அய்.நா. குழு அறிக்கையை விளக்கி பல்வேறு கூட்டங்களில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர்களிடையே அய்.நா. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஈழத்தில் முதலில் மறைந்திருந்து தாக்குகிற கொரில்லா போர் நடந்தது. பிறகு இரண்டு இராணுவமும் நேருக்கு நேர் மோதும் மரபு வழி போர் நடந்தது. தங்கள் நாட்டின் பெரும் பகுதியை மெல்ல மெல்ல விடுதலைப் புலிகள் மீட்டுக் கொண்டனர். இனி போர் வேண்டாம். பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்ற, 2002 ஆம் ஆண்டு நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஒரு அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது தமிழர் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு புலிகள் கட்டுப் பாட்டிலும், ஒரு பங்கு இலங்கை அரசு கட்டுப் பாட்டிலும் இருந்தது. அமைதி ஒப்பந்தம் போடப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த போது, அரச தலைவராக இருந்த இரணில் விக்ரமசிங்கே, உலகம் முழுவதும் சென்று, முப்பத்திரண்டு நாடுகளில், ‘விடுதலைப் புலிகள்’ இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று, 2005-2006 இல் போரே நடக்காதபோது தடை செய்ய வைத்தார்.
இப்படிப்பட்ட பேரழிவுகளுக்கு, தடை செய்த ஐரோப்பிய நாடுகளும் ஒரு காரணம் என ஐ.நா. அறிக்கை கூறுகிறது. அமைதியாக இருந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கப் பட்டியலில் கொண்டு வர இந்தியாவும் ஒரு காரணம்.
2008 ஜனவரியில், இலங்கை அரசு தானாகவே ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. மீண்டும் போர் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில், தமிழர் படை (தமிழரை காத்து நின்ற விடுதலைப் புலிகள் படை) முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அந்த அரசு சொன்னது. இலங்கை அரசின் அறிவிப்புப்படி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். போர் முடிந்து விட்டது. பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையை செய்ததாக சொன்னார்கள். பொது மக்கள் யாரும் பாதிக்காத வாறு, மனிதாபிமான போரை நடத்தியதாக அறிவித்துக் கொண்டார்கள். அங்கே மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள் என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களான எங்களைப் போன்றவர்களும், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவானவர்களும், தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவான குழுக்களும், இங்கு குரல் எழுப்பினோம். அப்போது பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
2008 பிப்ரவரியில் கழகத்தின் சார்பில் புதுடெல்லி சென்று காயக்கட்டுப் பேரணியும் நாடாளு மன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தி, இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என பொது மக்களிடம் திரட்டப்பட்டிருந்த கையெழுத்து படிவங்களை பாதுகாப்பு அமைச்சரிடம் நேரில் கையளித்து இருந்தோம். ஆனாலும் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள், முதன்முதலாக இந்திய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு முழுவதும் ஒரு உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினார்கள். அதுதான் தமிழ்நாட்டில் ஒரு புதிய எழுச்சியை உண்டாக்கியது. வெகுமக்கள் பேச ஆரம்பித்தார்கள். இந்த கொடுமையான போரை நிறுத்தச் சொல்லியும், இந்திய அரசே இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே என்று வலியுறுத்தியும், பல போராட்டங்கள் நடைபெற்றன. அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று நாம் சொன்னோம். ஆனால் இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
