய அரசுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை. ஆகவே, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில பங்கேற்பது இல்லை என்று அறிவித்து விட்டனர்.

எத்தனை பெரிய முரண் பாருங்கள். ஆலை முதலாளிகள், வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதும், பொதுவுடைமைச் சங்கங்கள் அதனை எதிர்ப்பதும், வரலாற்றில் முன்னும், பின்னும் நாம் காணாத நிகழ்வு.

அய்யா பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அர சியல் விடுதலையோடு, சமூக விடுதலையும் சேர்ந்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். பிரித்தானியரை எதிர்க்கிறோம் என்னும் அடிப்ப டையில், இட்லர், முசோலினிக்கு ஒரு நாளும் துணைபோய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

இரண்டாம் உலகப் போர் பற்றித் திராவிட இயக்கம் மற்றும் பெரியாரின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள, 18.08.1945 அன்று, குடிஅரசில், 'யுத்தம் முடிந்தது' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள தலையங்கமே போதுமானது.

'யுத்த பீடை ஒழிந்தது' என்று கூறி, அதனை வரவேற்றும், மகிழ்ச்சி தெரிவித்தும் தொடங்கும் தலையங்கம், கீழ்க்காணும் வரிகளை மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றது:‡

"நம் அரசாங்கத்தார், இந்த யுத்த முடிவை நீதியும், தர்மமுமும் வெற்றி பெற்றது என்று சிறிதாவது கருதுவார்களேயானால், நம் நாட்டைப் பொறுத்தவரை, தீண்டாமையும், பார்க்காமையும், தேவர் குலமென்றும், தேவடியாள் மக்கள் என்றும் எண்ணுகினற, நடத்தப்படுகின்ற பேதத்தையும், நடப்பையும் ஒழிப்பார்களா? அல்லது அதற்கு ஒரு யுத்தமும், அணுகுண்டும் ஏற்பட்ட பிறகுதான் இந்த நீதியும், தர்மமும் எண்ணப்படுமா?"

'ஆரியர்களே ஆளப்பிறந்தவர்கள்' என்று சொன்ன இட்லரை விட, சமூக ஏற்றத்தாழ்விலும், கல்வித்துறையிலும் சிறிதளவு மாற்றங்களையாவது கொண்டுவந்த பிரித்தானியர் மேல் என்று பெரியார் கருதினார். எனவேதான்,  சில வேளைகளில் வெள்ளையரை ஆதரித்தார். அப்போதும் கூட, சமூக விடுதலையே அவருடைய எண்ணமும், எழுத்துமாக இருந்திருக்கிறது என்பதைத்தான் மேலே உள்ள வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

(கருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 16, 2011 இதழில் வெளியானது)

Pin It