திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சர்.பி. தியாகராயர். வணிகத் தொழிலில் செல்வாக்கு மிகுந்த செல்வந்தர் குடும்பத்தில் 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் சென்னை கொருக்குப் பேட்டையில் பிறந்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். 1916 ஆம் ஆண்டு வரை அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரராகவே செயல்பட்டார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. தியாகராயர் அம்மாநாட்டை முன்னின்று நடத்தினார். காந்தியடியகள் சென்னை வந்த போது அவருக்குச் சிறப்பானதொரு வரவேற்பைத் தந்தார்.

1882 ஆம் ஆண்டு “சென்னை உள் நாட்டினர் சங்கம்'' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடர்ந்து நடத்தினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் “சென்னை மகாஜன சபை'' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இச்சபை அவ்வப்போது சென்னையில் கூடி விவாதித்துக் கோரிக்கைகளை ஆங்கிலேயே அரசுக்குச் சமர்பித்து வந்தது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பார்ப்பனர்கள் கல்வித் துறை, அரசு நிர்வாகத்துறை ஆகியவைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுமட்டுமில்லாமல், இந்திய தேசியக் காங்கிரசிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆங்கிலேயேர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது உண்மை என்றாலும் நடைமுறையில் இந்தியாவை ஆள்பவர்களாகப் பார்ப்பனர்களே உள்ளனர் என்ற எண்ணம் பார்ப்பனரல்லாதார் மத்தியில் பரவத் தொடங்கியது. மேலும் இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி பார்ப்பனர்களின் நலன்களுக்காகவே செயல்பட்டு வந்தது என்பதையும் உணர்ந்தனர்.

இந்திய அரசின் சார்பில் இருந்த பொதுப் பணிகள் அனைத்தையும் பார்ப்பனர்களே பங்கிட்டுக் கொள்கின்ற நிலை இருந்தது. மேலும் அரசுப் பணியில் பணியாற்றிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாதவர் பலர் தாங்கள் பார்ப்பன அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாலும், அழுத்தி வைக்கப்பட்டதாலும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கலாயினர். அதோடு பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த செல்வாக்கு உள்ளவர்களின் ஆதரவைக் கோரலாயினர்.

இதன் காரணமாக 1913 ஆம்ஆண்டு “திராவிடச் சங்கம்'' என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் பார்ப்பனரல்லாத மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திராவிடத் தலைவர்கள் டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், கே.வி. ரெட்டி நாயுடு மற்றும் சர். பி. தியாகராயர் ஆகியோர் காங்கிரசு கட்சியினரால் வஞ்சிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டனர்.

சர்.பி. தியாகராயரும் டி.எம். நாயரும் காங்கிரசுக் கட்சியில் மதிப்பும் மரியாதையும் இனி எதிர்பார்க்க முடியாது, காங்சிரசுக் கட்சியை பார்ப்பனரல்லாதார் எந்த பயனும் அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்து, பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களின் நலன்களைக் காப்பதற்கு ஒரு வழிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சர்பி. தியாகராயர் அவர்கள் 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் பார்ப்பனரல்லாதார் மக்களின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் “நீதி'' (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இந்த அமைப்பு நடத்தி வந்த "நீதி' என்ற இதழின் பெயரைக் கொண்டே, அந்த அமைப்பை நீதிக்கட்சி (Justice Party) என்ற பரவலாக அழைக்கலாயினர்.

சர்.பி. தியாகராயர் நீதிக்கட்சியின் தலைவராக சிறப்பாக கட்சியை நடத்தி வந்தார். தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனரல்லாதாரின் கொள்கை விளக்க அறிக்கை, பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை பெருமளவுக்குத் தட்டி எழுப்பியது. அவர்கள் நீதிகட்சியின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் பேராதரவு தந்தனர்.

நீதிக்கட்சி இந்தியõவுக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வேண்டும் என்று கோரியது.

சர்.பி. தியாகராயரின் அவர்களின் தன்னலமற்ற விடாமுயற்சிகள் நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் சிறப்பாக வெற்றி பெற்றது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய சர்.பி.தியாகராயரை அழைத்து மாகாண ஆட்சியை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், சர்.பி. தியாகராயர் முதலமைச்சர் பதவியை ஏற்க தான் விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார்.

அமைச்சர் பதவி கிடைப்பதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராகஇருக்கும் இக்காலக்கட்டத்தையும், தகுதியும் திறமையும் இருந்தும் முதலமைச்சர் பதவி ஏற்க மறுத்த ஒருவர் நம் இனத்தில் வாழ்ந்தார் என்பது நமக்குப் பெருமையே. இவரைப் போன்ற தன்னலமற்ற தியாகிகள் நம் இனத்திற்கு இன்றைய காலக்கட்டத்தில் பலபேர் தேவை. கிடைப்பாளர்களா?

மீண்டும் ஒரு தியாகராயர் பிறக்கவேண்டும். திராவிட இயக்கத்தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும். பார்ப்பனரல்லாதார் கை ஓங்க வேண்டும். தேசியம் துடைத்தெறியப்படவேண்டும். தமிழ்த்தேசியம் வீறுகொண்டு எழ வேண்டும். வாழ்க தியாகராயர் புகழ்!

 ***

= 1920 ஆம் ஆண்டு மாண்டேடு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி நகராண்மைத் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தலைவர் (மேயர்) சர்.பிட்டி. தியாகராயரே.

= 1905 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் 5 ஆம் ஜார்ஜ் சென்னை வந்தபோது, நகராண்மை தலைவராக (மாநகராட்சி மேயர்) இருந்த சர். பிட்டி. தியாகராயர், இளவரசரை வெள்ளுடைய அணிந்து வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

=      1882 முதல் 1923 வரை சுமார் 41 ஆண்டுகள் சென்னை நகராண்மை கழகத்துடன் தொடர்புடையவராக திகழ்ந்தார் சர்.பிட்டி தியாகராயர் ஆவார் இவர் 1081 கூட்டங்களை தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.

=      சென்னை மாநகராட்சி கூட்டத்தின் பின்புறம் உள்ள மக்கள் பூங்காவையும் (கஞுணிணீடூஞுண் கச்ணூடு) அதோடு பெண்களுக்கென்று தனியாக ஒரு பூங்காவை பேரக் நெய்டன் என்னும் இடத்தில் நிறுவியர் சர்.பிட்டி. தியாகராயர் ஆவார்.

=      1920 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சிப் பள்ளியில் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தவர் சர். பிட்டி தியாகராயர் ஆவார்.

= 1919 முதல் 1923 வரை நகராண்மை தலைவராக (மேயராக) சர். பிட்டி தியாகராயர் பதவி வகித்தார். அந்நேரத்தில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு கவனர் கோரினார். அதனை ஏற்க மறுத்தவர் சர். பிட்டி தியாகராயர் ஆவார்.

= 1909 – 12 ஆம் ஆண்டு சென்னை ஆளுநர் குழுவிற்கு நகராண்மை குழுவிலிருந்து அனுப்பப்படும் ஒரு நகரசபை உறுப்பினராக திகழ்ந்தவர் சர்.பிட்டி. தியாகராயர் ஆவார்.

(பாசறை முரசு மே 2011 இதழில் வெளியானது)