போர் முடிந்த பின்னால் பான்கிமூன் இலங்கைக்கு வந்து அதன் அரச தலைவர் இராசபக்சேவை சந்தித்தார். மே 19 ஆம் தேதி போர் முடிந்தது. மே 23 ஆம் தேதி இறந்தவர்கள் பற்றியும் போரின் நிகழ்வுகளைப் பற்றியும் கணக்கெடுப்பு நடத்துவதற்கு, இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். பொது மக்களெல்லாம் போதிய உணவு, தண்ணீர் வசதி இல்லாமல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். அதைப் பற்றி நாம் குரல் எழுப்பிய போதும், எவரும் ஏற்றுக் கொள்ள வில்லை. தமிழரல்லாதவர்கள் (பொதுவானவர்கள்) சொல்ல வேண்டும் எனக் கருதினார்கள். பல மனித உரிமை ஆர்வலர்கள் அறிக்கை விட்டார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயர்லாந்தின் தலைநகர் “டப்ளினில்” எந்த அரசு கட்டுப்பாட் டிலும் இல்லாத ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ என்ற சுதந்திரமான அமைப்பு, ஒரு விசாரணையை நடத்தியது. இலங்கையின் சார்பாகவும் அழைக்கப் பட்டார்கள். இந்தியாவில் இருந்தும் ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்திர சச்சார் போனார். எல்லோரும் விசாரித்து அறிக்கை ஒன்றைக் கொடுத்தார்கள். இந்தப் போர் நடந்தபோது ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டிருக் கிறார்கள். ஏராளமான போர்க் குற்றங்கள் நடந்திருக் கிறது. மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந் திருக்கிறது. இனப்படுகொலை நடந்திருப்பதற்கான சுவடுகள் தெரிகின்றன. அவற்றை ஆழ்ந்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு அறிக்கை கொடுத்தார்கள்.
உலகத்தில் மூன்று குற்றங்கள் தான் பெருங்குற்றம். இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து வரையறுத்திருந்தார்கள். அப் பெருங்குற்றங்களுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. பாதிக்கப்பட்டவர்கள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யார் வேண்டு மானாலும் கொடுக்கலாம். குற்றம் நடந்த நாட்டில் தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். குற்றம் நடந்து ஒரு ஆண்டிற்குள் வழக்கு கொடுத்தால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் சொல்கிறது. ஆனால், இப்பெருங்குற்றங்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் வழக்கு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
1942 ஆம் ஆண்டு செர்பியாவில், ஒரு படையணி முப்பத்தியாறு பொதுமக்களை சுட்டுக் கொன்று விட்டது. 69 ஆண்டுகளுக்கு பின்னர், அதற்காக ஹங்கேரியை சார்ந்த 97 வயதான ஒருவரை கடந்த மாதம் கைது செய்திருக்கிறார்கள்.
அய்.நா. அதிகாரியே கூறுகிறார்
ஆனால், இலங்கையில் எவ்வளவு பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்? 1300 பயங்கரவாதிகளை (போராளிகளை) கொன்றிருப்பதாக இலங்கை அரசு கணக்கு கொடுத்தது. இருபதாயிரம் பேர் இறந்திருப்பதாக வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினார்கள். நாற்பதாயிரம் பேர் இறந்திருப்பதாக சில மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் சொன்னார்கள். அய்.நா.வின் நடவடிக்கையே தவறாக இருக்கிறது என்று. ஐ.நா.விலிருந்து விலகிவிட்ட, அய்.நா.வில் வேலை செய்த கார்டன் வெய்ஸ் என்பவர் குற்றம்சாட்டினார். இலங்கைப் பிரச்சினையில் யார் பேச்சையோ கேட்டு அய்.நா. ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று. பதவி விலகிய கார்டன் வெய்ஸ், தனது கணக்குப்படி எழுபதாயிரம் பேர் இறந்திருப்பதாக சொன்னார்.
இப்போது இலங்கை அரசு அமைத்த விசாரணை கமிசனில் சாட்சியம் அளித்த, மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த “ஆயர் - ராயப்ப ஜோசப்” சொன்னார்... “இந்த நாட்டில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கணக்கெடுப்பு நடந்திருக் கிறது. முல்லைத் தீவிலும், கிளிநொச்சியிலும் சேர்த்து நான்கு லட்சத்தி இருபத்தி எட்டாயிரம் பேர் இருந்தார்கள். இப்போது முகாம்களில் இரண்டு லட்சத்தி எண்பத்தி இரண்டாயிரம் பேர்தான் இருக்கிறார்கள். மீதி ஒரு லட்சத்தி நாற்பத்தி ஆறாயிரம் பேரை காணவில்லை. சிறையில் இருப் பவர்கள் பத்தாயிரம் பேர் என்று வைத்துக் கொண் டால் ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் பேர் போரில் இறந்திருக்கிறார்கள்” என்று கணக்கு சொல்கிறார்.
அய்.நா.வின் மனித உரிமை குழுவின் தலைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும், தற்போது “சர்வதேச நெருக்கடி மன்றம்” என்ற அமைப்பை வைத்திருப் பவருமான “லூயிஸ் ஆபர்” என்ற ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பெண்மணி 2010 மார்ச் மாதம் ஒரு அறிக்கை விட்டார்கள். போரில் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த பதினெட்டு பேர், முகாமில் இருந்து தப்பி வந்த இருபத்தியொரு பேர், போரின்போது அங்கு பணியாற்றிய ஐ.நா. ஊழியர்கள் தந்த வீடியோ படங்கள், செயற்கைக் கோள் படங்கள், இதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் டப்ளின் ஆணையம் அறிக்கை கொடுத்தது. இவ்வளவு கொடுமைகள் நடந்திருந் திருக்கின்றன என்ற நிலையிலும் ஐ.நா. மன்றம் ஏன் அமைதியாக இருக்கிறது? விசாரிக்க வேண்டாமா? என்று “லூயிஸ் ஆபர்” அறிக்கை விட்ட பின்னால்தான், மனித உரிமைக் கண்காணிப்பகம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற பல அமைப்புகள் இதை வலியுறுத்தினர்.
அதன் பிறகு, 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் நாள், ஒரு குழு அமைக்க இருப்பதாக பான்கிமூன் சொன்னார். ஜூன் 22 ஆம் தேதி மூன்று பேர் கொண்ட குழுவை அறிவித்தார். உடனே இலங்கையில் இருப்பவர்கள் அந்த நாட்டு அமைச்சரான விமல் வீரவன்ச தலைமையில், ஐ.நா. எப்படி எங்கள் நாட்டில் தலையிடலாம் என்று, கொழும்புவில் இருக்கும் ஐ.நா. மன்றத்தை முற்றுகையிட்டார்கள். 52 மணி நேரம் உள்ளிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாமல், உள்ளேயும் யாரையும் செல்லவிடாமல் போராட்டம் நடத்தினார்கள். உலக நாடுகளில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் இராசபக்சேவிடம் பேசித்தான், அய்.நா. அலுவலகத்தின் உள்ளே இருப்பவர்களை வெளியே கொண்டுவர முடிந்தது.
அதன் பிறகு செப்டம்பர் 16 இல் குழு தன் விசாரணையைத் தொடங்கியது. அதன் அறிக்கை தான் இப்போது வந்திருக்கிறது
அய்.நா. அறிக்கை கூறுவது என்ன?
உலகத்தில் மிகவும் நம்ப தகுந்த, யாரும் குற்றம் சொல்ல முடியாத மூன்று பேரை அய்.நா. குழு நியமித்தது. இந்தோனேசியாவின் ஓய்வு பெற்ற அட்டர்னி ஜெனரல் மனித உரிமை ஆணையத்தில் பத்து ஆண்டுகள் பணி புரிந்தவர். (அந்த நாட்டு அதிபர் சுகர்தோ மீதே வழக்கு நடத்தி தண்டனை வாங்கி கொடுத்தவர்) தென் ஆப்பிரிக்காவின் மனித உரிமை ஆணையத்தில் தலைவராக பணிபுரிந்த யாஸ்மின் சூக்கா என்ற பெண்மணி, அமெரிக்காவைச் சார்ந்த, சர்வதேச மனித உரிமை சட்ட வல்லுநர் ஸ்டீபன் ரேட்நர் ஆகிய மூன்று பேரும் அந்த குழுவில் இருந்தார்கள். இவர்கள் 2011 மார்ச் 31 ஆம் தேதி அறிக்கையை கொடுத்திருக் கிறார்கள். ஏப்ரல் 26 ஆம் தேதி தான் ஐ.நா.வால் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவகைளில் சில செய்திகள்..
முதலில் அய்.நா. மன்றமே முறையாக நடந்து கொள்ளவில்லை என்று அறிக்கைச் சொல்கிறது. ஐ.நா.வின் பொதுச் செயலாளருக்கு உண்மைகள் போகாமல் தடுக்கப்பட்டு, இலங்கையின் போரை நிறுத்துவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஈழ இறுதிப் போரின் போதான ஐ.நா. அலுவலகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு பரிந்துரை.
2009 மே 27 ஆம் தேதி (போர் முடிந்து எட்டு நாளில்) ஜெனிவாவில் இருக்கும், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில், சுவிட்சர்லாந்து நாடு ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. சுவிட்சர்லாந்து அமைதிக்கு பேர் போன நாடு, தன்னிடம் இராணுவம் வைத்துக் கொள்ளாத நாடு, உலகத்தில் போடப்பட்ட அனைத்து மனித உரிமை ஒப்பந்தங்களின் அசல் நகல்கள் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பில்தான் உள்ளன. எனவே தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, அந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. என்ன தீர்மானம் என்றால்... “இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஏராளமான போர்க் குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். இதை இலங்கை அரசே ஒரு விசாரணை குழு அமைத்து, குற்றம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”... என்பதுதான் தீர்மானம். இந்த தீர்மானத்தை இந்தியா முன் நின்று தோற்கடித்தது.
இன்னொரு தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக முன்மொழிந்தார்கள். அது என்ன வென்றால்... “பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றியதற்கு இலங்கையை பாராட்டுகிறோம். போரின் போது அவ்வப்போது உண்மை நிலவரங்களை, உலக நாடுகளுக்கு எடுத்துச் சொன்னதற்காகவும் தன்னுடைய வெளிப்படையான தன்மைக்கும் நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அய்.நா. மன்றம் போன்ற அனைத்துலக நாடுகளுடன் ஒத்துழைப்போம் என்று உறுதிமொழி தந்துள்ளதை வரவேற்கிறோம். (ஆனால் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த வல்லுநர் குழுவையே அதன் பணி தொடங்கிய செப்டம்பர் 16-லிருந்து விசாரணை அறிக்கை அளித்த 2011 மார்ச் 31 வரை இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மறுத்தது) இப்படி ஒன்பது பாராட்டுகளை சொல்லிவிட்டு, இலங்கைக்கு உலக நாடுகள் எல்லாம் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம், இந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று வெற்றிப்பெறச் செய்தது. இருபத்தி ஒன்பது நாடுகள் ஆதரவைப் பெற்றது. பன்னிரண்டு நாடுகள் மட்டும் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆறு நாடுகள் வாக்களிக்கவே இல்லை.
இப்போது இந்த பரிந்துரையில் சொல்லியிருக் கிறார்கள்.... “இலங்கை ஏராளமான குற்றங்களைச் செய்திருக்கிறது. நிறைவேற்றப்பட்டது தவறான தீர்மானம். இந்த அறிக்கையின் வெளிச்சத்தில் அந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்”... என்று ஒரு பரிந்துரை.
இது அல்லாமல் அவர்கள் ஏராளமான செய்திகளை, தேதி வாரியாக பதிவு செய்கிறார்கள்....
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தான் விசாரணயை தொடங்கச் சொன்னார்கள். ஏனென்றால் அப்போதுதான் இலங்கை அரசு அறிவித்தது... “நாங்கள் கடுமையாக போர் நடத்தப் போகிறோம். இங்கிருக்கும் மனித உரிமை அமைப்புகள், ஐ.நா. மன்றத்தின் பிரதிநிதிகள், சர்வதேச அரசு சாரா அமைப்புகள் எல்லாம் வெளியேறுங்கள், உங்களுக்கு எங்களால் பாதுகாப்பு தர முடியாது. உலக உணவுக் கழகம் என்று ஒன்று இருக்கிறது. அதைத் தவிர எல்லோரும் வெளி யேறுங்கள்”... என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு ஐ.நா. பிரதிநிதிகள் மட்டும் வெளியேற மறுத்து விட்டார்கள். மற்றவர்கள் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். உலக உணவுக் கழகம் மட்டும் அங்கிருந்து, அந்த மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தது. அதைப் பற்றி சொல்கிறார்கள்....
போரில்லா பகுதியென்று அறிவிக்கப்பட்ட பகுதியில் குறைந்தது, மூன்று லட்சத்து முப்பதாயிரம் பேர் இருந்தார்கள். ஆனால் எழுபதாயிரம் பேர் மட்டும் இருப்பதாக, இலங்கை அரசு சொன்னது. ஆனால் வன்னி மாவட்டத்தின் அரச முகவர் (ஆட்சித் தலைவர்) பார்த்திபராஜாவோ, “எண்பத்தி ஓராயிரம் குடும்பங்கள் இருக்கின்றன” என்று கூறினார். அடுத்த நாளே அவரைக் காணவில்லை. தற்போதுதான் அவர் சிறையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. எழுபதாயிரம் பேர் இருப்பதாகத்தான், பிரணாப் முகர்ஜியும் இந்திய நாடாளுமன்றத்திலேயே சொன்னார். ஆனால் போர் முடிந்த பின்போ இரண்டு லட்சத்து தொண்ணுறாயிரம் பேர் முகாமிற்கு வந்தார்கள்.
எழுபதாயிரம் பேருக்கு மட்டுமே உணவு அனுப்ப, உலக உணவு கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு ஐந்து ஆறு மாதங்களாக, ஒரு நபரின் உணவைத்தான் ஐந்து பேர் சேர்ந்து சாப்பிட் டிருக்கிறார்கள். எனவே ஆயிரக்கணக்கான மக்கள், அதாவது முதியோர், நோயாளிகள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பட்டினியால் இறந்திருக் கிறார்கள்.
20.1.2009 இல், போர் இல்லாத பகுதி என்று சில பகுதிகளை அறிவித்து, அங்கு பொது மக்களை வரச் சொன்னார்கள். வள்ளிபுனம் என்ற அந்த பகுதியில் அடுத்த நாளே 21.4.2009 இல், விமானத்தில் வந்து குண்டுகள் வீசப்பட்டன என்று எழுதுகிறார்கள். அடுத்து 24.1.2009 இல் மீண்டும் குண்டு வீசப்பட்டது. அதுவும் ஐ.நா.வின் உணவு வழங்கும் இடத்திலும் குண்டு வீசப்பட்டது என்று சொல்கிறார்கள். அவர் களிடம் ஆளில்லா உளவு விமானங்கள் இருக்கிறது. அது மிகத் துல்லியமாக இடத்தை அறிந்து சொல்லும் உளவு விமானங்கள், அதுவும் அரசே அறிவித்த இடம். எனவே தெரிந்தே குண்டுகள் வீசப்பட்டன. நல்லவேளையாக ஐ.நா. ஊழியர்கள் யாரும் சாகவில்லை. ஒட்டு மொத்தப் போரில் அறுபத்து ஆறு மனித உரிமைப் பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள் என்று அறிக்கையில் சொல்லி யிருக்கிறார்கள். ஆனால் அந்த குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் யாரும் சாகவில்லை. பால் வாங்கு வதற்காக வரிசையில் நின்ற தாய்மார்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. ஏராளமான தாய்மார் களும், குழந்தைகளும் இறந்தார்கள். செத்துப் போன தாய்மார்கள் எல்லோரும், பால் அட்டைகளை இறுக்கமாக பிடித்தவாறே இறந்து போயிருந்தார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைக்கூட வெளி யேற்றிவிட்டார்கள். 1858 இல் ஆரம்பிக்கப்பட்டது செஞ்சிலுவை சங்கம். அதற்கு பிறகு நடைபெற்ற அனைத்து போர்களிலும் செஞ்சிலுவை சங்கம் இருக்கும். செஞ்சிவை சங்கம் இருக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் நடக்காது. உலகின் மிகக் கொடூர மானவன் என்று சொல்லப்படும் ஹிட்லர் கூட செங்சிலுவை சங்கத்தை போர்ப் பகுதியில் அனுமதித்தான். ஆனால் இங்கு மட்டும் எல்லோரும் வெளியேற்றப்பட்டு “சாட்சிகள் இல்லாப் போர்” தான் நடைபெற்றது.
அங்கிருந்த இரண்டு ஐ.நா. அதிகாரிகளும், போர் நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேறி, கடற்கரை பக்கம் செல்கிறார்கள். அவர்கள் அறிக்கையில் சொல்கிறார்கள்... “நாங்கள் செல்லும்போது அதிகபடியான பிணங்கள் கீழே கிடந்ததால் அந்த கொடுமைகளை பார்க்க முடியாமல், மேலே பார்த்தவாறு நடந்து சென்றோம். ஆனால் மேலே பார்த்த எங்களுக்கு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது. குழந்தைகளின் உறுப்புகளும், மனித உடல்களின் தசைகளும் ஆங்காங்கே மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன”... என்று.
அவர்கள் கடற்கரையோரங்களில் இருந்து கொண்டு, அழைத்து வரப்படும் காயம்பட்ட வர்களை கப்பலில் ஏற்றி அனுப்புவார்கள். அதுவரை காயம்பட்டவர்கள் பதினான்காயிரம் பேரையும், உறுப்பு இழந்தவர்கள் ஐந்தாயிரம் பேர்களையும் வெளியில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படி கடற்கரையில் வந்து காத்திருந்தவர்கள் மீதும் குண்டு வீசப்பட்டிருக்கிறது. கடைசியாக ஏப்ரல் மாதத்தின் இறுதியில் ஐ.நா.வின் கப்பல் மீது குண்டு வீசுகிறார்கள். அது செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலுக்கு இருபது மீட்டர் தொலைவில் வெடிக் கிறது. அதோடு கப்பல் திரும்பி சென்று விடுகிறது.
போர் இல்லா பகுதி என அறிவித்த மூன்று பகுதிகளிலும், தொடர்ந்து குண்டுகள் வீசி தாக்கப்பட்டன என்று எழுதுகிறார்கள். இங்கிருந்த மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன என்று எழுதுகிறார்கள். ஜனவரியில் இருந்து மே மாதம் 19 வரைக்கும், அறுபத்தி ஐந்து முறை மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியிருக் கிறார்கள். தெரிந்தே திரும்ப திரும்ப வீசினார்கள் என்று எழுது கிறார்கள். கடைசியாக மே மாதம் முழுவதும் மருத்துவமனைகள் திறந்த வெளியில் இயங்கி வந்துள்ளன. மரத்தடியில் நடைபெற்ற மருத்துவமனைகள்கூட, இட நெருக்கடியாக இருந்திருக்கிறது. மருத்துவரின் மேசைக்கு கீழே மூன்று நோயாளிகள் படுத்துக் கிடப்பார்கள். கழிப்பறைக்கு செல்லும் வழிகளில் எல்லாம் படுத்துக் கிடப்பார்கள். அவர்களை தாண்டித் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்று எழுதுகிறார்கள். அதைவிட கொடுமை இந்த மருத்துவமனைகளுக்கு, அரசு மருந்துகளை அனுமதிக்கவில்லை. பிப்ரவரி மாதத்தில் இருந்து, ‘பெனடால்’ என்ற மாத்திரைகளை தவிர வேறு எந்த மருந்தும் அனுமதிக்கவில்லை.
வரதராசன், சத்தியமூர்த்தி, சண்முகராஜா ஆகிய மூன்று மருத்துவர்கள், மே மாதம் 14 ஆம் தேதி வரை அங்கு இருந்திருக்கிறார்கள். மயக்க மருந்து, அறுவை சிகிச்சைக்கான கத்தி முதலியவைகள் வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார்கள். அவர்களுக்கு அவைகள் எல்லாம் கொடுக்கப்படவே இல்லை. உறுப்பு இழந்த ஐந்தாயிரம் பேருக்கு ஆபரேசன் செய்திருக்கிறார்கள். அதில் மூன்று ஆயிரம் பேருக்கு எப்படி ஆபரேசன் செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் சொல்கிறார்கள்.... “மயக்க மருந்துகள் கொடுக்காமல்தான் உறுப்புகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சைக்கான கத்திகளை அங்கு அனுமதிக் காத காரணத்தால், பலருக்கு கசாப்பு கத்திகளை பயன்படுத்தித்தான் உறுப்புகள் அகற்றப்பட்டன. இவர்களுக்கு பழைய புடவைகளை வாங்கி கிழித்து கட்டுப் போடப்பட்டன. நரகத்திற்கு ஒத்ததாக அந்த நிலை இருந்தது”...... என்று எழுதுகிறார்கள்.
“இந்தியாவின் கடற்படை உளவுகள் சொல்லியும், பல நேரங்களில் தாக்குதல்கள் நடத்தியும், புலிகளின் ஆயுத வரவைத் தடுத்தது”... என்று எழுதுகிறார்கள்.
அந்த நாட்டில் பனை அபிவிருத்தித் துறை என்று ஒன்று உள்ளது. மக்கள் தங்கள் சொத்தாக பயன்படுத்திய ஐம்பது லட்சம் பனை மரங்களை வெட்டி அழித்திருக் கிறார்கள். போருக்கு பின்னால் முகாம்களில் இருந்த மக்களின் நிலைப் பற்றி சொல் கிறார்கள்.... “ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப் பட்டது. பெண்கள் குளிப்பதற்கு பாது காப்போ, தடுப்புகளோ இல்லை. இன்றைக்கு வரைக்கும் அங்கு அதே நிலைதான். பெரிய முகாம்களில் இருந்து சிறிய முகாம்களுக்கு சென்றிருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டிருப்பதாலும், இடியாமல் இருக்கும் வீடுகளில் சிங்கள இராணுவமும், சிங்கள மக்களும் குடியிருப்பதாலும், தமிழர் கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பாமல் இருக் கிறார்கள்”... என்று சொல்லியிருக்கிறார்கள்.
இவைகள்தான் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்திருக் கின்றன என்று சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறோம். தமிழக முதல்வர்கூட சொன்னார். இராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இலங்கைக்கு பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என்றெல்லாம் சொன்னார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டும் போதுமா? ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நல்வாழ்வு கிடைத்து விடுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னதான் தீர்வு? எனவே அறிக்கையில், “தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.
எனவேதான் நாம் சொல்கிறோம், இராசபக்சே மட்டும் போர்க் குற்றவாளி என்று விட்டுவிடாதீர்கள். 1948 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை, ஆறு பெரும் இனக் கலவரங்கள் நடந்திருப்பதாக அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கலவரத் தின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கோடிக்கணக் கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக் கின்றன என்று எழுதியிருக்கிறார்கள். டப்ளின் அறிக்கையில் இனப்படுகொலை பற்றி இருந்தது. ஆனால் ஐ.நா. அறிக்கையிலோ அது இல்லை. ஆனால் ஒன்று மட்டும் எழுது கிறார்கள்... “இலங்கை படை முழுவதும் சிங்களவர்கள் மட்டுமேஇருந்தார்கள். இறந்து போனவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் மட்டுமே”... என்று எழுதுகிறார்கள்.
குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள், ஒரே மொழி பேசுபவர்கள், ஒரே இனத்தைச் சார்ந்த வர்கள் தான் இறந்திருக்கிறார்கள். ஆனால், ஐ.நா. அறிக்கையில் இனப்படுகொலை என்று எழுதவில்லை. ஆனால் நாம் வற்புறுத்துகிறோம். அந்த நாட்டையே “இனப்படுகொலை நாடு” என்று உலக நாடுகள் அறிவிக்க வேண்டும். சந்திரிகா, ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட, உயிரோடு இருக்கிற அனைத்து அரச தலைவர் களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதுமட்டும் போதாது, உலகில் இது போன்ற குற்றங்கள் நடைபெற்ற போதெல்லாம் ஐ.நா. மன்றம் தலையிட்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் அங்கிருக்கும் கிழக்கு திமோர் மக்கள் தொடர்ச்சியாக தாக்கப்படு வதாக, ஆயுதம் தாங்கி போராடினார்கள். ஐ.நா. மன்றம் தலையிட்டு, வாக்கெடுப்பு நடத்தியது. 78.5 சதவீத மக்கள் பிரிந்து செல்ல விரும்பினார்கள். அந்த நாட்டைத் தனி நாடாக பிரித்து கொடுத்துவிட்டது ஐ.நா. மன்றம். மாண்டி நிக்ரோ மக்கள், நைஜீரியாவில் இருந்து பிரிந்து செல்ல போராடினார்கள். ஐ.நா. மன்றம் தலையிட்டு வாக்கெடுப்பு நடத்தியது. 55.5 விழுக்காடு மக்கள் பிரிந்து செல்கிறோம் என்று வாக்களித்தார்கள், தனி நாடு அமைத்து கொடுக்கப்பட்டுவிட்டது.
மால்டோவா, தெற்கு சூடான் போன்ற பல நாடுகள் இதேபோல பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், தங்களுக்கான அரசை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு. எல்லா தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதுதான், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை ஒப்பந்த அறிக்கை யில் முதல் வரி. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளுக்கும் சென்று வாக்கெடுப்பு நடத்தும் உரிமை ஐ.நா. மன்றத்திற்கு உண்டு. அதுபோன்ற ஒரு வாக்கெடுப்பை ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி, அவர்கள் விரும்பினால் தனி நாடு அமைத்து தர வேண்டும். அதுதான் அவர்கள் உரிமையோடும் பாதுகாப்போடும் சுயமரியாதையோடும் வாழ உதவும்.
மார்டின் நிர்மோலர் என்ற ஜெர்மன் நாட்டு கவிஞர், சிறையில் இருந்து வெளியே வந்து 1946 ஆம் ஆண்டில் ஒரு கவிதை எழுதினார்... “நாஜிப் படையினர் வந்தனர். கம்யூனிஸ்டுகளை பிடிப்பதற்கு, நான் கம்யூனிஸ்ட் இல்லை. எனவே கவலைப்படவில்லை. யூதர்களை கைது செய்தார்கள். நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் யூதன் இல்லை. தொழில் சங்கவாதிகளை கைது செய்தார்கள். நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் தொழில் சங்கவாதி இல்லை. இறுதியில் நாஜிகள் என்னை கைது செய்ய வந்தார்கள். எனக்காக பேச யாரும் இல்லை”... என்பதுதான் அந்த உலகப் புகழ்பெற்ற கவிதை.
ஈழத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்திருக்கிறது. அது பக்கத்து நாடு என்று கருதி இருக்காதீர்கள். அப்படிப்பட்ட கொடுமைகள் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் வரலாம். காவிரி நீருக்கு, முல்லைப் பெரியாறுக்கு, மத்திய அரசு நமக்காக பேசவில்லை. நமக்காக பேசாத மத்திய அரசு, நமக்கு ஏதேனும் குந்தகம் வந்தாலும் பேசாமல் இருக்கும் நிலைதான் ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, நம் மொழி பேசும் இனம் அழிவதை தடுக்கத் தவறிவிட்டோம். மீண்டும் எழுந்து நிற்பதற்காகவாவது கை கொடுப்போம். கை கொடுப்பவர்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று தன் உரைகளில் குறிப்பிட்டார்.
தொகுப்பு: கோகுல கண்ணன்